பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 13

“என்னடீ இவ… என்னமோ அவ தோட்டமாட்டம் அதிகாரம் பண்றா?”

“அழகியப்பத்தி தெரிஞ்சதுதானக்கா?”

“காணிக்காரியாட்டம் ரொம்பத்தான்டீ நாட்டாமை பண்றா!”

“யார் தோட்டமா இருந்தாலும் கரெக்ட் டயத்துக்கு கெளம்பிறணும். இல்லைனா கூலிய கொறச்சுப்புடுவா. அதுவுமில்லாம பதிவா தொடர்ந்து வேல வரும்‌போல தெரியுதுக்கா.”

“அதுக்காகப் பாத்தாதான்டீ. எப்படியாவது தீபாவளிக்குள்ள பொன்னம்மா கெழவிகிட்ட அடகுவச்ச அண்டாவ திருப்பிறணும். இல்லைனா‌ அசலுக்கும், வட்டிக்கும் சரியாபோச்சுனு அண்டாவ முழுங்கி ஏப்பம் விட்டுறுவா கெழவி. இன்னும் யாருக்குத்தான் சொத்து சேக்குறாளோ தெரியல.” 

வீதியில் தூக்குச்சட்டியும் கையுமாக பேசிக்கொண்டே, சற்று நேரம் கடந்துவிட, ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர் கரட்டடிவாரத் தோட்டத்திற்கு. 

போறபோக்கில் சுமதி வீட்டு வாசலில் நின்று குரல் கொடுக்க, உடன் வந்தவளோ, 

“அவ புருஷனோட சைக்கிள்ல ஒய்யாரமா வருவாக்கா. நீ வா!” என முன்னே நடந்தாள். 

“ஆமா… பிள்ளைக்குப் பதிலா முருகேச பொண்டாட்டியத்தான் தூக்கி இடுப்புல வச்சுக்கிட்டே திரியிறாப்ல. அவ மாமியா என்னடான்னா மகனுக்கு ரெண்டாங்கல்யாணம் பண்ணப்போறேனுட்டுத் திரியுது.” நடையோடு நடையாக அடுத்த வீட்டு வம்பையும் சேர்த்து அளந்து கொண்டே நடந்தனர்.

இன்னும் வெளியேறாமல், உள்ளுக்குள்ளே எதையோ உருட்டிக் கொண்டிருந்தவளை, “சுமதி!” என முருகேசன் அழைக்க,

“வந்துட்டேன்…” என்றாள்.

“சீக்கிரம் கெளம்பு!” என அவசரப்படுத்த,

“நீங்க வெளியேறுங்க மொதல்ல. நான் கதவச் சாத்திட்டி வர்றே” என்றவளிடம்,

“ஆமா… இந்த கோட்டக்கதவச் சாத்த தொலையாது பாரு. கதவச்சாத்தி, குச்சிய சொருகப்போற. இதுக்கென்ன யானையா வரணும் முட்டுக் கொடுத்துத் தள்ள?” என நக்கலாக கேட்டவனிடம்,

“ஏன்… நீங்க கோட்டை கட்டிவச்சா நானென்ன வேண்டாம்னா சொன்னேன்?” என எகத்தாளமாகப் பதில் கொடுத்தாள்.

“எறங்குடி மொதல்ல! வாய்க்கு வாய் பேசிக்கிட்டு!”

“நீங்க வாய்க்கு வாய் பேசறதைவிடவா?” என்றவள் அவனை ஒரு மார்க்கமாகப் பார்க்க,

“நான்‌ பேசறப்ப‌ சத்தமே‌ வராதேடீ? அப்படியே‌ வந்தாலும் அது எனக்கு மட்டும் தானே கேக்கும்” என கண்சிமிட்ட,

“ம்க்கும்…” என நொடித்தவளிடம், 

“நீ நொடிக்கறதப் பாத்தா உனக்கு சந்தேகமா இருக்கும்போலயே. வேணும்னா சத்தம் வருதா இல்லையானு டெஸ்ட் பண்ணி பாத்துருவோமா?” என்றான் சில்மிஷ சிரிப்போடு.

“காலங்காத்தால பேச்சப்பாரு? ஏற்கனவே எல்லாரும் போய்ட்டாங்க. வம்பு பண்ணாம வெளியேறுங்க!” என்றவளை, கதவுச்சந்தில் தள்ளி சத்தமில்லாமல் வாய்க்கு வாய் பேசுவது எப்படியென பாடம் எடுத்துவிட்டே வெளியேறினான். 

புன்னகை முகமாக, கதவை இழுத்துச்சாற்றி, கொண்டியை மாட்டிவிட்டு, குச்சியை எடுத்துச் சொருகினாள். முருகேசன் வாசலில் நின்றிருந்த சைக்கிளின் ஸ்டான்டை எடுக்க, சைக்கிளின் பின் வந்து ஏறிக்கொண்டாள்.‌ 

“எப்பப்பாரு சாரப்பாம்பாட்டம் பின்னிக்கெடக்கறதுல ஒன்னும் கொறச்சலில்ல. ஆனா வயித்துல ஒரு புழு பூச்சியக் காணோம்.‌” 

வெளித் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டே மகனையும், மருமகளையும் சேர்த்து இடித்தார் நாகம்மா. மாமியார் பேச்சு சுருக்கெனத் தைக்க, சட்டென சுமதிக்கு முகம் சுருங்கினாலும், எப்பொழுதும் கண்டதுதானே என மனதை தேற்றிக் கொண்டாள். 

பிள்ளைக்காக மகனை இன்னொரு கல்யாணம் பண்ணச் சொல்லும் பொழுதெல்லாம் சண்டையில் வீடு ரெண்டுபடும். அரளிவிதை அரைத்துக் குடிக்கப்போவதாகக் கூட அடிக்கடி மிரட்டிபார்த்தார் நாகம்மா. 

பொறுத்துப் பார்த்தவன் ஒரு நாள், “அரளிக்காய் புடிங்கிட்டு வரவாம்மா?” எனக்கேட்டு வாயடைத்தான்.

சுமதியும் சுற்றாத அரசமரமில்லை. அரைத்து முழுங்காத பச்சிலை இல்லை. இருக்காத விரதம் இல்லை. வேண்டுதல் வைக்காத கோவிலுமில்லை. யார் எது சொன்னாலும் விடாமல் கடைபிடித்தாள். கடவுள் தான் கண் திறக்கவில்லை.

ஒரு நாள் ஆத்தாளுக்கும், மகனுக்கும் சண்டை உச்சம் தொட, தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடியாததால் தானே இத்தனை பிரச்சினையும். இத்தனை வருடமில்லாமல் இனிமேலா தனக்கு குழந்தை பிறக்கப்போகிறதென, சுமதியும் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி பேச்சையெடுக்க, அம்மா மீதிருக்கும் கோபத்திற்கும் சேர்த்து வைத்து சுமதி கன்னம் பழுத்ததுதான் மிச்சம். அதன் பிறகு அடி விழுந்த கன்னத்தில், முத்த ஒத்தடம் கொடுத்து, பொண்டாட்டி காலில் விழுந்து, விடியவிடிய தாஜா செய்கிறேன் என்றபெயரில் அவளை படுத்தியெடுத்தது தனிக்கதை. அது அவள் மீதிருந்த கோபமா, இல்லை… உனக்கு பிள்ளைதானே வேண்டுமென்ற ஆத்திரமா எனத்தெரியவில்லை. 

அன்று மருமகளுக்கு விழுந்த ஒரு நாள் அடியிலிருந்து கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் நாகம்மா. இருந்தாலும் மருமகளை சாடை பேசவில்லை என்றால் தின்ன சோறு செறிக்காது மாமியாருக்கு. வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் மற்ற மருமகள்களோடு சுமதியை முன்னிருத்தாமல் நாகம்மா சகுணத்தடையாகப் பார்க்க, அதனாலேயே அண்ணன், தம்பிகளோடு கூட்டுக் குடும்பமாக இருந்தவன் பக்கத்தில் தனிக்குடித்தனம் வந்துவிட்டான். 

இன்று இருவருக்கும் சித்தன் தோட்டத்தில்தான் வேலை. இவர்களுக்கு மட்டுமில்லை. ஊரில் முக்கால்வாசி ஆட்களுக்கும், சுற்றுவட்டார ஆட்களுக்கும் அங்குதான் வேலை. 

மெட்ராசிலிருந்து வந்த மறுவாரத்திலேயே நல்ல நாள் பார்த்து, வெகுவருடங்களாக சும்மா கிடந்த தோட்டம் என, தேங்காய்‌பழம், பத்தி, சூடம் காட்டி பூஜை செய்து, ஒரு சேவலை அறுத்து இரத்தம் காட்டிவிட்டு, புதர் மண்டிக்கிடந்த மரம், செடி,‌ கொடியெல்லாம் வெட்டிக் கழிக்க ஆரம்பித்தனர். 

அதற்கே ஒரு மாதத்திற்கு மேல் இழுத்துவிட்டது. ஊர் மக்களையே விறகு வெட்டி எடுத்துக்கொள்ளச் சொல்ல, தோட்டமும் வெகுசீக்கிரம் சுத்தமாகிவிட்டது. மீதமிருந்த சுள்ளிகள், முள் புதர்களை ஒன்று சேர்த்து ஆங்காங்கே தீ வைத்துவிட்டனர். 

கல்யாணத்திற்கு சென்ற பொழுதே முருகேசனிடம் அதற்கான செலவு பணத்தை கொடுத்துவிட்டிருந்தான்.‌ வாரம் வாரம் கூலி கணக்குப் பார்த்து கொடுத்துவிட்டு, கணக்கு வழக்கோடு அவனுக்கு கடிதமும் எழுதிவிடுவான். 

ஐப்பசி மாதமானதால், மழையும் பெய்ய ஆரம்பிக்க, புரட்டாசி வெயிலில் புழுங்கிக் கிடந்த பூமிப்பெண் வாரியணைத்துக் கொண்டது வானவனை. தாகம் தணிந்து உச்சி குளிர்ந்து போனது. முன்தினம் நல்ல மழை. உரல் நிறைய‌ மழை பெய்திருக்க, ஒரு உழவு மழை‌யென கணக்குப் போட்டவள், உழவு மாடு வைத்திருப்பவர்களையெல்லாம் வரச்சொல்லிவிட்டாள் அழகம்மை. அடுத்த மழை பெய்வதற்குள் உழுதுவிட்டால் மீண்டும் ஈரம் நன்றாக இறங்கி, இரண்டாம் உழவிற்கு தோதாக இருக்கும். 

முருகேசன் சைக்கிள் அழகி வீட்டைக்கடக்க, பொன்னுத்தாயி அவசரமாக வீட்டைவிட்டு வெளிவந்து முருகேசனை சத்தமாக அழைத்தார்.‌ 

சைக்கிளின் வேகத்தைக் குறைத்தவன், 

“என்ன சின்னாயி?” என, ஒரு காலை தரையில் ஊன்றியபடி நின்று கேட்டான்.

“இத அழகுட்ட கொடுத்துறுய்யா. கஞ்சி காச்சங்குள்ள போயிட்டா.‌” ஒரு பித்தளை தூக்கு வாளியை நீட்ட சுமதி வாங்கிக் கொண்டாள்.‌

சற்று தூரம் சென்றதும், “இந்த அத்தாச்சி என்ன? ஊராளுக பேசற மாதிரி சொந்தத் தோட்டமாட்டம் பண்ணுது? கஞ்சியக் குடிச்சுட்டு போனாத்தான் என்னவாம்?” அக்கறையாகத்தான் சடைத்துக் கொண்டாள்.

“உன் வாய் முகூர்த்தம் பழிச்சாலும் பழிச்சுறும் சுமதி. யார் கண்டா?” முருகேசன் சூசகமாய் சிரிக்க, முதலில் அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் குழப்பமாக முழித்தவள், 

“என்னாங்க சொல்றீங்க! வாயிருக்குனு ஏதாவது பேசாதீங்க?” என புருஷனை கோபமாக அதட்டினாள் உள்ளர்த்தம்‌ புரிந்ததும். 

இதென்ன சாதாரண விளையாட்டுப் பேச்சா? எவ்வளவு‌ பெரிய வில்லங்கம் புடிச்ச பேச்சு. இவன் பாட்டிற்கு வாய்க்கு வந்ததை சொல்லிவைக்க, ஊருக்குள் இப்படி ஒரு பேச்சு எழுந்தால் யார் தலை உருளுவது என்ற பயம் வந்தது.

“மனசுல பட்டதச் சொன்னேன்டீ.”

“நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம். அந்த அண்ணே எங்க? அத்தாச்சி எங்க? அவுக இருக்குற ஒசரத்துக்கு எட்டு வண்டி நூல் போட்டாலும் எட்டாது. பத்துவண்டி நூல் போட்டாலும் பத்தாதுங்க.”

“ஆனா, ஒரே ஒரு மஞ்சக்கயிறு போதுமே சுமதி!” சைக்கிளை மிதித்துக் கொண்டே கேட்க,

“என்னாங்க சொல்றீங்க!” விழிவிரிய ஆச்சர்யமாகக் கேட்டவளிடம்,

“அழகு எங்கேயாவது வெளியூர்‌ கெளம்பி‌ நீ பாத்துருக்கியா?” 

“நான் வந்த இந்த ஏழெட்டு வருஷத்துல அது எங்கேயும் போயி நாம்பாக்கல.” 

“நானே பாத்ததில்ல. தங்கச்சிக வீட்டு நல்லது கெட்டதுக்கு கூட ராத்தங்கினதில்ல. எம்புட்டு நேரமானாலும் வீடு வந்து சேந்துறும். எனக்கு தெரிஞ்சு அது வெளிய தங்கினது சித்தன் வீட்டு விசேஷத்துல மட்டும்தான்.”

“அம்புட்டு தூரம் போயிட்டு உடனே திரும்ப முடியுமா?” அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்குள்ளும் எழுந்தாலும் தெளிவு படுத்திக் கொள்ள, கேள்வி மேல் கேள்வி கேட்டு துருவிக் கொண்டிருந்தாள். 

“ஒனக்கு சின்ன வயசு சித்தனையும் தெரியாது. அழகியையும் தெரியாது. ஆனா எனக்கு நல்லாத் தெரியும்.”

“எதுனாலும் நீங்க பாட்டுக்கு பேசி வைக்காதீங்க. அந்த அத்தாச்சி காதுல விழுந்தா உண்டு இல்லைனு பண்ணிப்போடும்.” 

“ஏன்… அழகி காணிக்கு சொந்தக்காரியாகுறதுல உனக்கு காமாரமா இருக்கா?” 

“அதப்பாத்து நான் ஏங்க காமாரப் படப்போறேன். எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ இன்னும் காய்க்காமக் கெடக்கேன். அது மேல பொறாமப்பட்டு அது பாவத்தையும் சம்பாதிக்கவா? தங்கச்சிகளுக்காக பட்ட கஷ்ட்டமெல்லாம் பாத்து இதுக்கு ஒரு‌ விடிவு காலம் வராதான்னு நெனச்சுருக்கேன்” என்றவளின் குழந்தை மனது முருகேசனை நெகிழ்த்த, எனக்கெதற்கு இன்னொரு குழந்தை என்றுதான் தோன்றியது முருகேசனுக்கு. இருவருக்கும் இடையில் இன்னும் குழந்தை வராததாலோ என்னவோ அந்நியோன்யம் அதிகரித்தது இருவருக்கும். பேசிக் கொண்டே வர, தோட்டமும் வந்துவிட்டது.

ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தனர்.

வெயிலுக்கு முன் வந்தவள், முந்தானை எடுத்து தலையைச் சுற்றி வேடு கட்டிக்கொண்டு, ஆங்காங்கே கிடந்த சுள்ளிகளை இழுத்து ஒன்று‌ சேர்த்து தீயை வைத்துக் கொண்டிருந்தாள் அழகி. 

ஒச்சாயி அவளோடே ஆடுகளை ஓட்டி வந்துவிட்டாள். 

ஆண்கள் உழுது கொண்டு செல்ல, பெயர்ந்து வரும் வேர்கள், சுள்ளிகள், கல்லுகளை எல்லாம் சேகரித்து அப்புறப்படுத்தும் வேலை பெண்களுக்கு.

“என்ன‌த்தாச்சி, வெயிலுக்கு முன்ன வந்துட்டியா? சாப்புடாமக்கூட வந்துட்ட போல. அத்தை சோறு கொடுத்துவிட்டுச்சு.” தூக்கு வாளியை நீட்ட,

“ஆமா சுமதி. வெயிலேறிப் போச்சுன்னா, வெக்கை தாங்காதுல்ல? அப்படி ஓரமா வை சுமதி. கைகால் கழுவிட்டு வர்றே” என்றவள்.

“முருகேசா… இன்னைக்கி கெணறு வெட்டுறவங்கள வரச்சொன்னியா?” என கேட்டாள்.

“அடுத்த வாரம் வர்றேங்கறாங்க. எல்லாம் வருஷக்கணக்குல எறைக்காம கிடந்த கெணறு. ஒவ்வொரு கெணறாத்தான் பாக்கணும். தூர் வாரிட்டு, வெடி வச்சு ஆழப்படுத்தனும்ல.”

“மழைக்கு‌முன்ன தூர் வாரிட்டா, தூந்து போன ஊத்தெல்லாம் கொஞ்சம் கண் திறக்குமில்ல. அடைமழை புடிச்சா வெடி‌ வைக்க முடியாது. அதான் சொன்னேன்.” அவளது ஆர்வமும், அவசரமும் புரிந்தது முருகேசனுக்கு. 

எல்லாம் அழகிக்கும் தெரியும். சித்தன் தோட்டம் என்ற பரவசமே அவளது ஆர்வத்தை தூண்டி இவளை இப்படி அவசரப்பட வைக்கிறது.

“அவசரப்படாதே அழகு. ஒரே நாள்ல மந்திரம் போட்ட மாதிரி பண்ணமுடியுமா?” என முருகேசன் கேட்க, அப்படி முடிந்தால் ஒரே நாளில் தோட்டம்‌ முழுதும் உழுது, விதைத்து, அறுவடை செய்துவிடமாட்டாள். இவனையா கேட்டுக் கொண்டிருப்பாள். மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பதால் தான் பொறுமையாக இருக்கிறாள். 

“இதெல்லாம் சொல்லி சித்தனுக்கு கடுதாசியும் போட்டாச்சு அழகு. குடுத்தவிட்ட காசும் இந்த வார கூலிக்கே சரியாப் போகும்னு நினைக்கிறே. என்ன பண்றதுன்னு தெரியல. ஒரு வேளை இந்த வாரம் வந்தாலும் வருவான்” என அவள் முகத்தை‌ உற்று நோக்க, அதில்‌ அவன் எதிர்பார்த்த எந்த பிரதிபலிப்பும் இல்லை. தகவலறிந்து கொண்ட முகாந்திரம் மட்டுமே அவளிடம். கல்லென இருந்தது. அவ்வளவு சீக்கிரம் தன் உணர்வுகளை மற்றவர்களுக்கு காட்டிவிட்டால் எப்படி? 

‘கடப்பாறைய முழுங்கி கசாயம் குடிக்கறவகிட்டப் போயி சொன்னேன் பாரு’ என நொந்து கொண்டான் முருகேசன்.‌ 

‘என்னமோ சொன்னீங்க?’ என்பது போல் சுமதியும் பார்த்து வைத்தாள். 

சித்தனுக்கும் மனசெல்லாம் இங்குதான் வளையவந்து கொண்டிருக்கிறது. அன்று அவள் மீதிருந்த கோபத்தில், முகத்தைக்கூட பார்க்காமல் அனுப்பிவிட்டது வேறு மனதை அழுத்திக் கொண்டே இருக்க, வேல்ச்சாமி அவனை நகரவிட்டால் தானே. 

அம்மா, அக்கா, தங்கைகள் என ஒரு வட்டத்திற்குள் பாசக்காரனாய்‌ இருந்தவனை ஒரே நாளில், யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் கொலைகாரனாய் மாற்றி, குடும்பத்திலிருந்து விதி அவனைப் பிரித்து வைக்க, சிறைப்பறவையாய் அந்தப் பிரிவின் அழுத்தம், ஆரம்பகட்டத்தில் அவனை கோழையாக்கி, போகப்போக தனிமையும், விரக்தியும் அவனை முன் கோபக்காரனாய் உருமாற்றி அனுப்பியிருந்தது. சட்டென கோபம் வந்துவிடுகிறது. இருந்த இடம் அப்படியென்பதாலா எனத் தெரியவில்லை? அவனென்ன புத்தன், இயேசு, காந்திகளுக்கு மத்தியிலா இருந்து வந்திருக்கிறான். சிறைவாசம் அவன் குணத்தையும், இயல்பையும் சற்று மாற்றித்தான் அனுப்பியிருக்கிறது.

தங்கச்சிக்கு மறு வீட்டு சீர் கொடுக்க அண்ணன்காரன் இல்லாமல் எப்படிடா என ஆரம்பித்து, நான் ஒருத்தனா எத்தனையடா பாக்குறது? கல்யாண‌வேலையா அலஞ்சதுல, பில்டிங் வேலையெல்லாம் அப்படியே நிக்குது. சொன்ன தேதில முடிச்சுக் கொடுக்கலைனா‌ பேரு கெட்டுப்போயிறும்‌ சித்தா. எனக்கும் என்ன வயசு திரும்புதா? முன்ன மாதிரி அலையமுடியலைடா.” நயந்து பேசியே‌ மகனை மெட்ராஸைவிட்டு நகர விடாமல் தன்‌ கைகளுக்குள் வைக்க முயற்சி செய்தார் வேல்ச்சாமி. 

மகனுக்காகத் தானே இத்தனையும் ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து உருவாக்கினார். அவன் மீது விழுந்த கறையை பணம் கொண்டு துடைக்க விழைந்தார். ஒரே மகன். தன் ஆஸ்த்தி, அந்தஸ்த்துக்கெல்லாம் ஒற்றை வாரிசு. அவனது எதிர்காலத்தில் அவனைவிட எதிர்பார்ப்புகள் அதிகம். கனவுகளும் அதிகம் வேல்ச்சாமிக்கு. பொருளல்லாதாரையும் பொருளாகச் செய்யவல்லது பொருளாயிற்றே. 

ஆனால் மகனின் விருப்பம் வேறாக இருக்குமோ என்ற சந்தேக விதை எப்பொழுது விழுந்ததோ அப்பொழுதிலிருந்தே சுதாரிக்க ஆரம்பித்துவிட்டார். 

மகனிடம் திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டார். ஆனால் அவன் தான் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான். 

விட்டால் புடிக்க முடியாது எனத் தெரியும். இதுதான் என் விருப்பம் என அவன் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும் என்ற பயம் ஒருபக்கம். ஒரே இனம். ஒரே ஊர். அந்தஸ்து மட்டும் தான் நிறையவே இடிக்கிறது. ஊரிலேயே இருந்திருந்தாலும் கூட, வசதி இல்லையென்றாலும், குடும்ப பாரம்பரியம் என்ற ஒன்று குறுக்கே நின்றிருக்கும். இவரது தாத்தா காலத்தில் இவர்களிடமே கூலிக்கு இருந்த குடும்பம் தான் தங்கராசு குடும்பம். 

அவளைப் பார்க்காத வரை‌ எப்படியோ சித்தனுக்கு? ஒன்றா, இரண்டா ஒரு ஆயுள்‌ தண்டனை காலம். இறுதியாகத்தான் நன்னடத்தை என தண்டனை‌ காலம் கெஞ்சம் குறைக்கப்பட்டது. அதற்கும் வக்கீல் வைத்து ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. வெளியே விடுதலையாகி வந்தபிறகு தான், புதிய இடம், புதிய சூழல், புதிய முகங்கள் என எதிலும் மனம் ஒட்டவில்லை. பழகிய இடம், பழகிய நட்புகள். பழகிய சொந்தங்களை மனம் தேடியது. முக்கியமாக ஒருத்தியை. 

ஆனால், எந்த நம்பிக்கையில் போவது. நான்கு தங்கைளுக்கு மூத்தவள். இந்நேரம் எந்த ஊரில், யாருக்கு வாக்கப்பட்டு எப்படியிருக்கிறாளோ என்ற எண்ணம் துளிர்க்க அந்த எண்ணமே கசந்து வந்தது. ஆனால் அவள் நினைப்பு மட்டும் ஈரச்சேற்றில் ஊன்றிய நாற்று போல கப்பென வேர்பிடித்து தழைத்து நின்றது. இத்தனை வருடங்களில் அவள் நினைவுகள் மட்டும் நீர்த்துப் போகாததில் அவனுக்கே ஆச்சர்யம் தான். ஒரு வேளை‌ மற்ற பெண்களை‌ பார்க்காததால் தானோ என்று கூட தனக்குத் தானே காரணம் கூட சொல்லிப்பார்த்தான். 

நாள் கணக்கில் கூட, இன்னும் சொல்லப்போனால் மணிக்கணக்கில் கூட காதலென்று சுற்றி திரியவில்லையே. ஒரே நாள். ஒரே கணம். ஒரே பார்வை. இவன் கேட்டவுடன் அவள் கண்களில் தெரிந்த தவிப்பும், பரவசமும், இது சாத்தியமா என்ற பயமும் இப்பொழுதும் பசுமை சுமந்து அப்படியே இருக்கிறது அவனுக்குள். அதனால் தான் அவளில்லாத ஊருக்குச் சென்று ஏமாற்றத்தை சுமந்து வர நெஞ்சம் மறுக்கிறது. 

இப்படியே அப்பாவுடன் தொழிலை கவனித்துக் கொண்டு‌ மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. 

இவனை வெளியே எடுப்பதற்காக வேல்ச்சாமி வைத்த வக்கீலும், அந்த தோட்டத்து வழக்கை எடுத்து நடத்திய வக்கீலும் ஒருவராக இருக்க, ஒரு‌ நாள்‌ அவரைப் பார்க்க வந்தவன், அங்கே தன் ஊர் ஆட்களைப் பார்த்துவிட்டு, சட்டென மலர்ந்த முகத்தோடு நலம் விசாரித்தான். 

“நீங்க ஆவாரம்பட்டி தானே?” என ஆச்சர்யமாக விசாரிக்க, அவர்களுக்கு இவனைத் தெரியவில்லை. தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 

மேலோட்டமாக அழகி குடும்பத்தைபற்றி விசாரிக்க, அவள் தங்கைகளுக்கெல்லாம், திருமணமாகிவிட்டது தெரிந்தது. 

தங்கைகளுக்கே ஆகியிருந்தால்… எல்லாருக்கும் மூத்தவள் அழகி. அதுவுமில்லாமல், வயதுக்கு வந்தவுடன் கட்டிக் கொடுப்பதுதான் ஊர் வழக்கம் என நினைத்தவனுக்கு கொஞ்ச நஞ்சம் ஊர் மீதிருந்த ஆசையும் அறவே விட்டுப்போயிற்று.

இறுதியாக அவள் நிராசையோடு பார்த்த வெற்றுப் பார்வை மட்டும் பச்சை குத்தியதுபோல் அவன் நெஞ்சைவிட்டு நீங்காமல் இடம்பிடித்திருந்தது. அவளை நினைத்தவுடன் தோன்றும் பரவசம் இன்னும் நீங்காமல் தனக்குள் இருக்க, எங்கோ திருமணம் செய்து கொடுத்து, யாருக்கோ மனைவியாக இருப்பவளை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அதற்கெனவே அவனும் ஊரைத் தவிர்த்தான். ஏனோ அழகிக்கு திருமணமாகிவிட்டதா என்ற செய்தியைக் கூட கேட்க துணிவில்லை. 

நம் ஊர்க்காரர்கள் எனத் தெரிந்து பிறகு அப்படியே விட்டுவிட மனமில்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்தான். 

ஊராரைப் பார்த்த பரவசத்தில் ஆவுடை தான் ஊரில் வடக்கிலிருந்து, தெற்காக வீதி வாரியாக ஒவ்வொரு வீட்டையும் விடாமல் நலம் விசாரித்தவர், பொன்னுத்தாயைப் பற்றி அதிகமாகவே விசாரித்தார். கணவனையும், குழந்தையையும் ஒரு சேர பறிகொடுத்தவளாயிற்றே. கிட்டத்தட்ட இவரும் அப்படித்தானே.

அப்பொழுது தான் அழகிதான் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஆண்பிள்ளை மாதிரி இன்னும் குடும்பத்தை தாங்குவது தெரியவந்தது. அவர்கள் கூறிய‌ செய்தி காதில் தேனும், நெஞ்சில் பாலும் ஒரு சேர வார்த்தது சித்தனுக்கு.

பிறகென்ன… அதற்கு மேல் அவனுக்கு அங்கு நிலைகொள்ள முடியவில்லை. ஆனால் எங்கு போவதென்ற தயக்கம். வீடு கூட இல்லை. இவர்களும் ஊர்ப்பக்கமே போகாமல் ஊர்த்தொடர்பும் முற்றிலும் அற்றுப்போயிருந்தது. நன்கு யோசித்துப் பார்த்தவன், அடுத்ததாக  காரியத்தில் இறங்கிவிட்டான். வழக்கில் இழுபறியாக கிடந்த நிலத்தை அப்பாவின் எதிர்ப்பையும் மீறி மெத்தமாக விலை பேசினான். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒன்று தண்ணிக்கு இழுத்தால், மற்றொன்று தரைக்கு இழுக்கிறது. என்றைக்கு வழக்கு முடிந்து, அதில் வெள்ளாமை செய்து இவ்வளவு பணத்தையும் மொத்தமாக கண்ணில் பார்ப்பதென வாரிசுகளும் இறங்கிவர, தோட்டத்தை வாங்கியே விட்டான். இதோ ஆரம்பகட்ட வேலைகளும் அழகி, முருகேசன் கண்காணிப்பில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கேயே ஒரு ஓட்டு வீடிருந்தது. பழைய வீடு என்றாலும் அது புழக்கத்தில் தானிருக்க, அதையும் வெள்ளையடித்து மராமத்து வேலைகளை பார்க்கச் சொல்லியிருந்தான் தபாலில். அதுவும் முடியும் நிலையில் இருக்கிறது. 

கை காலை கழுவி வந்தவள், ஆடுகளை மேயவிட்டு மரநிழலில் உட்கார்ந்திருந்த ஒச்சாயியை அழைத்தாள். அவளுக்கும் தூக்கி வாளி‌ மூடியில் சோற்றை அள்ளிவைக்க, வேண்டாம் சாப்பிட்டேன் என்றவளை அதட்டி சாப்பிடச்சொன்னாள். அவளுக்கு கடனே என சோறு போடும் அண்ணன் தம்பி வீட்டார் எவ்வளவு போட்டிருப்பார்கள் எனத் தெரியும். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரே புழுக்கமாக இருந்தது சுற்றுப்புறம்.

“முருகேசா மழை வெக்கையா இருக்கு. மழை‌வந்தா அரைப்பூட்டோட ஆளுகளை அனுப்பி விட்டுறு!” 

“மொதல்ல மழை வரட்டும் பாக்கலாம்” என்றான் வானத்தை அண்ணார்ந்து பார்த்து. 

அவள் பின்புறமாகப் பார்த்து. “சித்தா…” எனத் தொடங்க… சாப்பிடுவதை விடுத்து, வேகமாக பார்வை திரும்பியது. திரும்பி பார்த்தவள் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பும், பரவசமும் ஒரு‌சேர  போட்டி போட, கூழாங்கல்லாய் கருவிழி சுழன்று கண்ணெட்டிய‌ தூரம் வரை தேடியது. சுமதியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினான் முருகேசன். வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.

சடுதியில் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, திரும்பிப் பார்த்தவளிடம், “சித்தனுக்கு லெட்டர் எழுதப் போறேன். ஏதாவது சொல்லணுமானு கேட்க வந்தேன்?” என்றான். 

“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு முருகேசா?” மிக சாதாரணமாக கேட்டவளுக்குள் தான், தன் சித்தனிடம் கேட்க, சொல்ல எத்தனை எத்தனை ஆசைகள், எத்தனை ஏக்கங்கள், எத்தனை எதிர்பார்ப்புகள். அத்தனையும் பூட்டிய பாதகத்தி நெஞ்சுக்குள். சாவி மட்டும் சித்தன் கையில். 

நேரம் மதியத்தைத் தொட, வானம் இருட்டிக்கொண்டு வந்துவிட்டது. 

மெதுவாக தூரல் ஆரம்பித்து சடசடவென மழை‌ பிடித்துக் கொண்டது‌. உழுத காட்டின் செம்மண் வாசம் நெஞ்சமெங்கும் நிறைந்து போனது. 

2 thoughts on “பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top