“அழகம்ம… ஒனக்கென்ன வேணும். டீயா? காபியா?”
“எல்லாருக்கும் என்ன வாங்குறியோ அதையே எனக்கும் வாங்கு முருகேசா!”
“அது என்னைக்கி இதுதான் வேணும்னு கேட்டுருக்கு. இப்ப புதுசா கேக்கப்போகுது?”
“நீ சொல்றதும் சரிதான் சுமதி. இந்த வருஷம் மழை அடிச்சு ஊத்தப்போகுது பாரு. கண்மாய் நெறஞ்சு கரைய உடச்சுக்கிட்டு ஊருக்குள்ள தண்ணிவந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல.”
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் இன்னிக்கி நாந்தான் கெடச்சனா.”
“ஆமா… எங்க அத்தாச்சி இத்தன நாளா இம்பூட்டு அழகையும் எந்த பொட்டில போட்டு பூட்டி வச்சுருந்துச்சோனு ஆச்சர்யமாவுல இருக்கு.”
இருவரின் கேலிப்பேச்சில் சன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கூச்சத்தையும், சிரிப்பையும் மறைக்க.
தாழம்பூ போட்டுவைத்த தகரப் பெட்டியிலிருந்து, போன வருஷம் தீபாவளிக்கு எடுத்த ஊதாக்கலர் புடவையில், அள்ளித் தெளித்தாற்போல் மஞ்சள் கலரில் பொடி பூப்போட்ட பூனம் புடவை. அதே ஊதா வண்ணத்தில் ரவிக்கை. கழுத்தை ஒட்டிய கருப்பு வண்ணத்தில் மணிமாலை அலங்கரிக்க, அதிசயமாகப் பின்னி முன்பக்கமாகத் தழையவிட்டிருந்த சடை தூங்கும் பச்சைப் பிள்ளை போல் மடியில் துவண்டு கிடந்தது. பொன்மஞ்சள் முகத்தில் அரக்கு சிவப்பில் ஒரு ஒட்டுப்பொட்டு. அஞ்சனம் பார்த்தறியா விழிகள் புதிதாக மையெழுதியிருந்தது.
முதன் முதலாக இரயில் ஏறியிருக்கிறாள். அவளுக்கு மட்டுமல்ல. அவளோடு வரும் எல்லாருக்கும் இதுதான் முதல் இரயில் பயணம். அதுவும் நெடுந்தூரப் பயணம். கிட்டத்தட்ட பதினைந்து பேர் ஒன்றாக கிளம்பி செல்கின்றனர் கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு சித்தன் வீட்டு விசேஷத்திற்கு. அனைவரையும் முருகேசன் பொறுப்பில் அழைத்து வரச்சொல்லியவன், செலவுக்கான பணத்தையும் கொடுத்துச் சென்றிருந்தான். தோட்டத்துல நடவு வேலையிருக்கு, நாள் தோதுப்படாது, அம்பூட்டு தூரமா என மலைத்தவர்கள் போக பதினைந்து பேர் ஒன்று சேர்ந்தனர். அனைவருக்கும் திண்டுக்கல் வந்து முன்பதிவு செய்து டிக்கெட் வாங்கியிருந்தான். உல்லாசப் பயணம் போல அனைவரும் குதூகலத்தோடு இரயில் ஏறியிருந்தனர் மதராசப்பட்டணம் பார்க்க.
“சித்தா! அங்கவந்தா அண்ணா சமாதி கூட்டிப்போயி காட்டணும். அதுக்குதான் வர்றேன்.” பெருசுகள் ஏற்கனவே சித்தனிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பொன்னுத்தாயும், அன்னக்கிளியும் சேர்ந்துதான் அழகியை நாடுகடத்தாத குறையாக அனுப்பி வைத்தனர்.
“அக்கா… நீ எங்கேயும் போறதில்ல, வாரதில்ல. வீடு, ஆட்டுக்குட்டி, தோட்டங்காடுன்னே செக்கு மாடாட்டம் இந்த ஊரையே சுத்திவர்ற. எல்லாரும் போறாங்கல்ல. ஆளோடு ஆளா சேந்து போய்ட்டு வாக்கா. மெட்ராஸ் எல்லாம் எந்தக்காலத்துல போய்ப்பாக்கப்போறோம்!” அக்காவை அனுப்பிவைக்க அவளோடு மல்லுக்கட்டினாள் அன்னக்கிளி. எந்த சந்தோஷத்தையும் பார்த்திராதவள். இப்படியாவது போனால்தான் உண்டு.
“ஆட்டுக்குட்டியெல்லாம் யாருடி பாக்குறது? நீயும் கைப்பிள்ளக்காரி. ஒச்சாயி ஒத்தாளா பாக்க முடியுமா?” உள்ளுக்குள் ஊர்ப்பட்ட ஆசை இருந்தாலும் நொண்டிச்சாக்கு சொன்னாள். ஒரு மனம் வேண்டுமென்றது. மறுமனமோ தகுதிக்கு மீறிய ஆசை வேண்டாமென்றது. சீசா பலகையாய் மனம் மேலும் கீழும் அல்லாடியது.
“என்னமோ இந்த உலகமே உன் காலடியிலதான் சுத்தறமாதிரி பேசாதக்கா. ரெண்டு நாள்தானே? அதெல்லாம் நானும் அம்மாவும் பாத்துக்கறோம்.” அன்னக்கிளி குரலை சற்று உயர்த்த,
“அவ்ளோ தூரம் வீடு வரைக்கும் வந்து கூப்புட்ட புள்ளைக்கு என்னடீ மரியாதை?” பொன்னுத்தாயும் சின்னவளோடு சேர்ந்து கொள்ள,
“ஏம்மா… சித்தா நம்ம வீட்டுக்கு வந்தது அவ்ளோ பெரிய விஷயமா? வந்ததே இல்லையா? அப்படி போகணும்னா நீ போயேன்!”
“அது சின்னப்புள்ளைல வந்ததுடீ. இப்ப இம்பூட்டு பெரியாளானப்பின்னாடியும் நம்மல மதிச்சு வந்து அழைக்குதுன்னா அதுக்கு மதிப்பு கொடுக்கனும்டீ. செஞ்சாருக்கு செய்யணும், செத்தாருக்கு அழணும்னு எதுக்கு சொல்லி வச்சுருக்காங்க. நம்மல தேடறவங்கள மதிக்கணும்னு தான? இந்த வயசுக்கு மேல என்னைய அலையச்சொல்றியா? அதுவுமில்லாம கைப்பிள்ளக்காரிய விட்டுட்டு எப்படி நாம்போறது?”
இங்குதான் அழகியின் மனம் மீண்டும் சுணங்கியது. அவன் தேடிவந்தது பெரிதில்லை. தகுதி உயர்ந்த பின்னும் ஊராரைத் தேடிவந்ததை பெரிதாகப் பேசப்பட, மனம் மரவட்டையாய் சுருண்டு கொண்டது.
சித்தன் ஊரார்க்கு பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்து சென்றபிறகு ஊரே அவனைப்பற்றிதான் பேச்சு. கரட்டின் அடிவாரத் தோட்டமும் அவன்தான் வாங்கியிருக்கிறான் எனத் தெரிந்தபிறகு ஊருக்குள் அவன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து போயிற்று.
“அவனுக்கென்னப்பா புதுப்பணக்காரன்” என்ற பேச்சிலேயே அவர்கள் காமாரமும் வெளிப்பட்டது.
கல்யாண வயதில் பெண் வைத்திருப்பவர்கள் விட்ட பெருமூச்சில் ஆயிரம் பொன்னாச்சே… ஆயிரம் பொன்னாச்சே… சித்தா… எனக்கில்லை… எனக்கில்லை என்ற தருமியின் புலம்பல் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவனைப் பார்த்த கன்னிப் பெண்கள் விட்ட ஏக்கப்பெருமூச்சில் துருத்தியே தேவையில்லை. அப்படியே இரும்படிக்கலாம். அவ்வளவு வெப்பம்.
“லாட்டரிச்சீட்டு ஏதும் விழுந்திருக்குமோ?” தனியாக ஆராய்ச்சி நடந்தது சாவடியில்.
“நல்லா இருக்கட்டும்!” ஒரே வாக்கியம் தான். அதைச்சொல்லும் விதத்தில் தான் எத்தனைக்கெத்தனை புகைச்சல் மண்டியிருக்கிறது. இந்த வார்த்தை சொல்லும் விதம் சொல்லும் வஞ்சப்புகழ்ச்சியை. பஞ்சாயத்து முடிந்த அன்று, என்னதான் இரவெல்லாம் ஊசலாடிய மனதை, இறுக்கிப் பிடித்து கட்டிவைத்தாலும், சித்தனை காலையில் வாசல் முன் பார்த்ததும், மீண்டும் மனம் தடுமாறத்தான் செய்தது. அவன் கையிலிருந்த பத்திரிகை அடங்கிய பையைப் பார்த்ததும் நெஞ்சாங்கூடு படபடத்து ஏறியிறங்க மூச்சுவிடத் திணறித்தான் போனாள் சற்று நேரம்.
உள்ளே வந்தவர்களை உட்கார வைக்கக்கூட இடமில்லையென பொன்னுத்தாயி புலம்பலில் நிதர்சனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் உரைக்க, விரலுக்கு மிஞ்சிய வீக்கம் வேண்டாமென தனக்குத்தானே மனப்பூட்டு போட்டுக்கொண்டாள்.
வந்தவர்களை உட்கார வைக்க முடியவில்லையே என வருத்தப்பட, சுற்றும் முற்றும் பார்த்தவன், அங்கிருந்த பித்தளை அண்டாவை எடுத்து கவிழ்த்துப்போட்டு உட்காரப்போக,
“பொறுய்யா… பொறுய்யா…” என பதறிய பொன்னுத்தாயி, கொடியில் தொங்கிய போர்வையை எடுத்து அதன் மீது நாலாக மடித்துப்போட்டார். அதுவும் உட்கார வசதியாகத்தான் இருந்தது.
“என்னயிருந்தாலும் எட்டியிருந்தா தான் மரியாதைங்கறது நல்லா தெரியுது. ஏஞ்சின்னாயி! நானும் எத்தன தடவ இந்த வழியா வந்து போயிருப்பேன்? ஒரு நாளாவது எனக்கு இப்படி உபச்சாரம் பண்ணியிருப்பியா?” முருகேசன் கேலியாய் பொய்க்கோபம் காட்ட,
“நீ நம்ம வீட்டுப்புள்ள முருகேசா.”
“இத ஒன்னு சொல்லிரு!” என சலித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த குத்துரலில்
முருகேசன் உட்காரப்போக,
சித்தன், “மாமியாருக்கு ஆகாதுடா” என்றான்.
“மாமியாதான் இப்ப இல்லையே. இனிமே ஆனா என்ன ஆகாட்டி என்ன?” என கேட்க, இருவருக்கும் சிரிப்பு வந்தது.
சிரிப்பவனையே மெய்மறந்து அழகியின் கண்கள் அளவெடுக்க, முன் தினம் கருக்கலிலும், அவமானத்தில் குறுகி நின்றதிலும் அவள் கருத்தில் கொள்ளாத அவன் அழகும், கம்பீரமும் இப்பொழுது அவள் கண் நிறைத்து, கவனத்தை சிதறடித்தது.
வெள்ளை பேன்ட்டும், வெள்ளை கலரில் குறுக்கே கோடுபோட்ட, அடர்நீலக் கலரில் வட்டக்கழுத்து டீ சர்ட்டும், அவன் உயரத்திற்கும், நிறத்திற்கும், உடல்கட்டிற்கும் கச்சிதமாக பொருந்தியிருந்தது. இளவெயிலில் பட்டொளிவீசி அலைபாய்ந்தது முன்னுச்சி முடி. சிரிக்கும் கண்கள். எடுத்து வைத்தாற்போல் கூர்நாசி. கைவிரல் நகம் முதற்கொண்டு கால்விரல் நகம் வரை அத்தனை நாசுக்கு. கைவிரல் நகம் கூட மின்னுமா என்ன? சிந்தனைச் சிறையில் சிக்கியிருந்தவளை,
“எய்யா… ஆவுடை எப்படீ இருக்கா? புனிதாவ எங்க கட்டிகொடுத்துருக்கு?” பொன்னுத்தாயின் விசாரிப்பு நிகழ்காலத்திற்கு இழுத்து வர, சட்டென தன்னை ஒருதரம் குனிந்து பார்த்துக் கொண்டாள்.
அவனைக்கண்ட அவசரத்தில், அரையும் குறையுமாக கழுவியதில், முழங்கைவரை சாணி பூசியிருந்தது. தூக்கிப் போட்ட கொண்டை, எடுத்துச் செருகிய சேலை. சட்டென கொசுவத்தை இறக்கிவிட்டாள். இருக்கும் நிலை உணர்ந்தவள் கண்களை மூடி, இழுத்து மூச்சுவிட்டு சிந்தை தெளிந்தாள். மனதின் ஒரு மூலையில் அவள் மீதே அவளுக்கு வெறுப்பு மண்டியது. ஒரு நிலையில் நிலையாக நில்லாமல் கோழி கிண்டிய குப்பையாய் மனம் சிதறிக்கிடந்தது.
“செத்த இருய்யா… காபித்தண்ணி வாங்கியார்றே. அழகம்ம அந்த தூக்குவாலிய எடு!” வயதுக்கு மீறி பரபரத்தார் பொன்னுத்தாயி.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. இப்பதான் முருகேசன் வீட்ல டீ குடிச்சுட்டு வந்தோம். இனி நாட்டாமை சித்தப்பா வீட்டுக்குவேற போகணும். எப்படியும் சாப்பிடாம விடமாட்டாரு.” அவன் வேகமாய் மறுத்துப்பேச.
“நம்ம வீட்ல எல்லாம் சாப்பிடுவாங்களாம்மா?” என்றாள் சித்தனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு.
“ஏன் சாப்பிட்டதே இல்லையா? நம்ம வீடுங்கறதாலதான் உரிமையா வேண்டாம்னு சொல்ல முடியுது அத்தை. நாட்டாமக்காரர்கிட்ட அப்படி சொல்ல முடியாது. இன்னொரு நாளைக்கு வர்றே. விருந்தே போடுவீங்களாம்.” பார்வையை அழகியிடம் வைத்தவன், பதிலை பொன்னுத்தாயிக்கு கூறினான்.
“அதுக்கென்னய்யா… புதுப்பொண்டாட்டியோட வா! விருந்தே வச்சுறலாம்!”
“சித்தா! வந்த வேலைய விட்டுட்டு பேசிக்கிட்டே இருக்க. எல்லாம் காடுகரைன்னு போறதுக்குள்ள பத்திரிகை வைக்க வேண்டாமா?” முருகேசன் நினைவூட்ட,
“இதுக்குதான் உன்னப்போல ஒரு ஆளு வேணும்கறது. இன்னொரு நாள் வர்றேன் அத்தை. சாவகாசமா பேசலாம்” என்றவன் பையிலிருந்து பத்திரிகை எடுத்து பொன்னுத்தாயிடம் கொடுக்க,
“அழகம்மகிட்ட கொடுய்யா!” என,
“நீயே வாங்கும்மா!” என்றாள்.
“வாங்கத்தெரியாமயா உங்கிட்ட கொடுக்கச் சொல்றே. நல்ல காரியம். நீயே வாங்குடீ!” என அதட்ட, வேறுவழியில்லாமல் அவளே கை நீட்ட வேண்டியதாய்ப் போயிற்று. கையில் வாங்கியவளுக்கு வெற்று காகிதமும் கணக்குமென அன்றுதான் அறிந்து கொண்டாள். அவன் கையிலிருந்து பத்திரிகை வாங்கிய கை மெலிதாக நடுங்கத்தான் செய்தது. பிரித்துப் படித்துப்பார்க்க அத்தனை போராட்டம் உள்ளுக்குள். பள்ளிக்கூடம் போகாமலே இருந்திருக்கலாம். உள்ளம் நொடித்துக் கொண்டது.
வாங்கியவள் அதே வேகத்தில், “இந்தாம்மா” என பொன்னுத்தாயிடம் நீட்ட,
“பிரிச்சு படிடீ. எப்ப கல்யாணம். எங்க கல்யாணம். பொண்ணு பேரென்ன? வாங்குனவுடனே பொசுக்குனு எங்கிட்ட நீட்டுறே. நானா படிச்சிருக்கே?”
“ஆமா… என்னைய மட்டும் என்ன கலெக்டருக்கா படிக்க வச்சுருக்க?” வெறுப்பும், நொடிப்புமாய் கேள்வி கேட்க,
“ஏன் அழகி! பத்திரிக்கை படிக்க, கலெக்டர் வரணுமா என்ன?”
ஒருகணம் உயிர் பூ பூத்து அடங்கியது அவளுக்குள். வந்த நேரத்திற்கு இப்பொழுதுதான் அவளிடம் நேரிடையாகப் பேசுகிறான். அதுவும் அவள் பெயர் சொல்லி அழைத்து. இனிப்பும் புளிப்பும் கலந்த ஆரஞ்சுமிட்டாய் சலசலவென அடிநாக்கில் கரைந்து தொண்டையிறங்கி, இதயம் தித்தித்தது.
வேறு வழியின்றி அம்மாவை முறைத்துவிட்டு, படபடக்கும் நெஞ்சோடு பத்திரிக்கையை விரித்து படித்தவள் முகம் ஒருகணம் சட்டென பூத்து அடங்கியதை கவனித்தான். திடீர் விருந்தாளி கண்ட சிறுபிள்ளையின் சந்தோஷத் துள்ளல் உள்ளுக்குள். அவளையும் மீறி கண்கள் கரித்துக்கொண்டு வர, மின்னல் வெட்டும் நேரம் கூட இராது சட்டென தன்னை மீட்டுக் கொண்டவள் முகம் இயல்புக்கு வந்தது. அவளையே பார்த்திருந்தவன், கலைடாஸ்கோப் போல் பல வண்ணம் காட்டி இறுதியில் சட்டென இயல்புக்கு வந்ததை கவனித்தவன், காரணம் புரியாமல் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“சரண்யாவுக்கா கல்யாணம்?” கண்கள் விரியக் கேட்டாள். எத்தனை முயன்றும் துளிர்த்த சந்தோஷத்தை ஒழித்து வைக்கத் தெரியவில்லை பாதகத்திக்கு.
“யாருடீ சரண்யா? கல்யாணம் சித்தனுக்கில்லையா? பொண்ணு பேரு சரண்யாவா?” பொன்னுத்தாயி அடுத்தடுத்து கேட்க, சித்தனுக்கில்லையா என்றதில் எரிச்சல் மண்டியது.
பொன்னுத்தாயி கேட்டதில்தான் அவனுக்கே விளங்கிற்று. இவ்வளவு நேரமும் அவனுக்குதான் திருமணம் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது.
இவ்வளவு நேரமாக பட்டும் படாமல் அழகி பேசியதன் அர்த்தம் புரிய, அவன் கண்களிலும் திடீரென ஒரு ஒளிபரவ, அவளையே சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்தான் சித்தன்.
“என்னம்மா நம்ம சித்தனோட மொதத்தங்கச்சி. அவ பேருகூட மறந்துட்டியா?” நம்ம என்றதில் அத்தனை உரிமை.
“என்னடீயிது… தலையிலடிச்ச மாதிரி பேரச்செல்ற?” என மகளை அதட்ட,
“முருகேசான்னு கூப்புட்டப்ப எல்லாம் தெரியல. இருந்தாலும் உனக்கு இத்தனை ஓரவஞ்சனை ஆகாது சின்னாயி!” பக்கத்தில் இருந்தவன் பரிகாசம் பண்ண,
“என்ன முருகேசா இதுக்கெல்லாம் சடச்சுக்குற… நீயி…” குறைவாக்கியத்தை முடிக்க விடாமல்,
“நம்ம வீட்டுப்புள்ள அதானே” என முருகேசன் முடித்து வைக்க, எல்லாருக்கும் சிரிப்பு வந்தது முருகேசனின் சிறுபிள்ளைத்தனத்தில்.
“சரண்யா சித்தாவோட பெரிய தங்கச்சி சின்னாயி. அந்தப் பிள்ளைக்குதான் கல்யாணம்.”
“வருசமாகிப்போச்சுல்ல. வயசுமாயிருச்சு… மறந்துருச்சு முருகேசா! ஆனா, அந்தக் கடைக்குட்டி மட்டும் மறக்கல. இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்கிறா. அல்பாயுசால போகணும்னு தான் அம்பூட்டு அழகா இருந்துச்சோ என்னவோ. குரங்குக்குட்டி மாதிரி சித்தங்கூடவே தொத்திக்கிட்டு திரியும். ஒரே நாள்ல கொத்தா அள்ளிக்கொடுத்துட்டோமே?” பொன்னுத்தாயி முந்தானை எடுத்து கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார். வருடங்கள் பல ஓடிப்போனதால் வருத்தமும் கொஞ்சம் வற்றிப்போயிருந்தது.
சித்தனுக்கும் உள்ளம் கலங்கி, உடல் இறுகியது. காலச்சக்கரம் கடகடவென பின்னால் சுழன்றது. அன்று வீட்டில் அவனுக்கு ஏதோ ஒரு சடவு. உடன் வருவேன் என காலைக்கட்டிய சிறுமியை கோபத்தில் உதறிவிட்டு மாடு மேய்க்க வந்துவிட்டான். அன்று மட்டும் தூக்கி வந்திருந்தால் அவனது பூஞ்சிட்டு இந்த உலகத்தை விட்டு போயிருக்காதோ என்னவோ? அவனையே நத்திக் கொண்டிருக்கும் கடைசித் தங்கையின் உயிர் துவண்டு பிரிந்ததும் அவனது கைகளில்தான். அதன் பிறகு நடந்ததெல்லாம் விதியின் கோரதாண்டவம் என்று தான் சொல்லவேண்டும். அவன் முகம் கசங்கி மாறுவதைக் கண்டவள்,
“அம்மா!” என ஓங்கி அதட்ட,
“நானொருத்தி… புள்ள நல்ல காரியமா வந்திருக்க நேரத்துல பழசெல்லாம் கெளறிட்டு இருக்கே.
“எய்யா சித்தா!” என்றவர் அதற்கு மேல் தொடராமல் பேச்சை நிறுத்திக் கொள்ள, ஏதோ கேட்க தயங்குவது தெரிந்தது.
“என்னத்தை?” என்றான்.
“ஒன்னுமில்லய்யா!” மலுப்பி மறுதளித்தார்.
“தயங்காம கேளுங்கத்தை!”
“எப்பய்யா வந்த?” சன்னக்குரலில் பைய கேட்டார். தொண்டையடைத்து தளுதளுத்து வந்ததிலேயே, அவர் கேட்க வருவது புரிய, அவன் கண்களில் தெரிந்த வலி, தவறாமல் பதிந்தது அழகியின் பார்வையில். மனம் தவித்துப் போனவள், பொறுக்க மாட்டாமல்,
“ஏம்மா? எப்ப எதக் கேக்குறதுனு வெவஸ்த்தையில்லையா உனக்கு? வயசாயிருச்சுனு மட்டும் சொல்லத் தெரியுது. அதுக்குத்தக்கன பக்குவமிருக்கா உங்கிட்ட. கூறுமாறிப்போச்சா உனக்கு” படபடவென பொறிந்து தள்ளினாள்.
அவன் முகம் கசங்கியதை காண சகிக்கவில்லை அழகிக்கு. மனம் தவித்துப் போனவள், தாளமாட்டாமல் அம்மாவை அதட்ட,
அவர் எதைக் கேட்கிறார் என்பதை அவர் கேட்க தயங்கியதிலேயே புரிந்து கொண்டவன், “மூனு வருஷமாச்சு அத்தை” என்றான் வெற்றுக்குரலில்.
‘ஹோஓஓ… வந்து மூனு வருஷமாச்சா?’ தனக்குள் கேள்வி கேட்டு வேள்வி நடத்தியது அழகியின் உள்மனது.
சட்டென சூழ்நிலையில் ஒரு இறுக்கம் பரவ, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் சூழல் மௌனம் போர்த்திக் கொண்டது. அழுத குழந்தையைத் தூக்கிக் கொண்டு அன்னக்கிளி முன்னால் வர, அந்த சத்தம்தான் அனைவரையும் நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது.
வந்தவர்களை அவளும் வரவேற்றாள். புதியவனைப் பார்த்து சிறுசுகள் இரண்டும் அன்னக்கிளி பின்னால் சென்று நின்று கொண்டன.
“வாங்க!” என கைநீட்டி அழைத்தான். கூச்சத்தில் இன்னும் பின்னால் ஒண்டிக்கொள்ள சிரித்துக் கொண்டான்.
“சரித்தை. எல்லாருக்கும் பத்திரிகை வைக்கணும். கண்டிப்பா எல்லாரும் வந்துறுங்க. எல்லா ஏற்பாட்டையும் முருகேசன் பாத்துக்குவான்” என எழுந்து கொண்டவன், அன்னக்கிளியிடம் செவலை வந்து தொல்லை கொடுத்தால் பார்த்துக் கொள்ளலாம் என தைரியம் சொல்லிச் சென்றான்.
தட்டியடைத்த வாசல் வரை வழியனுப்ப வந்தவளிடம், “ஆளுகள விட்டு வெட்டிக்கழிக்கிற வேலைய ஆரம்பிக்கச் சொல்லிரு. என்கிட்ட கேக்கணும்னு அவசியமில்ல. முருகேசன்கிட்ட கேட்டுக்க. எதுனாலும் நீயே பாத்துக்க. மழைக்காலம் ஆரம்பிக்கங்குள்ள வேல முடிஞ்சாதான், பூமி குளுந்ததும் உழவு ஓட்ட சரியாயிருக்கும்” என்றவனிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.
“பார்றா… அழகு தலைய மட்டும் ஆட்டி இன்னைக்குதான் சித்தா பாக்குறே. அதிசயம்தான் போ!” என சிரித்து கேலி பேசிவிட்டு, முருகேசன் வீதியில் இறங்கி முன்னே நடக்க, முத்தாய்ப்பாக மெலிதாக தலையாட்டி, ‘போய் வரவா?’ என சித்தன் சம்மதம் கேட்க, அன்று போல் இன்று வாயடைத்து நிற்காமல் பளிச்சென சிரித்து தலையசைத்தாள் அழகி.
கண்பார்வை விட்டு மறையும் வரை பார்த்து நின்றவளின் மனதோரம் ‘யாரோ சீச்சீ… இந்தப்பழம் புளிக்கும்னு சொன்னாங்க’ எக்களிப்பாய் ஒரு கேலிச்சிரிப்பு. களிப்பின் வெளிப்பாடாக மெலிதாக ஒரு கோடுபோட்டது அவள் இதழ்களில்.
விரும்பிக் கேட்டவர்கள் தேவகோட்டை குமார், ரமேஷ், லலிதா, திருச்சி லட்சுமி, அம்பிகா, சரஸ்வதி… அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடிய பாடல் நேயர் விருப்பமாக. தூரத்தில் வானொலி பண்பலை ஒலிபரப்பிய பாடல் அன்பலை பரப்பி காற்றோடு கலந்து வந்தது…
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
பூவில் தோன்றும் வாசம்
அது தான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அது தான் தாளமோ
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
commend pls

Yappa ippo thaan nalla irukku, naan kuda Siddhaku thaan kalyanam endru ninaichen, super
😂😂😂 thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫