நெஞ்சம் மறப்பதில்லை 7

முதல் நாள் இரவு சண்முகம், லஷ்மியிடம் கூறித் தன்னைக் கேலி‌பேசியது நினைவுக்கு வர, புன்னகையுடனே, அலுவலக லிஃப்டிற்குள் நுழைந்தாள் ஆதியா.

அலுவலகம் வந்தவளுக்கு ஒரு இனம்புரியாத சொந்தம் மனதில் தோன்றத்தான் செய்தது.

“ஹலோ! மேடம். என்ன முகம் நகைக் கடை விளம்பரம் மாதிரி ஜொலிக்குது?” தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளைப் பார்த்து நந்தினி கேட்ட கேள்வியில், நினைவுக்கு வந்தவள்,

“ஹாய் நந்தினி! குட்மார்னிங்!” என்றாள் ஆதியா.

“குட்மார்னிங் ஆதி. ஆனா, நாங்கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.”

“என்ன கேள்வி கேட்ட?”

“நான் கேட்டதே காதுல விழுகலையா? அப்படி எந்தக் கனவு லோகத்துல இருந்த. ஆமா… நேத்து ஏன் நீ ஆஃபிஸ்க்கு வரல?” என அடுத்த கேள்விக்குத் தாவினாள்.

‘அப்பாடா… மொதக் கேட்டத மறந்துட்டா. ‘என்ன சொல்வது’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அடுத்தக் கேள்வியைக் கேட்க தப்பித்தோம் என்ற உணர்வு ஆதியாவுக்கு வந்தது.

“என்னை மிஸ் பண்ணுனியா நந்தினி.” பாவமாய்க் கேட்க,

“என்னைய விட இங்கு வேறொரு ஆள் உன்னைய மிஸ் பண்ணுனாங்க.”

இதைக்கேட்டவளின் மனதில், உள்ளே நுழையும் பொழுது இருந்த இதம் மறைய, நெஞ்சம் முழுதும் எரிச்சல் மண்டியது. அதை வெளிக்காட்டும் எண்ணமின்றி, “நேத்து நம்ம புது எம்.டி ய மீட் பண்ண, நம்ம நாதன் சாரும், நானும் ரெஸ்டாரண்ட்டுக்குப் போயிருந்தோம் நந்தினி.”

“அப்படியா! யாருப்பா அது?” தனது அடுத்த எம்.டி யைத் தெறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நந்தினி வினவ,

“பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ், நந்தினி.

“வாவ்! சூப்பர் ஆதி. போன‌வாரம் கூட அவரப்பத்தி பிஸினஸ் மேகஸின்ல எழுதியிருந்தாங்க தானே?”

“ஆமா. ஆனா… நமக்கு இங்க எம்.டி யா வரப்போறது அவரோட தாத்தா சத்யப்பிரகாஷ் சார்.”

வட போச்சே பாவனையில் இருந்த நந்தினியின் முகம் பார்த்த ஆதியாவிற்கும் சிரிப்பு வந்து விட்டது.

“குட்மார்னிங் ஆதி!” குரல் கேட்டு நிமிர்நதவள், பதிலுக்கு

“குட்மார்னிங் சர்!” என்றாள் வேண்டா வெறுப்பாக.

“உங்களுக்கு எத்தன தடவ சொல்றது ஆதி… என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க… இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்னு.”

“நானும் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன் சர்… என்னை முழுப்பேர் சொல்லிக் கூப்பிடுங்கனு… நீங்க கேக்கறீங்களா?” என்றாள் நிதானமாகவே.

ராகவன். இந்தக் கம்பெனியில் சூப்பர்வைசர். ஆனால், மேற்பார்வை என்னவோ, எப்பொழுதும் பெண்களின் மீது தான். ஓநாய்ப் பார்வை. இந்த மாதிரி மனித ஜந்துக்கள் எல்லா இடங்களிலும் ஊடுறுவித்தான் இருக்கின்றன. பணியிடங்களில், சில தருணங்களில் இந்த மாதிரி ஆட்களைக் கடந்து தான் செல்ல‍ வேண்டி இருக்கிறது. 

“முழுப்பேர் சொல்லிக் கூப்பிடக் கஷ்டமா இருந்தா, மேடம்… இல்லைனா சிஸ்டர்… இந்த மாதிரி கூப்பிடுங்களேன்.” என்று நந்தினி கூற,

“உங்கள யாரும் இங்கு தீர்ப்பு சொல்லக் கூப்பிடல.” என்றான் ராகவன்.

“உங்களையும் யாரும் இங்க கூப்பிட்ட மாதிரி தெரியலயே சர்.” என்றாள் ஆதியா நிதானமாகவே.

“நேத்து நீங்க வரலியே… அதான் விசாரிக்கலாம்னு வந்தேன்.”

“அதை நான் யார்கிட்ட சொல்லணுமோ… அவங்க கிட்ட சொல்லியாச்சு சர்.” என்றாள் இது உன் வேலை இல்லை என்பதாய்.

இதற்கு மேல்‌ இங்கு நிற்பது வீண் என்றவாறு இடத்தைக் காலி செய்தான். இருந்தும் அவன் பார்வை பெண்களை மேல் பார்வை பார்த்து விட்டுத்தான் சென்றது.

ஆதியா இங்கு வந்த சில நாட்களிலேயே ராகவனின் பார்வையில் வித்யாசத்தைக் கண்டு கொண்டாள். மேனியில் புழு ஊரும் பார்வை அது. பெரும்பாலும் இது போன்றோரின் பார்வைக்கு எதிர்வினை புரியாமல் இருப்பதே உத்தமம் என விலகி விடுவாள். நேரிடையான பேச்சுக்களின் போதும் கூட, அவளுடைய பதில்… முகத்தில் கோபம் காட்டாமல் நிதானமாகவே இருக்கும்.

அதற்காக நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் உன் பார்வையை அங்கீகரிக்கின்றேன் என்று அர்த்தமில்லை, ‘எட்டி நில்!’, என்பதாய் இருக்கும் அவளுடைய பதில். 

“பார்வையைப் பாரு, அப்படியே துச்சாதனன் பார்வை. கண்ணுல மிளகாப்பொடிய அள்ளிக் கொட்டலாம் போல இருக்கு.” என்று நந்தினி பொருமிக் கோண்டிருந்தாள்.

“நீ தானே நந்தினி சொன்ன, ரசிக்கிறது தப்பு இல்லைனு, அந்த மாதிரி ரசிச்சுட்டுப் போக வந்திருப்பாரா இருக்கும்.”

“அடிப்பாவி… நான் சொன்னதும், அவன் பாக்குறதும் ஒன்னா?”

“என்ன வித்தியாசம் சொல்லு.”

“பூ அழகா இருக்கேன்னு ரசிக்கிறது என்னோட ரசனை. அழகா இருக்கே, கசக்கி முகர்ந்து பாத்தா என்னனு பாக்கறது அவனோட பார்வை.”

இது ஆதியாவிற்கும் தெரியும். நந்தினி போன்றோரின் பேச்சு நானும் ரவுடிதான் வகைப் பேச்சு.வெறும் வாய் ஜாலம்‌ மட்டும் தான். கல்மிஷம் இருக்காது. சக வயது தோழியிடம் பேசும், நத்திங் வகையறாப் பேச்சுக்கள். 

ஆனால் ராகவன் போன்றோரின் பேச்சுகளும், பார்வையும் சந்தர்ப்பம் தேடுபவை. இந்த மாதிரி ஆண்களுக்குப் பயந்து வேறு இடம் தேட‌முடியாது. அங்கும் இதே மாதிரி இன்னொருத்தன் இருக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்காக மீண்டும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கவும் முடியாது. ஒவ்வொரு இடமாக ஓடவும் முடியாது. முடிந்த அளவிற்கு ஒதுங்கிப் போகத் தெரியவும் வேண்டும். முடியாத பட்சத்தில் தற்காத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். 

நான் ஏன் ஒதுங்கிப் போக வேண்டும்? என்று வரிந்து கட்ட முடியாது. ஏனென்றால் இன்னும், ‘நாலு பேர் நம்மளைப் பற்றி என்ன நினைப்பார்களோ?’ என்ற எண்ணத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒழுக்கம் என வரும் பொழுது, இன்றளவும், ‘அவன் ஆம்பிளை எப்படி வேணும்னாலும் இருப்பான்.’ என்ற வாக்கியம் ஆண்களுக்கு உதவுகிறது. இன்றளவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது பெண்களின் ஒழுக்கம் மட்டும்தான்.

 ஆண்களுக்கு மட்டும் தான் இந்த சுதந்திரமா? நாங்களும் அப்படித்தான் என்று, இன்று பெண்களும், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பதை வேறு வகையில் காட்ட முற்படுகின்றனர். கட்டவிழ்த்து விட்டக் கன்றுக்குட்டி, சிறிது தூரம் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிப் பிறகு தான் ஒரு நிலைக்கு வரும். 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது மட்டுமல்ல. மேடைப்பேச்சும் சில சமயங்களில் எதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

இந்தக் கோட்பாடுகளுக்குள் சிக்கித் தவிப்பது, நடுத்தர வர்க்கம் மட்டுமே.

மிகவும் கீழ் மட்டத்திலும் இல்லை. மிகவும் மேல் வர்க்கத்திலும் இல்லை. ஏனெனில் இந்த நாலுபேர் கீழ்‌மட்டத்தைக் கண்டு கொள்வதில்லை. மேல் வர்க்கத்தைக் கண்டு கொள்ளும் துணிச்சல் இல்லை.

 ***************

நாட்கள் நகர, நல்லதொரு நாளில் சத்யப்பிரகாஷ், நாதன் அன்ட் கம்பெனியை, பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸோடு இணைத்துக் கொண்டு, எம்.டி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அன்று…

“ஆதியா… வரவேற்புக்கு எல்லாம் ரெடியா இருக்காம்மா?” என்று ராமநாதன் வினவ,

“எல்லாம்‌ ரெடி சர்.” என்றாள் ஆதியா.

“சத்யனுக்கு மஞ்சள் கலர்னா ரெம்ப பிடிக்கும். பொக்கே யெல்லோ ஃப்லோர்ஸ் தானம்மா சொல்லியிருக்க?”

“ஆமா சர்.” என்றாள்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது புது எம்.டி.யை வரவேற்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தனர். 

சத்யப்பிரகாஷின் கார் அலுவலக வாயிலை வந்தடைந்தது. தகவல் ராமநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கார் டிரைவர் இறங்கிக் காரின் பின் கதவைத் திறந்து விட, சத்யபிரகாஷ் இறங்கினார்.

ஒரு கணம் ஆதியாவின் கண்கள், தாத்தாவோடு சேர்த்துப் பேரனையும் எதிர் பார்த்ததோ என்னவோ? சற்றே சோர்ந்தது.

ஆதியா ஊழியர்கள் சார்பாக பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க,

இராமநாதன் தன் நண்பனுக்கு சந்தன மாலை போட்டு வரவேற்றார்.

“என்ன ராமா? அரசியல்வாதிய மாதிரி‌ வரவேற்கிற.”

“அரசியல்வாதி மாதிரினா சால்வையும்ல சேர்த்துப் போடணும்,” என்றார்.

“வேண்டாம்ப்பா… இதுவே போதும்.” என்க,

சிரித்துக் கொண்டே தனது நண்பனைக் கை பிடித்து, தனது அறைக்கு அழைத்துச் சென்றார் ராமநாதன்.

நண்பனைத் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.

இருந்தும் நண்பனின் பதற்றம் சத்யப்பிரகாஷ்க்குப் புரிந்தது. எழுந்து வந்து நண்பனைக் கட்டிக் கொண்டார். 

அப்பொழுது ஆதியா கதவு தட்டி அனுமதி கேட்க, ராமநாதன் உள்ளே வரச் சொன்னார்.

இருவருக்கும் பழச்சாறு அடங்கிய ட்ரேயுடன் உள்ளே வந்தாள்.

“கஷ்டமா இருக்கா ராமா? இப்படிக் கேக்குறது அபத்தம் தான். வேற எப்படிக் கேக்கறதுனு தெரியல.”

“சேச்சே… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சத்யா. நல்ல சம்பந்தமாப் பாத்துப் பொண்ணுக்குக் கல்யாணம் பேசுவோம். பொண்ணு சந்தோஷமா இருப்பானு தெரியும்… இருந்தாலும்‌ முன்ன மாதிரி பொண்ணு மேல நமக்கு உரிமை இல்லைனு நினைப்பு வரும் பாரு… அப்படித்தான் இருக்கு இப்ப.”

“அப்ப… என்னை சம்பந்தினு சொல்ற… வரதட்சணை எவ்வளவு தருவ… உன் கண்ணையே எங்கிட்ட ஒப்படச்சிருக்க… மிளகாப்பொடி பாக்கெட் போடுறவங்க கண்ணுல இருந்து கூட கண்ணீர் வராமப் பாத்துக்கிறேன் ராமா.”

தன் நண்பனின் மனதை இலகுவாக்கும் பொருட்டு சத்யப்பிரகாஷ் கேலி பேச,

“உன் வாக்கு மட்டும் பழிச்சுதுன்னா… நீ கேக்க வேண்டிய அவசியமே இல்லாம என்ன கேட்டாலும் தருவேன்…” என்று சந்தோஷமாகக் கூறினார் ராமநாதன்.

 நண்பனோடு மீண்டும் இணைந்ததில், அவருக்கு மனதில் மேலும் ஓர் ஆசைத் துளிர் விட்டிருந்தது. அதையே நண்பனுக்கு சூசகமாக வெளிப்படுத்தினார்.

தன் மகள் வயிற்றுப் பேத்தியை, நண்பனின் பேரனுக்குப் பேசிப் பார்க்கலாம் எனும் ஆசை மனதில் எழுந்துள்ளது. இருந்தாலும் வெளி நாட்டில் வளர்ந்த பேத்தியும், வெளி நாட்டில் வசிக்கும் தன் மகளும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்ற எண்ணமும் இருக்கிறது. மகன்கள் தான் கொஞ்சம் சத்யனோடு முரண்பட்டவர்களே ஒழிய தன் மகளுக்கு, எந்த வித பேதமும் நண்பனின் மீது இல்லை என்பது தெரியும்.

“ஆதியா நீ தாம்மா சாட்சி.” ஜுஸ் டம்ளரைத் தன்னிடம் நீட்டியவளைப் பார்த்து சத்யப்பிரகாஷ் கூற,

“எதுக்கு சர்?” என்றாள் ஆதியா புரியாமல்.

“என்ன கேட்டாலும் தருவேன்னு ராமன்‌ சொன்னார்ல‌ அதுக்கு தாம்மா.” என்று கூற,

அவர் சொன்ன சம்மந்தி என்ற வார்த்தைக்கு, ராமநாதன் கூறிய பதிலை ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிந்தது

‘நான் வேலி போட்டு வச்சுருக்கற நிலத்துக்கு இவங்க பட்டாவே போடுறாங்களே.’ என்று நினைத்துக் கொண்டாள்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள்.

ராமநாதனும் நண்பனோடு சிறிது நேரம் உரையாடி விட்டு, அலுவலக ஊழியர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.

 *****************

நாட்கள் நகர…

நாதன் அன்ட் கம்பெனி, பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் ஆக மாறியது. தடையின்றி இயங்க ஆரம்பித்து.

அன்று அலுவலகம் வந்த ஆதியாவை சத்யப்பிரகாஷ் அழைத்தார். 

 நாசுக்காக கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.

“வாம்மா..

 உட்கார்!” என்று அனுமதி அளிக்க,

“தேன்க்யூ சர்!” என்றவாறு இருக்கையில்‌அமர்ந்தாள்.

“ஆடிட்டிங் இருக்கு ஆதியா… இந்த கம்பெனி அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் எல்லாம், பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் டீடெய்ல்ஸோட இணைக்கணும். கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். செகரெட்டரி இன்டர்வியூக்கு விளம்பரம் கொடுத்துரும்மா.”

“ஓ.கே. சர். விளம்பரம் கொடுத்துறலாம்.”

மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு. வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பது என் பேரனுடைய பொறுப்பு என்று, அன்று ரெஸ்டாரன்டில் சத்யப்பிரகாஷ் கூறியது நினைவுக்கு வந்தது. தாத்தாவுக்கு செகரட்டரி செலக்ட் பண்ண இங்கு வருவாரா? அல்லது அவர் ஆஃபிஸில் இன்டர்வியூ நடத்தித் தேர்ந்தெடுத்து இங்கு அனுப்புவாரா?

தனது சந்தேகத்தை சத்யப்பிரகாஷிடம் கேட்க,  “தெரியலம்மா. அவன் எப்ப‌ எதைச் செய்வான்னு அவனுக்கு மட்டும்‌தான் தெரியும். செய்றதுக்கு முன்னாடி தகவல் மட்டும் தெரியப் படுத்துவான். அவ்வளவு தான்.” என்று கூறினார்.

“ஓ.கே.சர். நான் எல்லா டீடெயில்ஸ்ம் ஃபைல் பண்ணி வைக்கிறேன்,” என்றவாறு எழுந்து கொண்டாள்.

தனது கேபினில் வந்து அமர்ந்தவளை நந்தினி அழைத்தாள்.

“ஆதியா..”

“ம்ம்… என்ன நந்தினி?”

“நாளைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா… இல்ல முறைப்படி வெத்தலை பாக்கு வைக்கணுமா?”

“ஏன்… வச்சா குறைஞ்சு போயிருவியா? இரு… எங்க அண்ணன் கிட்ட சொல்றேன். உங்க தங்கச்சிய வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம வெறும் வாய் வார்த்தையாக் கூப்பிடுறானு..”

“அம்மா தாயே! உனக்கு என்ன ரெண்டு ரூபா வெத்தலை பாக்கு தானே வேணும். நாளைக்கு வீட்டுக்கு வா… புடவை ஜாக்கெட்டோடு சேத்து தர்றேன். “

“அது… நாத்தனார்னா சும்மாவா? அந்த பதவிக்குனு ஒரு கெத்து இருக்குள்ள.” என மிதப்பாய் கூறியவளிடம்,

“எங்களுக்கும் காலம் வரும்… நாங்களும் நாத்தனார்னா யாருன்னு காட்ட வேண்டி இருக்கும்… பாத்துக்கோ ஆமா.” என்றாள் நந்தினி.

“அதை அப்பப் பாக்கலாம்… இப்ப பெர்மிஷன் போட்டாச்சா?”

“இல்லப்பா… ரெண்டு பேரும் சேர்ந்தே மெயில் போட்டுருவோம். காலையில ஒன் ஹவர் தானே. இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பும் போது மேனேஜர் கிட்ட சொல்லிறலாம்.”

“ம்ம்.. சரி நந்தினி.” பேசியவாறு இருவரும் வேலையில் கவனமாயினர்.

மறுநாள்…

ஆஃபிஸிற்குச் செல்ல கிளம்பி‌ வந்த ஆதியாவைப் பார்த்த லஷ்மி, கண் எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளஞ்சிவப்பு வண்ண பார்டர் கொண்ட சந்தன நிற காட்டன் புடவை. இளஞ்சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ். தளரப் பிண்ணியக் கூந்தலில், நெருக்கக் கட்டிய ஜாதிமல்லிச் சரம். சந்தன நிற முகத்தில் எடுப்பாய் மெரூன் கலரில் நெற்றியில் சிறு பொட்டு. மெலிதாய்த் தீட்டப்பட்ட கண்மை.

“லஷ்மி… என்ன சிலையாகிட்டயா?” செல்லாத்தாள் கேட்ட கேள்வியில் நினைவுக்கு வந்தவர்,

“பாருங்கக்கா இந்தப் பிள்ளைய… அப்படியே அவங்க அம்மாவப் பாத்த மாதிரியே இருக்குல?” என்று கூற 

“ஆமா லஷ்மி. ஆதியா… அவங்க அம்மா ஜாடை தானே… இன்னைக்கு என்ன விசேஷம்மா? அதிசயமா சேலை கட்டியிருக்க… கெஞ்சுனாக்கூட சேலை கட்ட மாட்டியே?”

“நீங்க வேற ஆன்ட்டி… இந்த புடவையைக் கட்டிட்டு… எப்படிதான் வண்டி ஓட்டிட்டு ஆஃபிஸ் போய்ட்டு வரப் போறேனோனு பக்கு பக்குனு இருக்கு.”

“ஏங்கண்ணு… ஆஃபிஸ்ல விசேஷமா? சீக்கிரமா வேற கிளம்பிட்ட…” என செல்லாத்தாள் கேட்ட கேள்விக்கு,

“இல்லக்கா… இன்னைக்கு வரலஷ்மி நோன்பு இல்லையா… கூட வேலை பாக்குற பிள்ளை சுமங்கலி பூஜைக்குக் கூப்பிட்டிருக்குது. அங்க போயிட்டு அப்படியே ஆஃபிஸ் போயிரும்க்கா…” என்று லஷ்மி பதில் சொன்னார்.

அதைக் கேட்ட செல்லாத்தாளும், ஆதியாவின்‌ கண்ணம் வழித்து திருஷ்டி கழித்தவர், “அடுத்த வருஷமெல்லாம் ஜோடியா பூஜ பண்ணனும்னு வேண்டிக்க கண்ணு.” என்று வாழ்த்தினார்.

“சரிங்க ஆன்ட்டி.” என்றவள், இருவரிடமும் சொல்லிக் கொண்டு, தனது ஸ்கூட்டியில் நந்தினி வீட்டிற்குச் சென்றாள்.

நந்தினியின் மாமியாரும், கணவரும் ஆதியாவை வரவேற்றனர்.

“ஆதியா… எப்படிம்மா இருக்க?” என்று நந்தினியின் கணவன் நலம் விசாரிக்க,

“ரொம்ப நல்லா இருக்கேண்ணா…” என்று உற்சாகமாகப் பதிலுரைத்தாள்.

அங்கு பூர்ண கும்பத்தில், வெள்ளியில் அம்மன் முகம் வைத்து, சிறு பட்டுப் பாவாடை கட்டி, நகைகள் போடப்பட்டு, சடை பில்லைகள் கொண்டு தலை அலங்காரம் செய்து, பூச்சரம் கொண்டு அலங்கரிக்கப் பெற்று, வரலஷ்மி அம்மன்… மனைமீது இலை போடப்பட்டு, இலையில் பரப்பிய பச்சரிசி மீது அலங்கார பூஜிதையாக வீற்றிருந்தாள். 

 நந்தினி, அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு, ஆதியாவை மனையில் அமர வைத்தவள், அவளுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுத்தாள். 

குங்குமம் எடுத்து தன் நெற்றி வகிட்டிலும், சேலையூனூடே கை விட்டு தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றில், தன்னவன் தனக்குத் தாலியாக அணிவித்ததின் மீதும் வைத்துக் கொண்டாள்.

மனம் நிறைந்தவனுக்காக, அவனின் நீண்ட ஆயுள் வேண்டி, அவன் நன்மைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவளது மனம் சந்தோஷத்தில் விம்மித் தணிந்தது. இவை அனைத்தும் என்னவனுக்காக என்று நெஞ்சம் பூரித்தது.

குங்குமம் எடுத்துக் கொண்டவளுக்கு, தட்டில் புடவை, ஜாக்கெட், பூ, பழம், வெற்றிலை பாக்கோடு நந்தினி தாம்பூலம் கொடுத்தாள்.

தாம்பூலம் பெற்றுக் கொண்டு, பூஜை அறையிலிருந்து வெளி வந்தவளை, நந்தினியின் மாமியார் ஷோபாவில் அமரச் சொன்னார்.

“ஏம்மா…மஞ்சக்கயிறு ரொம்ப வெளுத்துப் போயிருக்கே? புதுக்கயிறு மாத்திக்கலாம்ல. உங்களுக்கு தாலிச் செயின் போடுற பழக்கமில்லையா?” எனக் கேட்க,

“எங்களுக்கும் தாலிச்செயின் வழக்கம் தான் ஆன்ட்டி. கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே அவருக்கு வெளி நாட்டுக்கு ஆஃபர் வந்து போயிட்டார். அவர் வந்த பின்னாடி தான் தாலி பிரிச்சுக் கோர்க்கணும்னு நான் ஆசப்பட்டதால… இன்னும் அந்த சடங்கு பண்ணல. அவர் வந்ததுக்குப் பின்னாடி தான் தாலிச்செயின்ல கோர்க்கனும் ஆன்ட்டி.” என்று ஆதியா கூறினாள்.

‘அப்ப்பா… ஆரம்பத்தில் இதைச் சொல்லும் போது‌ இருந்த தடுமாற்றம் என்ன? இப்பொழுதெல்லாம் யார் கேட்டாலும் இதைச் சரளமாகச் சொல்லுவது என்ன?’ என்று எண்ணிக் கொண்டாள்.

பேச்சினூடே… நந்தினியின் கணவனது பார்வை நந்தினியைச் சுற்றிச்சுற்றி வருவதைக் கண்டு உள்ளூர சிரித்துக் கொண்டாள்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, நந்தினி பிரசாதத்தோடு வர… எடுத்துக் கொண்டவள், பிரசாதம் சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்பினர்.

“ஆதி… இன்னைக்கு சேலைல சூப்பரா இருக்க. இவ்ளோ நாளைக்கு உன்னைய இன்னைக்குத் தான் சேலைல பாக்குறேன். ஏன் நீ ஆஃபிஸ்க்கு சேலை கட்றது இல்ல?” தனது ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ‌வந்த நந்தினி ஆதியாவிடம் கேட்டாள்.

“ஏன்னா… க்ளாமரா ட்ரெஸ் பண்ணக் கூடாதுன்னு என்ற வூட்டுக்காரறு… அதான் உன்ற அண்ணன் சொல்லி‌ இருக்காருங்கோ அம்மணி…” என்று கூற,

“அடிப்பாவி… சேலைய எப்போடீ… கவர்ச்சி ட்ரெஸ்ஸோட சேத்தீங்க?”

“அது முதல்ல இருந்தே அந்த லிஸ்ட்ல தான் இருக்கு. சேலைக்கு அடுத்தது தான் ஒன் பீஸ், டூ பீஸ் ட்ரெஸ்‌ எல்லாம். எப்பவுமே ஓப்பனா‌ காட்றத‌ விட அங்கங்க காட்றதுல தான்‌ கிக்கே.”

“அடிப்பாவி… இதெல்லாம் தெரியமலேயே நாங்க எல்லாம் ‌பச்சப் புள்ளயாவே இருந்துட்டோம்.”

“இந்தப் பச்சப்புள்ளய சேலைல‌, எங்க அண்ணன் விட்ட லுக்க நாங்களும்‌ பாத்துட்டு தானே இருந்தோம்.”

“ஓ… அதான் இன்னைக்கிக் காலையில‌ இருந்து பார்வை ஒரு மார்க்கமா இருந்ததா?”

“இருந்திருக்கும்… எப்படியும் இன்னைக்கி நைட்டு… பார்வையின் ரிசல்ட் தெரிஞ்சிரும். காலையில அவருக்காக நீ சுமங்கலி பூஜை பண்ணுன இல்ல. ராத்திரி அவர் உனக்குத் தேவி பூஜை பண்ணுவார்.” கண்ணடித்துச் சொல்லி ஆதியா சிரிக்க,

“ஏய்! அவர் உனக்கு அண்ணன் முறைடி.”

“நீ… நாத்தனார் முறையாச்சே”

“அடிப்பாவி… பூனை மாதிரி இருந்துட்டு என்னமா பேசுற?”

“என்ன இன்னைக்கு, லஷ்மி விரதத்தோட அடிப்பாவி விரதமும் எடுத்திருக்கியா? எத்தனை அடிப்பாவி?” இருவரும் பேசிக் கொண்டே தெரு‌ தாண்டி மெயின்‌ரோட்டிற்கு‌ வர, இருவரது வண்டியும் மெதுவாக வேகம்‌பிடித்தது.

அலுவலகம் வந்த இருவரும், ஏற்கனவே ஒரு மணி நேர‌ பெர்மிஷன், ஒன்றரை மணி ஆனதில், வந்ததும்‌ வேலையில் கவனமாயினர்.

ஆதியாவை அழைத்த‌ மேனஜர், வந்தவுடன் எம்.டி அறைக்கு வரச் சொன்னதாக தகவல் கூறினார்.

முன்தினமே சத்யப்பிரகாஷ் தன்னிடம் ஆடிட்டிங் பற்றிக் கூறியிருந்ததால்,

அது சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு, எம்.டி‌ அறை‌ நோக்கி சென்றாள்.

அறைக்கதவை தட்டி விட்டு, “எக்ஸ்கியூஸ்மீ சர்.” எனக் கேட்டுக்‌கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

“யெஸ்… கம் இன்”

சட்டென அவள் இதயம் இயங்க மறுத்ததா? இல்லை… இவ்வளவு நாட்களாக இயந்திரமாக இயங்கிய இதயம்… இக்குரல் கேட்டுத் தன் இயக்கத்தை மீட்டெடுத்ததா? 

கனவா? கற்பனையா? 

எத்தனை நாள்‌ ஏக்கம்… தவிப்பு… வேண்டுதல்… எதிர்பார்ப்பு… இந்த‌ நொடிக்காக… சமீப காலமாகவே இப்படி சந்திப்பு என்றாவது ஒரு நாள் நிகழும்‌ என‌ எதிர் பார்த்தது தான். அந்த நாளுக்காக மனமும் ஏங்கித் தவித்தது தான். 

ஆனால், அது நிகழும் பொழுது… அஷணத்தின் கணத்தைத் தாங்கும் சக்தியை இழந்து விட்டாள் பெண். இதயத்திற்குள் ரயிலின் தடதடப்பு. இதயத் துடிப்பின் வேகம் கழுத்து நரம்புகளை அழுத்த, காதுகளும் காற்றடைத்து செயலிழந்த உணர்வு. கண்களும் மங்கியது. கையிலிருந்த ஃபைல்களை நெஞ்சோடு இறுக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டாள். 

கண்கள் மட்டும் அவளவன் முகம் விட்டு அகலவில்லை. 

எவ்வளவு மாற்றங்கள் தன்னவனிடம் என மனம் யோசிக்க, இல்லையில்லை இது தானே நிஜம் என்றது மீண்டும். 

வலது காலை லேசாக மடக்கி, டேபிளில் சாய்ந்து நின்றவாறு, கையிலிருந்த ஃபைலில் பார்வையைப் பதித்திருந்தான். அவன் தோரணை கண்ணன் குழலூதும் பொழுது நிற்கும் தோற்றத்தை நினைவூட்ட, ‘என் கண்ணன்.’ என மனம் விம்மியது. அவளை இன்னும் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

‘நிமிர்ந்து பார்த்து விடாதே. உன் கண்களைச் சந்திக்கும் நான்… சிந்திக்கும் ஆற்றல் அற்றுப் போய்விடுவேன்.’ என்று வேண்டிக் கொண்டாள்.

பாதாதி கேசம் முடியத் தன் கண்ணனின், ஆளுமை நிறைந்த கம்பீரத்தை, இத்தனை நாள் ஏக்கதாகத்தைத் தீர்க்கும் தண்ணீராகக் கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்… மழை நீருக்காகக் காத்திருந்த சாதகப் பறவை போல.

இந்த நிமிடம்

இந்த நிமிடம்

இப்படியே உறையாதா

இந்த நெருக்கம்

இந்த நெருக்கம்

இப்படியே தொடராதா

இந்த மௌனம்

இந்த மௌனம்

இப்படியே உடையாதா

இந்த மயக்கம்

இந்த மயக்கம்

இப்படியே நீளாதா….

கன்னியவள் தன் 

கண்ணன் அவனைத் தன் கண்களால் ஆசை தீர சிறிது நேரம் கண்டு களிக்கட்டுமே! 

2 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top