சத்யப்ரகாஷ் முடிந்தளவுக்கு தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார், தனது பதட்டம் மருமகளை பாதித்து விடக்கூடாது என்பதற்காக. தாலிக்கொடி உறவை இழந்தபின் தொப்புள் கொடி உறவையே பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்பவள். தனக்கும் அதே நிலைமை தான், எனினும் பதறிய காரியம் சிதறும் என்ற அனுபவ அறிவு கொண்டு நிதானமாக நிலைமையைக் கையாள முயல்கிறார்.
மங்கையர்கரசி மகனைப் பற்றி விசாரிக்கும் பொழுதே, ஆறுதலாக பதிலுரைத்தாலும், பொறுப்புணர்ந்த பேரன், ‘இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்கமாட்டானே.’ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்தது. எனினும் பேரன் வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறைகளோ இவ்வாறு செல்வது வழக்கம் தானே. முன்பெல்லாம் தனியாக இதற்கென திட்டமிட்டு செல்பவன், தாத்தா மற்றும் அன்னையின் தவிப்பு காரணமாக வியாபார நோக்கமாக செல்லும் இடங்களிலேயே, தனது ரோட் ட்ரிப்பை வைத்துக் கொள்கிறான்.
எப்பொழுதும் வியாபாரம் பற்றியே சிந்திப்பவனுக்கு கொஞ்சம் மாற்றமும் தேவைதானே என்று சத்யப்ரகாஷும் பேரனுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்.
மற்ற பணக்கார வீட்டு வாரிசுகள் போல் பார்ட்டி, மது, மாது என்று சுற்றாமல் தனது பேரன், எளிமையாக தன் வசமிழக்கும் சூழலில் இருந்தும், சுயகட்டுப்பாட்டோடு இருப்பதை நினைத்து தாத்தாவுக்கு எப்பொழுதும் பெருமை தான். அதற்காக சாமியார் மாதிரியும் அல்ல. ஐயோ! இங்க சாமியார் மாதிரி எனக்குறிப்பிட்டால் வேறு அர்த்தம் வந்து விடுமோ? அட! போரிங் பெர்சன் இல்லைங்க. சூர்யாவிற்கு நட்புகளும் உண்டு. நட்புகளோடு கலகலப்பும் உண்டு. கலகலப்போடு பார்ட்டிகளும் உண்டு. அவற்றிற்கெல்லாம் ஒரு எல்லைக்கோடும் உண்டு அவனிடம்.
இம்முறையும் செல்லும்பொழுதே தனது பயணத்திட்டங்களை கூறிவிட்டுத்தான் சென்றான். சூரத் சென்று விட்டு, சென்ற வேலை முடிந்த பிறகு, அங்கிருந்து இரயில் பயணமாக புனே. புனேவிலிருந்து மும்பைக்கு ரோட் ட்ரிப் என கூறிவிட்டுச் சென்றான்.
அதே போல் சூரத்திலிருந்து தனது அன்னைக்கும், தாத்தாவுக்கும் ஃபோன் செய்து இரண்டு வாரம் ஆகும் எனக் கூறியவன், ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
“ஏன்டா ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கிற?” என்ற அன்னையின் கேள்விக்கு,
“ஃபோன் ஆஃப் பண்ணலைனா, ட்ரிப்பை என்ஜாய் பண்ணமுடியாதும்மா, ஃபோன் அட்டென்ட் பண்ண தான் சரியா இருக்கும். ட்ரிப் போறதே அதுகிட்ட இருந்து தப்பிக்க தான்.” என்பதே எப்பொழுதும் அவன் பதிலாக இருக்கும்.
ஆனால் இம்முறை அவன் பயணத்தின் கால தாமதம் தாத்தாவை சற்று கலங்க செய்தது.
ஆர்டர் மெயில் எல்லாம் வந்து சேர்ந்து விட்டது. அவன் கூறிச் சென்ற காலமும் கடந்து விட்டது. இன்னும் வரவில்லை என வெளிப்படையாகத் தேடத்தொடங்கவும் முடியாது. தொழில் வட்டாரங்களில் பதில் சொல்ல வேண்டிவரும். அரசனில்லாத படை மாதிரி, தொழிலில் தொய்வு ஏற்படும்.
ஒரு நாட்டின் அரசன் இறந்து விட்டால் உடனடியாக அறிவிக்க முடியாது. முதலில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடுத்த வாரிசை முடிவு செய்ய வேண்டும். பிறகு தான் அறிவிக்க முடியும்.
இப்பொழுது அதே நிலைமைதான் சத்யபிரகாஷுக்கும். வெளிப்படையாக புகார் கொடுக்காமல், ரகசியமாக தேடலை சூரத்தில் ஆரம்பித்திருந்தார். தொழில் வட்டாரங்களில் பேரன் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறினார்.
மங்கையர்கரசியும் மகனுக்கு என்ன ஆனதோ என்ற கவலையில் கோவில், பூஜையறை என இருக்க தொடங்கினார்.
எப்பொழுதும் நாம் தேடுவது நம் கையருகினில் தான் இருக்கும். நம் பார்வையின் தேடல் எப்பொழுதும் தூரப்பார்வை கொண்டுதான். அதுபோல் தான், பேரன் தனதருகே கோவைக்கருகினில் இருக்க, அவர் தேடலோ தொலைதூரத்தில்.
*******************************
“என்னங்கம்மா! யாரை எதிர்பார்த்துட்டு இருக்கீங்க?” லஷ்மியின் பார்வை வாசலை நோக்கி அடிக்கடி செல்வதைக் கண்டு கண்ணன் கேட்க,
“அவரைத் தான் கண்ணா எதிர்பாக்குறேன். ஆதியா வீட்டுக்கு பாப்பாத்தி ஆத்தாவைக் கூட்டிட்டுப் போகணும். வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாரு. இன்னும் வரக்காணோம்.”
“ஏம்மா, ஏதும் முக்கியமான விஷயமாக போகணுமா? அவங்களுக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டான் அவளின் தனிமை நிலையறிந்தவனாக, அக்கறையுடன். அவன் இங்கு வந்த பிறகு, அவள் இங்கு வந்து சென்ற இரண்டு மூன்று தடவைகளிலும், அவன் கவனித்தது அவளின் ஒட்டுதலற்ற தன்மையைத் தான். பெற்றவர்களை இழந்தவளின் நிலை என எண்ணிக் கொண்டான்.
“இல்லை கண்ணா, நாளைக்கு ஆதியாவோட பெத்தவங்களுக்கு முப்பதாம் நாள் சாமி கும்பிடு. நாளைக்குதான் அவங்க சொந்தகாரங்க எல்லாம் சும்மா பேருக்கு வருவாங்க. நிறைய வேலையிருக்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும்?”
‘ஓ! ஆக்சிடன்டாகி ஒரு மாசமாயிருச்சா! இன்னும் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு தகவலும் வரலியே? ஒரு வேள நாம எங்கேயாவது போனாப்போதுங்கற மாதிரி இருந்திருப்போமோ?’ என்று எண்ணிக் கொண்டிருக்க… லஷ்மியின் கைபேசி அழைத்தது.
சண்முகம் தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கங்க!”
“லஷ்மி நான் வர லேட்டாகும். ஆட்டோ பிடிச்சு ஆத்தாவ அனுப்பி வச்சுறு.” என எதிர்முனையில் கூற, “சரிங்க.” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
என்ன? என்பது போல் கண்ணன் பார்க்க, “ஆட்டோவுல அனுப்பி வைக்க சொன்னார்ப்பா. தேங்கா, வாழைப்பழம் எல்லாம் நம்ம தோட்டத்துல வெளஞ்சது கிடக்கு. அதையும் எடுத்துட்டுப் போகணும்,” என்று கூற,
“சரிங்கம்மா! நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வறேன். நீங்க ஆத்தாவை கிளம்ப சொல்லுங்க.”
“நீ எப்படிப்பா…” என லஷ்மி இழுக்க,
“அம்மா! கால் வலியெல்லாம் நல்லா கொறஞ்சிருச்சு. போனவாரம் டாக்டர்கிட்ட போனப்பவே ஒருவாரத்துல கட்டப் பிரிச்சறலாம்னு சொல்லிட்டாங்க. என் உடம்புலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. கவலைப்படாதிங்க.” என்று கூறிவிட்டு ஆட்டோ பிடிக்க சென்றுவிட்டான்.
தேங்காய், வாழைத்தார் இவற்றோடு வாழையிலையும் லஷ்மி ஆட்கள் மூலம் எடுத்து வைத்திருந்தார்.
“அம்மா, நானும் ஆத்தா கூடப்போய் இதெல்லாம் இறக்கி வச்சுட்டு வரவா?” எனக் கேட்டவனை லஷ்மி மறுக்கவில்லை. ஒரே இடத்தில் இருக்கிறான். சற்று வெளியே போய்வரட்டும் என நினைத்தார்.
ஆதியாவின் வீடு… உள்ளும் புறமும் செடிகொடிகளோடு ரம்யமாக காட்சியளித்தது. ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்தாள். லஷ்மி இவர்களை அனுப்பிவிட்டு, ஆதியாவிற்கு ஃபோனில் தகவல் சொல்லியிருந்தார். வந்து கேட்டைத் திறந்தவள், “வாங்க ஆன்ட்டி… வாங்க கண்ணன்.” என வரவேற்றாள்.
ஆட்டோவை விட்டு இறங்கியவன் பார்வை அவளது முகத்தில் படிய, சிவந்து கன்றியிருந்த அவளது முகம் அழுதிருப்பதைச் சொன்னது.
அவன் ஒவ்வொன்றாக இறக்கி வைக்க, ஆதியா அவற்றை உள்ளே எடுத்து வைத்தவள், “எதுக்கு இவ்ளோ கொடுத்து விட்டுருக்காங்க. நானென்ன கடையா வைக்கப்போறேன்?” என்க,
“நாளைக்கு தேவைப்படுமோ என்னவோ?” என்றான்.
“ஆமாங்கண்ணு! நாளைக்கு சமையலுக்கு, சாமி கும்பிடனு தேவைப்படும்.” என்று பாப்பாத்தி கூறினார்.
வாழையிலைக்கட்டை தூக்கியவன் பார்வை ஏதேச்சையாக பக்கத்து வீட்டு மாடிக்கு போக, அங்கிருந்து ஒருவன் ஆதியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் பார்த்ததும் சட்டென்று உள்ளே சென்று விட்டான்.
வீட்டில் தனியாகத்தானே இருக்கிறோம் என்று லாங் ஸ்கர்ட்டும், டிஷர்ட்டும் அணிந்திருந்தவள், ஆட்டோ சத்தம் கேட்டவுடன் துப்பட்டா போடாமல் வெளியே வந்து விட்டாள்.
“ஆதியா! நீங்க உள்ள போங்க! நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்.”
“இல்ல கண்ணன். உங்களுக்கு கால் வலிக்கும். நீங்க போய் உக்காருங்க. நானும் ஆன்ட்டியும் பாத்துக்கிறோம்.”
“எனக்கு கால் ஒன்னும் ஒடிஞ்சு தொங்கல. இப்ப என்னால நல்லாவே நடக்க முடியும். ஆத்தாவக் கூட்டிட்டு உள்ளபோங்க.” என்று அவன் கோபமாகக் கூற,
‘இப்ப என்ன சொல்லிட்டோம்னு, இந்தக் கத்து கத்துறாங்க? ஒருவேள நாம அவரால நடக்க முடியாதுனு சொன்னத தப்பா நினைச்சுட்டாங்களோ?’ என எண்ணியவாறே உள்ளே சென்று விட்டாள்.
காலைக் கொஞ்சம் தாங்கியவாறே நடந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். மாடி வீட்டுக்காரனின் பார்வையால் வந்த கோபம் கால் வலியை மறக்கச் செய்திருந்தது.
உள்ளே வந்தவன் வீட்டில் பார்வையை சுழற்ற, வீடு சுத்தமாக இருந்தது. அவளின் பெற்றோரின் ஃபோட்டோவில் பார்வை படிய, ஆதியா அவங்கம்மா மாதிரி என நினைத்துக் கொண்டான்.
வந்தவர்களுக்கு காஃபியோடு கிட்சனிலிருந்து வந்தாள். முடியைச் சுருட்டி கேட்ச் கிளிப்பில் அடக்கியிருக்க, அதுவும் கிளிப்பிற்குள் அடங்காமல் சிலிப்பி கொண்டு நின்றது அவளது இளமை போல. ‘இன்னும் இவங்க ஏன் துப்பட்டா போடாம இருக்காங்க?’ என்று எண்ணியவன், கண்ணியமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
பெற்றோரின் கைக்குள் வளர்ந்தவளுக்கு அந்நியர்முன் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்பது இன்னும் பழகவில்லை. இதற்கு தான் அவளது அம்மா அவளை, “இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்காளே?” என்று வறுத்தப்பட்டதும், திட்டியதும்.
“என்ன கண்ணன் காஃபி எப்படி இருக்கு?”
“சூப்பரா இருக்குங்க.” என்றான், உண்மையைச் சொல்ல முடியாமல்.
“பொய் சொன்னா போஜனம் கிடைக்காதுங்க. நான் போடுற காஃபியப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்றவளிடம்,
“அப்புறம் ஏங்க… என்கிட்ட கேட்டு, என்னைய பொய் சொல்லவச்சு, நான் போஜனத்துக்கு கஷ்டப்படறதயும் பாக்கணுமாங்க?” என்று பாவமாகக் கேட்க ஆதியா சிரித்து விட்டாள்.
அழுகையால் சோர்ந்திருந்த அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும் அவனுக்கும் சிறு ஆறுதல்.
“காஃபி எப்படியோங்க? ஆனா வீட்டை நீட்டா வச்சுருக்கிங்க.”
“எல்லாம் எங்கம்மா ட்ரெயினிங். அதது அந்தந்த இடத்துலே இருக்கணும். இல்ல… அவ்ளோதான்.”
“அடி பின்னிருவாங்களோ?” என்றவனை, அவள் யோசனையாய்ப் பார்க்க, “இல்ல… உங்கம்மா டீச்சர்னு சொன்னாங்களே அதுனால கேட்டேன்.”
“அட! நீங்க வேற. நீங்க சொன்ன மாதிரி ரெண்டு அடி அடிச்சாக்கூடப் பரவாயில்லைங்க. ஆனா பேசியே காதுல ரத்தம் வரவச்சுருவாங்க.”
பெற்றோரைப் பற்றிய பேச்சு எனவும் சுவாரஸ்யமாக அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.
“உங்க பேரன்ட்ஸ்க்கு லவ் மேரேஜாங்க?”
“இல்லையே! ஏன் அப்படி கேட்டிங்க?”
“உங்கம்மா ரொம்ப அழகா இருக்காங்க. அதான் கேட்டேன்” என்றான். தாயின் சாயலில் இருந்தவளை நேரடியாக, “நீங்க அழகா இருக்கீங்க.” என்று சொல்ல முடியாதவனாய்.
“ஆனா லவ் மேரேஜ் பண்ணினவங்க கூட அவ்ளோ அந்நியோன்யமா இருந்திருப்பாங்களானு தெரியாது கண்ணன். ரெண்டு பெரும் ஒருத்தரைவிட்டு ஒருத்தர் தனியா இருந்ததே கிடையாது. அவங்களோட டெத்து தான் அதற்கு சாட்சி.” என்றாள் தன் பெற்றோரின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தவாறே.
மறுபடியும் அவள் சோக மோடுக்குப் போக அதைக் காணமாட்டாதவனாய்,
“ஏங்க! காஃபி கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்க… வேற எதுவுமில்லையா என்னை எலியாக்க?” என்றவனிடம்,
“சாரி கண்ணன்! ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்டுதான். எலி தாங்க வேண்டாமா? அதுக்கு ஏதாவது ஆகிட்டா இன்னொன்றுக்கு நான் எங்க போறது. வான்டடா இப்படி வந்து சிக்குற எலி கிடைக்கறது ரொம்ப ரேர் கண்ணன்.”
அவள் கூறியதைக் கேட்டு அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள், வெகு நாட்கள் கழித்து மனம்விட்டுப் பேசியதில்.
எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தியும், ஆதியாவின் சிரிப்பைக் கேட்டு, ‘மறுபடியும் இந்தப்புள்ள பழையமாதிரி கலகலப்பாக மாறணும்.’ என்று எண்ணிக் கொண்டார்.
காஃபியைக் குடித்துவிட்டு கிளம்பியவன், பாப்பாத்தியை அழைத்து, “தேவையில்லாம வெளிய வராதீங்க ஆத்தா! கேட்டை நல்லா பூட்டிக்கோங்க! அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்துருவாங்க. ஆதியாவை வேற நல்ல ட்ரெஸ்ஸா போட்டுட்டு இருக்க சொல்லுங்க!” என்று நாசுக்காகக் கூறிவிட்டு சென்றான்.
அவன் கூறியதை ஆதியாவிடம் கூற, ‘அப்படியே சரஸ்வதி டயலாக்.’ என எண்ணிக் கொண்டாள். அன்னையின் அக்கறையுடன் முதலடி எடுத்து வைத்தான், அவளது நெஞ்சத்தில்.
மறுநாள் அவளது உறவினர்கள் கடமைக்காக வந்திருக்க, சண்முகமும், லஷ்மியுமே அனைத்தையும் முன்னிருந்து கவனித்துக் கொண்டனர். ஆள்விட்டு சமையல் செய்தனர். அன்று பெற்றோருக்காக விரதமிருந்தாள் ஆதியா. கண்ணனும் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். வந்ததும் அவன் கவனித்தது அவள் உடையைத்தான். இளமஞ்சள் நிற சல்வாரில், துப்பட்டாவை பின்குத்தி, பின்புறம் முடிந்திருந்தாள். சாமி கும்பிட, வேலை செய்ய இடையூறாக இருக்குமென்று.
உனக்கு ஏன்டா இவ்வளவு அக்கறை என்று மனசாட்சி கேள்வி கேட்க, தாயில்லாப்பிள்ளை என சமாதானம் சொன்னான். நம்பிட்டேன் என்றது மனசாட்சி.
ஆதியாவின் பெற்றோரின் புகைப்படத்தின் முன்பு, தளுகை போட்டு, பிடித்த பதார்த்தங்களை படையலிட்டு, சாமிகும்பிட்டனர்.
ஆதியாவும் விரதத்தை முடிக்க, அனைவருக்கும் பந்தி பரிமாறப்பட்டது.
சாப்பிட்டு முடித்தவர்கள், “என்னம்மா கல்யாண முடிவு என்ன? துக்கம் நடந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கணும்னு சொல்லுவாங்க. அது ஏன் இந்தப் புள்ளயோட கல்யாணமா இருக்கக் கூடாது?” எனத் தந்தை வழி அத்தை ஒருவர் ஆரம்பித்தார்.
சண்முகமும் லஷ்மியும் அனைத்தையும் கவனித்துக் கொண்டாலும், சாமி கும்பிடும் பொழுது, சொந்தங்களை முன்விட்டு இவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
பிள்ளைகளை சாப்பிடவிட்டு கண்ணனும், லஷ்மியும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“என்னங்கம்மா! இந்த இடத்துல வந்து இப்படிக் கேக்குறாங்க!” என்று கண்ணன் மெதுவாகக் கேட்க,
“அட! நீ இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இவங்க எல்லாம் இதை சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்தன்னைக்கே கேட்டாங்க கண்ணன்.” என்றார் ஆதங்கமாக.
“என்ன மனுஷங்க இவங்க?” என்றவன் ஆதியாவைப் பார்க்க அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. கும்பலில் ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பையன் படிக்கலைனு பாக்காதம்மா. அதான் நீ ரெண்டு டிகிரி படிக்கிறயில்ல. உங்க அம்மா, அப்பாவுக்கு வர்ற காசவச்சு ஒரு கடைகண்ணிய வச்சுக் கொடுத்துட்டா அவன் சம்பாரிச்சுட்டுப் போறான். நீயும் ஒத்தையில இருக்க வேண்டாம்,” என்று கூசாமல் பேச,
“இப்ப புரியுதா கண்ணா? அவங்க எங்க வர்றாங்கனு?” என மெதுவாக கண்ணனிடம் கேட்க,
“நல்லா புரியுது. தேவதைய வளத்து தேவாங்குகிட்ட கொடுக்க சொல்றாங்க.” என்றான்.
“ஷ்ஷ்… கண்ணா மெதுவா பேசு. யார் காதுலயாவது விழுந்துறப் போகுது.”
அவர்கள் ஆதியாவின் பதிலை எதிர்பார்த்திருக்க, “காசு கொடுத்து உங்க பையனுக்கு புருஷன் போஸ்டெல்லாம் தரமுடியாது. வேணும்னா சம்பளம் கொடுத்து செக்யூரிட்டியா வச்சுக்கலாம். சம்மதம்னா சொல்லுங்க.” என்று அவள் கூறியதைக் கேட்டவர்கள்,
“பெரியவங்ககிட்ட பேசுற மாதிரியா பேசுற? வாத்தியாரா இருந்து உன்னைய எப்படி வளத்து வச்சுருக்காங்க?” என்று ஆளுக்கொன்றாக பேச ஆரம்பித்தனர்.
“என்னைய நல்லாதான் வளத்திருக்காங்க. பெரியவங்க பெரியமனுஷத் தன்மையோடு நடந்துக்கணும். எரியற வீட்டுல புடுங்கறவரைக்கும் லாபம்னு பேசுற உங்ககிட்ட எல்லாம் இப்படித்தான் பேசமுடியும். இந்தமாதிரி காரியத்துக்கு வந்தா சொல்லிட்டுப் போகக் கூடாது. வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்றாள். எல்லோரும் கிளம்புங்க என்பதை சொல்லாமல் சொல்லி.
கண்ணன் மனதிற்குள், ‘சபாஷ்’ என மெச்சிக்கொண்டான். சண்முகமும், லஷ்மியுமே பேசாமலிருக்கும் போது தான் பேசினால் சரிவராது என எண்ணியவனாய்.
“இனி நமக்கென்ன இங்க வேல? வாங்க போகலாம்.” என்று கிளம்பிய வர்கள்,
“இந்தக் கூட்டம் வந்து சேந்துருக்குல்ல, இதுகளோட சேந்துகிட்டு இவளும் தறிகெட்டு அலையப்போறா.” என்று கூறிச் சென்றார்கள்.
அதைக் கேட்ட லஷ்மியோ நெஞ்சம் பதற, “என்னங்க வாழவேண்டிய பொண்ண இப்படி பேசிட்டுப் போறாங்க?” என்று வருத்தப்பட,
அந்த வார்த்தைகளைக் கேட்ட கண்ணனோ கைகளை இறுகக்கட்டி கண்கள் சிவக்க நின்றிருந்தான் இயலாமையுடன்.
“விடு லஷ்மி! உத்தமர்கள் வாக்கே சிலசமயங்கள்ல பழிக்கமாட்டேங்குது. இவங்க பேச்செல்லாம் கணக்குல வச்சுகிட்டு.” என்றார்.
“ஆதியா! இங்க வாம்மா!” என அழைத்தவர், அடுத்து என்ன செய்யறதா முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்க,
“தெரியலை அங்கிள்.” என்றாள். இதுவரை தனியாக எந்த முடிவும் எடுக்காதவளாய்.
“வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, நீ காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிக்கிறியாமா? நானும் ஆன்ட்டியும் அப்பப்ப வந்து பாத்துக்கறோம்.” எனக் கேட்க,
“எனக்கும் அந்த யோசனை வந்துச்சு அங்கிள். ஆனா வர்றவங்க இதே மாதிரி வீட்டை மெயின்டெய்ன் பண்ணுவாங்களா?”
“அதைப் பாத்தா எப்படிம்மா? உன் பாதுகாப்புதானே முக்கியம்.”
“ஆமாமா! ஏரியாவே ரொம்ப மோசமாயிருக்கு.” என்றான் கண்ணன். என்னவோ காலங்காலமாக இங்கேயே இருந்தவன் போல.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க சண்முகத்தின் கைபேசி அழைத்தது.
எடுத்து பேசியவரின் முகமாற்றம் அவ்வளவு உவப்பானதாக இல்லை.
இணைப்பை அனைத்தவரை என்னவென்று அனைவரும் நோக்க,
”என் மச்சினன் புள்ளைக அத்தை வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கானுகளாம்.” என்று கூற லஷ்மியின் முகம் வாட்டம் கொண்டது.
கண்ணன் புரியாமல் பார்க்க, “இப்ப நம்ம வீட்டுலயா அங்கிள் இருக்காங்க?” என ஆதியா கேட்டாள்.
“ஆமாம்மா! எப்படா எல்லோரும் வெளிய கிளம்புவோம்னு பாத்துட்டு இருந்திருப்பாங்க போலம்மா.”
“ரொம்ப பிரச்சினை வேணாம் அங்கிள். பிள்ளைகள் மனசையும் பாக்கணும். இவங்க அடிக்கடி வந்து தகராறு பண்றதால பாதிக்கப்படப் போறது, இந்த பிள்ளைக தான். நம்மால தான் இவங்களுக்குக் கஷ்டம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா, நீங்க செய்ததெல்லாம் வீணாப்போயிரும் அங்கிள்.” என்று கூறிய ஆதியாவைப் பார்த்து,
“பார்ரா! ஆதிமா நீ இவ்ளோ பேசுவியா? இப்பதான் சின்ன பிள்ளையாச்சே, என்ன பண்ணபோகுதோனு நினைச்சேன்? பரவாயில்லைமா, கேசவன் பொண்ணுங்கறத நிரூபிச்சுட்ட.”
“ஹலோ! இங்கே நானும் இருக்கேன். நான் யாருங்கற குழப்பத்தை விட, இது ரொம்ப குழப்புது.” என்று கண்ணன் கூற,
“சொத்தும், சொந்தங்களும் தான் பிரச்சினை கண்ணன்.” என்று கூறினார்.
“அங்கிள்! நான் ஒன்னு சொல்லவா? இப்பதான் தோணிச்சு.”
“சொல்லுமா!”
சற்று யோசித்தவள், “இல்லை அங்கிள். அங்கபோய் பாத்துட்டு பேசிக்கலாம்.” என்றாள்.
செல்லாத்தா மற்றும் பாப்பாத்தியிடம் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு, லஷ்மி, ஆதியா வண்டியில் ஏறிக்கொள்ள, சண்முகமும் கண்ணனும் ஒரு வண்டியில் கிளம்பினர்.
சண்முகம் வீட்டை அடைந்தவர்கள், லஷ்மியின் அண்ணன் பிள்ளைகள் நான்கைந்து பேருடன் அங்கிருப்பதைக் கண்டனர்.
“வாங்க அத்தை! இடத்தைக் காலி பண்ணுவிங்கேனு பாத்தா, இன்னும் கூட்டம் சேத்துகிட்டே போறீங்களே! ரோட்டுல கிடந்தது, போனது வந்தது எல்லாம் திங்கறதுக்கு இது என்ன வாரிசில்லாத சொத்தா?” என்று கண்ணனைப் பார்த்துக்கொண்டே பேச ஆரம்பிக்க,
“அதான் கோர்ட்ல கேஸ் நடக்குதுல? மறுபடியும் ஏன் வந்து தொல்லை பண்றீங்க?” என லஷ்மி கேட்டார்.
“தீர்ப்பு வர்ற வரைக்கும் உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம், பொதுவுல கெடக்கட்டும்னு ஆர்டர் வாங்கியிருக்கோம்ல. இன்னும் காலி பண்ணலைனா என்ன அர்த்தம்?” என்றான் அண்ணன் மகன்களில் ஒருத்தன்.
“ஆதியா! என்னங்க பிரச்சினை?” என்று கண்ணன் மெதுவாகக் கேட்டான்.
“இது ஆன்ட்டியோட தாய்வீட்டு சொத்து. அவங்களுக்கு வாரிசு இல்லாததால, அவங்களோட அண்ணன் பிள்ளைக சொத்தைக் கேக்குறாங்க கண்ணன்.”
“சொத்து இவங்க பேருலதானே இருக்கும். அவங்க எப்படி கேக்க முடியும்?” என்றான் புரியாதவனாக.
“அதுதான் இல்லை” என விளக்கம்கூற ஆரம்பித்தாள்.
லஷ்மிக்கு சீதனமாக வாய்வார்த்தையாக அளிக்கப்பெற்ற சொத்து இது. நானிருக்கும் வரைக்கும் சொத்து பிரியக்கூடாது என அவரது தந்தை விரும்பியதால், மூன்று மகன்கள், மற்றும் மகள் லஷ்மிக்கு வாய்வார்த்தையாகவே பிரித்து விட்டார். அவர் காலமானபிறகு சொத்தை பத்திரம் எழுத முற்பட்ட பொழுது, வெறும்நிலமாக அளிக்கப்பட்ட சீதனம், சண்முகம் உழைப்பால் பொன்விளையும் பூமியாக மாறிய நிலம், லஷ்மியின் சகோதரர் பிள்ளைகளை உறுத்தியது.
“அத்தைக்கு நேரடி வாரிசு கிடையாது. அதுக்கடுத்தபடி அந்த சொத்துக்கு நாங்கதானே வாரிசு. ஒருவேளை மாமா ரெண்டாங்கல்யாணம் பண்ணி, அதனால அவங்களுக்கு வாரிசு இருந்திருந்தா கூட விட்டுருக்கலாம்.” என்று தன் தந்தைகளிடம் விவாதம் செய்தனர்.
“பொம்பளப்புள்ளைக்குகொடுத்ததை கேக்க கூடாதுடா. பொறந்தபொண்ணு மனசு நொந்தா நமக்குதான் ஆகாது.” என்ற பாட்டி கூற,
“நாங்க என்ன சொத்து இல்லைனா சொல்றோம். வேற இடத்தைக் கொடுக்கிறோம்னு தானே சொல்றோம்.” என்று பொட்டல் காட்டை கைகாட்டினர்.
வழக்கு நீதிமன்றம் சென்றது. வாரிசு உரிமையில் அவர்கள் கேட்க, அனுபவ பாத்யதைகொண்டு இவர்களும் வழக்கு தொடுத்துள்ளனர். யாருக்கு நிலம் என்று தீர்ப்பு வரும்வரைக்கும் யாரும் அனுபவிக்க கூடாது என்று அடிக்கடி இதுமாதிரி வந்து தகராறு செய்கிறார்கள்.
சண்முகமும் மனைவி மற்றும் மச்சினர்கள் முகத்திற்காக சற்று நயந்து போகிறார். அவரும் இந்த வெள்ளாமை எடுத்தவுடன் வெளியேறுவதாக கூறியிருக்கிறார்.
இன்று வந்தவர்களும் மேலும் கண்டவாறு பேசிவிட்டு, சீக்கிரம் வெளியேறுமாறு கூறிவிட்டு சென்றனர்.
சண்முகமும் லஷ்மியும் ஓய்ந்து அமர,
“அங்கிள் நான் சொல்ல நினைச்சதை சொல்லவா?” எனக்கேட்டாள்.
என்னவென்று அவர் நிமிர்ந்து பார்க்க,
“எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க அங்கிள். கேஸ் முடியற வரைக்கும் தானே? இத்தனை பேரைக் கூட்டிக்கிட்டு எங்கேனு போவிங்க? உங்க தோப்புக்குனாலும் வீடுவசதி வேண்டாமா?” எனக் கேட்டாள்.
“அது சரிப்படாதுமா! பெத்தவங்க இல்லாத சின்ன பொண்ணை ஏமாத்திட்டதா உன் சொந்தகாரங்க பேசுவாங்கமா.”
“அங்கிள் இது உங்ஙளுக்காக சொல்லலை. என்னோட சுயநலம்னு வச்சுக்கோங்க.” என்றாள்.
லஷ்மியும் ஓய்ந்து போய் திண்ணையில் அமர்ந்த, சண்முகத்தை அந்த நிலையில் பார்க்க இயலாதவராய், “எல்லாம் என்னாலதான. நீங்களாவது ரெண்டாங்கல்யாணம் பண்ணியிருந்தா, இந்த நிலமை வந்திருக்குமா?” என்று கூறி வருத்தப்பட,
சண்முகம் அவரைக் கோபமாகப் பார்த்துவிட்டு, “குறை என்மேல இருந்திருந்தா நீ வேற கல்யாணம் செஞ்சிறுப்பியா?” எனக் கேட்டார்.
“சீச்சீ… அசிங்கமா பேசாதிங்க!”
“ஏன்? நான் இன்னொரு கல்யாணம் பண்ணி பிறக்குற குழந்தைகளை நீ வளக்கிற மாதிரி, நானும் உனக்கு பொறக்குற குழந்தைய வளத்துட்டு போறேன்.”
“ஐயோ! கேக்கவே நாராசமா இருக்கு.” என்று லஷ்மி காதுகளை பொத்திக்கொண்டார்.
இவர்கள் வாக்குவாதத்தில் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பிரியம் வெளிப்பட்டதே ஒழிய வெறுப்பு தெரியவில்லை.
“ஏம்மா! நாங்கெல்லாம் உங்க பிள்ளைக இல்லையா?” என்று அவரருகில் அமர்ந்த கண்ணன் அவரது கைகளைப் பிடித்துக் கேட்க,
“ஐயோ! கண்ணா! நான் அப்படி சொல்லவரலை.” என்று லஷ்மி பதற,
“இதை நீங்க இத்தனை வருஷமா வளத்த பிள்ளைக முன்னாடி சொல்லியிருந்தா, அவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்?” என்றான் கண்ணன்.
“இல்லை கண்ணா! என்னால இவரை இப்படிப் பாக்க முடியல. எனக்காகக் தான இவரு, என் அண்ணன் பிள்ளைககிட்ட தணிஞ்சு போறாரு. அதுதான் கஷ்டமாயிருக்கு”
“பிள்ளைக முன்னாடி இதுமாதிரி அடிக்கடி நடக்கிறது நல்லதில்ல அங்கிள். மனசு டக்குனு நாம இவங்களுக்கு சொந்தமில்லையோனு ஏங்கிரும். கேஸ் எப்படியும் நாமதான் ஜெயிப்போம். அதுவரைக்கும் எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க!”
“ஆமாம்மா! எப்படியும் பிள்ளைக பக்குவப்படப்பட புரிஞ்சுக்குவாங்க. ஆனால் பிஞ்சு மனசுல இவங்க பேசுறதெல்லாம் பதிய வேண்டாமே!” என்று கண்ணனும் கூற,
“அது எப்படிம்மா முடியும்?”- சண்முகம்.
“அங்கிள்! இது உங்களுக்காக சொல்லலை. என்னோட சுயநலமும் இருக்கு. யாருக்கோ வீட்டை வாடகைக்கு விடுறதுக்கு, நீங்களே வந்து தங்கிட்டா… நானும் சேஃப், என்வீடும் சேஃப். எப்படி என் ஐடியா?” எனக் கேட்டவளை,
“தேரிட்டம்மா.” என்றார் சண்முகம்.
ஒருவழியாக பேசி இருவரையும் சம்மதிக்க வைத்து, பிள்ளைகள் ஏற்கனவே அங்கு இருக்க, ஆடைகள் மற்றும் முக்கியமானவற்றை மட்டும் மறுநாள் வந்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
“ஷ்ஷ்ஷ்… அப்பாடா! இவங்க ரெண்டு பேரையும் ஒரு இடத்துல கொண்டு வந்து சேக்கறதுக்கு எவ்வளவு வேலை பாக்க வேண்டியிருக்கு” என்று விதி அலுத்துக் கொள்ள,
“சரி…சரி… நீ கிளம்பு! இனி நாங்க பாத்துக்கறோம்.” என்று மன்மதன் வந்தான் ரதியோடு.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫