9
“என்ன மாமா? வந்த விஷயத்த சொல்லவே இல்ல?” என அழகர்தான் எடுத்துக் கொடுத்தான்.
அழகரையும், வெங்கடேசனையும் மேலே அழைத்து வந்தவன், அலுவலக அறையைத் திறந்து ஏசியை ஆன் செய்தான். இருவரையும் சேரில் அமரச் சொன்னவன், தனது இருக்கைக்கு வந்தான்.
குடும்பம், குழந்தைகள் நலன் என வழக்கமான குசலம் விசாரிப்புகள் சென்று கொண்டிருந்தது.
இவர்கள் மேலே செல்ல சப்ளையரை அழைத்த அமிர்தா மூவருக்கும் குளிர்பானம் எடுத்துச் செல்லுமாறு பணித்தாள்.
அவன் எடுத்துக் கொண்டு மேலே செல்ல,
“நானே கொண்டு வரச் சொல்லாம்னு நெனச்சேன்டா. நீயே எடுத்துட்டு வந்துட்ட.” என எடுத்து வந்தவனை மெச்சிக் கொள்ள,
“புதுசா ஒரு பொண்ணு வந்துருக்குல்ல ண்ணே. அது தான் எடுத்துட்டுப் போகச் சொல்லுச்சு.” என்றான். அமிர்தா அவனை விட சின்னவளாகத் தெரிந்ததால்
ஒருமையில் அழைக்க,
“அவங்க இங்க வேலைக்கி சேந்திருக்காங்க. மரியாதையா கூப்பிடணும்.” என கறாராகக் கூற,
“சரிங்க ண்ணே.” என்றான்.
இப்பொழுது அழகரின் பார்வை மெச்சுதலாக ருத்ரனைப் பார்க்க, அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை.
“என்ன மாமா? ஏதோ பிரச்சினைனு தெரியுது. தயங்குனா எப்படி? சொன்னா தானே மாமா தெரியும்? நான் வேணா கெளம்பவா? நீங்க ரெண்டு பேரும் பேசிக்குங்க.” என சங்கோஜமாக அழகர் கேட்டான்.
வெங்கடேசன் தானாக வந்த விஷயத்தைப் பேசுவது போல் தெரியவில்லை. ஏதோ ஒரு இக்கட்டில் கிளம்பி வந்துவிட்டானே ஒழிய, எப்படிக் கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்ற தயக்கம் நெருடிக் கொண்டு இருந்தது.
பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்ததே ஒழிய வந்த விஷயத்தை சொல்லவே இல்லை. தான் இருப்பதால் தான் தயங்குவதாக எண்ணிக்கொண்டு அழகர் வலிய என்னவென்று விசாரிக்க,
“அதெல்லாம் இல்ல மாப்ள. நீ எப்படி மூச்சுக்கு முன்னூறு தடவ மாமான்னு வாய் நிறைய கூப்புடுற. ஆனா இவனப்பாரு, மூனா மனுஷன மாதிரி வாங்கங்கறதோட நிப்பாட்டிக்கிட்டான். எந்த உரிமையில கேக்கச்சொல்ற.” என்றவனின் பேச்சில் ஆதங்கம் அப்பட்டமாக வெளிப்பட, அழகர் தர்மசங்கடமாக ருத்ரனை ஏறிட்டுப் பார்த்தான்.
முகம் திரிந்து நோக்கக் குழைவது விருந்தாயிற்றே. எல்லாம் வாய் வார்த்தைகளில் தானே இருக்கிறது. வந்தவனை அழகரும், அமிர்தாவும் மாமா என அழைத்து வரவேற்க, ருத்ரன் வாங்க என மட்டும் அழைத்தது அவனுக்கு தாமரை இலைத் தண்ணீராய் ஒட்டாத் தன்மையைத் தோற்றுவிக்க, எப்படி இவனிடம் உரிமையாக உதவி கேட்பது என்று தயக்கம் வந்து தன்னால் உட்கார்ந்து கொண்டது. ஏனோ சட்டென உறவு சொல்ல ருத்ரனுக்கும் வரவில்லை.
வெங்கடேசனது தயக்கம் பார்த்தவன்,
“நீங்க நெனைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை ண்ணே. ஏதோ யோசனை. அதான்…” என ருத்ரனும் சமாளிப்பாக இழுக்க,
“மாமா! வந்த விஷயத்த சொல்லுங்க! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்ங்கற மாதிரி ருத்ரன் மாமா எல்லாம் பாத்துக்குவாரு.” எனப் பேசி நிலமையை சகஜமாக்க, தம்பி என்ற வார்த்தை இருவரையும் அசைத்துப் பார்த்தது. ஏதோ ஒரு உணர்வு உள்ளுக்குள் கரைபுரண்டது.
மௌனமாக இருந்தவனிடம்,
“சொல்லுங்க ண்ணே! எதுன்னாலும் பாத்துக்கலாம்.” என்ற ருத்ரனின் வார்த்தை, அவனுக்கும் யானை பலம் கொடுத்தது என்று சொல்லலாம்.
ருத்ரனின் பின்புலம் தெரியும். எப்படியும் அவனால் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியும். அந்த நம்பிக்கை இருந்தது.
வெங்கடேசன் நிலத்தை ஒட்டிய நிலம் கிரையத்திற்கு வந்தது. அதை வாங்க இன்னொரு பார்ட்டியும் மோத, இவன் ஐந்து லட்சத்தை அட்வான்சாகக் கொடுத்து அக்ரீமென்ட் போட்டு வைத்திருக்கிறான். குறிப்பிட்ட தேதிக்குள் பணம் புரட்ட முடியாமல், எங்கெங்கோ அலைந்து விட்டு, இறுதியாக ருத்ரனிடம் வந்திருக்கிறான்.
“என்ன பண்றதுனு தெரியல பாண்டியா. அட்வான்ஸ் வேற அஞ்சு லட்சம் கொடுத்திருக்கு.” எனத் தயங்க, அவனது இக்கட்டான நிலை நன்கு புரிந்தது இருவருக்கும்.
அக்ரிமென்ட் போட்ட தேதிக்குள் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணவில்லை எனில் அட்வான்சையும் கறாராகக் கேட்க முடியாது. அவர்கள் எப்பொழுது கொடுக்கிறார்களோ அப்பொழுது தான் பணம் நம் கைக்கு வரும். அதுவும் மொத்தமாகக் கிடைக்கும் என சொல்ல முடியாது. இவற்றை எல்லாம் வெங்கடேசன் கூற,
“அட்வான்ஸ் எதுக்கு மாமா இவ்ளோ தொகை கொடுத்து வச்சீங்க.” என அழகர் கேட்க,
“ஆப்போசிட் பார்ட்டி நம்ம பேசினத விட அதிகமா கொடுக்க ரெடியா இருந்தான் மாப்ள. நம்ம நெலத்த ஒட்டிய எடம். ரெண்டு ஏக்கர் தான். ஆனா அவன் வாங்கி வேலி போட்டுட்டா நமக்குப் பாதை இல்ல. சுத்தி வர வேண்டி இருக்கும். அதனால தான் விடக் கூடாதுனு அவ்ளோ தொகை கொடுத்து வச்சேன். அதுவும் இல்லாம… அது எங்க பூர்வீக நிலம். தாத்தா காலத்துல கைவிட்டுப் போனது.” என்றவன் பார்வை ருத்ரனை ஒரு தரம் தடவி மீண்டது.
“பாதை இல்லைனா இது வரைக்கும் எப்படி போனீங்க.” என ருத்ரன் கேட்க,
“அந்தக் காலத்துல விக்கும் போது வாய் வார்த்தையில சொன்னதாம் பாண்டியா. பாதை இது தான்னு. எழுத்துப் பூர்வமா இல்ல. அதனால இன்னைக்கி நாம அதிகாரமா பாதை கேக்க முடியல. அண்ணியோட நகை எல்லாம் வச்சு பத்து லட்சம் பொறட்டியாச்சு பாண்டியா. இன்னும் அஞ்சு லட்சம் தேவப்படுது. எல்லாம் வெளில மொடங்கிப் போச்சு. எல்லாரும் ஒரு மாசம், ரெண்டு மாசம்னு தவணை கேக்குறாங்க. அதான் உங்கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு வந்தேன்.” எனக் கூற, ருத்ரனின் முகம் யோசனை காட்டியது.
“என்ன மாமா?” என அழகர் வினவ,
“இல்ல மாப்ள. போன மாசம் தான அந்த எடத்த முடிச்சோம். அதான் நமக்கும் இப்போதைக்கி கையிருப்பு இல்ல.” என்றான்.
ருத்ரனுக்கு மினிஹால் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இன்றைக்கு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் முதற்கொண்டு சிறுசிறு விஷேசங்களுக்கு மினிஹாலின் தேவை அதிகரித்திருப்பது தெரிந்தது. எனவே அதற்குத் தோதாக இடம் தேடிக் கொண்டு இருந்தான். சென்ற மாதம் தான் இரண்டு தெரு தள்ளி தோதான இடம் கிடைக்க, கையிருப்பு மொத்தத்தையும் அதில் போட்டு விட்டான். வெங்கடேசனை நிமிர்ந்து பார்த்தவன்,
“பாத்துக்கலாம் ண்ணே.” என ஊக்கம் கொடுக்க, வெங்கடேசனின் நம்பிக்கை முடிச்சு தளர்ந்து போனது. ஐந்து லட்சம் என்பது இவனுக்குப் பெரிய விஷயமில்லை என நினைத்து தான் வெங்கடேசன் வந்தது. ஆனால் ருத்ரன் யோசிப்பதைப் பார்த்தவனுக்கு பல யோசனைகள் உள்ளுக்குள் ஓடியது.
“ரெண்டு மாசத்துல திருப்பி கொடுத்துர்றேன் பாண்டியா. எப்படியும் வெளில நிக்கறது வந்துரும்.” என் நம்பிக்கை கூற,
“அதப்பத்தி பிரச்சினை இல்ல ண்ணே. பாத்துக்கலாம். கவலப்படாதீங்க. என்னைக்கி ரெஜிஸ்ட்ரேஷன்.”
“நாளை மறுநாள் நல்ல நாள்னு அன்னைக்கே வச்சுருக்கு. இடையில ஒரு நாள்தான் இருக்கு. செக் கொடுக்கணும்.”
“நான் வேணா தரவா மாமா?” என அழகர் கேட்க,
“இல்ல அழகரு. நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன்.”
“ஏன் மாமா? அதான் ரெண்டு மாசத்துல கொடுத்துர்றதா சொல்றாருல்ல. நீங்களும் வெளிய தானே வாங்கப் போறீங்க. அத ஏன் எங்கிட்ட வாங்கக் கூடாது. எங்கேனாலும் வட்டி தானே மாமா?”
“இல்ல மாப்ள. இது சரி வராது. இது என்னோட தனிப்பட்ட விஷயம். நான் பாத்துக்கறேன். குடும்பத்துக்குள்ள வேண்டாம்.” என்று மறுத்துவிட, வெங்கடேசனுக்கும் சில விஷயங்கள் புரிந்தது.
ருத்ரனின் பிடிவாதம் பற்றி தெரிந்ததால் அழகரும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
மறுநாள் எப்படியும் அக்கவுன்ட்டில் போட்டு விடுவதாக நம்பிக்கை கொடுத்தான்.
சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சுவாக்கில்,
“அமிர்தா இங்க என்னப்பா பண்றா?” எனக் கேட்க, ருத்ரன் அமைதியாக இருந்தான். அவள் இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பதாக சப்ளையரிடம் கூறியதைத் தான் வெங்கடேசன் கேட்டானே. இருந்தும் ஒரு சந்தேகம்.
“கவர்மெண்ட் வேலை கெடைக்கிற வரைக்கும் இங்க கணக்கு வழக்கு பாத்துக்கட்டும்னு நான் தான் வேலைக்கு வரச் சொன்னேன் மாமா. இவருக்கும் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ல?” என அழகரே கூற,
“நல்ல நல்ல சம்பந்தம் எல்லாம் வருது. என்னமோ இந்தப்புள்ள தட்டிக் கழிச்சுக்கிட்டே போகுது. இன்னும் அந்தப் பிள்ளைக்கி மாலைப் பூ பூக்கல போல.” என ருத்ரனைப் பார்த்துக் கொண்டே கூறியவன், அலுத்துக் கொண்டே எழுந்து கொள்ள,
“மதிய சாப்பாடு ரெடியாகி இருக்கும். சாப்பிட்டு போலாம்.” என பேச்சை மாற்றினான்.
மூவரும் கீழே இறங்கி வந்தனர்.
அழகருக்கு எடுத்துப் போட்ட ஸ்டூலில் அமர்ந்து பில்லை வாங்கிப் போட்டுக் கொண்டு இருந்தாள். இவர்கள் வர எழுந்து கொண்டாள்.
வெங்கடேசனின் முகம் பார்த்தவளுக்கு இப்பொழுது தெளிச்சலாக இருப்பதாகப்பட்டது அமிர்தாவிற்கு.
மூவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வர, அவன் பின்னாலே அமிர்தாவும் வெளியே வந்தாள்.
“என்ன மாமா ஏதும் பிரச்சினையா. அவசியம் இல்லாம இவரத் தேடி வரமாட்டீங்களே?” எனக் கேட்க,
“பிரச்சினை தாம்மா. ஆனா பாண்டியன் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாப்ல. கொஞ்சம் பணமொட ம்மா.”
“அதுக்கு ஏன் மாமா இங்க வந்தீங்க. அந்த அகிலாண்டத்துக்கு தெரிஞ்சா, என்னமோ அவங்க சொத்தையே இவரு தூக்கிக் கொடுத்துட்ட மாதிரி சாமி ஆடுமே. அம்மா கிட்ட கேக்க வேண்டியது தானே மாமா?”
“அம்மா கிட்ட கேட்டா இல்லைனு சொல்லாது தான் அமிர்தா. ஆனா… பொண்ணு கொடுத்த எடத்துல கொடுக்கல் வாங்கல் வச்சுக்கக் கூடாதும்மா. என்னைக்கி இருந்தாலும் ஒரு பேச்சு வந்துரும். இதப் பத்தி அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்.” எனக் கூற,
“என்ன மாமா, எங்க அப்பாவப் பாத்தா சொல்லிக் காட்டுறவரு மாதிரியா தெரியுது?” என மகளாக அப்பாவிற்குப் பரிந்து கொண்டு கோபமாகக் கொடிபிடித்தாள்.
“இல்ல அமிர்தா. ஒரு நாளும் உங்க அப்பா சொல்லிக் காட்ட மாட்டாரு. ஆனா அந்த மரியாதைய நான் காப்பாத்திக்கணுமா இல்லியா?” எனக் கேட்க,
“என்னமோ போங்க.” என அலுத்துக் கொண்டவள், சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டு நின்றனர். எப்பேர்ப்பட்ட உறவுகளுக்குள்ளும் விரிசலை உண்டு பண்ணுவது பணம் தானே. பணம் பகையாக்கும் என சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
அழகரும் வெளியே வந்தவன், அவளிடம், “மகளே… இனி உன் சமத்து.” என சிரித்துக் கொண்டே கூற, அவளிடம் வரண்ட சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அவள் ரிசர்வேஷன் செய்து வைத்திருந்த இடத்தையே இன்னொருத்தர் வந்து கன்ஃபார்ம் செய்து தருவதாகப் பட்டது அவளுக்கு.
அழகர் சென்றுவிட, வெங்கடேசனும் கிளம்பும் முன் வழக்கமாக அமிர்தாவிற்கு பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுக்க,
“வேண்டாம் மாமா.” என இவள் தயங்க,
“நீ நெனைக்கிற அளவுக்கு மாமனுக்கு பஞ்சப்பாட்டு இல்ல ம்மா. எப்ப இருந்து இந்த கெட்ட பழக்கம். அது என்ன மாமன் கொடுத்தா வேண்டாங்கறது.” எனக் கடிந்தான்.
பணக்கஷ்ட்டம் என்றவுடன் அதை நினைத்து தான் இவன் வழக்கமாகக் கொடுப்பதை அவள் வாங்க மறுக்கிறாள் என்பது புரிந்தது.
“அதெல்லாம் இல்ல மாமா. நாங்க வளந்துட்டோம். ஆனா நீங்க இன்னும் சின்னப் பிள்ளைல கொடுத்த மாதிரியே இந்த ஐநூறு ரூபாய்க்கு மேல ஒத்த பைசா தர மாட்டேங்கறீங்களே. இதுல அவனுக்கு வேற பங்கு கொடுக்கணும்.” என மாமனிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டு போலியாக மூஞ்சியைத் தூக்கினாள். அவள் முகம் பார்த்து வெங்கடேசன் சிரிக்க, அவளுக்கும் சிரிப்பு வந்தது.
சொந்த பந்தங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் பொழுது பிள்ளைகளுக்கு கையில் பணம் கொடுப்பது வழக்கம் தானே. அதுவும் இவன் தாய்மாமன். வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் பணம் கொடுத்துப் பழக்கம். இன்றும் வழமை மாறாமல் மாமன் பணம் தர, மாமனின் நிலை அறிந்து தயங்கினாள்.
ருத்ரனின் பார்வை மாமனிடம் பேசிக் கொண்டு இருப்பவள் மீதே இருந்தது.
சற்று நேரத்திற்கு முன் தன்னிடம் பற்றவைத்த சரவெடியாக, வாய்க்குவாய் சவடால் பேசிக்கொண்டு, எகிறிக் கொண்டு நின்றவளா எனும்படி இருந்து அவளது முகம். மாமானிடம் பேசும் போது சிறுபிள்ளைத்தனம் இம்மியும் இல்லை. அத்தனை பக்குவம் முகத்தில். உரிமையோடும், மரியாதையோடும், அக்கறையாக மாமானை விசாரிப்பது தெரிந்தது. மாமனிடம் செல்லமாகக் கோபித்துக் கொள்வதைப் பார்த்தவன் நெஞ்சுக்குள்ளும் கணநேரம் கணமாக எதோ ஒன்று அழுத்தி விடைபெற்றது.
மாமனை அனுப்பிவிட்டு
உள்ளே வந்தவளிடம், “மாமான்னா ரொம்ப செல்லமோ?”
என கேட்டவன் வார்த்தைகளில் மட்டுமல்ல பார்வையிலும் பொறாமை அபரிமிதமாகப் பொங்கி வழிந்தது. அவன் கேட்ட தோரணையே அவளுக்கு அதை கட்டியம் கூற, மாமாகிட்டப் பேசினாக் கூட பொறுத்துக்க முடியலியோ என மனம் நொடித்துக் கொண்டது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்,
“எப்பவுமே தாய்மாமக்கள் பொண்ணுகளுக்கு ஸ்பெஷல் தானே?” என கேட்டவள் பார்வை அவனை ஊடுறுவிப் பார்த்தது. அவளது ஆராய்ச்சிப் பார்வையை அவன் தவிர்க்கப் பார்க்க, அதற்கு மேல் அவனை சோதிக்க விரும்பாதவள்,
“நீங்களும் தேனுவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி, அவளுக்குப் பொறக்குற பிள்ளைகளுக்கு சீர் செஞ்சு பாருங்க. அப்பத் தெரியும்.” என்றவள், அடுத்து என்ன செய்வது என தயங்கி நின்றாள்.
அவனும் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக இவளிடம் சொல்லாத பட்சத்தில் இருப்பதா, இங்கிருந்து செல்வதா எனத் தெரியாமல் மேஜை மீதிருந்த ஃபைலை எடுத்துக் கொண்டு குழம்பி நிற்க, பாவை முகத்தில் ஓடிய குழப்ப வரிகளைப் படித்தவன்,
“இந்தா… இதுல இந்த மாச கல்யாண ஆர்டர் எல்லாம் இருக்கு. தேதி வாரியா பிரிச்சு என்ன என்ன கேட்டு இருக்காங்கனு பாத்து வை. ஆஃபிஸ் ரூம்ல தான் உனக்கு வேலை. இங்க இல்ல.” என ஒரு நோட்டை எடுத்து கையில் கொடுத்து மேலே போகச் சொல்ல, சட்டென முகம் பொங்கும் பாலாய் பூரித்து நின்றது.
பொங்கும் சந்தோஷத்தோடு அவன் கொடுத்த நோட்டை வாங்கிக்கொண்டவள்,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அடுப்படியில அடிப்புடிக்கிற வாட வந்துச்சு. என்னானு போய்ப் பாருங்க.” என கண்களில் குறும்பு கொப்பளிக்க நக்கலாகக் கூறிவிட்டுப் படியேறினாள்.
அப்படி ஏதும் வந்தமாதிரித் தெரியலியே என அவன் யோசிக்க, மாமனிடம் பேசியதைப்பற்றி அவளிடம் விசாரித்ததைத் தான் இப்படி சொல்லிவிட்டுப் போகிறாள் எனப் புரியவே சிலகணம் பிடித்தது அவனுக்கு. புரிந்த கணம் உதடு பிரியாமல் மென்னகை ஒன்று ஒட்டிக் கொண்டது. இவள் வந்ததிலிருந்து சட்டெனப் பெய்யும் கோடை மழையாய் அவன் உதடுகள் அடிக்கடி விரிவது அவனுக்கே தெரிந்தது.
மதியம் மணி மூன்றைத் தொட்டது. இவ்வளவு நேரமாக பரபரப்பு காட்டிய ஹோட்டல் சிறிது மூச்சு விட்டு ஆசுவாசப்பட, அவனும் சாப்பிட எழுந்து கொண்டான். இன்னும் அமிர்தா கீழே இறங்கி வராமல் இருக்க, மேலே சென்றான்.
ஏசி அறை என்பதால் கதவு மூடியிருந்தது. கைப்பிடி பிடித்து திறந்தவன் மீண்டும் கதவை மூடிவிட்டு திரும்ப,
இடது முழங்கையை மேஜைமீது ஊன்றியவாறு, உள்ளங்கையை தாவாய்க்கு முட்டுக் கொடுத்து தாங்கி, நிமிர்ந்து உட்கார்ந்தவாக்கில், கம்ப்யூட்டரை அவள் புறமாகத் திருப்பி ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த கோலத்தில், சேலை இடைவெளியில், இடப்புற தரிசனம் அப்பட்டமாகத் தெரிய, கண்டவனது கண்கள் ஒரு கணம் இமைக்க மறந்து தடுமாறி நின்றான்.
பளீரிட்ட இடைவெளியில், இடை சந்தனமாய் மின்ன, மெய்மறந்து நின்றவனின் பார்வையை எதிர்த்து… முறைத்து நின்றது மாராப்பில் ஒழியமுடியாமல் ஒழிந்து கொண்டிருந்த இளமைத்திமிர் ஒன்று. விலங்கிட்ட கால்களாக அசைய மறுக்க, தடுமாறிய மனதை, கடிவாளம் இட்டுக் கட்டியிழுத்து வந்தான்.
“என்ன பண்ற? பசிக்கல?” என சட்டென குரல் உயர்த்தி தன்னைச் சமன் செய்ய முற்பட, திடுமென கேட்ட குரலில் விலுக்கெனத் திரும்பிப் பார்த்தாள்.
கதவு திறந்தது கூட கவனமில்லாம அப்படி என்னத்தப் பாக்குற… என்ற கோபம் அவனது குரலில்.
“அப்பாடா… இப்பவாவது கேக்கணும்னு தோணுச்சே. சிறுகுடல பெருங்குடல் திங்குது. பசியில காதடைச்சுப் போச்சு. வீடாயிருந்தா இந்நேரம் சாப்பிட்டு நித்ராதேவிய துணைக்கு கூப்பிட்டுருப்பே.” என அங்கலாய்ப்பாய் நீட்டி முழக்க,
“வந்த மொத நாளே திங்கறதும், தூங்கறதும் தானா? வெளங்கின மாதிரி தான்.” என சலித்துக் கொண்டான்.
“ஹலோ… பசிச்சு சாப்பிடறதுக்கும், படுத்தவுடனே தூங்கறதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும். அது முடியாமத் தான் இன்னைக்கி ரொம்ப பேரு லோள் பட்டுக்குட்டு இருக்காங்க.” என குரல் உயர்த்த அந்த இடைவெளியில் இடையில் தடுமாறிய தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டான்.
“உன்னோட வேதாந்தத்த உன்னோட வச்சுக்க. நோட்ல என்ன பாத்து வச்ச?” என எரிச்சலாகக் கேட்டான். அவள் இன்னும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருக்க, “வேலபாக்குற எடத்துல கன்னத்துல என்ன கை. எடு மொதல்ல.” என அதட்டிவிட்டு அவளுக்கு எதிர் இருந்த தன் இருக்கைக்கு வந்தான்.
அழகர் பேச்சைக் கேட்டு, இவளை வேலைக்கு சேர்த்து, வேண்டாத வேலை பார்த்துவிட்டோமோ என ஒரு கணம் சிந்தையில் ஓடாமல் இல்லை.
‘பாண்டியா… கோயில்ல பூசாரியா இருக்குறவன் குடிக்காம இருக்கிறது பெரிய விஷயமில்ல. டாஸ்மாக்ல வேல பாத்துக்குட்டு குடிக்காம இருக்குறது தான் பெரிய விஷயம்ங்கறத புரிஞ்சுக்கோ.’ என மனசாட்சி இதுதான் சாக்கென்று இடித்துரைக்க,
‘இம்புட்டு நேரம் எங்க போயிருந்த. இப்ப வந்து யோசனை சொல்ற?’ என இவன் வாதம் செய்ய,
‘இவள வேலைக்கு சேக்கும் போது என்னைய கேக்கலியே. கேட்டிருந்தா அப்பவே சொல்லி இருப்பேனே? இவள கிட்ட வச்சுக்கிறது உனக்கு சத்தியசோதனைனு.’ என மனசாட்சியும் எதிர்வாதம் செய்ய, அவனும் தான் இவளை வேலைக்கு வைத்துக் கொள்வது பற்றி ஒரு கணமும் யோசிக்கவில்லையே. வாய் தான் வேண்டாமென்று மழுப்பியதே ஒழிய, மனம் இருந்து விட்டுப் போகட்டும் என்று தானே சப்பைக்கட்டுக் கட்டியது. சிறிது நேரம் தன்னையே நொந்து கொண்டான்.
“இங்க பாருங்க… இப்படி ஒரே எடத்துல இவ்வளவு நேரம் உக்காந்து இருக்குறது என் வாழ்க்கையிலேயே இது தான் முதல் தடவை. முதலாளி சொல்லாம சாப்பிட போகக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பசியப் பொருத்துட்டு இருக்கே. வந்ததும் வராததுமா சிடுசிடுக்கக் கூடாது. நியாயமாப் பாத்தா பசியில இருக்குற எனக்கு தான் கோபம் வரணும். இந்த நோட்ல இவ்வளவு நேரம் பாக்குறதுக்கு என்ன இருக்கு?” எனக் கேட்க,
“அதெல்லாம் புக் பண்ணின கல்யாண ஆர்டர்ஸ். இனிமே தான் என்ன கேட்டு இருக்காங்கன்னு பாத்து ஏற்பாடு பண்ணனும்.”
“ஒரு கல்யாண வீட்டுக்காரங்க இசைக்கச்சேரி கேட்டுருக்காங்க. நம்ம திண்டுக்கல் ரீட்டாவ புக் பண்ணலாமா?”
“அத உன் கல்யாணத்துக்கு புக் பண்ணிட்டு விடிய விடிய உக்காந்து பாரு.” எனக் கூற அவனை முறைத்துப் பார்த்தாள்.
“இன்னொருத்தவங்க, ரிசப்ஷன் டெக்கரேஷனுக்கு துலிப் கேட்டு இருக்காங்க. மதுரையில அதுக்கு எங்க போறது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் மல்லி, முல்லை, மரிக்கொழுந்து, கனகாம்பரம், சம்பங்கி, அப்பறம் செவ்வந்தி, அரளி, வாடாமல்லி இது தான. துலிப் எல்லாம் எல்.கே.ஜி புக்ல பாத்தது. ஏன் நம்ப ஊர் பூவெல்லாம் வச்சு அலங்காரம் பண்ணினா வாசம் வராதா. அழகா இருக்காதா?” எனக் கேட்க, நிமிர்ந்து அமர்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தான்.
“புரியுது… எங்கல்யாணத்துக்கு இதெல்லாம் பண்ணிக்கோனு சொல்லப் போறீங்க. அது தானே?” என கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டாள்.
“தெரிஞ்சா சரி. இந்தக் கல்யாணத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரவுங்க பெங்களூர். அவங்க கேட்டு இருக்காங்க. இதெல்லாம் இங்கேயே பூ மார்கெட்ல போய் சொல்லி வைக்கணும். இல்லைனா ஆன்லைன்ல பாத்தா தெரியும். ஆர்டர் போட்டு வைக்கணும். பொக்கே ரெடி பண்றவங்க கிட்ட கிடைக்கும்.” என்று தகவல் கொடுத்தான். மற்ற விபரங்களைப் பேசிக் கொண்டே,
அங்கிருந்தே ஃபோனில் கீழ் தளத்திற்கு அழைத்தவன், ஒரு சாப்பாடு மேலே எடுத்து வரச்சொன்னான். சிலநிமிட இடைவெளியில் சப்ளையர் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போக, பசியில் சாப்பிட்டு முடித்து விட்டு தான் அவனை நிமிர்ந்தே பார்த்தாள்.
“என்ன சாப்பிட்டேனாவது தெரியுமா? சாப்பிடறதுக்கு முன்னாடி கைகழுவுற பழக்கமெல்லாம் இல்லையா?” என கேட்க,
“இருந்த பசிக்கு எதக் கொடுத்தாலும் சாப்பிட்டு இருப்பே. டேஸ்ட்டா சிக்கன் பிரியாணி கொடுத்தா விட்டு வப்போமா? அதுவும் கூடவே வெள்ளரிக்கா தயிர் பச்சடியும், மிளகு தூக்கலா போட்ட மட்டன் சுக்காவும் காரசாரமா செமயா இருந்துச்சு போங்க. சாப்பிட்டு முடிச்சு ஒரேடியா கை கழுவிக்கிட்டா போச்சு.” என சப்புக் கொட்டி சிலாகித்து சொல்ல, சிரிப்போடு அவளையே பார்த்தான்.
இவனிடம் அவள் சிரித்து சிரித்துப் பேசினாலும் மென்படலமாய் மெல்லிய சோகம் இழையோடியதை அவன் மட்டுமே உணர்ந்தான். எனக்கு தான் வலிக்கலியே என கொக்கானி காமிக்கும் சிறுபிள்ளையாய்த் தெரிந்தது அவளது செயல்கள் அனைத்தும்.
மற்ற நாட்களில் அதிகாரமாக வந்து சாப்பிடுபவளுக்கு இன்றும் கீழே போய் சாப்பிடத் தெரியாதா என்ன?
அவன் வந்து சொல்லட்டுமே எனும் சிறு எதிர்பார்ப்பு.
“நீங்க சாப்பிடல?” எனக் கேட்க,
“இவ்வளவு சீக்கிரம் கேட்டுட்ட. சிலபேர் சாப்பிடறதப் பாத்தாலே பசி அடங்கிறும். இப்ப எனக்கும் அப்படித்தான் ஆகிப்போச்சு.”
“ஹோஓஓ… இதுக்கு பேருதான் பார்த்தால் பசி தீரும்ங்கறதோ?” என்றவள் முகம் பார்த்தவனுக்கு,
அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே பசி தீர்ந்தது போலத்தான் இருந்தது.
உணவு வேளையின் பொழுது அவளே கீழ்தளம் வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறினான். அது ஏசி அறை என்பதால் மசாலா வாடை போக ரூம் ஸ்பிரே எடுத்து அடித்துவிட்டான். மறுநாள் ஒரு ரிசப்ஷன் இருப்பதாகவும் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறியவன், அது நடக்கும் விலாசத்தை அவளுக்கு ஃபோனில் அனுப்பி வைத்தான்.
“இன்னும் என் நம்பர் உங்ககிட்ட இருக்கா?” என அவள் விழிவிரித்து ஆச்சர்யப்பட,
“நீ அதே நம்பரத் தானே வச்சிருக்க. நம்பர மாத்தவே இல்லியே?” என கூற,
“புரிஞ்சா சரி.” என்றாள். பெண்ணவள் இயல்பாகக் தான் கூறினாள். மன்னவன் தான் தன் இயல்பைத் தொலைத்து நின்றான். அவள் உணர்த்திய மறைபொருள் புரியாதவனா என்ன?
எல்லார்க்கும் தலைமேல எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல…
“இப்ப நீ கெளம்பு. நாளைக்கி ஈவ்னிங் ரிசப்ஷன். நீ மதியமே நேரா ரிசப்ஷன் நடக்குற எடத்துக்கு வந்திரு. சுடிதார்லயே வா! அது தான் சௌகர்யம்.” என்றான் அவளை அப்புறப்படுத்தும் அவசரத்தோடு.
