தெம்மாங்கு பூந்தமிழே 8

8

மனிதனின் கண்ணிற்கு இருப்பதாகத் தோன்றி இல்லாமல் போக்கு காட்டும் மிகப் பெரிய மாயை ஆகாயம். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு எட்டிவிடத் துடிக்கிறோம். எல்லைகளற்றது அண்டசராசரம் மட்டுமல்ல, மனித மனமும் தான். சூரிய ஒளியே நம்மை வந்து தீண்ட எட்டு நிமிஷம் எடுத்துக்குது. ஆனா நம்ம மனசோ ஒருசில நொடிகள்ல உலகையே சுத்தி வந்துருது. 

அடைப்புக்குறிக்குள் அடங்காத ஆச்சரியக்குறி மனித மனம். வினாக்குறி கொண்டு வேள்வி நடத்தும் வரை முற்றுப் புள்ளி என்பதே அதற்கு கிடையாது. 

போராட்டம் இல்லாத வாழ்க்கை என்பது சூரிய உதயம் இல்லாத விடியல் போல. அலைகள் இல்லா கடல் போல. எல்லோருக்கும் மலர்ப்பாதைகள் கிடைப்பதில்லை. 

உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரிக்கும் போராட்டம் உண்டு. நாணலுக்குப் போராட்டம் நீரோடு. மரத்திற்குப் போராட்டம் காற்றோடு. விதைக்குப் போராட்டம் மண்ணோடு. இருந்தும் அனைத்தும் நிமிர்ந்தே நிற்கிறது. மனிதனுக்குப் போராட்டம் தன்னோடு. புறப்போராட்டத்தை விட அகப்போராட்டமே மனிதனை அசைத்துப் பார்ப்பது. 

அமிர்தாவின் உறுதியைப் பார்த்து விட்டு பலவித யோசனைகளோடு கல்லாவில் அமர்ந்து இருந்தான் ருத்ரன். வேண்டுதலுக்கென போட்டு வைத்த உண்டியல் காசாய் பழைய நினைவுகள்… வேண்டுதல் செலுத்தப் படாமலே.

அதற்கு சற்றும் சளைக்காமல் இருக்கிறது  தங்கையின் வீம்பு. இதையெல்லாம் நினைக்கும் பொழுது இவர்கள் அன்பிற்கு முன்னால் தான் சிறுத்து விட்டதாகவே தோன்றியது. என்ன செய்து இதை ஈடு கட்டுவது. அவர்களது அன்பு அவனைப் பலவீனப்படுத்துவது போல் தோன்றியது.

கைகள் தன் போக்கில் கணக்குப் பார்த்து பில்லை வாங்கிக் போட்டாலும் மனம் நாலாவித யோசனைகளில் சிக்கித் தவித்தது.

திருவிழா முடிந்து தனது வழமையை மீட்டெடுத்திருந்தது அவனது ஹோட்டல். 

காலை மணி பதினொன்று… இட்லி, தோசை, பூரி, பொங்கல் என சூடு பிடித்திருந்த வியாபாரம் சற்றே ஓய்ந்திருந்தது. 

அழகர், மாமனைக் காண ஹோட்டல் வந்தான்.

“வாடா… மாப்ள. என்ன காலையிலேயே இங்கிட்டு.” என வந்தவனை வரவேற்று, கூடவே வந்ததற்கான காரணமும் வினவினான். சப்ளையரை அழைத்து தனது இருக்கைக்கு அருகிலேயே ஒரு ஸ்டூலை எடுத்துப் போடச் சொன்னவன், வந்தவனுக்கு காஃபி எடுத்து வரச் சொன்னான். சப்ளையர் அருகே இருந்த ஒரு ஸ்டூலை எடுத்துப் போட,

“எல்லாம் ஒரு முக்கியமான வேலையாத்தான் மாமா.” என்றான் கல்லாவில் அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டே. 

“அப்படி என்னப்பா முக்கியமான வேல.” என்றவாறே தனது வேலையில் கவனமாயிருந்தான்.

“உதவிக்கி ஆள் வேணும்னு சொல்லி இருந்தீங்கள்ல மாமா.” என ஞாபகப் படுத்த, 

“அட ஆமா… ஆள் கெடச்சுட்டாங்களா?” 

“ம்ம்ம்… வரச்சொல்லியிருக்கே மாமா.” 

“வைகாசி பொறந்தாச்சுல்ல. இனி முகூர்த்தம் நெறைய வரும் மாப்ள. ஹோட்டல், கேட்டரிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலைகள்னு எல்லாத்தையும் பாக்க முடியல. அதான் உதவிக்கு ஒரு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சுடா.” 

“அதுவும் கரெக்ட் தான் மாமா. அதுக்கு தான் சரியான ஆள ஏற்பாடு பண்ணி இருக்கேன்.” என்றவன் ஆவி பறக்க காஃபி வர, வாங்கி டம்ளரை சுழற்றி ஊதிக் குடிக்க ஆரம்பித்தான்.

ஒரு கல்யாணம் எனில் இப்பொழுது அதிகமாக யாரும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்யத் தயாராக இல்லை. சொந்தபந்தங்களோடு ஆளும் பேருமாகக் கூடி நின்று ஒரு விசேஷத்தை முன்னிருத்தி நடத்தியது எல்லாம் ஒரு காலம். இன்று அவரவர்க்கென்று ஆயிரத்தெட்டு வேலைகள். பத்து நாள் கல்யாணம், பதினைந்து நாள் கல்யாணம் என சொந்தங்கள் எல்லாம் மொத்தமாக வீட்டில் ஒன்று கூடி நடத்தியதெல்லாம், குடிதண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் இன்றைய காலகட்டத்திற்கு சாத்தியமில்லாத ஒன்று. எல்லாவற்றையும் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்டிடம் ஒப்படைத்துவிட்டு ஹாயாக கேமரா முன் நின்று கொள்கின்றனர்.‌

ஹோட்டலும், கேட்டரிங் சர்வீஸ் மட்டும் இருந்த பொழுது ருத்ரனால் எளிதாக சமாளிக்க முடிந்தது. ஈவென்ட் மெனேஜ்மென்ட் எடுத்து நடத்த ஆரம்பித்ததில் இருந்து தனியாக சமாளிக்க சற்று சிரமப்பட்டு போனான். உதவிக்கு ஒரு ஆள் இருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற, அழகரிடம் சொல்லி வைத்தான். 

அதுவும் இல்லாமல் நேரிடையாக வியாபாரம் பேசும் பொழுது சிலரிடம் முகத்தில் அடித்தாற் போல பேரம் பேசவும் முடிவதில்லை. சிலரிடம் நயந்து போக வேண்டி இருக்கிறது. இதுவே பணிக்கு இருப்பவர்கள் எனில் வருபவர்கள் பேரம் பேச முடியாது. அதுவும் ஒரு முக்கிய காரணம். அதனாலேயே வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யச் சொல்லியது.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, அமிர்தாவின் வண்டி ஹோட்டல் முன் வந்து நின்றது. 

‘வந்துட்டாளா?’ என ஆயாசமாக ருத்ரன் பார்த்துக் கொண்டு இருக்க, சட்டென அவளிடம் ஏதோ வித்யாசமாகத் தோன்ற, அவளது தோற்றம் யோசிக்க வைத்தது.

எப்பொழுதும் சுடிதாரில் சுற்றுபவள், சாம்பலும் மஞ்சளும் கலந்த காட்டன் புடவையில் பாந்தமாக வந்து இறங்கினாள். பூவில்லாமல் வெளியே வரமாட்டாள். ஆனால் இன்று இறுகப் பின்னிய சடைப்பின்னல் வெறுமையாக இருக்க, நெற்றியில் சிறிய மெரூன் கலர் ஸ்டிக்கர், இடக்கையில் வாட்ச், கழுத்தில் மெல்லிய செயின், காதில் சிறு தோடு, மார்போடு அணைத்துப் பிடித்தபடி இடக்கையில் ஒரு ஃபைல் என உள்ளே நுழைந்தவளைப் பார்த்து புருவம் முடிச்சிட,

அவளைப் பார்த்த அழகரும், ‘ஏம்மா… இப்படியா பெர்ஃபாமன்ஸ் பண்ணுவ. அழகரு இன்னைக்கி நீ காலிடா. ஒரு தென்றல் புயலாகி வருதேங்கற மாதிரி வர்றயேம்மா.’ என உள்ளுக்குள் கிலி பரவ,

“இவ எதுக்குடா இந்நேரத்துக்கு இங்க வர்றா?” என கேட்டுக் கொண்டு இருந்தான். 

வந்தவள் மரியாதையாக இருவருக்கும் காலைவணக்கம் வைக்க, 

“நல்லா பண்றே ம்மா.” என அழகர் அங்கலாய்க்க, தனியாக ருத்ரனுக்கு 

“குட்மார்னிங் சார்.” என பவ்யமாக சொல்ல, கேள்வியாய் அழகரைப் பார்த்தான். 

“உதவிக்கி… ஆள் வேணும்னு சொல்லி இருந்தீங்கள்ல மாமா…” எனத் தயங்கியவாறே இழுக்க, 

“அதுக்கு…” என இவன் புருவம் வில்லாய் வளைந்து, பார்வை அம்பு வீசியது.

‘செத்தடா நீ. நெலமைய சமாளிடா அழகரு.’ என தனக்குள் கூறிக் கொண்டவன்,

“நீங்க என்ன மாமா சொன்னீங்க. நல்லா நெனச்சுப் பாருங்க.” என தனது குரலை சற்று உயர்த்தி, பேசும் தோரணையை மாற்றியவன், மேலே பார்க்க,

“கேட்டதுக்கு பதில் சொல்லாம அங்க என்னத்தடா விட்டத்தப் பாக்குற?” என்றான் எரிச்சலாக.

“ஃப்ளாஷ் பேக்னா மேல தான் பாக்கணும் மாமா. அதானே காலங்காலமா இருக்குற வழக்கம்.” எனக் கேட்டவாறே மேலே பார்க்க,

“கணக்கு வழக்கெல்லாம் பாக்க, மேரேஜ் ஈவென்ட் எல்லாம் அரேன்ஜ் பண்ண ஆள் வேணும்னு சொல்லியிருந்தேன்.” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.

“அப்புறம் என்ன சொன்னீங்க?”

“என்னடா சொன்னேன்?” என சலித்துக் கொள்ள, மறுபடியும் மேலே பார்த்தவாரு,

“அப்பவே ஆணா, பொண்ணானு கேட்டேனா?”

“ஆமா…”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“அதையும் நீயே சொல்லித் தொல.”

“யாராயிருந்தாலும் பரவாயில்லைனு சொன்னீங்களா?”

“ஆமா…”

“அப்புறம் என்ன சொன்னீங்க?”

“டேய்… காண்டாகுது. வாழப்பழக் காமெடி மாதிரி எத்தன ஃப்ளாஷ் பேக்டா போவ?”

“இருங்க மாமா… அதுக்கு தானே வர்றே.” என நேரம் கடத்தியவன்,

“நீ யாரக் கூட்டி வந்தாலும் சரின்னு சொன்னீங்களா?”

“ஆமா…” என்றான் பல்லைக் கடித்தபடி.

“அதுக்கு தான் இந்தப் புள்ளய வரச் சொல்லி இருக்கேன்.” எனக் கூற ருத்ரனின் கோபம் கரை உடைத்தது.

“இவளா? இவளுக்கு என்னடா தெரியும்?” என ஆத்திரமாகக் கேட்க, அதுவரை பொறுமையாக நின்றவள்,

“சார், இதெல்லாம் நல்லா இல்ல. வேல கொடுங்க கொடுக்காமப் போங்க. ஆனா மொதல்ல மரியாதை கொடுக்கச் சொல்லுங்க. இவருக்கு ஒரு கேன்டிடேட் கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல. அதுக்கும் மொதல்ல இன்டர்வியூக்கு வந்தவங்களுக்கு ஒரு சேர் போடச் சொல்லுங்க. பேசிக் மேனர்ஸ் கூடத் தெரியல. எனக்கு என்ன தெரியும்னு கேக்குறாரு. இப்படி ஏதாவது கேப்பீங்கனு தெரிஞ்சு தான் சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன்.” என கோபமாக சிலிப்பிக் கொள்ள,

“என்ன சர்டிஃபிகேட்ஸ். சாப்பாட்டு போட்டியில கலந்துகிட்டு வின் பண்ணின சர்டிஃபிகேட்சா.” என நக்கலாகக் கேட்க,

“அண்ணா, இதெல்லாம் நல்லா இல்ல. என்னோட இமேஜ ரொம்ப டேமேஜ் பண்றாரு. சாரி கேக்கச் சொல்லுங்க.” என அழகரிடம் காய,

“ஏம்மா… ஏ… அவரே இறங்கி வந்தாலும் நீ மறுபடியும் முருங்க மரம் ஏத்துவ போலயே.” என அழகர் அவளிடம் கெஞ்ச,

“ஏன்டா… பேச்சு வாக்குல என்னை வேதாளம்ங்கறியா.” என இவனும் தாக்க,

“நான் எரும மாடா இருக்கும் போது நீங்க வேதாளமா இருக்கலாம். தப்பில்ல.” என்றாள் வெடுக்கென. அன்று கோவிலில் இவளை எருமமாடு என திட்டியதற்கு இப்பொழுது பதில் கொடுக்க, இருவரையும் ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவன், மூச்சை இழுத்துப் பிடித்து,

“அழகரு… நீ எதை நெனச்சு இவளக் கொண்டு வந்து சேக்கறேன்னு நல்லாத் தெரியுது. ஆனா இது சரிப்பட்டு வராது.” என்றான் பொறுமையாக. 

அழகரின் எண்ணமும் அதுதான். அமிர்தாவின் மனதைப் புரிந்தவன் இவர்கள் இருவரையும் தள்ளி வைப்பதைவிட, அருகருகே இருக்க ஏற்பாடு செய்தால் நன்றாத இருக்கும் எனத் தோன்ற, ருத்ரன் வேலைக்கு ஆள் பார்க்கச் சொல்லியது நினைவு வந்தது. உடனே காலங்காலமாக இருக்கும் பஞ்சும் நெருப்பும் கான்செப்ட் நினைவிற்கு வர உடனே செயல் படுத்தத் துணிந்து விட்டான். 

“இதெல்லாம் அவர்கிட்ட வேலைக்காகாது ண்ணா.” எனத் தயங்கியவளை,

“இது உங்களுக்காக இல்ல ம்மா. முதல்ல தண்டவாளத்துல ப்ரேக் டவுன் ஆகி நிக்கிற உங்க வண்டி கெளம்பினா தான், பின்னாடி நிக்கிற எங்க வண்டிக்கி வழி கிடைக்கும்.” என்றவன், தான் பார்த்துக் கொள்வதாகத் தைரியம் சொல்லி வரவழைத்தாலும், அவனுக்கும் மாமனை நினைத்து உள்ளுக்குள் கலக்கமே. 

“அப்ப… என்னப் பாத்து பயப்படுறீங்களா?” என அமிர்தா ருத்ரனிடம் வினவ,

“உன்னப் பாத்து எனக்கென்ன பயம்.” என்றான்.

“இல்லைனா… உங்க அகிலாண்டம் அத்தையப் பாத்து பயமா? என்னைய எதுக்கு வேலைக்கி சேத்தீங்கனு கேப்பாங்கன்னா.” என அவனைச் சீண்டி விட, அது அவனிடம் சரியாக வேலை செய்தது.

“அவங்ககிட்ட எனக்கு என்ன பயம். இது என்னுடைய தனிப்பட்ட ஹோட்டல். இங்க யார வேலைக்கி வைக்கணும் வைக்க கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும்.” என்றான்.

“அதான் நம்ம ரெண்டு பேத்துக்கும் ஒத்து வராதுன்னு சொல்லிட்டீங்கள்ல. உங்க மனசுல ஒன்னும் இல்லைல்ல. அப்ப வேல கொடுக்குறதுல என்ன தயக்கம்.”

“இப்ப நீ வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?” என்றான் அவள் கேட்டதற்கு பதில் கூறாமல்.

“அது பெரிய கதை சார். வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேனா. இதுக்கு மேல உனக்கு தண்டச்சோறு போட முடியாதுனுட்டாங்களா. அதான்… வேலைக்குப் போயி, நம்ம வயித்துப்பாட்ட நாமலே பாக்கலாம்னு வந்துட்டேன் சார். எப்படியாவது இல்லைங்காம வேல கொடுங்க சார். எனக்குனு யாருமே இல்ல சார்.” என முந்தானையை எடுத்து வராத கண்ணீரைத் துடைக்க,

‘என்னம்மா இப்படி பண்றீயேம்மா. அஞ்சு ரூபா வாங்கிட்டு ஐநூறு ரூபாய்க்கு நடிக்கிறியேம்மா.’ என அழகர் உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தான். 

“நடிக்காத! இவளை எல்லாம் வேலைக்கு வச்சுக்க முடியாது‌ அழகரு. வேற யாராவது இருந்தா சொல்லு. அதுவும் ஆம்பளையா இருந்தா நல்லா இருக்கும்.” என்றவன் பேச்சில் இருந்த உறுதியில், அதைக் கேட்டவள் மனம் உள்ளுக்குள் சுணங்கினாலும், சட்டென தன்னை மீட்டுக் கொண்டவள்,

“நான் இதுக்கே போராட்டம் பண்ணுவேன். ஒரு பொண்ணுங்கறதுக்காக வேலை இல்லைனு சொல்லிட்டாங்கனு கஸ்ட்டமர் கோர்ட்டுக்குப் போவேன். மகளிர் மன்றத்துக்குப் போவேன்‌” என மேஜையைத் தட்டி எகிறிக் கொண்டு வர,

“நீ எங்க வேணாலும் போ. மொதல்ல இங்க இருந்து எடத்தக் காலி பண்ணு. அது கஸ்ட்டமர் கோர்ட் இல்ல. கன்ஸ்யூமர் கோர்ட். உன்ன மாதிரி அரவேக்காட்டுக்கு எல்லாம் இங்க வேலை இல்ல.”

“நீங்க தான் பக்குவம் தெரிஞ்ச சமையல்காரர் ஆச்சே. இந்த அரைவேக்காட எப்படி முழு வேக்காடா ஆக்குறதுன்னு பாக்குறது.” என பதிலுக்கு பதில் வாயாட, அழகர் பார்வையாளனாகத் தேமேனென்று பார்த்துக் கொண்டு இருந்தான். 

“உனக்கு… இங்க… வேலை… இல்ல… கெளம்பு.” என ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாகக் கூற,

“சரியான ரீசன் சொல்லுங்க. இல்லைனா நான் கெளம்ப மாட்டேன்.” எனத் துள்ள,

“எனக்கு ஆம்பளைங்க தான் வேலைக்கி வேணும். கண்டிப்பா உங்க அப்பாவுக்குத் தெரியாமத் தான் வந்திருப்ப. கவர்மென்ட வேல தவிர மத்த வேலைக்கி உன்னைய அனுப்ப மாட்டாரு. அதுவும் இல்லாம நீ காம்படேடிவ் எக்ஸாம்ஸ் எழுதிட்டு இருக்க. திடீர்னு எப்ப வேலய விட்டுப் போவேன்னு சொல்ல முடியாது. ஹோம் சைன்ஸூக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட்க்கும் ரொம்ப தூரம். ஆம்பளையா இருந்தா நேரங்காலம் பாக்காம வெளிய அனுப்பி வைக்க முடியும். உன்னைய அப்படி அனுப்ப முடியாது.” என அவன் பட்டியலிட, அவளைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்திருக்கிறான் என புரிந்தவள் பார்வை, வேற என்னவெல்லாம் என்னைப் பற்றித் தெரியும் என்பது போல் நக்கலாகப் பார்த்து வைக்க,

“என்ன?” என்றான்.‌ 

“இன்டர்வியூ பண்ணாமலே என்னப் பத்தி அத்தனையும் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே.” என மெச்சுதலாகக் கேட்டாள்.

அப்பொழுது அங்கே நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒருவன் ஹோட்டல் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வர, மூவரின் பார்வையும் அங்கே திரும்பியது. 

வெள்ளை வேட்டி சட்டையில் மரியாதையான தோற்றம்.‌ கிட்டத்தட்ட ருத்ரனின் சாயல். உள்ளே வந்தவனை,

“வாங்க மாமா!” என அழகர் வாய் நிறைய உற்சாகமாக வரவேற்று, ஸ்டூலில் இருந்து மரியாதையாக எழுந்து கொண்டான்.

அமிர்தாவும், “வாங்க மாமா!” என்றாள் யோசனையாக.

“வாங்க!” என ருத்ரனும் வரவேற்றான். மூவருக்கும் சிறு தலையசைப்போடு ஒரு புன்சிரிப்பை பதிலாக்கினான் வெங்கடேசன்.

அவன் அங்கு அழகரையும், அமிர்தாவையும் எதிர் பார்க்கவில்லை என்பது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பார்வை தயக்கம் காட்டியது. 

இவர்கள் கல்லா‌ முன் நின்று கொண்டு பேசியதால், வெங்கடேசனும் இவர்களோடு சேர்ந்து நின்று கொண்டான்.

அவனது முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது, ஏதோ முக்கியமான விஷயம் என்றும், அழகர் இருப்பதால் தயங்குவது போலவும் இருக்க, 

இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன், எதிரே நின்றவளைப் பார்த்து, “கொஞ்ச நேரம் இங்க கவனிச்சுக்கோ.” எனக் கூற,

“அப்ப வேல கன்ஃபார்மா?” என ஆர்வமாகக் கேட்க, வந்தவன் முன் எதுவும் பேச முடியாமல், அமைதியாக முறைத்து விட்டு அவனை அழைத்துக் கொண்டு மேல் தளத்திலிருந்த அலுவலக அறைக்கு கூட்டிச் சென்றான்.

அழகரையும் உடன் அழைக்க, அவன் தயக்கமாய் வந்தவன் முகம் பார்க்க, 

“உனக்குத் தெரியாம எந்த ரகசியம்டா பேசப் போறோம் வா!” என்றான்.‌ 

“பரவாயில்ல வாப்பா.” என அவனும் அழைக்க, அழகரும் சேர்ந்து கொள்ள, மூவரும் படியேறினர். இரண்டு படி ஏறியவன் அவர்களை மேலே போகச் சொல்லி விட்டு மீண்டும் கீழிறங்கி வந்தான். 

அதற்குள் மேஜையை சுற்றிக் கொண்டு உள் பக்கமாக வந்தவள், சாமிப்படம் முன் நின்று ஒரு கணம் கண் மூடிவிட்டு, திருநீரை எடுத்து பூசிக் கொண்டு திரும்ப, அவள் முன் வந்து நின்றான். 

அவளையே ஒரு கணம் ஊன்றிப் பார்த்தவன்,

“வேல இல்ல… வெளிய போன்னு இவ்ளோ தூரம் சொல்றே. உனக்கு ரோஷமே வரலியா? வேற ஒருத்தியா இருந்தா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுனு இந்நேரம் நடையக் கட்டி இருப்பா.” எனக் கேட்க, 

அவனை கையைக் கட்டிக் கொண்டு நேருக்கு நேர் நின்று எதிர்பார்வை  பார்த்தவள், சிறுபிள்ளைத் தனத்தை விடுத்து,

“நீங்க கேட்டதுலேயே பதில் இருக்கு. வேற ஒருத்தியா இருந்தா தானே. நான் வேற ஒருத்தியா. ம்ம்ம்…?” என புருவம் தூக்கி கேட்க, புருவம் வளைத்து விழி தொடுத்த அம்பில், ஒரு கணம் சொக்கித்தான் போனான். 

“இந்தக் காலத்துல மானம் ரோஷமெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம் சொல்லுங்க? அம்மாஞ்சல்லிக்கி பிரயோஜனம் இல்ல.” என ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் சேர்த்து சுண்டிக் காண்பித்து சொல்ல,

“அது கூட இல்லைனா மண்ணுனு நெனச்சு ஏறி மிதிச்சுட்டுப் போயிருவாங்க.” என்றான் வெறுமையாக.

“பரவாயில்ல… நான் மண்ணாவே இருந்துட்டுப் போறே. ரெண்டு செடி, கொடியாவது மொளைக்கும். உங்கள மாதிரி, உணர்ச்சி இல்லாத பாறையா இருக்க விரும்பல. இப்ப எதுக்குத் திரும்பி வந்தீங்க?” எனக் கேட்க,

“தள்ளு…” என்றவன் அவள் முன் குனிய.

“ஐயோ! கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குற அளவுக்கு பெருசா ஒன்னும் பேசிறல. எதுக்கு தேவையில்லாம எங்கால்ல விழறீங்க.” என போலியாகப் பதற, குனிந்தவாக்கிலேயே அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“ஏத்தம் தான் உனக்கு. வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு.‌ ஆஃபிஸ் ரூம் சாவி வேணும். தள்ளி நில்லு.” என்றவன் மேஜையின் அடி டிராவைத் திறந்து மேல் ரூமின் சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி நடந்தான்.

“சார்… ஒரு நிமிஷம்.” என அழைக்க, 

திரும்பிப் பார்த்தவன்,

“மொதல்ல இந்த சார், மோர்ங்கறத நிப்பாட்டு. சகிக்கல. எதுக்கு கூப்பிட்ட?” என எரிச்சலாகக் கேட்க,

“வேற எப்படிக் கூப்பிடனு நீங்களே சொல்லுங்க. ஸ்கூல் டேஸ்ல தான் வரமொற தெரியாம அண்ணேனு கூப்பிட்டே. இப்பவும் அப்படி கூப்பிட்டா நல்லா இருக்காதே. இன்னைக்கி நான்வெஜ் இருக்குல்ல. அதைக் கேக்கதான் கூப்பிட்டே. சமையக்கட்டுல இருந்து நல்ல வாசன வருது.”  என மூக்கை உறிஞ்சியவாறு கேட்க, அவளை வெட்டவா குத்தவா எனப் பார்த்தவன், சொத்தென தலையில் அடித்துக் கொண்டு மறுபேச்சு பேசாமல் மாடியேற, கலகலத்த அவளது சிரிப்பு அவனைப் பின் தொடர, வரவா வேண்டாமா என சிறு முறுவல் ஒன்று அவனது இதழோரமும் திருட்டுப் பூனையாய் எட்டிப் பார்த்தது.

‘அமிர்து… எல்லாரும் சொல்ற மாதிரி உனக்கு வாய் நீளம் தான்டி. இப்ப மாமா எதுக்கு வந்துருக்கார்னு தெரியலியே. அவரு மொகமே சரியில்ல. அவசியம் இல்லாம இவரத் தேடி வரமாட்டாரே.’ என சிந்தனை உள்ளுக்குள் ஓட, 

“மேடம் பில்.” என்ற சப்ளையர் குரல் அவளை களைத்தது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top