தெம்மாங்கு பூந்தமிழே 4

4

“ஒரு நேரம் சாப்டலைனா ஒன்னும் குடி முழுகிப் போகாது ண்ணே. நீங்க போய் வேலையப் பாருங்க.” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வலி. அப்பொழுது தான் உள்ளே வந்தவளது காதில் அவனது வார்த்தைகள் விழ, 

“நமக்கெல்லாம் அப்படி இல்ல ண்ணே. மூனு வேளைக்கு நாலு வேளையா மூக்குப் பிடிக்க சாப்பிடணும். நல்லா குறட்டை விட்டு தூங்கணும். இது கூட இல்லைனா இந்த மனுசப்பொறப்பு என்னத்துக்கு சொல்லுங்க?” என, பற்ற வைத்த சருகாய் சடசடத்தவாறே ஹோட்டலுக்குள் வந்தாள் அமிர்தவல்லி. 

“வாம்மா…” என்றார் புன்னகையோடு.

“யப்பாஆஆ… என்னா வெயிலு… இந்த வருஷம் கொஞ்சம் வெயிலு ஓவர் தான ண்ணே. இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ண்ணே?” என அங்கே ஒருத்தன் இருப்பதையை கண்டு கொள்ளாமல், டேபிளில் முழங்கையை ஊன்றிக் கொண்டு, வலது கையால் துப்பட்டாவை சுழற்றி கழுத்துக்கடியில் காற்று வீசிக் கொண்டே அவரிடம் கேட்க,

“வழக்கம் போல சாம்பார், ரசம், புளிக்கொழம்பு, கூட்டு, பச்சடி, அவியல், பொறியல் தாம்மா. அப்பறம் பாசிப்பயறு வெல்லம் போட்டு பாயாசம்.” என வந்தவளிடம் மெனு வாசிக்க, சித்திரை வெயிலுக்கு இணையாக அங்கே ஒருத்தன் கொதித்துப் போய் உட்கார்ந்திருந்தான்.

“இன்னும் ரெண்டு நாளைக்கி நான்வெஜ் இல்லியா. அத மறந்து வந்துட்டேனே. ம்ம்கூம்… வந்தது வந்தாச்சு. இவ்ளோ தூரம் வெயில்ல வந்ததுக்கு சும்மாவா போகமுடியும்.” என அவள் சலிப்பாகக் கதை அளக்க,

“அண்ணே!!” என அவன் பல்லைக் கடித்து அடித்தொண்டையில் அதட்டிய அதட்டலில் அவர் சந்தடியில்லாமல் இடத்தை காலி செய்தார்.

காலையில் ஹோட்டல் வந்தும் கோபம் தணியவில்லை ருத்ரனுக்கு. தன்னைத் தொடர்ந்து வந்த அதே வார்த்தைகள் இன்று தன் மகளுக்கும் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. புறக்கணிப்பின் வலியின் ஆழத்தை உணர்ந்தவன், பசிமறந்து அமர்ந்து இருந்தான். ஜீரணிக்க முடியாத வார்த்தைகளால் உள்ளமும் வயிரும் உப்புசமேறிப் போய்க்கிடந்தது.

சிறுபிள்ளையில்… மூன்று பிள்ளைகளோடு வீட்டிற்கு வரும் அத்தையிடம் ஆசையாக சென்ற பொழுதில் எல்லாம் அவரது ஓரவஞ்சனைப் பார்வைக்கு அர்த்தம் புரியவில்லை. அவரது பாசம் கடனே என்று தான் இருக்கும். தேன்மொழி மீது இருக்கும் பாசம் தந்தைக்கும், அத்தைக்கும் தன் மீது ஏன் இல்லை என விபரம் புரிய ஆரம்பித்த வயதில் பலமுறை யோசித்ததுண்டு. 

அந்த வயதில் அப்பாவுக்கு என்மீது பாசமே இல்லை எனச் சொல்லி மஞ்சுளாதேவியிடம் ஆதங்கப் பட்டிருக்கிறான். “அப்படி எல்லாம் இல்ல ருத்ரா. தங்கச்சி மாதிரி நீயும் நல்லா படிச்சா அப்பாவுக்கு உன் மேல பாசம் வரும்.  நீ ஃப்ரெண்ட்ஸ்களோட கூட்டு சேந்துட்டு கபடிகபடின்னு ஊர்சுத்துறதால தான் அப்பா உம்மேல கோபமா இருக்காரு. அவ பொம்பளப் புள்ளைங்கறதால கொஞ்சம் செல்லம் ப்பா. அவ்வளவுதான்.” என மகனை கட்டியணைத்து ஏங்கவிடாமல் சமாதானம் செய்வார் மஞ்சுளாதேவி. அவர்களுக்கும் சேர்த்து வைத்து மகன் மீது பாசமழையைக் கொட்டுவார். ஆனால் அது அப்படி இல்லை எனப் பின்னால் தான் புரிந்தது.    

பெரியவர்களுக்குள் தான் பிள்ளைகளிடம் வேற்றுமை. ஆனால் அத்தை பிள்ளைகள் மூவருக்கும் ருத்ரன் என்றால் அலாதிப்பிரியம். அழகர் எப்பொழுதும் மாமனோடுதான் இருப்பான். விடுமுறைக்கு வரும்பொழுது எல்லாம் ருத்ரன் நண்பர்களுடன் கபடி விளையாடச் செல்லும் பொழுது அவனும் உடன் சென்றுவிடுவான். பிள்ளைகள் ஐவருக்குள்ளும் பெரிய வயது வித்யாசம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் அகிலாண்டத்தின் மூத்த மகள் அமராவதி ருத்ரனுக்கும் மாதக்கணக்கில் சற்று மூத்தவள். 

காலை உணவும் எடுத்துக் கொள்ளாமல், மதியம் மணி மூன்றைக் கடந்தும் அவன் சாப்பிடவில்லை எனத் தெரிந்து மூத்த சமையல் மாஸ்ட்டர் அவனிடம் வந்தார். 

அவனைப்பற்றி முழுவதும் தெரியாது எனினும், இளம் வயதில் மனைவியை இழந்து, கைக்குழந்தையோடு இருப்பவன் என்பது மட்டும் தெரியும். அவன் தனது வெறுமையை வேலையிடத்தும், பிள்ளையிடத்தும் தொலைக்க விரும்புகிறான் எனப் புரிந்தவர், அவரது வயதுக்கு மரியாதை கொடுத்து அதிகப்படியாக பேசிவிட மாட்டான் என்கிற தைரியத்திலேயே அவர் வந்து அவனை சாப்பிட வரும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார். 

மதிய வேளைக்குப்பிறகு ஹோட்டலில் கூட்டம் குறைந்திருந்தது. இனி மாலை வேளைக்கான ஸ்நாக்ஸ் அயிட்டங்களின் வியாபாரம் ஆரம்பித்துவிடும்.

“தம்பி சாப்பிட்டு வந்து பாருங்க. காலையிலயும் சாப்பிடல.” என அக்கறையாக அழைத்தவரைத் தான், இவளது சலம்பலில் அவரை  அதட்ட சத்தமில்லாமல் சென்றுவிட்டார்.

வந்தவள் பார்வை, அவனது தலைக்கு மேலிருந்த சாமிப்பட அலமாரியை தான் ஆராய்ந்தது. அவள் நினைத்து வந்தது அங்கே தான் இருந்தது. 

நேற்று கோவிலில் அவள் கைவரை கொண்டுபோய் திருப்பி எடுத்துக் கொண்ட, மஞ்சள் கயிர் அடங்கிய பாக்கெட் அடுத்த கைக்குப் போகவில்லை. தன் இதயப் பக்கத்தில் வைத்துக் கொண்டான். அதாங்க, சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், ஹோட்டலுக்கு வந்தவுடன் எடுத்து சாமிப்படம் முன் வைத்து விட்டான். ஏனோ அடுத்தவருக்கு அதைக் கொடுக்க மனம் ஒப்பவில்லை.

பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா 

கையில் தந்தேன் கல்யாணமாலை 

மையல் கொண்டேன் நான் இந்த வேளை… 

என ரிங்டோன் ஒலிக்க, வலக்கையால் துப்பட்டாவால் விசிறிக் கொண்டு, கைபேசியை எடுத்துப் பேசியவாறு, அவன் பார்வையில் படும்படியாக எதிர் மேஜை பார்த்து அமர்ந்தாள். 

சப்ளையர் வந்து என்ன வேண்டும் என விசாரிக்க, அவனைப் பார்த்தால் புது நபர் போல இருந்தான். திருவிழா நேரம் ஆதலால் ஆள் பற்றாக்குறைக்கு அவசர வேலைக்கு வந்தவன் போல. 

“இன்னைக்கு என்னென்ன ஐட்டம் சமச்சீங்களோ, அதுல எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிள் எடுத்துட்டு வாங்க.” என்றவள் பேச்சில் அதிகாரம் தூள் பறக்க, அவனோ மேலும் கீழுமாக முழித்தான்.

“என்ன பாக்குறீங்க? நா… யாரு தெரியுமா?” என ஜம்பமாகக் கேட்க, அவனோ மறுப்பாகத் தலையாட்ட, 

“நான் உங்க ஹோட்டல செக் பண்ண வந்துருக்கேன்.” என்றாள்.

திருவிழா நேரத்தில் இந்தமாதிரி சுகாதாரத்துறையில் இருந்து சோதனைகள் செய்வது வழக்கம் என்பதால், அவனோ அறக்கப் பறக்க ருத்ரனிடம் ஓடியவன் விபரம் கூற, 

“எல்லாத்தையும் கொண்டு வந்து கொடு.” என அசால்ட்டாக சொன்னான். 

‘என்ன இவரு எந்த ஒரு பரபரப்பும் இல்லாம இருக்காரு’ என குழம்பிப் போய், சமையல்கட்டு சென்றவன், அங்கும் அதைக் கூற யாரும் அதை சட்டை செய்யவில்லை. 

“நம்மகிட்ட எல்லாம் சரியாத்தான் இருக்கும். அவங்கள உள்ள வந்து கூட செக் பண்ணிக்கச் சொல்லு.” என அங்கு வேலை செய்தவர்களும் கூற, அனைத்தையும் எடுத்து வந்தவன், அவள் முன் இலை போட்டு பரப்பினான். 

தலை வாழை இலையில், சல்லென தண்ணீர் தெளித்து நீர் விளாவியவள், இலையின் மேல்பகுதியில் அவியல், பொரியல், வறுவல், கூட்டு, பச்சடி, அப்பளம், ஊறுகாய் முதற்கொண்டு ஒவ்வொன்றாக வரிசைகட்டினாள். இலையின் மத்தியில் உதிரிமல்லியாய் சோற்றை அள்ளிப்போட்டு அதன் தலைவழியாக சாம்பார் அபிஷேகம் செய்தாள். சோற்றையும் குழம்பையும் சமரசம் செய்து, நடு நாக்கில் ஊறுகாய் சொட்டாம் போட, ஆர அமர ஒவ்வொன்றாக அள்ளி எடுத்து சாப்பிட்டவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், 

‘அடியேய்… அது முருங்கக்கா. என்னமோ நல்லி எலும்பு மாதிரி அதையே இந்த உறி உறியுற.’ என மனதினுள் வருத்து எடுத்தான்.

நேற்று கோவிலில் இருந்து சென்றவளது அழுதமுகம் வேறு அகிலாண்டத்தின் பேச்சுக்களுக்கு மத்தியிலும், தண்ணீர் மீது எண்ணெயாய் மனதில் ஒரு ஓரமாக மிதந்து கொண்டு நின்றது. இப்பொழுது இவளைப் பார்க்க, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தாள். இதுதான் அமிர்தவல்லி. எதையும் மனதில் தூக்கிச் சுமக்கும் ரகமில்லை. தனது சிரிப்பால் திரையிட்டு மறைக்கும் ரகம். டேக் இட் ஈஸி பாலிசி என சிரிப்பால் கடந்து விடும் ரகம். அதை அருகில் இருப்பவர்களுக்கும் கடத்துபவள். மிகவும் கடக்க முடியாத தருணம் எனில் கதவடைத்து ஒரு மூச்சு அழுது ஓய்ந்து, மடமடவென தண்ணீர் குடித்து அனைத்தையும் விழுங்கி வெளிவருவாள்.  

சிலர் சாப்பிடுவதைப் பார்த்தால் வயிற்றுப் பசி வந்தவழி தெரியாமல் ஓடிவிடும். சிலர் சாப்பிடுவதைப் பார்த்தால் பசியே இல்லை எனினும் பசி எடுக்க ஆரம்பித்து விடும். காலையில் இருந்து சாப்பிடாமல், அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கும், மந்தமேறிப் போயிருந்த வயிற்றிலும் மெள்ளமாக சுறுசுறுவென அமிலம் சுரக்க ஆரம்பித்தது. 

நல்லா வக்கனையா சாப்பிடறவங்க பக்கத்துல உக்காந்தா தாங்க பந்தியில கூட நம்மால ஒழுங்கா சாப்பிட முடியும். சாப்பாட்ட பார்த்தவுடனே அய்யோ… பூரி ஆய்லி, உருளக்கிழங்கு கொலஸ்ட்ரால், வாழைக்காய் வாயு, ஊறுகா உப்பு, ஸ்வீட்டு கேலரி என கணக்குப் போட்டு சாப்பிடவே தெரியாத மாதிரி சாப்பிடுறவங்க பக்கத்துல உக்காந்தா நமக்கு வந்த பசி எந்த மூலை தேடி ஓடும்னே தெரியாது. 

நொருங்கத்தின்னா மட்டுமில்லங்க, எதுனாலும் விரும்பித்தின்னாலும் நூறு வயசு தாங்க. உடம்புக்கு உபத்திரவம் இல்லைனா எதுனாலும் சாப்பிடவேண்டியது தான. நம்ம உடம்புக்கு எது ஆகும், ஆகாதுன்னு நமக்குதான் முதல்ல தெரியணும். வைத்தியர் சொல்லித்தான் தெரியணும்கறது இல்ல. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குனு உக்காந்திறணும்னு ஊருக்குள்ள ஒரு பேச்சுவழக்கு இருக்குல்ல.   

கிள்ளிச் சாப்பிடுபவர்களை விட, அள்ளிச் சாப்பிடுபவர்களைப் பார்த்தால் தன்னால் நாவூறும். அவள் சாப்பிடும் பொழுது, பின்னணியில் ‘கல்யாண சமையல் சாதம்… காய்கறிகளும் பிரமாதம்.’ என பாடல் மட்டும் தான் ஒலிக்க வில்லை, மற்றபடி அவள் சாப்பிடுவது அப்படித்தான் இருந்தது. 

 ஃபோனை எடுத்து காதில் வைத்தவள், 

“இப்படியே பாத்துக்கிட்டே இருந்தா எனக்கு தான் வயிறு வலிக்கும். சாப்புடறதையே உத்துப் பாத்தா திங்கறது எங்கிட்டு ஒடம்புல ஒட்டும்.” என சத்தமாக ஃபோனில் கேட்க, 

‘இதுக்கு மேலேயும்  இந்த ஒடம்புல ஒட்டுறதுக்கு எங்கடி எடம் இருக்கு… இப்படியே போனா திருமலை நாயக்கர் மஹால் தூணுக்கும் உனக்கும் வித்தியாசமே தெரியாதுடி குந்தானி.’ என அவளை கடுகு, கறிவேப்பிலையோடு சிறிது பெருங்காயமும் போட்டு மணமாகத் தாளித்துக் கொட்டிவிட்டு பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

அமிர்தவல்லி சற்று பூசின உடல்வாகு. கண்ணைப் பறிக்கும் பளீர் நிறம் என்றில்லாமல் மயக்கும் சந்தன நிறம். எதெது… எங்கெங்கு… எவ்வளவு இருக்க வேண்டும் என அளவெடுத்து, தந்தத்தால் கடைந்து செஞ்சு வச்சது போன்ற கனகச்சிதமான உடம்பு. உடம்பை பேணுகிறேன் என்கிற பெயரில் கிள்ளிச் சாப்பிடும் ரகமில்லை. அள்ளிச் சாப்பிடும் ரகம். அதனாலேயே நல்ல உயரம், அதற்கேற்ற உடல் என கண்ணுக்குக் குளிர்ச்சியான தளதள உடம்பு.

அனைத்தையும் உண்டு முடித்து, இன்றைய ஸ்பெஷலான பாசிப்பயிரு பாயாசத்தையும் ஒன்றுக்கு ரெண்டு கப் வாங்கிக் குடித்து ஏப்பம் விட்டவளிடம், பில்லை கொண்டு வந்து கொடுத்தான் சப்ளையர்.‌ 

“நான் யாருன்னு தெரியும்ல?” என அவனை முறைத்து விட்டு தெனாவெட்டாகக் கேட்க, 

“அண்ணேந்தா கொடுக்கச் சொன்னாருங்க மேடம்.” எனத் தயங்கி தயங்கி பவ்யமாக கூறினான்.‌ 

“என்ன ஹோட்டல் நடத்துறீங்க… பருப்பு போட்டு சாம்பார் வச்சுருக்கீங்க. தேங்கா போட்டு கூட்டு பண்ணி‌யிருக்கீங்க. தக்காளி போட்டு ரசம் வச்சுருக்கீங்க. இதெல்லாம் ரிப்போர்ட்டா எழுதிட்டுப் போகவா. கடைக்கு சீல் வச்சுருவாங்க தெரியுமா?” எனக் கேட்க, அவனது பார்வை.. நீ என்ன லூசாம்மா, எனக் கேட்டது. 

“இப்படியே மசமசன்னு நிக்காம ஜில்லுன்னு ஒரு கப் ஐஸ்கிரீம் கொண்டா. ஃபினிஷிங் டச் வேணும்ல.” எனக் கேட்க, அவன் திரும்பி முதலாளியைப் பார்க்க, அவன் தலையசைக்கவும், உள்ளே சென்றான்.

ஐஸ்க்ரீம் எடுக்கச் சென்றவனுக்கு அவளது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ருத்ரன் முதற்கொண்டு இங்கு வேலை பார்ப்பவர்களும் அவளை கண்டு கொள்ளாததால், அங்கு வேலை பார்த்தவர்களிடம் இவளை யார் என விசாரிக்க, 

“அட… அந்தப் பிள்ளையோட அப்பா தான்டா எச்.ஐ. அப்பா பேரச் சொல்லிட்டு இப்படி அடிக்கடி வந்துரும்.” என அவர்களுக்குத் தெரிந்த விவரத்தைக் கூறினர். 

அமிர்தவல்லியின் தந்தை மனோகரன் ஹெல்த் இன்ஸ்பெக்டர். திருச்சி தான் பூர்வீகம். ஆனால் பெண்‌ எடுத்தது மதுரைப்பக்கத்தில். அமிர்தவல்லி சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே மனோகருக்கு, வேலை மாற்றல் வந்தது. மதுரை அவரது மனைவி கௌரிக்கும் பிறந்த ஊர் என்பதால் மதுரையை தேர்ந்தெடுத்தனர்.  அப்பொழுது இருந்தே இவர்கள் மதுரைவாசி. 

 கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள். இப்பொழுது அவள் முன் ஐஸ்கிரீமை எடுத்து வந்து பரபரப்பின்றி நிதானமாக வைத்தான் சப்ளையர். 

வெயிலுக்கு இதமாக  தொண்டையை குளிர்வித்த ஐஸ்க்ரீமை ருத்ரனை வெறுப்பேற்றும் விதமாக பொறுமையாக சாப்பிட்டு முடித்தவள், பில்லை எடுத்துக் கொண்டு, அவன் முன் வந்தாள். 

பில்லை அவன் முன் ஓங்கி அடித்து வைத்து விட்டு பேசாமல் செல்ல, அதற்கான எதிர் வினையை அவனிடம் எதிர்பார்க்க, அவனோ இப்படி ஒருத்தி வந்தது போலக் கூட காட்டிக் கொள்ளவில்லை. 

‘இப்படியே போய்ட்டா எப்படி?’ என, இரண்டு எட்டு முன்னே எடுத்து வைத்தவள், மீண்டும் பின்வாக்கிலேயே நடந்து வந்து, 

“உங்க தோட்டத்துல வெளையுதுங்கறதுக்காக, சாம்பார்ல இவ்ளோ முருங்கக்கா போடாதீங்க. மத்தவங்களுக்குப் பிரச்சினை இல்ல. ஆனா…” என இழுத்தவள், அக்கம் பக்கம் பார்த்து விட்டு,

” ஆனா உங்களுக்கு தான் ரொம்ப இம்சையாப்போயிரும். வேட்டிக்குள்ள பாம்… ச்சே… ச்சே… அது நல்லா இருக்காது.” என தனக்குத் தானே, முகத்தைச் சுழித்து தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டவள், 

“மடியில புள்ளப்பூச்சியக் கட்டின மாதிரி தூங்க முடியாம தொந்தரவாப் போயிறும்.” என டேபிளின் மீது சற்று குனிந்து கிசுகிசுப்பான குரலில் கண்ணடித்துக் கூற, அவள் சொல்லிய விஷயத்தை விட, சொல்லிய விதம் தான் வில்லங்கமாகப் பட்டது அவனுக்கு.

‘அடியாத்தீ… புள்ளப்பூச்சியா, அதுக்கு நீ மொத சொன்ன பாம்பே தேவலாம் டி.’ என உள்ளுக்குள் அலறியவனாக சுற்றும் முற்றும் பார்த்தவனை, மேலுதட்டைக் கடித்து, வந்த சிரிப்பை அடக்கியவள்,

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இது அதவிட ரொம்ப ரொம்ப முக்கியம்.” என முகத்தைத் சீரியசாக வைத்துக் கொண்டு கூறியவள் சற்று இடைவெளி விட,

‘இப்ப என்னத்த சொல்லப் போறாளோ?’ என ருத்ரன் பதற,

 “தூங்கும் போது என்னைய நெனைக்காதீங்க. எனக்கும் தூங்க முடியாம ரொம்ப அவஸ்த்தையா இருக்குல்ல.” என கிசுகிசுத்தவளை, அரண்டு போய் பார்க்க,

“விடியவிடிய விக்கல் என்னைய தூங்க விட மாட்டேங்குது.” என சாதாரணமாகக் கூறிவிட்டு, சுடிதார் துப்பட்டாவால் விசிறிக் கொண்டே வெளியே சென்றாள். ஒரு கணம் ஸ்தம்பித்தவன், அடுத்த நொடி ஸ்மரணை வரப் பெற்று,

“வெளிய கொஞ்சம் வாயத் திறக்காம போ!” என முதுக்குக்குப் பின் கேட்ட குரலில்,

பேசுவது நீயா! நீயா! நீயா! எனும் எக்கோ எஃபெக்டில் அவள் அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்க்க,

“வாயத் தொறந்தா காக்கா வந்து கொத்திறும்.” எனக் கூறியவன் முகத்தில் அவனே அறியாமல் அனிச்சையாய் அரும்பி நின்றது சிறு புன்னகை. பூத்த புன்னகை உதிரும் முன் மனக் கேமராவில் பச்சக்கென பதிவு செய்து கொண்டாள் பெண்.

தன்னை மறந்து ஒருகணம் சிரித்தவனை, தொண்டையில் ஏதோ ஒன்று கனமாய் அழுத்த, கண்ணிமைக்கும் நேரம் கூட வீணாக்காமல், கண்களுக்குள் வாங்கிக் கொண்டவள், கண்களில் கசிந்த ஈரத்தை அவன் அறியும் முன் பெருமூச்சு வாங்கி உள்ளிழுத்து, தனைமறந்து ரசித்து நின்றாள் பாவை. 

 மகளோடு இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், தனக்கு சிரிக்கத் தெரியும் என்பதையே மறந்து இருந்தவன். ‘இந்த சிரிப்ப எப்பவும் உங்க முகத்துல பாக்கணும்.’ என சங்கல்பம் எடுத்துக் கொண்டவள்,

 வந்த வேளை முடிந்த திருப்தியோடு, வயிறும் மனமும் நிறைய, தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

ஃபினிஷிங் டச்சாக,

உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு

ஊட்டிவிட நீ போதும் எனக்கு

முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு

மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு, 

என தனது கலெக்ஷனில் இருந்த பாடலை மொபைலில் ஒலிக்கவிட்டுச் சென்றவளையே பார்த்தவன், ‘பாட்டு கூட திங்கிறதாத்தான் கலெக்ட் பண்ணி வச்சுருப்பா போல.’ என அலுத்துக் கொண்டவனுக்கும்,

இதுவரை இருந்த மனநிலையில் சிறு வானிலை மாற்றம். வெக்கைக்குப் பின் வரும் மழையாய் சிறு சாரல் மனதிற்குள்.

ருத்ரன் அத்தையிடம் பேசிவிட்டு கோபமாக வீட்டைவிட்டு வெளியேறியதும், தேன்மொழி இவளுக்கு அழைத்து ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க, அமிர்தவல்லிக்கோ வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. உடனே தனது டி.வி.எஸ்.ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஹோட்டல் வந்துவிட்டாள். 

அவனது முகத்தில் இறுக்கம் தளர்ந்த, சந்தோஷத்தைப் பார்த்த பிறகு தான் அவளுக்கும் நிம்மதி.

“ஏத்தம் புடிச்சவ!” வாய்விட்டே சொல்லிக் கொண்டான், மலர்ந்த முகத்தில் மாறாப் புன்னகையோடு. 

இனி எங்கே இவன் இரவில் அவளை நினைக்காமல் நிம்மதியாகத் தூங்குவது. குரங்கை நினைக்காமல் மருந்தைக் குடி என்று சொல்லி விட்டுப் போகிறாளே!? ‘வெளங்கின மாதிரி தான்.’ என எண்ணிக் கொண்டவன் சாப்பிட எழுந்து சென்றான். 

இரவு வீடு வந்தவனது தெளிந்த முகத்தைப் பார்த்த மஞ்சுளாவிற்கும் மெலிதாக சந்தோஷம் பூசிக் கொண்டது. சாப்பிடும் பொழுது மகளை மேஜைமீது அமரவைத்துக் கொண்டான். இது அவனது மனநிலையை வீட்டாருக்கு உணர்த்தியது.  மகளுக்கும் இட்லியைப் பிட்டு ஊட்டிவிட, அது அப்பனுக்கு விளையாட்டுக் காண்பித்து ஊதி விளையாண்டது.  அத்தைக்காரி தான் ஏற்கனவே அதன் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறாளே. 

மகனின் நினைவிலேயே உழன்று கொண்டிருந்தவருக்கு, மகளோடு விளையாடிக் கொண்டே சாப்பிடும் மகனைப் பார்த்து மனதில் நிம்மதி படர்ந்தது.

“என்னம்மா மகன இன்னைக்கி தான் புதுசா பாககுற மாதிரி பாக்குறீங்க.” 

“இல்ல தேனு… காலையில இவன்போன நெலமைக்கி எப்படி வருவானோன்னு பயந்துட்டே இருந்தே. தெளிச்சலா பாத்த பின்னாடிதான் நிம்மதியா இருக்கு.” 

“நாந்தான் சொன்னேன்ல ம்மா. வர்றவங்க வந்தா உங்க மகன் முகத்துல லைட் எரியும்.”

“எனக்கும் ஆசதான்டி. ஆனா அது நம்ம கையில இல்ல.” என அலுத்துக்கொண்டே, சாப்பிட்டு முடித்து மகளைத் தூக்கிச் செல்லும் மகனையே பார்த்துக் கொண்டிருந்தார். 

இரவில் வழக்கம்போல் பூப்பந்தை மார்பில் போட்டவாறே படுத்திருக்க, தன்னாலே அவளது நினைவும், அவள் குறும்பாக சொல்லிச் சென்றதும் நினைவுக்கு வர, இன்று அவளது நினைவு தாலாட்டவில்லை. மாறாக குரங்குச் சேட்டை செய்து தூக்கத்தை துரத்திவிட்டது. 

கையின் கட்டைவிரலைப் பிடித்தவாறு தூங்கும் மகளின் கையை எடுத்து புன்னகேயோடு முத்தம் வைக்க, சுண்டுவிரலுக்குப் பக்கத்தில் இருந்த ஆறாவது விரல் அமராவதியை நினைவூட்ட,  மேலெழும்பிய உணர்வுகள் எல்லாம், வரண்ட நிலத்தில் விழுந்த நீர்த்துளி போல சரட்டென உள்ளிழுத்துக் கொண்டன. 

சட்டென மனதைக் கல்லாக்கிக் கொண்டு இது சரிப்பட்டு வராது என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.‌ என் நிலமை என் பொண்ணுக்கு வேண்டாம். அது அவளையும் கொல்லாமல் கொன்று விடும் என நினைத்தான். ஏனெனில் இரண்டு பேருமே அவனுக்கு இரண்டு கண்கள். எதில் கண்ணீர் வந்தாலும் இவனது இதயத்தில் செந்நீர் வரும். 

சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கென்று. கிளைக்கு கிளை தாவி ஒரு நிலையில் நிற்கவிடாமல் அலைக்கழித்து. முன்னுக்கும் போகவிடாமல் பின்னுக்கும் திரும்பவிடாமல் மதில் மேல் பூனையாக அவனைத் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது.

உறங்காத விழிகள், உதிராத உணர்வுகளைத் தட்டி எழுப்ப, பழைய நினைவுகளில் மனம் சிக்கித் தவிக்க ஆரம்பித்தது.

நிலவே என்னிடம்

நெருங்காதே நீ நினைக்கும்

இடத்தில் நானில்லை

மலரே என்னிடம்

மயங்காதே நீ மயங்கும்

வகையில் நானில்லை

நிலவே என்னிடம்

நெருங்காதே நீ நினைக்கும்

இடத்தில் நானில்லை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top