3
எப்பொழுதும் போல் விடியல் ருத்ரனுக்கு மகளின் பிஞ்சு விரலின் கன்னத் தீண்டலிலேயே விடிந்தது. தனது கன்னத்தில் கோலம் போட்ட தளிர்விரல், தண்ணெனத் தீண்டியதில் கண்விழித்துப் பார்த்தவன், புன்னகையை முகத்தில் ஏந்தி எழுந்தான். மகளை நகர்த்தி படுக்கையில் விட்டவன், எழுந்து சென்று முகம் கழுவி வந்தான். மகளை குளியலறை தூக்கிச் சென்றவன் இரவில் போட்டிருந்த டயப்பரை களைந்துவிட்டு மகளை சுத்தப்படுத்தியவன், வெறும் ஜட்டி மட்டும் அணிவித்து வெளியே தூக்கி வந்தான்.
முதலில் அவனது அறை மாடியில் தான் இருந்தது. திருமணத்திற்குப் பிறகுதான், மனைவியின் வசதிக்காக, மாடியறை சரிப்படாது என கீழே மாற்றிக் கொண்டான்.
அதுவே தற்பொழுது, தந்தைக்கு இரவு நேரத்தில் அவசரம் எனில் உதவிக்கு வருவதற்கும், பேத்தியைக் கவனிக்க மஞ்சுளாவிற்கும் வசதியாகப் போயிற்று.
மஞ்சுளாதேவி மகனைக் கண்டதும் காஃபி கலந்து எடுத்து வந்தவர், பேத்தியை வாங்கிக் கொள்ள, காஃபியை குடித்து முடித்தவன், தந்தையின் அறைக்கு சென்றான்.
இவனை எதிர்பார்த்து இருந்தவர், படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள முயற்சிக்க, கைகளுக்கடியில் கைகொடுத்து தூக்கியவன் நிமிர்த்தி கட்டிலில் அமரவைத்தான். களைந்திருந்த வேட்டியை இடுப்பில் இறுக்கிக் கட்டிவிட்டவன், கைத்தாங்கலாக குளியலறை கூட்டிச் செல்ல, அவர் காலைக்கடன்களை முடிக்க உதவி செய்தான். எந்தவித அசூயையும் இன்றி மகளைப் போலவே தந்தைக்கும் பணிவிடை செய்தவன், அவரைக் குளிக்க வைத்து உடைமாற்றிவிட்டு, மீண்டும் கட்டிலில் விட்டு வெளியேறும் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தார் கேசவமூர்த்தி. இது அவனது அன்றாட கடமைகளில் முதலிடம் வகிப்பது.
அம்மாவிற்கும், வயதுப் பிள்ளையான தங்கைக்கும் இதில் அனுமதி இல்லை. மகளுக்கும், தந்தைக்கும் அவன் தான் முதலில் பணிவிடை செய்வது. அவனைப் பொறுத்தவரை இருவரும் ஒருவரே. உதவிக்கு ஆட்கள் உண்டு. அவன் இல்லாத பொழுதுகளில் தான் உதவியாட்கள் கூட தந்தையிடம் வரவேண்டும்.
அதன் பிறகு குளித்துவிட்டு, அவன் ஹோட்டலுக்கு கிளம்பி விடுவான். இன்றும் தனது வழமையை முடித்துக் கொண்டு, பிள்ளையை கொஞ்சிவிட்டு கிளம்பிவிட்டான்.
உடம்பில் சர்க்கரையும், உப்பும் கேசவமூர்த்தியோடு ஒன்றோடு ஒன்று ஏட்டிக்குப் போட்டியாக நின்றதில், ஒரு பக்க கையும் காலும் விழுந்தது தான் மிச்சம். இடைவிடாத உயர்தர மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் தற்பொழுது நிலமை நன்றாகவே முன்னேற்றம் கண்டு உள்ளது.
சொன்ன சொல் மாறாமல் காலையிலேயே மகனோடு வந்து நின்றிருந்தார் அகிலாண்டம். நாத்தானாருக்கான உபசரிப்புகளை குறைவில்லாமல் செய்து கொண்டிருந்தார் மஞ்சுளாதேவி. அத்தையை வரவேற்றவள் குழந்தையின் பசியை கவனிக்க சென்றுவிட்டாள் தேன்மொழி.
வந்தவுடன் அண்ணனின் அறைக்கு சென்று அண்ணனை நலம் விசாரித்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தவருக்கு, ஆவிபறக்க கள்ளிப்பால் சொட்டு போல ஃபில்டர் காஃபி. அடுத்து சிறிது நேரத்தில் சுடச்சுட பூரிக்கிழங்கு. அதை அடுத்து அந்தச் சூடு நாக்கில் இருந்து ஆறுவதற்குள் அடுத்த காஃபி என கவனிப்பு வழமைபோல் சென்று கொண்டு இருந்தது.
அதற்குள் கேசவமூர்த்தியை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து வந்தார் மஞ்சுளாதேவி. அவருக்கும் பரிமாற இப்பொழுதெல்லாம் தானே எடுத்து சாப்பிடும் அளவிற்கு நிலமை முன்னேற்றம் கண்டுள்ளது.
அண்ணனைப் பார்த்தவுடன் தங்கைக்கு கண்களில் ஜலம் கண்டது. என்னமோ அண்ணனை இன்று தான் சக்கர நாற்காலியில் முதன்முதலாகப் பார்ப்பது போல.
“எங்க அண்ணே எத்தனபேர வாழ வச்சாரு. அந்தப் புண்ணியம் கூட எங்க அண்ணனுக்கு உதவாமப் போச்சு.” என அண்ணனுக்கு சாப்பிட உதவிக் கொண்டு இருந்த நாத்தனாரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, வழக்கம் போல் தன் பல்லவியை ஆரம்பிக்க, சலிப்புத் தட்டிப் போனது அங்கிருந்த அனைவருக்கும், மகன் அழகர் உட்பட.
இது மஞ்சுளாவிற்கு, என்று மணம்முடித்து கேசவமூர்த்தியின் கரம் பிடித்து இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து பழகிப்போன ஒன்று. எங்க வம்சம் என்ன? பரம்பரை என்ன? பாரம்பரியம் என்ன? அது என்ன… இது என்ன? என எத்தனையோ காது புளிக்கும் அளவிற்கு கேட்டுவிட்டார்.
நாளும் கோளும் நலிந்தார்க்கு தான் இல்லை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் இருக்கப்பட்டவர்களுக்கு அது தான் நம்பிக்கையின் மூலதனம். நாளையும் கோளையும் பார்த்து தான் நாலும் செய்வர். குடும்ப வைத்தியர் மாதிரி குடும்ப ஜோஷியரும் உண்டு இருக்கப்பட்டவர்களுக்கு எல்லாம்.
கேசவமூர்த்தியின் சாதகக் கட்டத்தில் புத்திரப் பாக்கியக் கட்டம் பலவீனமாக இருக்க, பலமான புத்திரபாக்கியம் கொண்ட பெண்ணின் சாதகம் தேடப்பட்டது. இவர்கள் வம்சத்திற்கு ஏதோ சாபக்கேடு போல. அரிதான புத்திரபாக்கியம், இல்லை எனில் பிரசவத்தில் உயிரழப்பு. எனவே தான் திருமணத்திற்கு பெண் தேடும்பொழுது வலுவான புத்திரபாக்கியம் கொண்ட சாதகம் தேடப்பட,
வசதி முன்னபின்ன இருந்தாலும் பரவாயில்லை என விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அப்படி அமைந்த சாதகம் தான் மஞ்சுளாதேவியுடையது. அதோடு பரம்பரையின் வம்சாவளியும் ஆராயப்பட, லஷ்மி கடாட்சம் தான் சற்று இவர்ளைவிடக் குறைவே தவிர, சந்தானபாக்கியம் ஒவ்வொரு தலைமுறையிலும் அரை டஜனுக்கும் குறைவில்லாத வம்சம். எனவே மஞ்சுளாதேவியைத் தேர்ந்தெடுத்தனர். வித்து மட்டுமல்ல… இங்கு விதைநிலமும் ஆராயப்படட்து. மஞ்சுளாதேவிக்கும் உடன் பிறப்புகள் அவரோடு சேர்த்து ஆறு பேர்.
இவர்கள் அளவிற்கு வசதிவாய்ப்பு இல்லை எனினும் மோசம் என்றும் சொல்ல முடியாது. ஒரே இனம், வலுவான புத்திரபாக்கிய சாதகம் என தேர்ந்தெடுத்தனர். அதைவிட மஞ்சுளாதேவியின் அழகும் கேசவமூர்த்தியை மயக்கியது. இவர்கள் வகையறாவில் நிறம், உயரம், உடல்வாகு என அந்த அளவிற்கு வடிவழகு கொண்ட பெண்கள் அரிது.
அதனாலேயே அகிலாண்டம் ஒருபடி தாழ்த்தியே பார்ப்பார் நாத்தனார் குடும்பத்தை. இதைக் கொண்டே மஞ்சுளாதேவியின் பிறந்த வீட்டாரோடு பெரிதாக ஒட்டுதல் இல்லை. மதியாதார் தலைவாசல் மிதியாதே என மஞ்சுளாவின் பிறந்தவழிச் சொந்தங்களும் போக்குவரத்தை குறைத்துக் கொண்டனர். முக்கிய விசேஷங்கள் எனில் மஞ்சுளாதேவி மட்டுமே சென்றுவருவார். பிள்ளைகளைக் கூட அழைத்துச் சென்றதில்லை. அதற்கு ருத்ரனும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் அகிலாண்டம் இப்படி வரும்பொழுதெல்லாம் குடும்ப பெருமையை ஓரமாக குத்திக் காட்டுவார். அது அவருக்குப் பழகிப் போக மஞ்சுளாதேவி எதையும் காதில் போட்டுக் கொள்வது இல்லை. நீ பேசுவதைப் பேசிக் கொள் என கண்டு கொள்ளமாட்டார்.
அண்ணன் கேசவமூர்த்திக்கோ தன்னைப் பற்றி கவலைப்படும் ஒரே ஜீவன் தன் உடன்பிறப்பு தான் என்கிற எண்ணம் மோலோங்கி நிற்கும்.
குழந்தைக்கு வீட்டிலேயே தயாரித்த சத்துமாவுக் கஞ்சியை ஊட்டிவிட்டு தேன்மொழி வெளியே தூக்கி வர,
“நேத்து அவளும் கோயிலுக்கு வந்துருந்தாளாம்ல. அண்ணே எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும்னு காத்திருந்திருப்பா போல.” என அகிலாண்டம் நீட்டி முழக்க, தேன்மொழி கோபமாக அழகரைப் பார்த்தாள். அவன் வேகமாக நான் இல்லை என்பது போல் தலையாட்டி வைத்தான்.
இன்று காலையிலேயே வந்ததன் காரணம் பிடிபட்டது மஞ்சுளாதேவிக்கும், தேன்மொழிக்கும்.
“கோயில நம்ம குடும்பத்துக்குன்னு யாரும் பாத்தியம் பண்ணி கொடுக்கல அத்தே. அங்க யாரு வேணாலும் வரலாம் போலாம்.” என தேன்மொழி வந்த கோபத்தை வாய்க்குள்ளேயே அடக்கி விட்டு பதில் கூற,
“நரி வலம் போனா என்ன, இடம் போனா எனக்கென்ன? எவ்வழியில குறுக்க வராம இருந்தா சரி. ஒருவேள உங்க அம்மா தான் அவளையும் வரச்சொன்னாங்களோ என்னமோ?” என அலுப்பாக சலித்துக் கொள்ள,
“அத்தை, அமிர்தா வந்ததே அம்மாவுக்கு இப்ப நீங்க வந்து சொல்லித்தான் தெரியும். அப்படியே வரச் சொல்லியிருந்தா தான் என்ன!” என தேன்மொழி அத்தையை எதிர்த்துக் கேள்வி கேட்க,
“பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற வேலையைத்தான் உங்க அம்மா நல்லா பாப்பாங்களே!” எனப்பேச, மீண்டும் வாயைத் திறக்கப் போன மகளை,
“தேன்மொழி!” என மஞ்சுளா ஒரு அதட்டல் போட, பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகிப் போனாள் மகள்.
“வாடீம்மா.” என தேன்மொழியிடம் இருந்த பேத்தியைக் கேட்டு அகிலாண்டம் கை நீட்ட, மறுபேச்சு பேசாமல் குழந்தையை அவரிடம் தேன்மொழி கொடுக்க, சென்ற அடுத்த நொடி அத்தையிடம் கை நீட்டிக் கொண்டு வீரிட்டு அழ ஆரம்பித்து விட்டது. வந்து இவ்வளவு நேரமான பிறகு இப்பொழுது தான் பேத்தி கண்ணில் பட்டாள் போல.
“இதுக்கு கூட எம்மேல பாசம் இல்ல பாரு. அப்படியே அப்பனாட்டம்.” என அங்கலாய்க்க,
“ம்மா, அது பச்சப்பிள்ள ம்மா. அதுகிட்டயும் உன் விரோதத்தக் காட்டாத. பிள்ளய தூக்குற மாதிரியா தூக்குற. யார் மேலயோ இருக்குற கோபத்த பிள்ளமேல காட்டாத.” எனக் கடிந்தவன், குழந்தையை அழகர் கையில் வாங்கியவன், தட்டிக்கொடுக்க மாமனிடம் சென்றவுடன் தோளில் முகம் புதைத்துக் கொண்டது.
“நாம்பெத்ததே என்னய விரோதம் பாராட்டுறேன்னு வந்த எடத்துல வச்சு மானத்த வாங்குது. அப்புறம் எப்படி, மத்தவங்க என்ன மதிப்பாங்க.”
“இது உன் பேத்தி ம்மா. நம்ம அமராவோட பொண்ணு. ஆனா, நீ ருத்ரா மாமா பிள்ளையாப் பாக்குற.” என அழகர் கடிய,
“ஆமான்டா, அப்பன மாதிரியே பொறந்தவுடனே, எம்மகள…” எனத் தொடங்க,
“அத்தை!” என்ற அதட்டலில் வீடே ஒரு நிமிடம் கிடுகிடுத்து அடங்கியது. தீடீரென ஓங்கி ஒலித்த குரலில் குழந்தையின் வீரிடல் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. சட்டென அமைதி அங்கே நிலவ, வாசலில் உண்மையிலேயே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் ருத்ரன்.
பாம்பிற்கு விஷம் பல்லில். மனுஷனுக்கு விஷம் சொல்லில். நிராயுதபாணியாக நின்றுகொண்டு எப்பேற்பட்ட மனிதனையும் சொல்லால் குத்திக் கிழித்து, குருதி சிந்தாமல் நெஞ்சைக் கூறுபோட முடியும். ருத்ரனையும் கூறுபோட்டது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். இவனையும் கொல்லாமல் கொன்றது.
நாணேற்றிய வில்லின் அம்பு கொண்டு சாய்க்க முடியாத ஒருவனையும் நரம்பு ஏற்றிய நாவின் சொல் கொண்டு சாய்க்க முடியும்.
வங்கிக்குச் செல்லவேண்டிய வேலை இருந்ததால் வங்கி கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்ல மீண்டும் வீடு வந்தவனது காதுகளில், அகிலாண்டம் தன் மகளைப் பற்றி கூறிய அவச்சொல் விழ, அச்சொல் அவனை நிதானம் இழக்கச் செய்தது. குழந்தை வீறிட்டு அழவில்லை எனில் அடுத்து என்னவெல்லாம் பேசி இருப்பானோ தெரியாது. அகிலாண்டத்தின் நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.
அவனது உறுமலில் குழந்தை வீறிட, வேகமாக வந்தவன் குழந்தையை அழகரிடம் இருந்து தூக்கிக் கொள்ள, அழுகை அடங்க சற்று நேரம் பிடித்தது. அப்பனின் ஆத்திரம் அடங்கவும் தான். அவனும் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.
வேகமாக அறைக்குள் சென்றவன் தனது கோபத்தை கதவின் மீது காட்டி அறைந்து சாற்ற, அந்தச் சத்தத்தில் மீண்டும் குழந்தை விலுக்கென உடல் குலுக்கியது. தனது மடத்தனத்தை எண்ணி தனக்குத்தானே நொந்து கொண்டவன், “ச்ச்சே!” என தலையில் அடித்துக் கொள்ள, உதடுபிதுக்கி அடுத்த அழுகைக்கு தயாரானது அப்பனின் கோபம் பார்த்தறியா இளங்குறுத்து. ஆக்ரோஷக் குரல் அதற்கும் கிலியை உண்டு பண்ணியது போலும்.
“ஆதிம்மா… இல்லடாம்மா… சாரிடாம்மா… அழாதடாம்மா… த்த்ச்ச்… த்த்ச்ச்…” என உச்சுக்கொட்டி மகளை ஆறுதலாக அணைத்துப் பேசி சமாதானம் செய்தவன் கண்கள் சிவந்திருந்தது. கொஞ்சிப் பேசி, விளையாட்டுக் காண்பித்தவனுக்கு ஆயாசமாக வந்தது.
எப்பொழுதும் சிரித்த முகம் மட்டுமே பார்த்துப் பழகிய இளஞ்சிட்டுக்கு இன்று அப்பனின் முகத்தில் என்ன தெரிந்ததோ, கன்னத்தோடு கையிரண்டையும் வைத்து உற்றுப் பார்த்தது. கோபத்தில் சிவந்த கண்களில் இருந்து இப்பொழுது நீர் கசிய, தனக்கு ஆறுதலாகப் பிள்ளையை இறுக்கிக் கொண்டான் உடைந்து விடாமலிருக்க. குழந்தையை சமாதானம் செய்ய கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பிடித்தது. அமைதிப் படுத்தியவன், தூங்க வைத்தே வெளிவந்தான்.
மருமகனை எதிர்பார்க்காத அகிலாண்டமும், இவனது கோபம் கண்டு விதிர்விதிர்த்து தான் போனார். அழகர் அம்மாவைக் கடிந்து கொண்டிருந்தான்.
மஞ்சுளாதேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கும் அந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைக்க, அவருக்கும் கையறுநிலை தான். கேசவமூர்த்திக்கும் தங்கையின் பேச்சு முகம் சுழிக்க வைத்தது.
சத்தம் எழுப்பாமல் கதவைச் சாத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன், “இப்படியே அமைதியா போவேன்னு நினைக்காதீங்க. இன்னொரு தடவ எம்பிள்ளயப் பத்தி எங்கேயாவது இப்படி பேசறதக் கேட்டே, நான் மனுஷனாவே இருக்க மாட்டே. நீங்க எதையெல்லாம் மறச்சீங்க, எதனால எம்பிள்ளைக்கி தாயில்லா நெலமைனு நெனச்சுப் பாருங்க.” என ஆத்திரத்தை அடக்க மாட்டாமல் கொந்தளிக்க,
“அம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மாமா.” என அழகர் எழுந்து வந்தான்.
“உங்க அம்மா பேச்சு ஒன்னும் எனக்குப் புதுசு இல்ல அழகர். ஆனா அது வாழையடி வாழையா தொடரக் கூடாது பாரு. ஏன்னா என் தங்கச்சியும் அங்க தானே வந்தாகணும். எனக்கு தேனும், எம்பிள்ளையும் வேற வேற இல்ல.” என்றவன் பேச்சில் உக்கிரம் ஏறியிருந்தது.
“உங்க தங்கச்சி எங்க வீட்டுக்கு வர்றது உங்க கையில தான் இருக்கு.” என அசராமல் அடுத்த அடி எடுத்து வைத்தார் அகிலாண்டம். அண்ணன் மகள் இப்பொழுது அவனது தங்கையாகத் தெரிந்தாள்.
“ம்மாஆ…” என அழகர் ஆற்றமாட்டாமல் அதட்ட,
“வேறொருத்தி எம்பேத்திக்கு சித்தியா வர விடமாட்டேன் டா.” என மகனை பதிலுக்கு அதட்டினார்.
“அப்படி இன்னொருத்தியக் கல்யாணம் பண்றதா இருந்தா எம்பேத்திய எங்கிட்ட கொடுத்துறச் சொல்லுங்க ண்ணே.” என எங்கு கல்லெறிந்தால் மாங்காய் விழும் என அண்ணனிடம் முறையிட, இந்த முறை என்னவோ தங்கையின் பக்கம் கேசவமூர்த்தி தராசு இறங்கவில்லை. அமைதியாகவே இருந்தார். அவருக்கும் சில குற்ற உணர்வுகளால் சிறிது நாட்களாக மனம் குறுகுறுத்ததோ என்னவோ?
“அகிலா… பொறுமையா பேசி முடிவெடுப்போம் ம்மா. வந்தவுடனே இதை எல்லாம் இப்பவே பேசணுமா?” என பொறுமையாக வாய் திக்கித் திணறி கூற,
“அதான் அவரும் வந்துட்டாருல்ல ண்ணே. இனி ஹோட்டலுக்குப் போனாருன்னா நைட்டு தானே வருவாரு. அதுக்குள்ள யார் யாரு கண்ணு முன்னாடி வந்து மனசக் களைப்பாங்களோ? சின்னவளக் கட்டுறதுக்கு என்ன முடிவுனு கேட்டுச் சொல்லுங்கண்ணே.” என விடாப்பிடியாக நிற்க, அவருமே விருப்பமே இன்றி மகனைப் பார்க்க, கேசவமூர்த்தியின் பார்வையை எதிர் கொண்டவன்,
“ஒரே முடிவு தான். காயத்ரிக்கு வேற இடம் பாருங்க.” என்றான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு எனும் விதமாக.
“அப்ப அழகருக்கும் வேற எடம் பாத்துக்கறோம்.” என கூற, அனைவரும் எதிர்பார்த்தது தான் என்பதால் எவருக்கும் அதிர்ச்சி இல்லை. இது அனைவரையும் மிரட்டிப் பார்க்க சொல்லுவது. அவ்வளவு எளிதாக தேன்மொழியை விட்டுவிடமாட்டார் என அனைவருக்கும் தெரிந்ததே. அண்ணன் மகள் என்ற பாசம் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இடையில் இருப்பது பரம்பரைச் சொத்து ஆயிற்றே.
அழகருக்கும் மாமன் கூறப்போகும் முடிவு தெரியும். இருந்தாலும் உடன் வரவில்லை என்றால் அகிலாண்டத்தின் அர்ச்சனை ஆரம்பித்துவிடும் என்பதாலேயே அம்மாவுடன் கிளம்பி வந்தான். அகிலாண்டத்தின் கணவர் ரகுநாதருக்கு இதில் ஆரம்பத்திலேயே ஒப்புதல் இல்லை என்பதால் அவர் வர மறுத்து விட்டார்.
“உங்க முடிவு போலயே செய்ங்கத்தே!” என, ருத்ரன் வாய்திறக்கும் முன் தேன்மொழி பதில் கூறிவிட்டு, அப்பனின் அருகாமை இல்லாமல் குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்டு அண்ணனின் அறைக்குள் சென்றுவிட்டாள்.
இதோடு மகள் அமைதியாகப் போய்விட்டாளே என்று மஞ்சுளாதேவி ஆறுதல் பட்டுக் கொண்டார். இந்த வீட்டில் பிறந்த பெண்களுக்கே வாய் நீளம் என நாத்தனாரோடு சேர்த்து மகளையும் கடிந்து கொண்டார்.
ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இதே அஸ்த்திரத்தை தானே வீசுகிறார் அகிலாண்டம். அதனால் முனை மழுங்கிப் போய்விட்டது.
அழகருக்குதான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றான். இனி இவளை வேறு சமாதானம் செய்ய வேண்டுமே.
என்னவோ அகிலாண்டம், தான் போட்ட கோட்டிற்குள் தான் மகன் நிற்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்கள் திருமணம் தள்ளிப் போவது தேன்மொழியின் வீம்பால் தான் என்பது புரியவில்லை.
தேன்மொழி மட்டும் சம்மதித்திருந்தால் இந்நேரம் அண்ணன்காரன் மாப்பிள்ளையை தூக்கி வந்து தங்கை கழுத்தில் தாலி கட்ட வைத்திருப்பான். யாரையும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
அண்ணன் முடிவிற்காக தங்கையும், தங்கை முடிவிற்காக அண்ணனும் வீம்பு பாராட்டித் கொண்டு இருக்கின்றனர்.
இவர்களைத் தட்டித் தூக்க அங்கே ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரியவில்லை.
ருத்ரன் சொன்ன பதிலில் இன்றைக்கும் ஒரு முடிவுக்கு வராமல் அகிலாண்டம் கொதித்துப் போனார். அவருக்கு இளைய மகள் காயத்ரியையும் அண்ணன் வீட்டிற்கே மருமகளாக அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு தான் பிரசவத்தில் மூத்த மகள் இறந்ததில் இருந்து, பேத்தியைக் காரணம் காட்டி நடையாக நடக்கிறார்.
அதற்கு அவர் பயன்படுத்தும் துருப்புச் சீட்டு அழகர், தேன்மொழி திருமணம். இல்லை என்றால் பேத்தியை தன்னிடம் கொடுத்து விடவேண்டும் என்பது. அந்தத் துருப்புச்சீட்டு இரண்டுமே ருத்ரன் முன் செல்லா ஓட்டு என்பது தெரியவில்லை.
நீ என் பொண்ணையே ரெண்டாந்தாரமாக் கட்டினா, உன் தங்கச்சிய என் மகனுக்குக் கட்டுறே. என மருமகனிடம் அகிலாண்டம் வீம்பு புடிக்க,
நீ ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சா நானும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன், என தேன்மொழியும் அண்ணனிடம் வீம்பு புடிக்க,
இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது அப்பாவி ஜீவன் அழகர் தான்.
***********
ருத்ரன் ஹோட்டல் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் பிசியோதெரப்பிஸ்ட் வர, கேசவமூர்த்திக்கான பயிற்சிகள் தொடங்கியது.
கணவருக்கு உதவியாக, மஞ்சுளாதேவி சென்றுவிட, அகிலாண்டமும் இன்னும் அந்த வீட்டில் தனக்கென தனியுரிமை வைத்திருக்கும் அறைக்குள் தனது கனத்து சரீரத்தைத் தூக்கிக் கொண்டு ஓய்வெடுக்க உள்ளே சென்றுவிட்டார்.
அழகர் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு தேன்மொழி இருந்த அறைக்குள் வர, அவளோ தூங்கும் பிள்ளையைச் சுற்றி அணைவாக ஒரு கையை வளைத்துப் போட்டு மறு கையை தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்து இருந்தாள். கண்களின் முத்துநீர் மூக்கின் மீது பாதை போட்டிருந்தது.
அழகர் வந்த அரவம் கேட்டது. ஆனால் அதற்கான ஆர்வம் அவள் முகம் காட்டவில்லை.
“தேனு…” என மெதுவாக அழைக்க,
“ம்ம்ம்…” எனும் பதில் மட்டுமே மரியாதை நிமித்தமாக.
“நான் சொல்லலடி அம்மாகிட்ட. நம்ம மட்டும் தான் கோயிலுக்குப் போனோமா? வந்தவங்க யாரோ போய் அமிர்தா வந்தத அம்மாட்ட வத்தி வச்சுருக்காங்க.” என்றவனின் பேச்சைக் கேட்டும்,
அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாமல் இருக்க,
“ஏதாவது பேசும்மா?” என அவனது குரல் இறைஞ்சியது.
பார்த்தவர்களும் இவள் யாரென்று தெரியாமல் தான், பொண்ணு நல்லா இருக்காளே யார் வீட்டுப் பிள்ளை என தேன்மொழியோடு இருந்த அமிர்தாவை அங்க அடையாளங்கள் சொல்லி அகிலாண்டத்திடம் விசாரித்தனர்.
“இப்படி நான் தனியா இருக்குறப்ப ரூமுக்குள்ள வராதீங்க.” என்றாள் வெறுமை கலந்த குரலில்.
“நான் வராம வேற யாரு வருவா?” என கோபம் எட்டிப் பார்த்தது அழகர் பேச்சில்.
“நான் இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டியவ. இதெல்லாம் நல்லா இல்ல.” என முகம் பார்க்காமல் கூற,
“பக்கத்துல குட்டிம்மா இருக்காளேனு பாக்குற. இல்லைனா இந்நேரம் பல்லெல்லாம் கொட்டியிருக்கும்.”
“அப்ப… நீங்க தான் பொக்கவாய் பொண்டாட்டிய வச்சுட்டு அவஸ்த்தப்படணும்.” என்றவளின் பதிலில் அழகருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அறைக்குள் வராதே என்றது என்ன, வேற வீட்டுக்குப் போக வேண்டியவ என்றது என்ன, உடனே பொக்கவாய் பொண்டாட்டி என உரிமை கொண்டாடுவது என்ன…
“இத உங்க அம்மா தானே சொன்னாங்க. வேற எடம் பாக்க சொல்லி. அப்ப இன்னொரு வீட்டுக்குப் போறவ ரூமுக்குள்ள எந்த உரிமையில வந்தீங்க. நானும் குட்டிம்மாவுக்காக தான் பாக்குறே. அவளுக்கு ஒரு அம்மா வராம நான் என் வாழ்க்கையப் பத்தி யோசிக்கறதா இல்ல.”
“அம்மா பேச்சுக்கு தான் இப்படி அடிக்கடி சொல்றாங்க. உன்னைய விமாட்டாங்கனு தெரியாதா? உம்மேல எனக்கில்லாத உரிமை வேற யாருக்குடி இருக்கு?”
“அப்ப… அமிர்தாவுக்கு அண்ணன் மேல இல்லாத உரிமை இங்க வேற யாருக்கு இருக்கு சொல்லுங்க பாக்கலாம். எல்லாரையும் விட அவளுக்கு தான் மொத உரிமை இருக்கு.” என்றவளை பொறுமையாக ஏறிட்டுப் பார்த்தான்.
“நன்றிக்கடன்ங்குற பேருல எத்தன தடவ எங்க அண்ணே வாழ்க்கைய அடமானம் வைக்கும் மாமா? எனக்கு மட்டும் காயத்ரி மேல விரோதமா என்ன மாமா. ஆனா உங்க அம்மா ஏன் இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறாங்க? ” என ஆதங்கமாகக் கேட்க, அவனுக்கும் அந்த வார்த்தையில் இருக்கும் வலி புரியாமல் இல்லை.
“ஏன்னு உனக்கு தெரியாதா. எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படிக் கேட்டா எப்படிம்மா?” எனக் கேட்க,
“அப்ப இந்த சொத்து மட்டும் தான் உங்க அம்மாவுக்கு முக்கியமாப் போச்சு இல்ல. சொத்து மட்டும் இல்லைனா என்னையும் ஓரங்கட்டி இருப்பாங்க.”
“ரெண்டு பேரும் ஒரே புள்ளியிலதான் நிக்கறீங்க. ஆனா ரெண்டு பேரும் சொல்ற பொண்ணு தான் வேற வேற. இதுல நீங்க ரெண்டு பேரும் ஒன்ன மறந்துட்டீங்க.” என்றவனை யோசனையாகப் பார்க்க,
“ருத்ரன் மாமாவப் பத்தி யாருமே யோசிக்கல.” என்றான். ருத்ரனுக்கும், அழகருக்கும் ஒன்றிரண்டு வயது வித்யாசம் தான். எனினும் அக்கா கணவர் என்ற முறையில் மரியாதையாகவே விளிப்பது.
“நான் அமிர்தாவ சொல்றதுக்கான முக்கிய காரணமே அண்ணன் தான் மாமா.” என்றவள் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.
எப்படியாவது அண்ணனின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும் என்ற தவிப்பு தங்கையின் பேச்சில் தெரிந்தது.
“அதுக்காக நீ வீம்பு புடிச்சா மட்டும் போதுமா. அவருக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும்ல ம்மா.”
“ஆறுன கஞ்சி பழங்கஞ்சினு சொல்லுவாங்க. சூட்டோட சூடா முடிக்கணும்னு உங்க அம்மா எப்படி நிக்கிறாங்க பாத்தீங்கள்ல. உங்களால பொறுமையா இருக்க முடியலைனா உங்க அம்மா சொல்ற மாதிரி வேற பொண்ணு பாத்துக்கோங்க.” என விட்டேத்தியாகக் கூற,
“நானும் வந்ததுல இருந்து பாக்குறே இதையே திரும்ப திரும்ப சொல்ற.” என வேகமாகக் குரல் உயர்த்த, குழந்தையின் கைகள் விலுக்கென தூக்கத்திலும் சுண்டியது. ஏற்கனவே பயத்தோடு தூங்கிய குழந்தைக்கு அவனது சத்தம் திடுக்கிட வைத்தது.
“மாமா…” என அடித்தொண்டையில் அரற்றியவள் குழந்தையை மெதுவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, கட்டிலை விட்டு இறங்கியவள், அந்த அறையின் பின்வாசல் வழியாக, வீட்டின் பின்புறமாக இருக்கும் தோட்டப் பகுதிக்கு வந்தாள். அழகரும் பின்னாலே வந்தான்.
வண்ண வண்ண பூச்செடிகளோடு கூடிய அழகிய தோட்டம். ஏனோ இருவர் கருத்தையும் கவரவில்லை. அங்கிருந்த கல்பென்ச்சில் அமர்ந்து கொள்ள, அவளருகில் அமர்ந்தவன், அவளது கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
அவனுக்கு தெரியும். தன் மீது அவளுக்கு இருக்கும் அளவற்ற அன்பும் காதலும். ஆனால் அண்ணனின் மீதுள்ள பாசம் அனைத்தையும் தள்ளி வைக்க சொல்கிறது. இப்பொழுது அண்ணனின் இழப்புகளை மீட்டுத்தர வேண்டும் என இவள் பிடிவாதமாக இருப்பதும் தெரியும். அதனாலே தான் அண்ணனிடம் பேச்சையே நிறுத்தி விட்டாள். தங்களது திருமணத்திற்கும் சம்மதிக்க மறுக்கிறாள்.
இல்லையென்றால் அகிலாண்டம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை இவளுக்கும், ருத்ரனுக்கும். நீ என்ன எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றதுனு சட்டமாக எப்பொழுதோ தன் வீடு தேடி வந்திருப்பாள்.
“உன்னோட எண்ணம் புரியுது தேனு. அதுக்கு நீயும் நானும் வீம்பா இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல. சீக்கிரம் அதுக்கு ஒரு வழி பண்ணுவோம்.” என ஆறுதலாகப் பேச, மெதுவாக அவனது கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவள் அவனது தோள்மீது சாய்ந்து கொண்டாள்.
“நீங்க மூனு பேரும் நடத்துற மும்முனைத் தாக்குதல்ல நமக்கு ஸ்ட்ரெயிட்டா அறுபதாம் கல்யாணம் தான் போல. குட்டிம்மா கூட புள்ளகுட்டிகளோட நம்ம கல்யாணத்துக்க வரப்போறா டி.” என அவள் சற்று இளகியது தெரிந்து அழகரின் பேச்சில் எள்ளல் தெறித்தது.
அவனது பேச்சில் சற்று முகம் மலர்ந்தவளை, கைபிடித்து எழுப்பினான். இன்னும் சாப்பிடவில்லை எனத் தெரியும். எனவே சாப்பாட்டு மேஜைக்கு அழைத்துச் சென்றவன், அவளை அமர வைத்து பரிமாற, மறுபேச்சின்றி சாப்பிட்டு முடித்தாள்.
மஞ்சுளாதேவி சமையல்காரப் பெண்ணிடம், மதிய உணவிற்கான ஏற்பாட்டுகளை கூறிவிட்டு சென்றிருக்க, தேன்மொழியும் உடன் சேர்ந்து மதிய உணவை சமைத்து முடித்தனர்.
இன்றும் ஒரு முடிவும் தெரியாமல், மதிய உணவை முடித்துக் கொண்டு அகிலாண்டமும், அழகரும் கிளம்பினர்.
கிளம்பும் முன் அண்ணனின் அறைக்கு வந்தவர், “நம்ம வம்சத்து சொத்து ண்ணே. கண்டவங்களும் வந்து அனுபவிக்க விட முடியாது. இன்னொருத்தி வந்து ஆளவிடமாட்டேன்.” என எச்சரித்துவிட்டு தான் சென்றார்.
குழந்தைக்கு பருப்பும் நெய்யும் பிசைந்து மதிய உணவை ஊட்டிவிட்டு, அம்மாவிடம் கொடுத்தவள் தனது அறைக்கு வந்து ஃபோனை எடுத்தாள். அவளது ஆதங்கத்தை கொட்டும் இடம் அழகரை அடுத்து அவளது தோழியிடம் தான்.
