தெம்மாங்கு பூந்தமிழே 27 final

பள்ளியில் இன்று ஆதினிக்கு பாராட்டு விழா. மாநில அளவிலான கபடி போட்டியில் இவர்களது பள்ளி சார்பில் இவளது தலைமையிலான கபடிக்குழு கப்பைத் தட்டிவந்ததற்கான பரிசளிப்பு விழா. 

முன்வரிசையில் அமர்ந்து மகளின் சாதனையை கண்குளிர குடும்பமே கண்டு களித்தது. மேடையைவிட்டு கீழே இறங்கி வந்தவள் சான்றிதழோடு கோப்பையை அப்பாவின் கையில் கொடுக்க, ஈன்ற பொழுதில் அவன் பெற்ற துன்பம் அனைத்தும் இன்று இன்பமாய்‌ அவனது கனவோடு நிறைவான பூரிப்பு அப்பன் முகத்தில்.

பாராட்டுவிழா முடிந்து குடும்பமே பாண்டியன் ஹோட்டலில் முற்றுகை இட்டிருந்தது.‌

“டேய் ஆதவா… அக்கா கபடி ப்ளேயர். நீ என்னடா பண்ணப்போற?” என சாப்பிட்டுக்கொண்டே தேன்மொழி அண்ணன் மகனிடம் கேட்க,

“அத்தை, அவன் தான் ஸ்கூல் லீவு விட்டாலே நம்ம ஹோட்டல்ல தானே கரண்டியோட நிக்கிறான்” என தம்பியைக் கேலி செய்தாள் ஆதினி. இந்த வருடம் பனிரெண்டாவது படிக்கும் பருவச்சிட்டு. அடுத்து ஆதவன் பத்தாவது. இவர்களுக்கெல்லாம் கடைக்குட்டி மீனலோச்சனி ஏழாம் வகுப்பு.

அழகர், தேன்மொழிக்கும் ஆணொன்று, பெண்ணொன்று என இரண்டு பிள்ளைகள். அனைவரும் ஒரே பள்ளிதான்.

“அப்ப, நீ குட்டிம்மா” என மீனலோச்சனியை அழகர் கேட்க, 

“வேண்டாம் மாமா. அதமட்டும் கேட்காதீங்க” என சிரித்தான் ஆதவன்.

“ஏன்டா மாப்ள” என்றான். 

“மீனாவ அம்மா மாதிரினு அப்பா அடிக்கடி கிண்டல் பண்ணுவாங்க மாமா” என சிரிக்க, 

“அப்ப அவளும் எச்.ஐ. ஆகப்போறாளா?” எனக்கேட்க, 

“ஆமா மாமா. அப்படியும் வச்சுக்கலாம்” என ஆதினியும் சிரிக்க, 

“அப்பா… எல்லாம் உங்களாலதான்” என மீனா மூக்கால் அழுக,

“இல்லடாம்மா… யாராவது ஒருத்தர் அம்மா மாதிரி இருக்கணும்ல” என அவனும் சேர்ந்து சிரிக்க, 

“போங்கப்பா” என இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மீனா கருமமே கண்ணாக சாப்பிட ஆரம்பித்தாள்.

இப்பொழுது அமிர்தவல்லி ஹெல்த் இன்ஸ்பெக்டர். அதென்னமோ அவள் அடிக்கடி ரெய்டு வரும் உணவகம் பாண்டியன் ஹோட்டல் தான். கேட்டால் மற்ற ஹோட்டல் சாப்பாடு வாயில வைக்க முடியல மாமா என்பவள், நன்கு சாப்பிட்டுவிட்டு வந்த கடமைக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி தண்டத்தொகை வசூலித்துவிட்டுதான் செல்வது. 

வீட்டில் வந்து அதற்கான அரச்சனையை ருத்ரன் வழங்க, புருஷன் ஹோட்டல்னு அந்த மேடம் கண்டுக்கலைனு சொல்லக்கூடாதுல மாமா” என சிரித்து வைப்பாள்.

அடுத்தடுத்து குழந்தைகள், அதோடு வேலையும் கிடைக்க பிள்ளைகளா, வேலையா என யோசித்தவளை, ருத்ரன் தான் வந்த வேலையை விடவேண்டாம், பிள்ளைகளை உதவிக்கு ஆள்வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்குவிக்க, மனமேயில்லாமல் வேலைக்குச் சென்றாள். இருந்தாலும் பிள்ளைகள், வேலை என குடும்பபாரத்தை சமாளிக்க திண்டாடித்தான் போயினர். கௌரியும், மஞ்சுளாதேவியும் சற்று கைகொடுக்க சமாளித்தனர். பிள்ளைகளுக்கும் விபரம் புரிய யாருக்கும் தொந்தரவில்லாமல் தங்கள் வேலையைப் பார்க்க பழக்கிவிட்டனர். கொஞ்சம் உடல்வளையாத மீனாவை அக்காவின் பொறுப்பிலிருந்து ஆதினி கவனித்துக் கொள்ள குடும்பவண்டி தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. 

கைத்தடியுடன் நடக்கும் அளவிற்கு கேசவமூர்த்தியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றமே. 

ஏற்கனவே வாங்கிப் போட்ட இடத்தில் அமிர்தவல்லியின் பெயரில் திருமணமஹால் பெரிய அளவில் கட்டி திறப்புவிழா நடத்தினான். அன்று அரசியல்வாதி என யாரையும் அழைக்கவில்லை. அவனது தொழில்வட்டாரத்தில் அவனுக்கென உருவான நட்பு வட்டாரங்களையும், உறவுகளை மட்டுமே அழைத்தான். தானாக அவனுக்கென சேர்ந்த கூட்டமே பெருங்கூட்டமாக இருந்தது‌ அன்று. 

இவர்கள் சம்பாஷனையை புன்னகையோடு பார்த்துக் கொண்டே சாப்பிட்டவன், இலையோரம் ஸ்வீட்டை யாரும் அறியாமல் ஒதுக்கி வைத்து, மனைவிக்கு கண்ஜாடை காட்ட, பார்த்தவள் உதடு சுழித்து திருப்பிக் கொண்டாள். 

வீட்டிற்கு வந்தவுடன், பிள்ளைகளை நிற்கவைத்து திருஷ்டி சுற்றிப்போட்டாள். ஆதினியும், ஆதவனும் அவரவர் அறைக்குச் செல்ல, இன்னும் மீனா மட்டும் பெற்றவர்களுடனே. 

தற்பொழுது அவர்களது அந்தப்புறம், இருவருக்கும் அலுவலக அறையாக பிள்ளைகள்முன் சற்றே அரிதாரம் பூசிக்கொண்டது. 

“அத்தனபேர் முன்னாடியும் ஸ்வீட்ட ஒதுக்கி வைக்கறீங்க மாமா?” என பொய்க்கோபம் காட்டினாள் பெண்.

“நான் ஒதுக்குறேனாங்கறத நீ பாத்த. அதனால ஒதுக்கி வச்சேன்.”

“ஆமா… பிள்ள இன்னைக்கி பரிசு வாங்கயில அப்பன் முகத்தைப் பாக்கனுமே. மேடைக்கே வெளிச்சம் போட்டுச்சே. இன்னைக்கி எப்படியும் ஸ்வீட் ஒதுக்குவீங்கனு தெரியும்.”

“ஆமாடி… நடப்பாளானு நெனச்சு பயந்த புள்ள கபடிவிளையாடி ஜெயிச்சு வந்தா சந்தோஷமா இருக்காதா?” என கேட்டவனின் வார்த்தைகளில் அளப்பரிய சந்தோஷம். திரும்பி அவனது மார்பின் மீது நாடிவைத்துப்படுத்து அவனது முகம் பார்த்து, அந்த பூரிப்பை உள்வாங்கிக் கொண்டே,

“ஆனாலும் இப்ப எல்லாம் அடிக்கடி ஸ்வீட் ஒதுக்குறீங்க மாமா” என்றாள் நொடிப்பாக.

“வயசு நாப்பது ஆச்சுல்லடி. அதான் ஸ்வீட்ட தள்ளலாம்னு…” என இழுக்க,

“கேடி மாமா… நீங்க ஸ்வீட்ட ஒதுக்கி வச்சாலு நான்வெஜ் கேக்குறீங்கனுல்ல அர்த்தம்” எனக் கேட்க, வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான்.

“ஷ்ஷ்ஷ்… மாமா சத்தம் போடாதீங்க… பக்கத்து ரூம்ல மீனா எந்திரிச்சுக்கப் போறா” என அவசரமாக வாயைப் பொத்தினாள், மல்லிச்சரம் மார்பில் புறள மணாளன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருந்த மனாட்டி.

குழந்தைகளுக்கு விபரம் தெரிய ஆரம்பிக்க, பெற்றவர்களுக்கான காதல் நேரம் குறைய ஆரம்பித்துது. முன்பு போல் எல்லாம் நினைத்த நேரத்தில் காதல் என்பது கைகூடாத காரியமாகிப்போக, அதற்காக அப்படியே துறவறம் மேற்கொள்ளவும் முடியாதே. இலைமறை காயாக இந்த மாதிரி சமிஞ்கைகள் மூலம் தங்கள் காதலை உயிர்ப்பித்துத் கொண்டனர்.‌ சாப்பிடும்பொழுது அவளுக்குப் பிடித்தமானதை ஒதுக்கி வைத்தால் அன்று அவர்களுக்கான இரவு என்று அர்த்தம்.‌ பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு தங்களுக்கான தனிமையைத் தேடிக்கொள்வர் நடுத்தர வயதை எட்டியிருக்கும் இந்த காதல் ஜோடிகள். 

அது கூடலுக்கான இரவாக மட்டும் இருந்ததில்லை.‌ விடியும் வரை ஒருவர் அணைப்பில் மற்றவர் இருந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்த இரவாக மட்டுமே கூட விடிந்திருக்கிறது. வேலை, பிள்ளைகள், அவர்களது எதிர்காலம், பொறுப்பு என ஓடும் வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையில் இந்த மாதிரி தனிமை மிக முக்கியம். தங்களைப் பற்றி, தங்களது சந்தோஷம், வேலையிடத்து அழுத்தங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள இம்மாதிரி நேரங்கள் அவசியமாகிறது. 

கடமைகள் முடியட்டும் நமக்கான வாழ்க்கையை வாழலாம் என்பது அலை ஓயட்டம் கடலில் தலைமுழுகலாம் என காத்திருப்பது போன்று ஆகாத காரியம். அலை வரவர முங்கி எழுந்து விட வேண்டும். அதுதான் சுவாரஸ்யமும் கூட.

“இருந்தாலும் ரொம்பத்தான்டி பண்ற. பிள்ளைக பெருசாகுதுகனு சொல்லியே பாதி நாள் பட்டினி போடுற. என்னைக்காவது சந்தர்ப்பம் கெடச்சா அவசர அவசரமா சைவம் போடுற. நான்வெஜ்ஜ கண்ணுலயே காட்டமாட்டேங்குறியே” என சலித்துக் கொண்டவனின் இறுக்கிய பிடிக்குள் இருந்தாள் பெண். 

“க்க்கும்… ரொம்பத்தான்” என உதடு சுழிக்க, 

“இப்படி சுழிச்சே ஆள மயக்குறடி” என உதட்டைப் பிடித்து இழுக்க, “விடுங்க மாமா… வலிக்குது” என கையைத் தட்டிவிட, கைசெய்த பணியை இதழுக்கு மடைமாற்றிவிட, அவர்களுக்கான இரவாக மட்டுமே நீண்டது இன்று. 

மல்லிகை என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ…

                    வாழ்க வள முடன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top