தெம்மாங்கு பூந்தமிழே 21

21

“சொல்லுங்க மாமா!” என்றான் ருத்ரனின் அழைப்பை ஏற்றவன்.

“நீ உடனே கெளம்பி ரெஜிஸ்ட்டர் ஆஃபிஸ் வாடா மாப்ள!”

“ஏன் மாமா? காசு எதுவும் தேவைப்படுதா?” என சந்தேகமாகக் கேட்டான். இன்று வெங்கடேசன் வாங்கிய இடத்திற்கு பத்திரப்பதிவு என்பதுதான் தெரியுமே. அதற்காகத்தானே தம்பியிடம் பணஉதவி கேட்டு வந்தான். 

“அதெல்லாம் இல்லடா. காயத்ரி வீட்ல இருக்காளா அழகரு?” என கேட்க,

அழகர் அங்கே அகிலாண்டத்தை விசாரிப்பது ஃபோனில் கேட்டது. 

“கோயிலுக்குப் போயிருக்காம் மாமா? என்ன விஷயம் மாமா?” என விவரம் கேட்டவனை உடனே கிளம்பி ரெஜிஸ்டர் ஆஃபிஸ் வரச்சொல்லிவிட்டு அவனும் அங்கே கிளம்பினான். 

அவன் கிளம்பிய நேரத்திற்கு அமிர்தாவும் ஹோட்டல் முன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க, பார்த்தவிழி பார்த்தபடி நின்றது. 

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் புடவையில் வந்திருந்தாள். தந்தநிற உடலைத் தழுவியிருந்த மரகதப்பச்சை ஷிஃபான் புடவை அவளது எழிலை கண்ணுக்கு குளிர்ச்சியாக்க, இடையோரம் ஈரம் சொட்டிய கூந்தல்நுனி அவனை வியர்க்க வைக்க, தோளைத் தழுவிய மல்லி, மரிக்கொளுந்து கதம்பத்தின் சுகந்தம் சுகமாய்  நாசி வருடிச்செல்ல, பார்வை பாதாதிகேசம் பாவையை வருடிச் சென்றது. 

அவளது முகத்தை ஏறிட்டவன் புருவங்கள் முடிச்சுட்டுக் கொள்ள, முகத்தை உற்றுநோக்கின உடையவன் கண்கள். கண்களில் சற்று மிகைப்படுத்தலான அஞ்சனம் அவளது சோர்ந்த விழிகளின் சோபையை திரையிட்டிருக்க, முகத்தில் இருந்த சோர்வு இரவெல்லாம் தூங்கவில்லையென்பதை பறைசாற்றியது. நெற்றியில் இருந்த திருநீறு அந்த மூன்று நாட்கள் இல்லை என்றது.

கிளம்பிய வேலையை மறந்து, “உடம்பு சரியில்லையா. முடியலைனா வீட்ல இருக்க வேண்டியதுதானே?” என அக்கறை மேலிட விசாரிக்க,

“எனக்கென்ன? நல்லா குதிரு மாதிரித்தானே இருக்கேன்” என வெடுக்கெனக் கேட்டவள், “எங்கேயோ கெளம்பிட்ட மாதிரி தெரியுது.” என்றாள் அவன் கையிலிருந்த வண்டிச்சாவியைப் பார்த்துவிட்டு. 

காலையில் எழுந்தவுடனே கௌரியும், இவளது முகம் பார்த்து, “மேலுக்கு முடியலியா அமிர்தா?” எனக் கேட்டிருக்க, அதையே இவனும் கேட்டதில் ‘மனுஷி சொந்த சோகத்தகூட கொண்டாட முடியல’ என சுள்ளென கோபம் வந்தது. 

அண்ணன் கொடுத்த அவசரத்தகவல் நினைவிற்குவர, வந்து பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவன், 

“ஆமா, ஒரு முக்கியமான வேலை. வர லேட்டானாலும் ஆகும். கீழ கவுண்ட்டர்லயே இரு.” எனக்கூற, அவனை சந்தேகமாகப் பார்த்தாள். அருகில் இருந்த ஸ்டூலை எடுத்தவள், அவனது சேருக்கு அருகில்போட்டு உட்காரப்போக, வெடுக்கென அதைப் பிடுங்காத குறையாக வாங்கியவன்,

“என்னோட சேர்லயே உக்காரு. நாலு காலும் நல்லா ஸ்ட்ராங்காதான் இருக்கு. உன்னையத் தாங்கும்.” என அதிகாரம் கலந்த நக்கலோடு கூற, மறுபேச்சு பேசாமல் சென்று அமரப்போனவள், யோசனையாக நின்று கொண்டாள். வண்டியைவிட்டு இறங்கும்பொழுதே அவனது பார்வையோட்டத்தை கண்டும் காணாமல் கவனித்தவளுக்கு, அவனது சேரில் உட்காருவது சங்கோஜமாக, சற்று தயங்கி நின்றாள்

“என்ன?” என்றான் புருவம் சுருக்கி.‌

“இல்ல, வேண்டாம். நான் ஸ்டூல்லயே உக்காந்துக்குறே.” என மறுத்துப்பேச,

“ஏன், மாமன் மடியில உக்காந்த ஃபீல் வருமோ?” என கேலியாகக் கேட்க,

“இங்க அப்பனுக்கே அரக்கோவணமாம். அதுல மகன் தனக்கும் இழுத்துப் போத்துனானாம். (ஒருத்தனுக்க எந்திரிக்கவே வக்கில்லயாம்… என்பதன் ஓல்டு வெர்சன் 🙈) அய்யாவுக்கு அந்த ஆசை வேற இருக்கா. போய்யா” என அவள் மனதில் நினைத்ததை வெளிப்படையாகக் கேட்ட கோபத்தில் பொறிந்து தள்ளிவிட்டு, வேகமாக மேஜையைச் சுற்றிவந்து அவனது சேரில் நறுக்கென உட்கார, 

“யம்மாஆ!” என்றான் அவனையும் அறியாமல்.  மெய்யாகவே தொடை வலித்தது பார்த்தவனுக்கு. “குந்தானி” என பல்லிடுக்கில் சொல்லிக் கொண்டே, அவள் கூறிய சொலவடைக்கும் சேர்த்து சிரித்தமுகமாக வண்டியில் சர்பதிவாளர் அலுவலகம் செல்ல, இவனைப் பார்த்துவிட்டு வெங்கடேசன் வேகமாக வந்தான்.‌ 

இடம் பதிவதில் ஏதோ பிரச்சினைபோல என எண்ணிக்கொண்டுதான் அழகரும் கிளம்பி வந்துசேர்ந்தான்.

“எங்க அண்ணே அவங்க?” என்றவர்களை நோட்டீஸ் போர்டு அருகே அழைத்துச் செல்ல, அங்கு காயத்ரி, விக்னேஷின் திருமண அறிவிப்பு இருந்தது. 

பார்த்த இருவருக்குமே கோபம் கண்ணைக் கட்டியது. 

“யாரையும் காணோமே மாமா” – அழகர் அங்கிருந்த கூட்டத்தில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கோபமாகக் கேட்க,

“ஏதாவது கோயில்ல கல்யாணத்த முடிச்சுட்டு இங்க பதிவுபண்ண மட்டும் வருவாங்களா இருக்கும். எந்த கோயில்னு தெரியலையே. மதுரையில முக்குக்கு முக்கு கோயில் தானடா.” ருத்ரன் யோசனையாக, 

“இங்க கல்யாணம் பண்ற மாதிரி எந்தக் கோயில் இருக்கு.”- வெங்கடேசனும் யோசித்தான். 

“அன்னைக்கு திருவிழாவுல அவனைப் பார்த்தப்பவே சந்தேகம் தான்” என தனக்குத்தானே கூறிக் கொண்டவன்,

“காயத்ரிக்கு கால் பண்ணுடா மாப்ள. அதவச்சு எந்தக் கோயில்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கலாம்.”

அழகரும் தங்கைக்கு அழைக்க, அழைப்பை எடுக்க தாமதமானது. அடுத்த அழைப்பில் எடுத்தவள், “என்ன ண்ணா?” என்றாள். மெல்லிய பதட்டம் குரலில். 

“எந்தக் கோயிலுக்கு போயிருக்க?” 

“ஏன்ணா! எப்பவும் போற, நம்ம தெருவுல இருக்குற பிள்ளையார் கோயில்தான்.” 

ஆனால் அங்கே கேட்ட சலசலப்பும், இறைச்சலும் ஏதோ பெரியகோவில் எனச்சுட்டியது. 

“நம்ம தெருமுனையில இருக்குற கோவிலுக்குப் போயிட்டு வரவா இம்பூட்டு நேரம். இங்க அம்மா இன்னும் வரலையேன்னு ஃபோன் போடச் சொன்னாங்க. நான் வண்டியெடுத்துட்டு வரவா?”

“இல்லயில்ல வேண்டாம்” என அவசரமாக மறுத்தவள், “இன்னைக்கி கோயில்ல கூட்டம் அதிகம். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன்.” எனப்பேசிக் கொண்டிருக்க,

“கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா! கதிர்வேலனுக்கு அரோகரா! திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோஓ…கரா!” என ஆறுபடைவீடு யாத்திரைவந்த ஏதோ ஒரு கோஷ்டி, தமிழ் அழகனுக்கு உரக்க கோஷம்போட, அவர்கள் இருப்பது அண்ணனின் ஸ்தலம் இல்லை தம்பியின் ஸ்தலம் எனத்தெரிந்தது. திருப்பரங்குன்றம் எனத் தெரிய, 

“சீக்கிரம் போலாம்டா” என மூவரும் அவரவர் வண்டியில் கிளம்பி அடுத்த அரைமணி நேரத்திற்குள் கோவில் வந்திருந்நனர். 

அன்று முகூர்த்த நாள் என்பதாலும் அதிகமாக கல்யாணம் நடக்க இருந்ததால், இவர்கள் முறை வரத்தாமதமானது. அதற்குள் இவர்களும் வந்து சேர்ந்தனர்.

கூட்டத்திற்குள் இவர்களை தேடிக் கண்டுபிடித்துவர, மணக்கோலத்தில் தங்கையைப் பார்த்த அழகருக்கு, எவ்வளவு துணிச்சல் என கோபம் தலைக்கேறியது. அவளை அடிக்கக் கைஓங்க, ருத்ரன் அவனை தடுத்து இழுத்துக்கொண்டான். விக்னேஷின் நண்பர்கள் சிலர் உடனிருந்தனர்.

“என்னடா இது? படிச்சவன்தானடா நீ?” என விக்னேக்ஷைப் பார்த்து கோபமாக ருத்ரன் கேட்க, 

“மாமா! அவங்கள ஒன்னும் சொல்லாதீங்க. நான் தான் ஏற்பாடு பண்ணச்சொன்னேன்.” என்றவாரு இவர்களைப்பார்த்து பயந்து விக்னேஷின் பின்புறம் ஒழிந்தவள் முன்னுக்கு வந்தாள். 

“எம்புட்டு திண்ணக்கம் உனக்கு. செய்யறதையும் செஞ்சுட்டு தெனாவெட்டா முன்னுக்க வேற வர்றியா?” என மீண்டும் அழகர் முறுக்கிக்கொண்டு செல்ல, வெங்கடேசன் இழுத்துப் பிடிக்க, காயத்ரியை தோளோடு அணைத்து இழுத்துக்கொண்டான் விக்னேஷ்.

“ஏன் காயத்ரி? உங்க ரெண்டு பேத்துக்கும் விருப்பம்னா வீட்ல சொல்ல வேண்டியது தானே? வெளியே தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்” என ருத்ரன் கொளுந்தியாளைக் கண்டிக்க,

“என்ன மாமா? அம்மாவப்பத்தி தெரிஞ்சும் இப்படி கேக்குறீங்க. அவங்களுக்கு விருப்பமா முக்கியம். எப்படியாவது என்னைய உங்களுக்கே ரெண்டாவதா கட்டிவைக்கத்தான் திட்டம் போடுறாங்க. நீங்களும் அமிர்தாவும் விரும்பறது தெரிஞ்சே தானே அக்காவக் கட்டிவச்சாங்க?” எனக் கேட்க, பதில் சொல்லும் நிலையில் மூவரும் இல்லை. 

“அதுக்குனு யாரும் இல்லாதவங்க மாதிரி இப்படித்தான் கல்யாணம் பண்ணனுமா? முதல்ல கிளம்புங்க. வீட்டுக்குப் போகலாம். அங்கபோயி மத்ததெல்லாம் பேசிக்கலாம்.” என அதட்ட, 

“இல்ல மாமா. கல்யாணம் முடிக்காம எங்கேயும் வரமாட்டோம்.” காயத்ரி உறுதியாக நிற்க, 

“உங்க கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. அடுத்த முகூர்த்தத்திலேயே அதுக்கு ஏற்பாடு பண்றே.” என்றவன் அழகரைப் பார்க்க, 

“மாமா சொல்றாருல்ல. யாரு மறுத்தாலும் நாங்க முடிச்சு வைக்கிறோம். கெளம்புங்க” என அழகரும் சேர்ந்து அதட்டிச்சொல்ல, விக்னேஷைத் திரும்பிப் பார்த்தாள். 

“அதான் இவ்வளவு தூரம் சொல்றாங்கள்ல. எனக்கும் இப்படி யாருமே இல்லாம திருட்டுத்தனமா கல்யாணம் பண்றது பிடிக்கல காயத்ரி. காலத்துக்கும் இது ஒரு பேரு. உனக்காகத்தான் இந்த ஏற்பாடே.” என விக்னேஷும் தனது விருப்பமின்மையைக் கூற, தனக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டவன் வார்த்தையை மறுக்க முடியாமல், அரைமனதாக வீட்டிற்குவர ஒத்துக் கொண்டாள். 

விக்னேஷை அண்ணனோடு தனது வீட்டிற்கு அனுப்பிவிட்டு, காயத்ரியை மட்டும் அழகரும், ருத்ரனும் இங்கே அழைத்து வந்தனர். 

மகள்வந்த கோலம்கண்டு, விஷயம் தெரிந்த அகிலாண்டம் கையில் வேப்பிலை இல்லாத குறையாக ஆடினார்.‌ 

“ம்ம்மா, நீங்க சம்மதிச்சாலும் மறுத்தாலும் விக்னேஷ் கூடத்தான் காயத்ரி கல்யாணம். அதுவும் அடுத்த முகூர்த்தத்திலேயே. அவனப்பத்தி தெரியும். நல்ல பையன்தான். நல்லா படிச்சிருக்கான். நல்லா சம்பாதிக்கிறான்” என அழகர் கூற,

“செத்தாலும் இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன். என்னைய மீறி இந்தக் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன்” என்றார் ஆங்காரமாக.

“நல்லா பாருங்க அத்தை. நீங்க இல்லாம எப்படி உங்க பொண்ணு கல்யாணம் நடக்குதுனு. உங்க பொண்ணு உங்க சம்மதம்கேட்டு நிக்கல. விட்டிருந்தா இந்நேரம் மாலையும் கழுத்துமா வந்து, நீங்க சொல்லுவீங்களே எங்க குடும்ப கௌரவம், பரம்பரை, பாரம்பரியம், மானம், மரியாதைனு அதையெல்லாம் ஒட்டுமொத்தமா உங்க மக கப்பலேத்தியிருப்பா.” 

“இதெல்லாம் உன்னோட ஏற்பாடா. இவள முடிச்சு அனுப்பிட்டு நீ உங்க அக்கா மகள கட்டலாம்னு பாத்தியா? ஏன்டி, உனக்கு அந்த விக்னேஷ் தான் கெடச்சானா? பணங்காசு இருக்குன்னா போதும். பல்லக் காமிச்சுட்டு வந்துருவானுகளே?” என எகத்தாளம் பேச,

“இப்பவும் நீங்க பணம்காசுக்காகத்தான் வந்தான்னு உங்க பொண்ணத்தான் இறக்கி பேசுறீங்க. எங்க அக்கா மகளக் கட்டணும்னா எப்பவோ கட்டியிருப்பேன். அதுக்கு உங்க சம்மதம் தேவையில்ல. மஞ்சுளாம்மா வளத்த பிள்ளைகளுக்கு பெரியவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டுதான் பழக்கம். நம்மபெத்த பிள்ளையாயிருந்தா உரிமையா சொல்லமுடியும்னு, என்கிட்ட கேக்கமுடியாம அவங்க தவிச்சது எனக்கு மட்டும்தான் தெரியும். நம்ம பிள்ளைனா நம்ம சொல்லுக்கு கட்டுப்படுமேனு அம்மா நெனச்சுறக்கூடாதேங்கற ஒரே காரணத்துக்காகத்தான் ஆசைப்பட்ட பொண்ணக்கூட விட்டுக் கொடுத்துட்டு, பெரியவங்க வாக்குக்கு ரெண்டுபேரும் கட்டுப்பட்டோம். அமிர்தா மட்டும் நீங்கதான் வேணும்னு அன்னைக்கி வந்திருந்தா என்னால ஒன்னும் பண்ணியிருக்க முடியாது. நீங்களாச்சு உங்க வாக்குமாச்சுனு தூக்கிப்போட்டு போயிருப்பேன். அந்த நிலைக்கு எங்க அக்கா மக என்னையத் தள்ளல. ஆனா நீங்க பெத்துவளத்த பொண்ணு உங்கள எங்க கொண்டுவந்து விட்டுருக்கா பாத்தீங்களா. யாரும் வேணாம்னு கல்யாணம் வரைக்கும் போயிருக்கா. இது அவ தப்பு இல்ல. அந்த நிலைக்கி நீங்க அவள தள்ளியிருக்கீங்க.”

“பணம் காசத்தவிர உங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? மனுஷங்கள எப்பதான் புருஞ்சுப்பீங்க. விக்னேஷ் எங்க வகையறாங்கவும் தான் இன்னும் உங்க பொண்ணு இங்க நிக்கிறா. வேற ஒருத்தனா இருந்தா உங்க பொண்ணு இருந்த அவசரத்துக்கு எப்பவோ இழுத்துட்டு ஓடியிருப்பான். அதுக்கு மேலேயும் நடந்திருக்கும்‌. அப்ப என்ன பண்ணியிருப்பீங்க.” என கேட்க,

ருத்ரன் மகளுக்காக பேசுவதைக் கேட்ட ரகுராமனுக்கு, அதிலிருந்த உண்மைகள் சுட,

“அகிலா, நீ என்ன சொன்னாலும் அடுத்த முகூர்த்தத்துல என் பொண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் கல்யாணம். இவ்வளவு தூரம் ஆனப்பின்னாடி இன்னொருத்தனுக்கு கட்டிவச்சா நல்லா இருக்காது. எப்ப… அப்பா, அண்ணன் எல்லாரும் இருந்தும் தனியா கல்யாணம்பண்ண எம்பொண்ணு முடிவெடுத்துச்சோ, இதுக்கு மேலேயும் பேசாம இருந்தா நான் அப்பனே இல்ல. உன்னோட பிடிவாதத்துல என் மூத்த பொண்ண இழந்ததுதான் மிச்சம். இன்னொரு பொண்ணையும் இழக்கவிரும்பல.” ரகுராமன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனைவியை எதிர்த்துப்பேச,

கணவரின் பேச்சுமேலும் கோபமூட்ட, “எல்லாரும் ஒன்னு சேந்துட்டீங்களா? எப்படி இந்தக் கல்யாணத்த நடத்துறீங்கனு நானும் பாக்குறே.” என அகிலாண்டம் சவால்விட்டார்.

“உங்க அண்ணனோட தத்துபுத்திரனா இந்தக் கல்யாணத்த நான் நடத்தப்போறதில்ல. அவளோட அக்கா புருஷன்கற உரிமையில என் கொழுந்தியாளுக்கு இந்தக் கல்யாணத்த நடத்தப்போறே. முடிஞ்சா கல்யாணத்துக்கு வந்துட்டுப் போங்கத்தே.” என அத்தையிடம் கூறிவிட்டு, அழகரை அழைத்துக்கொண்டு வீடு வந்தான்.

அங்கிருந்த விக்னேஷை எப்படி இந்தமுடிவு எடுக்கலாம், எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என, வெங்கடேசனும் சேர்ந்துகொண்டு காய்ச்சியெடுக்க, 

“சொன்னாமட்டும் என்ன பெருசா நடந்திருக்கப் போகுது. அம்மா பேச்சக்கேளு, ஆட்டுக்குட்டி பேச்சக்கேளுன்னு, உன்னையும் அவரமாதிரி ஆக்கியிருப்பாங்க. நீங்க எடுத்த முடிவுதான்ணே கரெக்ட். என்ன… கல்யாணத்த நெய்வேலில வச்சுருக்கணும். அங்கதான் தப்பு பண்ணிட்டீங்க.” என  தேன்மொழி விக்னேஷிற்கு சப்போர்ட்பண்ணி பேச, தங்கையை முறைத்துவிட்டு,

அவனே ஃபோனில் அழைத்து விக்னேஷின் குடும்பத்திற்கு விபரம் கூற, 

“அகிலாண்டம் பொண்ணா. வேண்டவே வேண்டாம்ப்பா. இல்லாத வீட்லகூட நாங்க பொண்ணெடுத்துக்கறோம். ஆனா அகிலாண்டம் பொண்ணு வேண்டாம் ருத்ரா” என எதிர்ப்பக்கம் மறுக்க, அம்மாவைப்பற்றிய அவர்களது அபிப்ராயத்தில் அழகரின் முகம் அவமானத்தில் சுருங்கிக் போயிற்று. 

“சித்தி, அகிலாண்டம் அத்தையோட பொண்ணு இல்ல. இந்த ருத்ரனோட கொழுந்தியாள என் தம்பிக்கு கொடுக்க இஷ்ட்டப்படுறேன். உங்களுக்கு சம்மதமா?” என வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகக்கேட்க, அவர்களால் மறுக்க முடியவில்லை. ஃபோனிலேயே சமரசம் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தவன், அடுத்தகட்ட ஏற்பாட்டை கவனிக்கலானான்.

அடுத்த முகூர்த்தத்திற்கு இன்னும் பத்துநாட்களே இருந்தது. 

யாரையும் கலந்துகொள்ளாமல் இன்னொரு முடிவையும் சேர்த்து எடுத்திருந்தான். அன்றே தங்கைக்கும் அழகருக்கும் நிச்சயதார்த்தம் எனும் முடிவு.

இவளிடம் சம்மதம் கேட்டால் எப்படியும் உன் கல்யாணம் தான் முதலில் என வீம்புபிடிப்பாள் எனத்தெரியும். அதற்காக எத்தனை நாட்களுக்கு இப்படியே விடமுடியும். வயசுப்பிள்ளைக்கு காலாகாலத்தில் முடிக்க வேண்டியதை முடிக்க வேண்டுமென பொறுப்பான அண்ணனாக யோசிக்க,

“இதுக்கு நான் சம்மதிக்க வேண்டாமா?” என அம்மாவிடம் தேன்மொழி எகிற, 

“என் தங்கச்சிங்குற உரிமையிலதான் இந்தமுடிவ நானே எடுத்தேன். மத்தவங்க மாதிரி யாரோ எவரோன்னு நீயும் நெனச்சா சம்மதிக்க வேண்டாம்.” என பேச்சில் தங்கையை மடக்க,

“இப்படியெல்லாம் சொன்னா நாங்க உடனே இல்லண்ணே, நீ தான் என்னோட உடன்பிறப்பு, ரெத்தத்தின் ரெத்தம் அப்படிஇப்படின்னு கண்ணீர்விட்டு உன் காலக் கழுவுவேன்னு நெனச்சியா. இந்த ஓவர் ஆக்டிங் சீனெல்லாம் இங்க இல்ல. நான் மொதல்ல சொன்னதுதான் இப்பவும். உன் கல்யாணம் அமிர்தாவோட முடிஞ்ச பிண்ணாடிதான் என்னோட கல்யாணம். என்னைய உன் தங்கச்சியா நெனச்சா நான் சொன்னத மொதல்ல செய்.” என அண்ணன் வழியிலேயே அவனை மடக்க,

இத்தனை நாட்களாக முகம் கொடுத்துப் பேசாத தங்கை இன்று நேருக்கு நேராக நின்று வெகுநாட்கள் கழித்து சண்டையிட்டதில் சிரித்த முகமாக பார்த்துக் கொண்டு நின்றான். 

“என்னடி குட்டி. இப்ப நாம என்ன ஜோக்கா சொன்னோம். உங்க அப்பா எதுக்கு ஈன்னு பாத்துட்டு நிக்கிறாங்க.” என இடுப்பிலிருந்து அண்ணன் மகளிடம் பஞ்சாயத்து வைக்க, அதுக்கு என்ன புரிந்ததோ, அத்தையின் கன்னம் கிள்ளி விளையாண்டது.

“ரொம்ப நாள் கழிச்சு உங்க அத்தை என்கிட்ட பேசியிருக்கு. அந்த சந்தோஷத்துல தான் பாத்துட்டு இருக்கேன் குட்டீம்மா. ஏற்கனவே வயசுப் பொண்ண வீட்ல வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணினது போதும்.” 

“குட்டிம்மா… உங்க அப்பாவ ரொம்ப சந்தோஷப்பட்டுக்க வேண்டாம்னு சொல்லு. எனக்கு கல்யாணம் நடந்தா, அதுக்கு தாரைவாத்துக் கொடுக்கறது என் அண்ணனாத்தான் இருக்கணும். அப்பாவால நிக்க முடியாது. அப்பாவுக்கடுத்து எனக்கு எல்லாமே என் அண்ணன்தான் செய்யணும். அதுக்கு ஜோடியாத்தான் வரணும். அதுக்கு முதல்ல எங்க அண்ணே கல்யாணம் முடிக்கணும்.” என முடிவாகக் கூறிவிட்டுச் செல்ல,

வெகு நாட்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளின் உரிமைச் சண்டையில் சந்தோஷத்தில் கண்கலங்கியது மஞ்சுளாதேவிக்கு. 

அப்பாவிடமும், அம்மாவிடமும் கலந்து கொண்டு, மாமாவிடமும் அழகரிடமும் நிச்சயதார்த்தம் பற்றிக் கூற, 

தேன்மொழி கூறியதையே அழகரும் அச்சு பிசகாமல் கூறினான்.

“ரெண்டுபேரும் பானைக்கேத்த பிரிமனைதான்டா. ஏற்கனவே இப்படித்தான் பேசணும்னு தகவல் வந்திருச்சுபோல. வார்த்தை மாறாம சொல்ற?” என மச்சானை நையாண்டி பேச,  

“இன்னும் என்ன மாமா உங்களுக்கு தடையா இருக்கு. குறுக்க நின்ன காயத்ரி கல்யாணமும் முடிவாயிருச்சு. இப்ப அமிர்தாவ கல்யாணம்பண்றதுல என்ன பிரச்சினை வரப்போகுது.”

“காயத்ரி இருந்ததால தான் நான் மறுகல்யாணத்துக்கு மறுத்தேன்னு நெனச்சியா மாப்ள.” என ஆழ்ந்து மூச்சுவிட்டான்.

“வேற என்ன மாமா உங்களுக்கு இடைஞ்சலா இருக்கு?” அக்கறையாய் மச்சான் கேட்க, 

 “இது எனக்குள்ள இருக்குற குற்றஉணர்ச்சிடா மாப்ள. எல்லாம் தெரிஞ்சும் என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாளேங்குற கோபம் அமராமேல. அவ வேண்டாம்னு சொல்லியிருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்காதேன்னு தோணுச்சு. அதனால சரியா அவளக் கவனிக்கவலையோன்னு என் பிள்ளையப் பாக்குறப்ப எல்லாம் தினமும் உறுத்தும்.” என்றவன் கண்கள் சிவப்பேற,

“அப்படிப் பார்த்தா முதல்ல எங்களுக்குதான் மாமா அந்த உறுத்தல் இருந்திருக்கணும். கூடவே வளந்த எங்களாலேயே அவளோட பிரச்சினைய, எங்க அப்பா உள்பட எல்லாருமே கண்டுக்காம இருந்திருக்கோம். எங்கம்மா சொல்ல மீறமுடியாம எல்லாத்துக்கும் தலையாட்டியிருக்கோம். அமரா போனதுக்கப்புறம் தானே சுதாரிச்சோம். முதல்லயே தெரிஞ்சிருந்தா இப்ப அக்கா உயிரோட மட்டுமாவது இருந்துருக்கும். தேன்மொழிகூட, நீயும் சொத்து கணக்குப் போட்டுத்தான் பழகுனியான்னு கேட்டு ரொம்பநாளா பேசல மாமா. ஆனா மறுபடியும் காயத்ரிய கட்டி வைக்கணும்னு அம்மா முடிவெடுத்தப்பதான் எங்க யாருக்குமே இதுல இஷ்ட்டம் இல்ல. இப்ப இந்தக் கல்யாணம் வேற அவங்கள எதுத்து பண்ணப் போறோம். என்னபண்ண காத்திருக்காங்களோ?” 

“பாத்துக்கலாம்டா, நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகுடா மாப்ள” என தோளில் தட்டிச்சொல்ல,

“நீங்க கல்யாணத்துக்கு ரெடின்னா, நாங்க நிச்சயத்துக்கு ரெடிதான் மாமா” என்றான் புன்னகை முகமாக.

“நான் இதைப்பத்தி அமிர்தாகிட்டப் பேசிட்டு சோல்றேன்டா.”

“பாத்து மாமா. தங்கச்சிகிட்ட சூதானமாப் பேசுங்க. எதுக்கும் ஹோட்டல்ல இருக்குற பெரிய இட்லித்தட்ட கேடயமா எடுத்துட்டுப் போங்க. ஆனா நல்ல முடிவா சொல்லுங்க. பாவம் ரொம்ப நாளாக் காத்துட்டுருக்கு.” தனிந்து வந்தது குரல்.

“பாவம்ங்கற வார்த்தைய எனக்கு யூஸ் பண்ணுடா மாப்ள. அவகிட்டப் பேசிட்டு சேதாரமில்லாம வரணும்னு வேண்டிக்க. நானே ரெண்டு குலசாமிக்கும் ரெட்டகெடா வெட்டுறதா வேண்டிக்கிட்டுதான் அவகிட்ட பேசவே போறேன்” என மலர்ந்து சிரித்தவனிடம், வெகு நாட்கள் கழித்து பழைய மாமனைப் பார்த்த உணர்வு மச்சானுக்கு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top