தெம்மாங்கு பூந்தமிழே 2

 2

“இன்னைக்கி மண்டகப்படி மீனாட்சி சொக்கனுக்கு இல்ல. வீட்ல போயி எனக்குதான்னு நல்லா தெரிஞ்சு போச்சு.” என அண்ணனின் பார்வையோட்டத்தைப் பார்த்த தேன்மொழி, சற்று பயத்தோடே, வேகமாகக் குனிந்து குழந்தையை அமிர்தவல்லியிடம் இருந்து வாங்கினாள். 

குழந்தையோ, அமிர்தவல்லி மடியில் கிடத்தி பால் கொடுக்க, இடக் கையால் அவளது சேலையின் மேல் மாராப்பை இறுகப் பற்றியிருந்தது. தேன்மொழி குழந்தையைத் தூக்கிய வேகத்தில் மாராப்பை இழுத்துக் கொண்டே வந்தது.

தளிரின் விரல் பிரித்து சேலையை எடுத்துக்  கொண்டு மாராப்பை சரி செய்தவளுக்கு கண்கள் பூத்து நிற்க, பிஞ்சுவிரல் பிடித்து அழுந்த முத்தம் வைத்தவள், எழுந்து திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்திருந்தாள். தேன்மொழி தூக்கிய வேகத்திற்கு குழந்தை வீரிட்டு அழ ஆரம்பிக்க,

அமிர்தவல்லிக்கோ மசமசவென பழைய நினைவுகள் மனதில் பாரமேற்ற, வழியை நீர்த்திரையிட்டு மறைக்க, விழி துடைத்தவள் நடை கோவிலை விட்டு வேகமெடுத்தது.

 சுள்ளென சுட்டெரிக்கும் சித்திரை வெயிலில் சூடேறிய பட்டியக்கல் பாவையின் பாதத்தை பதம் பார்க்கவில்லை போலும். ஒருவேளை மனதின் வெக்கையில் பாதச்சூடு பிடிபடவில்லையா? சென்றவளையே பார்த்துக் கொண்டு நின்றவளிடம்,

“போலாமா?” எனக் கேட்டுக்கொண்டு தேன்மொழி அருகில் அழகர் வர, 

“ஏன்… உன் மாமனுக்கு ஒரு மஞ்சக்கயிறக் கொடுக்கறதுல என்ன கொறஞ்சு போகுமாம். நல்ல நாளும் பொழுதுமா அமிர்தா எவ்வளவு ஆசையா கை நீட்டினா. அவ மொகமே சுண்டிப்போச்சு.” என அண்ணனின் செயலைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், அழகரிடம் காய,

“நீ என்ன… உங்க அண்ணனக் கேக்க வேண்டியத எங்கிட்ட கேக்குற. உனக்கு நான் தரலைனா தான் நீ என்னையக் கேக்கணும். இந்தா…” என அவளது கைபிடித்து மஞ்சள் கயிறடங்கிய பாக்கெட்டை உள்ளங்கையில் வைத்தான்.‌ 

வாங்கியவள் பார்வை அதன் மீதே நிலைத்து இருக்க, “கூடிய சீக்கிரம் கழுத்துல கட்டுறதுக்கான நேரம் வரும். ஆமா… எப்ப இருந்து உங்க அண்ணே, எங்க மாமா ஆனாரு. இப்படி அவர் முன்னாடி பேசி வைக்காதே.” என்றவன், குழந்தையை அவன் கையில் வாங்கி அமர்த்த ஆரம்பிக்க, இன்னும் அழுகை கூடியது. 

“என்னடாம்மா… குட்டிம்மாவுக்கு என்ன வேணும்… லட்டுக்குட்டிக்கு பசிக்குதா? புவ்வா வேணுமா? என்ன வேணும்னு மாமா கிட்ட சொல்லுங்க. அத்தை அடிச்சாளா?” என ஒவ்வொன்றாகக் கேட்டு செல்லம் கொஞ்ச, அது அழுகையை நிறுத்துவது போலத் தெரியவில்லை. மேலும் அழுகை கூடியது.

“அவ பேச ஆரம்பிச்சா  உன்னையும், உன் மாமனையும் என்னவெல்லாம் கேப்பாளோ தெரியாது?” என அண்ணன் மீதுள்ள ஆத்திரத்தில் வெடித்துக் கொண்டிருக்க,

மகளின் அழுகுரல் கேட்டு வேகமாக இவர்களிடம் வந்தான் ருத்ரன். மாமனைப் பார்த்தவன் அவனது கையில் குழந்தையைக் கொடுக்க, முதலில் அதை தோளில் போட்டு ஆதரவாக மென்மையாக அணைக்க, அப்பனின் தொடுகையை உணர்ந்து சத்தம் சற்று மட்டுப்பட்டது. மெதுவாக அப்படியே தட்டிக் கொடுக்க இப்பொழுது மென்மையான கேவல் மட்டுமே குழந்தையிடம். 

“பகலெல்லாம் வச்சுருக்கறது நானு. ஆனா அப்பாகிட்டப் போனவுடனே எல்லாம் நெறஞ்சு போச்சு பாரு உன் மருமகளுக்கு.” என அண்ணனிடம் நேரடியாகப் பேசாமல் அழகரிடம் அங்கலாய்ப்பாய் சாடை பேச,

அருகில் நின்றவன் தங்கையைப் பார்த்து அர்த்தப்பார்வை ஒன்றை வீசினான்.  

‘பகலெல்லாம் உங்கிட்ட இருக்குற குழந்தை, அவகிட்ட மட்டும் எப்படி அமைதியா இருந்துச்சு. எத்தன நாளா இது நடக்குது?’ என்ற கேள்வி‌ தொக்கி நின்றது‌ அந்தப் பார்வையில்.

திருக்கல்யாணம் பார்த்துவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தவர்களைப் பார்த்தவன் பார்வை அமிர்தவல்லியின் மீதே நங்கூரம் போட்டது.

தூங்கும் குழந்தையை பாந்தமாக தோளில் போட்டு அணைத்தவாறு தேன்மொழியோடு நடந்து வந்தவளைப் பார்க்க மனம் விம்மியது. ஏனோ பார்வையை விலக்க மனம் வரவில்லை. மீனாட்சி குங்குமமும் திருநீறும் நெற்றியை அலங்கரிக்க, தளறப்பின்னிய ஈரக்கூந்தலில் மல்லி, மரிக்கொழுந்து, கனகாம்பரம் கலந்து கட்டிய கதம்பமும், செம்மஞ்சள் நிற கைத்தறி பட்டுப்புடவையில், குழந்தையும் கையுமாக‌ அவளைப் பார்க்கையில் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள் ஆடவன் கண்ணிற்கு. 

தூக்கம் தெளிந்து எழுந்த குழந்தை அரைகுறைத் தூக்கத்திலும் அவள் முகம் பார்த்து புன்னகை பூத்தது. தலைக்கு மேலே தூக்கிப்பிடித்து முகத்தோடு வைத்து அழுத்தி வயிற்றோடு முத்தம் வைக்க, அவளது கன்னம் கிள்ளி விளையாண்டது பூஞ்சிட்டு. வாய்க்குள் விரல் விட்டு துழாவியது. அவள் ஆசையாக சூடிக்கொண்ட  பூச்சரத்தை இழுத்து உதிர்த்தது. மன்னவன் கைபட்டு உதிரும் மலர்ச்சரத்தை அடுத்து உதிர்க்கும் உரிமை பெற்றது மழலையின் கைகளாயிற்றே. ஆனால் இங்கு மன்னவன் கைபடாத மலர்ச்சரம் மழலையின் கைபட்டு உதிர்ந்தது. 

செல்லமாக முறைத்து விட்டு வயிற்றில் வாய்வைத்து ஊத, மழலைச் சிரிப்பில் அங்கு குடிகொண்டிருந்த அம்மையப்பனும் கூட ஒரு கணம் உலகம் மறந்து நின்றிருப்பர். பிள்ளையைப் பெற்றவனுக்கு கேட்கவா வேண்டும். தன்னை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு, நிதானமாக அப்பொழுதுதான் ஒன்று பிடிபட்டது. 

தன்னிடமும், குடும்பத்தாரிடமும் தவிர யாரிடமும் ஒட்டாத குழந்தைக்கு இவளிடம் இருக்கும் ஒட்டுதலே சொல்லியது இருவருக்கும் ஒரு நாள் பழக்கம் இல்லை என்று. 

புரிந்த விஷயங்கள் புரியாத விஷயங்களைப்  புரிய வைத்தது. குழந்தை மீதிருந்து வந்த பழக்கப்பட்ட வாசனை எப்படி வந்தது என இப்பொழுதுதான் தெளிவு வந்தது அவனுக்கு. 

அவளது மேல் முந்தானையைப் பற்றியிருந்த விதமே சுட்டியது, தன் மார்பில் துயில் கொள்ளும் பொழுது பனியனை வாகாகப் பற்றியிருக்கும் செயல் என்று.  

 உன்னைய யாரு அவளிடம் குழந்தையை கொடுக்கச் சொன்னது எனும்படி தங்கையைத் திரும்பி நேரடியாக ஒரு பார்வை பார்க்க, அவள் அதைத் துடைத்து தூரப்போட்டாள். கண்டு கொள்ளவே இல்லை. 

“மாமா… நான் இவங்கள வீட்ல விட்டுட்டு வர்றே மாமா. வெயில்ல குழந்தை ரொம்ப அழறா. அப்படியே வரும்போது காலியான அயிட்டெமெல்லாம் ஹோட்டலுக்குப் போயி எடுத்துட்டு வந்துர்றே.” என இருவரது பார்வையையும் பார்த்தவன், தேன்மொழியை அவ்விடம் விட்டு கிளப்பினான். 

அண்ணன் தங்கைக்கு இடையில் பேச்சு வார்த்தை நின்று பல மாதங்கள் ஆகிறது. எல்லாம் பார்வை பரிமாற்றங்கள் மட்டும் தான். அதுவும் பெரும்பாலும் முறைப்பாகத்தான் இருக்கும். 

“கிளம்பு.” என அண்ணனை விடாது முறைத்து நின்றவளை அழகர் அதட்ட,

“புள்ளய கொடுக்க சொல்லுங்க.” என்றாள். கோபத்தில் தொலைந்துபோன மரியாதை இப்பொழுது தலை காட்டியது.  

“இங்கேயும் நாந்தானா? கொடுங்க மாமா!” என குழந்தையை வாங்கியவன். தேன்மொழியிடம் கொடுக்க, வாங்கியவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள். 

ருத்ரன் கார் சாவியைக் கொடுக்க, வாங்கிக் கொண்டு செல்பவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தங்கையின் சிறுபிள்ளைதனத்தில் புன்னகை தோன்றி மறைந்தது ஒரு கணம். 

அடுத்த கணமே அழுதுகொண்டே கோவிலைவிட்டுச் சென்றவள் முகம் மனதில் தோன்ற இடதுபக்க குபேரமூலை கணமேறிப்போனது. புன்னகை சட்டென மறைந்து, மனம் வெறுமை சூழ்ந்தது. இரும்புத் திரை போட்ட மனதின் பூட்டை சிதறடிக்கும் சக்தி அவளது ஒரு துளி கண்ணீருக்கு உண்டு என்பதை நன்கு அறிந்தவன்.

‘ஏன்டி… எல்லாருடைய பாவத்தையும் என் தலையிலயே சுமத்துறீங்க.’ என மனம் ஆற்றாமையில் கொந்தளித்தது.

ஒருவருக்குள் ஒருவர் ஒழிந்து கொண்டு ஏன் இந்த கண்ணாமூச்சி என்று இருவருக்கும் தெரியவில்லை. ஆண்கள் வெட்கப்படும், கூச்சப்படும் தருணங்கள் மட்டுமல்ல, கோழைகளாகும் தருணமும் நிரம்ப உண்டு. கொந்தளித்து மேலெழும் உணர்வுகள் குழந்தையின் முகம் கண்முன் தோன்ற சட்டென வடிந்து நீர்த்துப் போனது.

மனதில் ஏறிய பாரத்தோடு கோவிலுக்குள் சென்றான். தெய்வத்திடம் கேட்பதற்கு எதுவுமில்லை என்றில்லை. கேள்விகள் ஓராயிரம் உண்டு மனதில். எதை‌ முதலில் கேட்பதென்றும் தெரியவில்லை. மூலவர் தரிசனத்திற்கு கூட்டம் அலை மோதியது. எப்படியும் சாமி பார்க்க மணிக்கணக்கு ஆகும் எனத் தோன்றியது. 

தந்தையின் பெயர் சொன்னால் நேரிடையாக சிறப்பு சாமி தரிசனம் சடுதியில் கிடைக்கும். என்னவோ சொல்ல மனம் வரவில்லை. சற்று நேரம் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியேறிவிட்டான்.

மீதியை பணியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, ஹோட்டலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு, தனது ஜாவாவில் கிளம்பி விட்டான். கோவிலை அடுத்து ஒட்டிய வீதியிலேயே ஹோட்டல் என்பதால் திருவிழா நேரத்தில் வியாபாரம் தூள் பறந்தது. மற்ற நேரங்களிலும் குறைவிருக்காது. என்ன… அப்பொழுதெல்லாம் அசைவமும் ஓடும். இப்பொழுது திருவிழா நேரம் என்பதால் சைவம் மட்டுமே.

சமையல் செய்யும் இடம் சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தான். அவன் இங்கு வருகிறான் என்றாலே சமையல் செய்பவர்களுக்கு பதட்டம் கூடிவிடும். சுத்தம் சோறு போடும் என்பதை கண்ணும் கருத்துமாகக் கடைபிடிப்பவன். பாத்திரம், காய் நறுக்கிய இடம், அடுப்பு மேடை எதுவானாலும் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

வெட்டிய காய்கறியின் மீதங்கள் மேடையில் அப்படியே கிடக்க, அங்கே இருந்த குப்பை கூடையையும், கிட்சன் வைப்பரையும் எடுத்தவன், குப்பைகளை ஒன்று சேர்த்து கூடைக்குள் தள்ளினான். 

இவன் வேலை செய்வதைப் பார்த்து அங்கு பதட்டமாக வந்த ஒருவன், “கொடுங்க ண்ணா.” என்று வேகமகாக் கை நீட்ட, 

“நீ போய் அடுப்பக் கவனிடா. அப்படியே விட்டுட்டு வருவியா? கோயிலுக்கு ஆளுங்க போய்ட்டதால ஆள் பத்தலைனு தெரியும். இது நம்ம ஹோட்டல். நான் பண்ணாம வேற யார் பண்ணுவா.” என அதட்ட அவன் பேசாமல் திரும்பி விட்டான். 

 குறையை எப்பொழுதும் சுட்டிக்காட்ட மாட்டான். அவனே செய்ய முற்பட, அடுத்த முறை இது போல் அவன் அங்கு வரும் பொழுது சிறு கவனக் குறைவும் இருக்காது. 

கல்லாவில் வந்து அமர்ந்தவன்… பில்களை சரிபார்த்து பணத்தை வாங்கிப் போட ஆரம்பிக்க, வேலை அவனை இழுத்துக் கொண்டது. 

கீழ்தளம் முழுமையும் நான்கு பேர் மற்றும் ஆறுபேர் அமரக்கூடிய டேபிள்களும், முதல் தளத்தில் அதே போல் குஷன் அமைத்த சோஃபாக்களோடு பிரைவசியான கேபின்களோடு, நவீனமயமான ஏசி தளம். அதற்கு மேல் மொட்டை மாடி… வெட்டவெளியில் குடையின் கீழ் டேபிள்கள் போடப்பட்டிருக்கும். செயற்கை நீரோடை, நீரூற்று, அதில் சிறு தாமரைக்குளம், அதில் வண்ண மீன்கள் என செடி, கொடிவகைகளோடு இரவில் மெல்லிய விளக்கு அலங்காரத்தில் ரம்யமாகக் காட்சி அளிக்கும் அந்த இடம். 

அங்கே அவனுக்கென தனி ஆஃபிஸ் ரூம் உண்டு. திருமணப் பேக்கேஜ் பேசவருபவர்கள், மற்றும் கேட்டரிங் ஆர்டர் சம்பந்தமாக பேச வருபவர்களை இங்கு அழைத்து வந்து விடுவான். 

இரவு மணி ஒன்பதை நெருங்க அப்பொழுதும் கூட்டம் குறைந்த பாடில்லை.  பரோட்டாவின் வீச்சில் அப்பொழுதும் கைகள் சுழன்று கொண்டு இருந்தது பரோட்டா மாஸ்ட்டருக்கு. 

காலையில் இட்லி, பூரி, தோசை, ஆப்பம், பனியாரம் என பாரம்பரிய உணவு வகைகளோடு, மாலை நேர சிற்றுண்டியாக பானிபூரி, பேல்பூரி, சென்னா போன்ற வட இந்திய சாட்‌ அயிட்டங்களும் உண்டு. காலநிலைக்கு தக்கன, நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற அந்நிய தேச உணவு வகைகளும் உண்டு. மொத்தத்தில் ஆல் இன் ஒன் அழகுராஜா கடை நம்ம ருத்ரபாண்டியனின் பாண்டியன் ஹோட்டல். 

மணி பத்து… சர்ட்டரை பாதி இறக்கிவிட்டு கல்லாவில் கணக்குப் பார்த்துக்கொண்டு இருந்தவனிடம், 

“தம்பி… கெளம்புறே.” என மாஸ்ட்டர் ஒருவர் வர, சரி என்பது போல் நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தன் வேலையைத் தொடர, 

அவனோ கிளம்பாமல் தயங்கி நிற்க, “அதெல்லாம் அக்காகிட்ட கொடுத்துக்கறே. நீங்க இப்ப கெளம்புங்க.” என நிமிராமலே பதில் சொல்ல,

“நாள் பூரா தீயில நின்னு கஷ்டப்படுறது நானு. ஆனா ஒத்த ரூவா கண்ணுல பாக்க முடியல.” என சலிப்பாய் வாய்க்குள் முனங்கினான்.

“இப்படி நீங்க நெருப்புல வெந்து சம்பாதிக்கிற காசு தண்ணியா போயிறக்கூடாதுனு தான் அக்கா கிட்ட கொடுக்கறது. நீங்க கெளம்புங்க.” என அதட்ட, வேறு வழியில்லாமல் கிளம்பினான்.

கணக்கு வழக்கை முடித்துவிட்டு, ஒருமுறை சமையல் அறை சென்று அனைத்தையும் சரி பார்த்தவன், வெளியே வந்து ஷர்ட்டரை இழுத்து மூடினான். 

இரவு எந்நேரம் ஆனாலும் சாப்பாடு வீட்டில் தான். இது அவனது அன்னையின் எழுதப்படாத உத்தரவு. வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். 

முன்னோர்களின் பாரம்பரியம் பேசும் பழமையின் செல்வாக்கான வீடு, சற்று நவீன புதுப்பித்தலுடன் கம்பீரமாகக் காட்சி அளித்தது. 

வண்டிச்சத்தம் கேட்டே உள்ளே கட்டிப் போட்டிருந்த நாய் வாலாட்டிக் கொண்டே குலைக்க, கேட்டைத் திறந்து உள்ளே வண்டியை ஸ்டான்ட் போட்டு விட்டு, அருகே சென்றவனிடம் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கிப் போட்டு நெஞ்சு வரை தாவி முகத்தை நக்கியது. அதனை தடவிக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டிருக்க,

 சத்தம் கேட்டு மஞ்சுளாதேவி வந்து கதவைத் திறந்தார். உள்ளே வந்தான். தேன்மொழியின் அறை திறந்தே இருக்க, இன்னும் தூங்காமல் அத்தைக்கு ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது பூஞ்சிட்டு. குழந்தையின் விளையாட்டு சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.  

தனது அறைக்கு சென்றவன் குளித்துவிட்டு வர, அதற்குள் உணவுகளை டேபிளில் எடுத்து வைத்துவிட்டு பக்கத்து சேரில் அமர்ந்து கொண்டார். 

“நானே எடுத்து வச்சு சாப்புட்டுக்குவேன்ல ம்மா. மொழங்கால் வலியோட இன்னும் தூங்காம இருக்கணுமா?” என தாயிடம் அக்கறையாக கோபித்துக் கொள்ள, 

“ஹோட்டல் ஆரம்பிச்சதுல இருந்து ஒரு நேரம் தான் வீட்ல சாப்புர்ற. அதுவும் என்னோட கட்டாயத்துல. அந்த ஒரு நேரம் கூட எங்கையால எம்பிள்ளைக்கு நான் பரிமாறக்கூடாதா? வேணாம்னா சொல்லிறு.” என முகத்தத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ம்மா… நான் உங்க கால்வலிய நெனச்சு சொன்னே. வேறெந்த அர்த்தமும் இதுக்கு இல்ல.” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான். 

சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் இருந்தவர், அவன் கைகழுவி முடிக்க, 

“ருத்ரா… நாளைக்கி அகிலாண்டம் வர்றதா சொல்லி இருக்காங்க.” என மெதுவாக ஆரம்பித்தார். இவரை விட நாத்தனார் வயது குறைவு என்பதால் பெயர் சொல்லியே விளிப்பது.

“அவங்க அண்ணே வீட்டுக்கு அவங்க வர்றாங்க. இத ஏம்மா எங்கிட்ட சொல்றீங்க?” என்றான் பட்டும் படாமலும்.

“இல்லடா… அவங்க எதுக்கு வர்றாங்கனு தெரியாதா?” எனத் தயங்க,

“அவங்க எத்தன தடவ கேட்டாலும் என் முடிவு அதே தாம்மா.”

“இப்படியே அண்ணனும், தங்கச்சியும் வீம்பு புடிச்சா நான் என்ன தான்டா பண்றது. எல்லாம் நான் வாங்கி வந்த வரம். உங்கள சொல்லி தப்பில்ல. என் தலையெழுத்த கோணல்மாணலா கிறுக்குனவன சொல்லணும்.” என பிள்ளைகளை நினைத்து ஆதங்கத்தில் புலம்ப ஆரம்பிக்க,

“ம்மா… என்னய காரணம் காட்டி யாரோட வாழ்க்கையையும் படுகுழியில தள்ள வேண்டாம். ஏற்கனவே‌ ஒரு தடவ தள்ளுனது போதும்.” என்றவாரே, அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டு இருந்தவள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 

அப்பனைப் பார்த்ததும் கையைத் தூக்கிக் கொண்டு தாவிக்கொண்டு வந்தது பூஞ்சிட்டு. குழந்தையை வாங்கியவன், கன்னத்தில் அழுந்த முத்தம் வைக்க, தாடையின் சொரசொரப்பில் பட்டென கன்னம் விலக்க, மீண்டும் முத்தம் கொடுக்க, மீண்டும் கன்னம் விலக்க என அப்பனும் மகளும் ஊமை விளையாட்டு விளையாட, அப்பன் விளையாடுகிறான் எனத் தெரிந்து, முட்டிக் கொண்டு நின்ற இரண்டு பால்பற்களைக் காட்டி கிண்கிணியாய்ச் சிரிக்க… பார்த்துக் கொண்டு இருந்த இரண்டு பெண்களின் கண்ணையும், மனத்தையும் நிரப்பி நின்றது இக்காட்சி. 

ஆனால் மகனின் வாழ்க்கைக்கு இது மட்டும் போதாதே என அன்னை மனம் அங்கலாய்த்தது. இரண்டு நாட்களாக கோவில் ஹோட்டல் என நேரமில்லாமல் அலைவதால் ட்ரிம் செய்யப்படாத தாடி மகளை சீண்டிப் பார்த்தது.

“மொதல்ல, உங்க மகன்கிட்ட இந்த தாடிய எடுக்க சொல்லுங்க. தேவதாஸ் மாதிரி தாடி வச்சுக்கிட்டு புள்ளய கொஞ்ச வேணாம்.” என தங்கையின் பேச்சு சிடுசிடுக்க, இது அம்மாவின் பேச்சை திசைதிருப்ப என்பது அறியாதவனா என்ன?

“ம்மா… எனக்கு யாரோ அது பாழுங்கிணறுன்னு சொன்னாங்க. ஆனா அவங்களுக்கே அது பாற்கடலா தெரியும் போலயே? கூடிய சீக்கிரம் அதுல புடுச்சு தள்ளிருவோம்.” என தங்கையை கேலி பேச,

“ம்மா… நாளைக்கி வர்றவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். யாரும் எனக்காக எதுவும் பண்ண வேண்டாம். என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். பெரியவங்களுக்கு கொடுக்குற மரியாதையை அவங்களா காப்பாத்திக்க தெரியனும். நாம் புடிச்ச முயலுக்கு மூனே கால்னு நின்னா, நாம ஒன்னும் பண்ண முடியாது.” என இருவரும் அம்மாவை மையமாக வைத்துக் கொண்டு அழைத்து மாத்துக்கட்டில் மஞ்சுளாவை ஏலம் விட,

“சின்னப் பிள்ளையில தான் ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு மாத்துக்கட்டுல அம்மா அம்மான்னு வந்து நின்னீங்கன்னா, எரும மாடாட்டம் வளந்தும் அதே பல்லவி தான் தொடருது.” என சலித்துக் கொண்டவர்,

“தேனு… பாத்துப் பேசு. நாளைக்கி நீ வாழப் போற‌வீடு.” என மஞ்சுளாதேவி மகளைக் கண்டிக்கவும் தவறவில்லை.

மகள் பேசுவது அவரது நாத்தனாரைப்பற்றி. நாளை அது மகள் வாழப்போகும் வீடும் கூட. இவள் பாட்டிற்கு அண்ணன் மீதுள்ள பாசத்தில் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி வைக்க, அது அகிலாண்டத்தை தூண்டி‌விட்டது போல ஆகிவிடுமே எனப் பயந்தார். 

கணவரும் தங்கைக்கு தான் ஒத்து ஊதுவார். தனக்குப் பின் பத்து வருடம் கழித்துப் பிறந்த பெண்பிள்ளை என்பதால், தங்கைப் பாசம் அவர் கண்ணை மறைக்கும். அது தான் அகிலாண்டத்திற்கு சாதகமும் கூட. 

தங்கை வந்து அண்ணன் முன் நின்று எனக்குனு யார் இருக்கா. அஞ்சாறு அண்ணந்தம்பியா, இல்ல, அக்கா தங்கச்சியா. யார் வீட்டுக்கு போறே. இருக்கறது ஒரே ஒரு அண்ணே. அதுக்கும் எனக்கு கொடுப்பினை இல்லாம போகும் போல… என கண்ணைக் கசக்க ஆரம்பித்து விட்டால் போதும், கேசவமூர்த்தி அப்படியே பாசமலர் சிவாஜியாக உருகி விடுவார். 

“அது அவங்களுக்கும் தெரியனும் ம்மா. சும்மா என்னய காரணம் காட்டி அண்ணன கார்னர் பண்ணக் கூடாது. மொத தடவ தான் எதுவும் தெரியாம ஏமாந்துட்டே. இப்ப எல்லாம் அப்படி விடமுடியாது.” 

தனக்காக தன் தங்கை பேசுவது உள்ளுக்குள் குளிர்ந்தாலும், இவனைக் காரணம் காட்டி இவள் திருமணத்தை தள்ளிப் போடுவதும் பிடிக்கவில்லை. 

“ம்மா… அவங்களுக்கு சொன்னது தான் உங்களுக்கும் தேனுவுக்கும்.‌ என்னோட முடிவுல எந்த மாற்றமும்‌ இல்ல. என் வாழ்க்கையில என் மகளத்தவிர இனிமே இன்னொரு பொண்ணுக்கு இடமில்ல.” என்றவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டான். இன்னும் இங்கே நின்றால் பேச்சு வளர்ந்து கொண்டே போகும் என்பதால்.

இருபத்தியேழு வயதிற்குள் அனைத்தையும் ஆண்டு அனுபவித்து அலுத்து சலித்த கிழவனாட்டம் மகன் பேசிச் செல்வது மஞ்சுளாவிற்கு ஆயாசமாய் உணர வைத்தது. 

தேன்மொழி சொன்ன மாதிரி நாம்புடிச்ச முயலுக்கு மூனே காலுன்னு நிக்கறது இப்ப இவன் தான் என மகனைப் பற்றி எண்ணத் தோன்றியது. 

“ம்மா… அப்படியே பாத்துட்டே நிக்கப் போறீங்களா? அதெல்லாம் சரிக்கட்டிறலாம். இன்னொரு பொண்ணுக்கு இடமில்லனு தானே சொல்லிட்டுப் போறாங்க. அது பொண்ணு யாருங்கறதப் பொறுத்து முடிவு மாறும். நீங்க போய் படுங்க.” என அன்னையின் எண்ணவோட்டம் அறிந்த மகளாய், அம்மாவிற்கு ஆறுதல் சொல்லியவள், உணவு மேஜையை ஒதுங்க வைக்க ஆரம்பித்தாள். 

மகள் கூறிய கூற்றில் ஏதோ ஒரு ஆறுதல் பாலின் மீது படிந்த ஆடையாகத் தென்பட பெருமூச்சோடு படுக்கைக்கு சென்றார். 

பூப்பந்தாய் மார்பில் கிடந்த மகளை இடக்கை கொண்டு நலுங்காமல் அணைத்துப் பிடித்திருக்க, வலக்கை தலைமீது மடக்கி வைத்து விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஏசியின் மென் இறைச்சல் மட்டுமே அறைக்குள்.

தனது அறைக்கு வந்தவன், படுக்கையில் படுத்து, மகளை மார்பில் போட்டு தட்டிக் கொடுக்க ஆரம்பிக்க, இவ்வளவு நேரமாக அத்தைக்குப் போக்குக் காட்டிய மகள், இப்பொழுது சமத்தாக அப்பனின் பனியனைப் பிடித்துக் கொண்டு கண் சொருகியது. அது தூங்குவதற்கு அப்பனின் வாசம் வேண்டும்.

‘ஏத்தம் புடிச்சவ. அத்தன கூட்டத்துலயும் அசால்ட்டா வச்ச கண்ண வாங்காமப் பாக்குறா… குந்தானி.’ என அவள் முன்னழகு பார்த்ததும், முன்ன விட்டு பின்னழகு பார்த்ததும் நினைவுக்கு வர, பசுங்கிழங்கு மஞ்சளும், பூலாங்கிழங்கின் வாசமும் இப்பொழுது பிள்ளை மீதிருந்து வருவது போல் தோன்ற, மெதுவாக கண் சொருகியது அவனுக்கும். 

அலைமேல் படகாய் அலைக்கழிந்தவனை, நீரின் மீது இலைபோல அவளது நினைவுகள் தாலாட்ட, அது மட்டும் போதும் போல இவன் கண் துஞ்ச. 

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே

தூக்கம் உன் கண்களைத்

தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்த தூக்கமும் அமைதியும்

நானானால் உன்னை

தொடர்ந்திருப்பேன் என்றும்

துணை இருப்பேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top