தெம்மாங்கு பூந்தமிழே 19

19

“இப்பவும் உங்க ரெண்டு பேத்துக்கும் இடையில ஒன்னுமேயில்ல. அப்படித்தானடா?” கோபத்தை பல்லிடுக்கில் வைத்துக் கொண்டு கேட்டான் மணிகண்டன்.

“இப்ப ஒன்னு மட்டும் இல்லடா. ஓராயிரம் இருக்கு. அவ எனக்கு அக்கா மக. நான் அவளுக்கு தாய்மாமன். எங்க அம்மாவுக்கு தல பேத்தி.” கூறியவன் வார்த்தைகள் உள்ளார்ந்து வந்தன. 

“அப்ப, அந்தப் புள்ளைக்கு தானடா முதல் உரிமை. ஆனா, இப்ப வெட்ட தலயக் கொடுத்துட்டு நிக்கிற.”

“நேந்துவிட்ட ஆடுடா. மாலையப்போட்டு மஞ்சத்தண்ணியத் தெளிச்சா தலயக் குலுக்கித் தானே ஆகணும். பெத்தவங்க, வளத்தவங்க ரெண்டு பேரோட வாக்கையும் காப்பாத்தணும்.” 

“நானே உன்னைய வெட்டி பொலி போட்டுறுவேன்டா… எங்கிட்டேயே உள்குத்து வச்சுப் பேசுறியா? அந்தப் புள்ளய பாக்குறப்ப எல்லாம் உன் கண்ணுல எவ்வளவு காதல் தெரிஞ்சுதுன்னு எனக்கு மட்டுந்தான்டா தெரியும். இது உன்னோட வாழ்க்கைடா பங்கு. நன்றிக்கடன்ற பேருல வாழ்க்கைய அடகு வச்சுட்டு, வாழ் நாள் பூரா நடப்பொணமா வாழப் போறீயா?” என கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்திருந்தான்.

“அது ஏற்கனவே மூழ்கிப் போச்சுடா. நண்பனாடா நீ. ஃப்ரெண்ட்னு கல்யாணத்துக்கு கூப்பிட வந்தா பொணம் கிணம்னு பேசுற?” வலிந்து பேச்சை திசை மாற்றினான் ருத்ரன்.

“இது ஒரு கல்யாணம். இதுக்கு வந்து வாழ்த்த வேற செய்யணுமா? நீ செய்யப்போற காரியத்துக்கு உன்னைய நெசமாவே வெட்டிப்போட்டாலும் தப்பில்லடா?” சலித்துக் கொண்டான் மணிகண்டன்.

“செத்தவன, எத்தனதடவைடா கொல்ல முடியும்? வாழ்த்தலைனாலும் பரவாயில்ல. சாபம் விட்டுறாதடா. ஏற்கனவே ஒருத்தியோட பாவத்த சுமந்துட்டிருக்கே. அதக் கொண்டு போயே எங்க தொலைக்கறதுன்னு தெரியலடா.” என்றவனது வார்த்தைகளில் கதவிடுக்கில் விரல் சிக்கிய வலி.

“பங்கு…” என்றவன் குரலும் தழுதழுத்தது நண்பனுக்காக. நண்பனின் வாழ்க்கையே நன்றிக்கடன் எனும் பெயரில் வீணாகப்போகுதே எனும் ஆதங்கம் அவனது பேச்சில். 

அடிக்கடி கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன். 

“இன்னும் பிரேக் விட டைம் இருக்குடா.” என மணிகண்டன் கூற,

“அதனால தான்டா சீக்கிரம் கெளம்பனும்.” என்றான்.

“அந்தப்பிள்ளைய பாத்து பேசலியாடா?”

“அவ முகம்பாத்துப் பேசற தைரியம் எனக்கு இல்லடா.” எனச் சொன்னவனின் வார்த்தைகளில் விரக்தியின் உச்சம். நண்பனை திருமணத்திற்கு அழைக்க காலேஜ் கேன்டீன் வந்திருந்தான். ஏதோ ஒரு நப்பாசை. அவளையும் பார்த்துவிட வேண்டும் என்று. ஆனால் அதற்கான மனதைரியம் தான் அவனிடம் இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பது. பார்த்தாலும் என்ன பேசுவது. இப்பொழுது அவளிடம் பேசுவதற்கு அத்தனை உரிமையும், உறவும் அவனுக்கு இருக்கிறது. ஆனாலும் மனம் மருகியது.

இன்னும் காலேஜ் ப்ரேக்விட நேரமிருக்க, அமிர்தா மட்டும் தனித்து வருவது தெரிந்தது. சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டான். 

வந்தவள் காஃபி ஆர்டர் செய்தாள்.

“என்னம்மா பிரேக் விடுறதுக்குள்ள வந்துட்ட. க்ளாஸ் அவ்ளோ போரடிச்சுதா?” என விசாரிக்க,

“தலைவலி ண்ணா. க்ளாஸ்ல உக்கார முடியல. அதான் வந்துட்டே. ஸ்ட்ராங்கா ஒரு‌ காஃபி போடச் சொல்லுங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்க, மேஜை மீதிருந்த கல்யாணப் பத்திரிக்கை கண்ணில் பட்டது. பார்த்ததும் யாருடையது என அடையாளம் தெரிந்தது. 

மஞ்சுளாதேவி தான் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்துள்ளாறே. 

“இதுதான் நீங்க சொன்ன தூரத்து சொந்தமா ம்மா? ரொம்ம்ம்ப தூரம் தான் போலயே?” என மஞ்சுளாதேவி சென்றவுடன், கண்கள் கலங்க அம்மாவை ஒரு பிடி பிடித்தாள் மகள். 

“என்னாடி பண்ணச் சொல்ற. எங்க… நாங்க அவன எங்கபக்கம் இழுத்துறுவோம்னு சித்திக்கு பயம். அதுவுமில்லாம அந்த அகிலாண்டத்துக்கு எங்களக் கண்டாலே பிடிக்காது. எளக்காரமாப் பாக்கும். அதனாலேயே போக்குவரத்து அத்துப் போச்சுடி.” எனக் கூறியவர், மகளிடம்,

“அமிர்து, நான் ஒன்னு சொல்லவா?” என்றார் தயங்கியபடி.

“சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லாம இப்ப என்னத்த சொல்லப்போறீங்க. சொல்றதுக்கு நல்ல நேரம் ஏதும் பாத்தீங்களா?” என ஆத்திரத்தில் மகள் பொங்க,

“என் தம்பிய தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிறாதடி. உன் மனசு எனக்குப் புரியுது. ஆனா பெத்தவளா இதுல என்னால ஒன்னும் செய்ய முடியாது ம்மா. ஏற்கனவே பேசி வச்சது.” என மகளின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சாத குறையாக கேட்க, 

“இப்ப தான் தம்பினு வாய்ல வருதுல்ல… இதை முதல்லயே சொல்லியிருக்கலாமே ம்மா?” என கண்கள் கலங்க,

“தெரிஞ்சா மட்டும் என்னடி பண்ணியிருப்ப?”

“உன் தம்பிய கடத்திட்டுப் போயி நானே தாலி கட்டியிருப்பேன்.” என அம்மாவிடம் ஜம்பம் பேசிவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டவளுக்கு மனக்கதவை அடைக்கும் வழி தெரியாமல் வெடித்து அழுதாள். ஆசை ஆசையாக கட்டிய மனக்கோட்டையில் கட்டி முடிக்கும் முன்னே இடி விழுந்த நிலை.

நிலாக்கள் தேய்வது மட்டுமில்லை. காதல் நிலாக்கள் சில நேரங்களில் உடைந்து போவதும் உண்டு. உடைக்கப்படுவதும் உண்டு. 

 இன்று கல்லூரி வந்தும் அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைவலி மண்டையைப் பிளக்க, அவன் நினைவாகவே இருக்க, கேன்டீன் வந்தாள். 

மீண்டும் அவள் தலைவலிக்கு காரணமான பத்திரிக்கை அவள் கண்முன். கையில் எடுத்தவள், பார்வை சுற்றும் முற்றும் தேடியது. தேடிய முகம் பார்வைக்கு அகப்படவில்லை. ஆனால் அகம் இங்கு தானிருக்கிறான் என உணர்த்தியது.  

“அண்ணா… தேன்மொழி அண்ணனுக்கு கண்ணாமூச்சி விளையாடுறது பிடிச்சுருக்கலாம். ஆனா… இந்த அமிர்தவல்லியோட மாமன் யாரைப் பார்த்தும் ஒழியக்கூடாது. என் மாமனுக்கு அது அழகில்ல. எந்தச் சூழ்நிலையிலும் நான் அவங்கள சங்கடப்படுத்த மாட்டேன்.” என்றவள் திரும்பி நடக்க, 

“ஏம்மா… காஃபி.” என அழைத்தான்.

“அத என் மாமனுக்கு கொடுங்க ண்ணே. இப்ப அவங்களுக்கு தான் தலைவலிக்கும்.” என்றவள் விறுவிறுவென நடையைக்கட்டினாள். அவளது வார்த்தைகள் ஈரத்துணியாய் மனதை இறுக்கிப் பிழிய, கண்களில் இரத்தவரியோட வெளியே வந்தான். வெளியே வந்தவனது பார்வை, துடிப்போடு அவனது துடிப்பை பின் தொடர்ந்தது. தனியாக மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டவளது கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தது. 

“போய் ஏதாவது பேசுடா.” என மணிகண்டன் ஊக்க, 

“வேணாண்டா. அது இன்னும் கஷ்ட்டம்.” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி 

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

*******************

அந்தத் திருமண மண்டபமே கல்யாணக்களை கட்டியிருந்தது. 

கேசவமூர்த்தி, மஞ்சுளாதேவி தத்துப் புத்திரனுக்கும், ரகுராமன், அகிலாண்டம் தவப்புதல்விக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பெற்று இன்று சுபயோக சுபதினத்தில் நடந்தேறியது. 

விசாலாட்சி இறந்து மூன்று மாதங்களை கடந்து விட்டது. 

அன்று… தனித்து நின்ற அம்மாவிடம் வந்தவன், “ஏம்மா இங்கேயே நின்னுட்டீங்க.” எனக் கேட்க,

“நீ விட்டுட்டுப் போன எடத்துலதாம்ப்பா நிக்கிறே.” என்றார் தொண்டை கமர.

“உங்கள விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேம்மா.” என்றவனது பதில், வளர்த்தவள் நெஞ்சில் பால் வார்க்க, கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. மஞ்சுளாவின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். 

கட்டிலில் பெற்றவள் காலடியில் அமர்ந்து கொண்டு, ஒரு கையால் மஞ்சுளாவையும், மறுகையால் பெற்றவள் காலையும் பிடித்துக் கொண்டான். சில்லிட்டிருந்தது, உடம்பில் சூடு குறைந்து விட்டிருந்தது. அவனையுமறியாமல் கண்கள் கலங்க, மஞ்சுளாவிற்காக தம்மடக்கினான். 

பெற்ற கடனுக்கு படுக்கையில் கிடந்தவளுக்கு பால் ஊற்றச் சொல்ல, பால் கொண்டு வந்தவளை திரும்பிப் பார்த்தான். கண்களில் நிலநடுக்கம். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது கண்களும் கலங்கிச் சிவந்திருக்க, சற்று முன் அவளறிந்து கொண்ட உண்மைகளில் அமிர்தாவுக்குமே அதிர்ச்சியே. 

இந்தக் கண்ணீர் அம்மாச்சிக்காக இல்லை, தங்களுக்காக என்பதை அறிந்தவனது கண்ணீர் இப்பொழுது அவன் கட்டுக்குள் இல்லை. கரை உடைத்தது. சட்டென்று குனிந்து கட்டுப்படுத்தினான். அமிர்தாவைப் பார்த்த மஞ்சுளாவும், கண்கள் கலங்கிய மகனின் தலையை வயிற்றோடு தாங்கிப் பிடித்துக் கொண்டார். மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத இயலாமையுடன்.

பாலை வாங்கி பெற்றவள் கடன் தீர்த்துவிட்டு, வளர்த்தவள் கைபிடித்து வெளியேறினான்.‌

அதற்கெனவே உயிரை இழுத்துப்பிடித்து வைத்திருந்தது போல், அன்றிரவே விசாலாட்சி சிவலோக பதவியடைந்துவிட, அடுத்த காரியங்கள் மளமளவென நடந்தேறியது. மகன் கடமைக்கு பாலூற்றியதோடு சரி. மற்ற சாங்கியம் எதுவும் அவன் செய்யவில்லை. வெங்கடேசனே அனைத்தையும் அம்மாவிற்கு செய்தான்.

என்ன இருந்தாலும் பெற்றவள் ஆயிற்றே. அகிலாண்டம் பெரியமனது பண்ணி  மூன்று மாதங்கள் பொறுமை காத்தார்.

ஏற்கனவே ஜோசியர் கூறிய மூன்று மாதங்கள் கழித்த தேதிக்கு கல்யாணப் பேச்சையெடுக்க இந்த முறை அவன் மறுப்பேதும் சொல்லவில்லை.

இம்முறை தேன்மொழி தான் அண்ணனுக்காக வாதாடிப் பார்த்தாள். சிறுபிள்ளை பேச்சு எடுபடவில்லை. 

“நான் பையனா இருந்தா நானே அமராவ கட்டிப்பேண்ணா. அவங்களுக்கு வயசா முக்கியம். சொத்து தானே முக்கியம்.” என அண்ணனிடம் அழுதவளுக்கு தெரியவில்லை, அகிலாண்டம் மகளின் குறைகளை மறைத்து, கட்டிக்கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவன் தான் ருத்ரன் என்பது. 

அழுத தங்கையின் பாசத்தில் நெகிழ்ந்தவன், தங்கையிடம் அவன் வைத்த ஒரே கோறிக்கை, அமிர்தாவை கல்யாணத்திற்கு அழைக்க வேண்டாம் என்பது மட்டுமே.

“சொல்லு தேனு.” என்றாள் கைபேசியில் தோழியின் அழைப்பை ஏற்று.

“எப்படியிருக்க அமிர்தா?” என்றவளுக்கு,

“எப்பவும் போல தான்” என்றாள்.

“அப்புறம் தேனு, என்ன விஷேசம்” என்ற தோழியின் வழக்கமான கேள்விக்கு, தேன்மொழியிடம் வழக்கமில்லா அமைதி. என்ன விசேஷமென்று அவளுக்கு தெரியாதா?

”…..”

“தேனு… உறவுக்காரியா மட்டுமில்ல, ஃப்ரெண்டாக்கூட, இந்த விசேஷத்துக்கு கூப்பிட்றாத. எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்தற அளவுக்கு பெரிய மனசும் இல்ல. அந்தளவுக்கு நான் நல்லவளும் இல்லப்பா” என்றவள் குரல் தழுதழுக்க, தேன்மொழிக்கும் ஆற்றாமையில் தொண்டை அடைத்தது. 

அந்தக் கோபம் முழுதும் அழகர் மீது தான் திரும்பியது. அவன் வந்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விடுவாள்.

“பெரியவங்க பண்ணினதுக்கு நான் என்ன பண்ணுவேன் தேனு” எனக் கேட்க,

“நீங்க எம்மேல வச்சுருக்குறது உண்மையான நேசமா? இல்ல… உங்க அம்மா போட்ட மாதிரி சொத்துக் கணக்கானு சந்தேகமா இருக்கு மாமா” என படபடவென கூறிவிட்டு அவனது முகத்தைக் கூட பார்க்காமல் சென்றவள் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது அழகருக்கு. அம்மாவை எதிர்த்து அவன் மட்டும் என்ன செய்துவிட முடியும். இவளைப் போல தானே தானும். தன்னை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற ஆதங்கம் அவனுக்குள்ளும். 

திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இம்முறை மஞ்சுளாதேவி பிறந்த வீட்டார் யாரையும் விலக்கவில்லை. ருத்ரனின் உடன் பிறப்புகளை  அவரே நேரில் சென்று அழைத்தார்.

திருமணத்திற்கு கிளம்பி வெளிவந்த கௌரி, சாத்தியிருந்த மகளின் அறைக்கதவைப் பார்த்தார். 

“சின்னப்பிள்ள தானே, போகப்போக தானாத் தெளிஞ்சுக்குவா.” பெருமூச்சோடு  தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். பசுமரத்தில் தான் ஆணி நன்கு பதியும் என்பதை மறந்தவராக.

அகிலாண்டம் தவிர அனைவர் முகத்திலும் மெலிதாக சோகம் அப்பியிருந்தது. அமராவதியிடம் கூட அலங்காரத்தைத் தவிர புதுப் பெண்ணிற்குரிய பூரிப்பு எதுவுமில்லை. அதற்கும் பொருமித் தள்ளினார் அகிலாண்டம்.

அன்று தான் அகிலாண்டத்தின் இளைய மகள் காயத்ரி முதன் முதலாக விக்னேஷைப் பார்த்தாள். மஞ்சுளாதேவியின் ஒன்று விட்ட சொந்தம் அவன். இன்ஞ்சினியர் படிப்பு, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் அரசாங்க வேலையென அதற்குரிய கம்பீரத்தில் இருந்தவன் கன்னி மனதில் இடம்பிடித்தான். 

அவனை யாரென்று விசாரித்தவளுக்கு, மஞ்சுளாவின் சொந்தமெனத் தெரிய, ‘போச்சுடா!’ என அப்பொழுதே தலையில் கைவைத்தாள். எனினும் விடாப்பிடியாக அவனை துரத்தி காதலில் விழ வைத்தது வேறு கதை.

                                 ***********

அவனுடைய வீடு. அவனுடைய அறை, அவனுடைய சொந்தம் என உரிமையோடிருந்த காலம் போய், எதிலும் ஒரு ஒட்டாத்தன்மை சிறிது நாட்களாகவே. அதில் இன்று இன்னும் மூச்சடைப்பது போல் இருந்தது ருத்ரனுக்கு. 

வாலிபத்தை தொட்ட நாளிலிருந்து, ஒரு பெண் மனதிற்குள் வந்த நாள் முதலாக ஆயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் எதிபார்த்த இரவு. அதற்குரிய அலங்காரங்களோடு வீற்றிருக்க, அவனுக்கே அவனது அறை அந்நியத்தன்மையாகப் பட்டது. நெருப்பில் நிற்பது போல் உள்ளமும், உடலும் தகித்தது.

இனி இது தான் உன் வாழ்க்கை. உனக்காக ஒருத்தி. உனக்கென ஒரு குடும்பம் என தனக்குத் தானே முயன்று திரும்பத்திரும்ப உருப்போட்டுக் கொண்டான். முடிந்தளவுக்கு அமிர்தாவை மறக்க எண்ணினான். மனித மூளைக்கு இன்னும் டெலிட் பட்டன் உருவாக்கப் படவில்லை என்பதை மறந்தவனாக.

 ஆள் வரும் அரவம் கேட்டது. கதவைத் தள்ளிக்கொண்டு அமராவதி உள்ளே வந்தாள். அவனுக்கோ முன்பிருந்த அத்தை மகள் என்ற உரிமை கூட இப்பொழுது தாலி கட்டிய மனைவியிடம் தோன்றவில்லை. வலிய புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்தான். 

 மாடியேறி வந்ததில் சற்று மூச்சு வாங்கித் தடுமாற, சடுதியில் கைத்தாங்கலாக அவளைப் பற்றிக்கொண்டு, கையிலிருந்த பால்டம்ளரை வாங்கி மேஜைமீது வைத்தான்.

“ஷூ எங்க அமரா. அதைப் போட்டுட்டு வரவேண்டியது தானே?” என அக்கறையோடு விசாரிக்க, பதில் பேசாமல் கட்டிலில் அமர்ந்தவள், குனிந்து காலிலிருந்த கொலுசைக் கழட்டி வைத்தாள். புரியாமல் பார்த்தவன்,

“ஏன் அமரா அதக் கழட்டிட்ட.” எனக் கேட்க,

“எனக்கு கொலுசு போடவே பிடிக்காது. வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் மாதிரி, நடக்கும் போது சத்தம் மாத்தி மாத்தி வரும். அதுக்குனே போட மாட்டேன். இன்னைக்கி கல்யாணம்கவும் தான் அம்மா மல்லுக்கட்டி போட்டுவிட்டாங்க.” என தனது பிடித்தமின்மையை முகம் சுழித்து கூறினாள்.  

 கொலுசொலி சிணுங்க, கைவளை குலுங்க. அவனது கற்பனை காலாவதியானது முதலில். எனினும் அவளுக்காக இறக்கம் பிறந்தது. அவள் எந்த அளவிற்கு அவளது குறையை வெறுக்கிறாள் எனத் தெரிந்தது.

“நீயே ஏன் அமரா உன் குறைய பெருசு பண்ணிக்கிற?”

“இதுல பெருசு பண்ண என்ன இருக்கு. நான் இப்படி இருக்குறதால தானே உங்களுக்கே கூட எம்மேல ஆசை வராமப் போச்சு.” 

உங்களுக்கே கூட அப்படினா… இவ என்ன சொல்றா. உசத்தி பேசுறாளா? இல்ல,‌ அவங்க அம்மா சொன்ன மாதிரி உன் தகுதிக்கே என்னயப் புடிக்காமப் போச்சுங்கறாளா? என ஒருகணம் குழம்பி நின்றான். 

“உங்களுக்கே கூடன்னா அதுக்கு என்ன அர்த்தம் அமரா.” என்றான் சற்று குரல் உயர்த்தி. 

“என் தங்கச்சிக்கே, நான் விட்டுக் கொடுத்ததை தான் எடுத்துப்பா. ஆனா இன்னைக்கி எனக்கு இன்னொருத்தி விட்டுக் கொடுத்திருக்கா.” என்ற அவளது குத்தல் பேச்சில்,

“எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணின அமரா. இங்க நான் தான் சூழ்நிலைக்கைதி. உனக்கென்ன…  நீ உங்க அம்மாகிட்ட பிடிக்கலைனு சொல்லியிருக்கலாமே.”

“எனக்கும் தானே உங்களப் பிடிச்சிருந்தது. விவரம் தெரிஞ்ச நாள்முதலா உங்களத்தானே நெனச்சுட்டு இருந்தேன். காத்திருந்தவ புருஷன  நேத்து வந்தவ கொத்திட்டுப் போவாளாம்மா. அதுக்காக இன்னொருத்தி கிட்ட தோத்துப் போகச் சொல்றீங்களா?” என கோபமாகக் கேட்க, இதென்ன பந்தயமா? யார் ஜெயிப்பது என போட்டி வைத்துப் பார்க்க. வாழ்க்கை இல்லையா. வீம்பு பாராட்டி இப்பொழுது மூவரது வாழ்க்கையுமே தோல்வியில் முடிந்ததே என குமைந்து போனான். 

அமராவதிக்கு, அமிர்தவல்லிக்கு விட்டுக் கொடுப்பது கௌரவப் பிரச்சினையாகத் தெரிந்தது. உனக்குப் பிடித்தது எனக்கு சொந்தம் என காட்ட வேண்டும். தங்கைக்கே எது ஒன்றையும் தனக்கு பின் தான் என்பவள் அடுத்தவளுக்கா விட்டுக் கொடுப்பாள். அதுவும் சிறுவயதிலிருந்து ஆசைப்பட்டவனை. அதுவும் தனக்கென பேசி வைத்திருப்பவனை. வெற்றி கொண்ட மமதை அவளிடம். 

“இப்ப என்ன, உன் விருப்பப்படி தானே எல்லாமே நடந்திருக்கு?”

”இருந்தாலும் என் மேல விருப்பமில்லாதவர் கூடயில்ல நடந்துருக்கு.” இருவர் பேச்சுமே சலிப்புத் தட்டியது முதல் நாளே. 

“எல்லா விஷயமும் உனக்கும் தெரியும் அமரா. பழச மறந்துட்டு வாழ முயற்சி பண்ணுவோம். நான் அவள மறக்கறதும், மறக்காததும் உன் கையில தான் இருக்கு.” எனக் கூற, அகிலாண்டமும் இதையே தான் மகளுக்கு சொல்லி அனுப்பினார். 

“இந்த வயசுல ஆம்பளைங்க அப்பிடி, இப்பிடி தானிருப்பங்க. கல்யாணத்துக்கு முன்ன எங்க அண்ணே எல்லாம் ஆடாத ஆட்டமா. அவங்கள இழுத்துப் பிடிக்கிறது நம்ம கையில தானிருக்கு அமரா.” என மகளுக்கு ஓதித்தான் அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அமராவதியால் தான் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்த விதத்தில் அவளை விட தாழ்ந்து விட்டோமென அமிர்தாவோடு மனம் எசலி போட்டது. தங்கள் வீட்டு சொத்தால் வளர்ந்தவர்கள் மகள் முன் தான் தாழ்ந்து விடுவதா என மனம் முரண்டியது.

ஹோட்டல் திறப்புவிழா அன்று இருவரும் கொஞ்சிக் கொண்டு நின்றதே மீண்டும் மீண்டும் மனக்கண் முன் வந்து போக, ஒரு பெண்ணாக அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. கண்ணில் விழுந்த தூசியாக உறுத்திக் கொண்டிருந்தது. தான் ஆசை கொண்டவன் மீது வேறொருத்தி எப்படி மனது வைக்கலம் என ஆத்திரம் வந்தது. தான் ஆசப்பட்டது கை சேர்ந்தும் அதை கொண்டாடும் மனநிலையை, அவளது தாழ்வு மனப்பான்மையோடு கூடிய பொறாமை கலந்த மனம் களைத்து விட்டது.

யோசனையில் இருந்தவள் திரும்பிப் பார்க்க அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டிருந்தான். மெதுவாக எழுந்து விளக்கை அணைத்தவள், கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டாள். அம்மா சொல்லியனுப்பியதே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது விட்டுவிட்டால் பிடிக்க முடியாது என நினைத்தாலும் தயக்கம் மேலிட அமைதியாகப் படுத்திருந்தாள். 

அவனுக்கோ தீடீரென வாழ்க்கை தனக்கு கொடுத்த அதிர்ச்சி, பெற்றவள் இழப்பு, காதல் தோல்வி இவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. 

அவன் பக்கம் திரும்பியவள் தயக்கத்தோடு அவன் தோள்மீது கை போட்டாள். அவன் தலையை மட்டும் திருப்பிப் பார்க்க,

“நீங்க தானே சொன்னீங்க, அவள மறக்கறது என் கையில தான் இருக்குனு.” என்று மெல்லிதாக கூறியவளைப் பார்த்து ஆற்றாமையில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு. அவன் கூறியது இனிமேல் அவளைப் பற்றிய பேச்சு நமக்கிடையில் வேண்டாம் என்பது. ஆனால் அவள் புறிந்து கொண்டது வேறு வகையில். 

உள்ளம் கூடாமல் உடல் கூடும் கூடலில் உயிர் கடத்த முடியுமே தவிர உணர்வு கடத்த முடியாது. எனினும் இதுதான் வாழ்க்கை என ஆனபிறகு, இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது என அவனுக்கும் தோன்ற, 

கடமைக்கென இயந்திரமாய் ஒரு கூடல். அவனுக்கே அவனது செயல் வெறுப்பாகியது. இதில் ஒரு பெண்ணின் உணர்வுகளும் அடங்கியிருக்கிறது என சிந்தனைக்கு உரைக்க, முயன்று அவளோடு ஒன்ற ஆரம்பித்தான். அவளிடம் தோன்றிய மாற்றங்கள் அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் அவனுக்குமிருந்த ஆரம்பகட்ட பதட்டத்தில் மென்மையாகத்தான் கையாண்டன். அவளது மூச்சுத் திணறலும், அதிகப்படியான வியர்வையும் அவனுக்கு அச்சத்தைக் கொடுக்க, 

“அமரா என்ன பண்ணுது?” என்றான் படபடப்பாக. அவளுக்கும் சொல்லத் தெரியவில்லை. முதன் முறை என்பதால் இப்படித்தான் போல என இருவருமே ஒரு முடிவுக்கு வந்தனர். 

ஏ.சி யின் குளுமையை அதிகப்படுத்தினான். சற்று நேரத்தில் அவள் இயல்புக்கு வர, இவனும் ஆசுவாசமானான். 

“நீங்க பயப்படாதீங்க. எப்பயாவது இப்படி ஆகும். அம்மா வீசிங் டாப்ளட் கொடுப்பாங்க. ஆனா இன்னைக்கு ஏன் இப்படியாச்சுனு தெரியல.” என்றவள் முகம் முதன் முதலாக செம்மை கண்டது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top