18
பெண் பிள்ளைகள் வீட்டின் அலங்காரம். ஆண் பிள்ளைகள் வம்சத்தின் அடையாளம். காலங்காலமாக இப்படித்தான் பார்க்கப்படுகிறது.
“அம்மா… அக்கா கிட்ட கேட்டுப்பாரு ம்மா.”
“இத எப்படிம்மா அவகிட்ட கேக்குறது?”
“ஏம்மா, வேண்டாம்னு கலைக்க போனாங்க தானம்மா. உசிருக்கு ஆபத்துனு தான வந்துட்டாங்க.”
“நீ சொல்றது சரித்தான் மஞ்சு. எமனுக்கு எத்தன பிள்ளயக் கொடுத்தாலும் ஓசில கொடுக்க மனசு வராதுன்னு தெரியாதா. நீ பிள்ள வேணும்னு கல்லக் கண்டாலும் கடவுளா நெனச்சு கும்பிடுற. உனக்கு அந்த ஆண்டவன் கண்ணுத் தொறக்கலியே? காலம் போன கடைசியில அவளுக்கு வாச்சுருக்கு.” என ஆதங்கப்பட்டார் பழனியம்மா.
இவருக்கு மஞ்சுளாதேவியோடு சேர்த்து ஏழு பிள்ளைகள். எல்லாருக்கும் மூத்தவள் விசாலாட்சி. கடைசி மகள் மஞ்சுளாதேவி.
கேசவமூர்த்தியை மணமுடித்து, பத்து வருடங்கள் ஓடிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வலுவான புத்திர பாக்கியம் கொண்ட சாதகம் என்ற ஒரே கரணத்திற்காக மட்டுமே, வசதியைப் பார்க்காமல் இனத்தை மட்டும் பார்த்து, மஞ்சுளாதேவியை மணமுடித்தது.
இருந்தும் காலம் கடக்க, பிள்ளையை தத்தெடுப்பது எனும் முடிவிற்கு வந்திருந்தது கேசவமூர்த்தி குடும்பம்.
அந்தக் காலத்தில் அரசவம்சத்திற்கு வாரிசு இல்லையெனில், அடுத்த நாட்டு மன்னர்களிடமிருந்து நாட்டைக்காக்க, தத்தெடுத்து முடிசூட்டுவது வழக்கம்.
அதுபோல தனக்குப்பின் தன் வம்சத்திற்கான மாலை மரியாதை, பரிவட்டம் கிடைக்க, குடும்பப் பெயர் விளங்க, ஆண் குழந்தை வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதற்கென அவர்கள் சொந்தங்களில் குழந்தை தத்தெடுக்கலாம் என ஆலோசனை செய்யப்பட்டது. (பெரும்பாலும் நகரத்தார் வகையில் இது வழக்கமே. கவிஞர் கண்ணதாசன் தத்துக் கொடுக்கப்பட்டவர் தான்.)
“ஏன் மஞ்சு அவசரப்படணும். இன்னும் கொஞ்ச நாள் பொருக்கக் கூடாதா? இந்தா… உங்க அக்காவெல்லாம் இத்தன வயசுக்கு மேலயும் உண்டாகலியா?”
“அக்காவுக்கு இது நாலாவதும்மா. ப்ப்ச்ச்…அதெல்லாம் விடும்மா. பெரியவங்களுக்கு வயசாகுதாம். ஏதோ குடும்ப மரியாதை, பரிவட்டம் அதுஇதுன்னு சொல்றாங்க. அதனால தான் தத்தெடுக்கலாம்னு பேசிக்கிறாங்க. அவங்களுக்கு சாதகத்துல நம்பிக்கைனு தெரியும்ல. ஏதோ மலையாளத்து ஜோசியர் இவர் சாதகத்தப் பாத்துட்டு, தத்தெடுத்து வளத்தா, அந்த ராசியில எங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்குனு சொல்லியிருக்காங்க. அவங்க பங்காளி வகையில தான் பாக்குறங்க. நம்ம சொந்தமா இருந்தா எனக்கு ஆதரவா இருக்கும்லம்மா.” என மகள் கூறிய காரணமெல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் எப்படி இதை மூத்த மகளிடம் கேட்பது என்ற தயக்கம் பழனியம்மாவிற்கு. காசா பணமா… பட்டுனு கேட்க. சட்டென்று எப்படி இந்தக் குழந்தையை தங்கைக்கு தத்துக் கொடு என்று கேட்பது என தாயுள்ளம் மருகியது.
சின்ன மகளை நினைத்தும் யோசனை தான். அவளும் பிள்ளைவரம் கேட்டு போகாதா கோயிலில்லை. வேண்டாத தெய்வமில்லை. இருக்காத விரதமில்லை. பார்க்காத வைத்தியமில்லை. எல்லாமே கைவிட்ட நிலையில் தத்தெடுக்கும் முடிவிற்கு குடும்பம் வந்திருக்கிறது. முதலில் மறுத்த கேசவமுர்த்தியும் இப்பொழுது சம்மதித்தார். அதற்கு காரணமும் இருந்தது.
மஞ்சுளாதேவி மட்டுமே மருத்துவரைப் பார்த்துவந்த நிலையில், ஒரு கை மட்டுமே தட்டி ஓசையெழுப்பும் வேலையில்லை இது. உங்க கணவருக்கும் உயிரணுக்கள் சோதனை செய்தே ஆகவேண்டுமென்ற மருத்துவரின் கட்டாயத்தில், கேசவமூர்த்தியும் சோதனை செய்து கொள்ள, சோதனை முடிவு அவருக்கு சோதனை காட்டியது. உயிரணுக்களில் வீரியமிக்கவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், ஆனால் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு சரிசெய்யமுடியும் எனவும் கூறப்பட, அவரும் வேண்டாவெறுப்பாக தத்தெடுக்க சம்மதித்தார். அவர்களது பங்காளி வகையிலேயே, அவர்களுக்கு தோதாக பிள்ளையிருந்தால் தத்து எடுத்துக் கொள்ளலாமென முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முட்டுக்கட்டை போட்டது அகிலாண்டத்தின் முடிவு. அண்ணனுக்கு வாரிசில்லாத பட்ஷத்தில், சொத்துகளுக்கெல்லம் ஏகபோக அடுத்த வாரிசு இவர்தானே. அதெப்படி தத்தெடுக்கும் பிள்ளைக்கு சொத்தை விட்டுத்தர முடியும். அடுத்து அண்ணனுக்கு குழந்தை பிறப்பதும் நிச்சயமில்லையே என முடிவு செய்தவர், அவர் போட்ட ஒரே கண்டிஷன், யாரை தத்து எடுத்தாலும், தன் மகள் அமராவதி தான் இந்த வீட்டு மருமகள் என்பது தான். எப்படியும் தந்தை வழியில் தான் எடுப்பார்கள், அவர்கள் எல்லாம் தங்களுக்கு இணையானவர்கள் என்று கணக்குப் போட்டு வைத்தார்.
கேசவமூர்த்தி வழியில் அவர்கள் தேட, மஞ்சுளாவின் அக்காவிற்கு திடீரென மூன்று குழந்தைகளுக்கு அடுத்து, பல வருஷங்கள் கழித்து எதிர்பாராமல் குழந்தை உண்டாகிவிட, அந்தக் குழந்தையும் வேண்டாமென மருத்துவமனை செல்ல, காலம் கடந்துவிட்டதாக மருத்துவர் கை விரிக்க, அந்தக் குழந்தையை நாம் கேட்டுப் பார்த்தால் என்னவென யோசனை உதித்தது மஞ்சுளாவிற்கு.
“ஏம்மா… எம்மேல நம்பிக்கை இல்லியா? அதுவும் பொறக்கறது ஆம்பளப்புள்ளையா இருந்தா மட்டும் தானம்மா?” என கேட்க,
பெரியமகளிடம் கேட்டுப் பார்ப்பதாக அரைமனதாக ஒத்துக் கொண்டார்.
************
“என்னடி… என்ன சொல்றான் எம்புள்ள?” என தொட்டித் தண்ணீரில் கைகால் முகம் கழுவிக்கொண்டே, திண்ணையில் கால் தொங்கப்போட்டு அமர்ந்திருந்த, விசாலாட்சியிடம் சிரிப்போடு கேட்க,
“அவனுக்கென்ன… உம்ம புள்ளதானே. நீரு மாடுகளோட கபடி விளையாண்டா உம்ம புள்ள வயித்துக்குள்ளேயே கபடி விளையாடுது.” என்றவர் பேச்சில், எள்ளல் தெரித்தாலும் அதில் இருந்த சுதி பேதம் புரியாமலில்லை வேல்பாண்டிக்கு.
“அதக் கொஞ்சம் சிரிச்சுட்டே சொன்னாத்தான் என்னவாம். மூஞ்சியத்தூக்கி மொகட்டுல வச்சுருக்க.” என கண்டிக்க,
“உமக்கென்ன, விடிஞ்சதும் போயிட்டு அடஞ்சதும் வாரீரு. பிள்ளைக மூஞ்சில முழிக்கமுடியாம எவ்வளவு சங்கட்டமா இருக்குனு எனக்கு தானே தெரியும். வயசுக்கு வந்த ரெண்டு பொட்டப்புள்ளைகள வச்சுக்கிட்டு, அதுக முன்னாடி வயித்தத்தள்ளிக்கிட்டு நிக்க எம்புட்டு சங்கட்டமா இருக்கு தெரியுமா?” எனக் கேட்க அவள் சங்கட்டம் அவனுக்குமே புரிந்தது.
“அதுக்குனு வயித்துப் புள்ளக்காரி இப்படித்தான் உர்ருனு உக்காந்திருப்பியா? என்னமோ திருட்டுத்தனம் பண்ணுன மாதிரி சொல்ற. கேக்கவே அசிங்கமாயிருக்கு விசாலா.” என செம்பை பொத்தென தொட்டிக்குள் போட்டான் வேல்பாண்டி. சங்கட்டப்படுத்தி விட்டோமெனத் தோன்ற,
“அதுக்கு இல்லீங்க, பெரியவளாவது பேசாம போயிர்றா. சின்னவதான் வெளிய கேலிக்காரிக பேசுறதெல்லாம் சொல்லிக்காட்டுறா. இன்னைக்கு தண்ணிக்குப் போனவகிட்ட, என்னாடி… உங்களக் கட்டிக்கொடுத்து பேருகாலம் பாக்கவேண்டிய வயசுல, நீங்க உங்க ஆத்தாளுக்கு பேருகாலம் பாக்கப் போறீங்களானு எவளோ கேட்டிருக்கா. தண்ணியும் தூக்காம, குடத்தையும் எடுக்காம வந்துட்டா.” என ஆதங்கமாக வளர்ந்த பிள்ளைகளை நினைத்து மனம் சங்கோஜப்பட, அவளருகில் வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
அவனுக்கும் பத்தாவது படிக்கும் மகனின் முகம்பார்க்க சங்கட்டம் தான். எதிர்பாராமல் கரு தங்கிவிட, நான்கு மாதங்களுக்கு மேல் தான் விசாலாட்சிக்கே சந்தேகம் வந்தது. மருத்துவமனை செல்ல, கரு கலைக்கும் காலம் கடந்துவிட்டதாகக் கூற, ஒன்றும் செய்ய முடியவில்லை.
வயிற்றுப் பிள்ளைமீது வெறுப்பு இல்லை. ஆனால் வளர்ந்த பிள்ளைகளை நினைத்து மனம் மருகியது. கௌரி அம்மாச்சி வீடு அம்மா வீடு என மாறி மாறி வளர்ந்ததில், சின்னவளும், பெரியவளுமே இப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு தான். இதில் பெரியவள் கௌரியை வேறு பெண் கேட்டு சம்மந்தம் வந்து கொண்டிருக்கிறது. கிராமத்தில் கேலிக்காரவுங்க பேச்சுக்கு சொல்லவா வேண்டும்? ஏதாவது கேலி செய்ய, அது வளர்ந்த பிள்ளைகளுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.
“விசாலா… உண்மையச் சொல்லணும்னா இந்தப் புள்ள தான்டி நம்ம அன்னியோன்யத்தோட உண்மையான அடையாளம்.” என்றான் ஆதுரமாக.
“அப்ப மத்த மூனும்.” என சிடுசிடுக்க,
“அதெல்லாம்… அந்த வயசுக்குறிய ஆர்வத்துலயும், ஆசையிலயும் வந்தது. உன்னைய நானும், என்னைய நீயும் ஒருத்தொருக்கத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு, எது புடிக்கும் புடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்நியோன்யமா வாழ ஆரம்பிச்ச பின்னாடி வந்த குழந்தைடி.” என அவள் வயிற்றின் மீது கை வைத்தவன் வார்த்தைகள் கனிந்து வந்தன.
“க்க்கும்… முக்கால்வாசி நாள் சண்டையிலதான் போச்சு.” என நொடித்துக் கொள்ள, அவளது முகத்தைப் பார்க்க சிரிப்பு வந்தது வேல்பாண்டிக்கு.
“அது தான்டி புரிதல். ஒவ்வொரு சண்டையிலயும்தான் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். இல்லைனு சொல்லு பாப்போம்.” என்றவனது பேச்சு உண்மைதான் என்றது விசாலாவின் பார்வை.
“மொதல்ல தள்ளி உக்காந்து பேசுங்க. பிள்ளைக வந்துறப்போகுதுக.” என விலகி அமர,
“இத நீ ஆறேழு மாசத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கலாம்.” என வாய்விட்டு சிரிக்க,
“இப்படி ஆகும்னு நான் என்னத்தக் கண்டேன்.” என முகத்தை திருப்பிக்கொள்ள,
“அடியேய்… இத சத்தமா சொல்லாத. மூனு பிள்ள பெத்தவளுக்கு இப்படி ஆகும்னு தெரியாதுன்னு சொன்னா சிரிக்கப் போறாங்க. அதுசரி, நீ தான் ரெண்டு பிள்ள பெத்தப்பின்னாடியும், நாய்கள யாரு இப்படி கட்டிப் போட்டுருக்காங்கனு கேட்டு என் மானத்த வாங்கியவளாச்சே.” என மனைவியை கேலி பேசி சிரிக்க, அவனை அடிக்காத குறையாக முறைத்து வைத்தாலும்,
கலவையாக நரைத்த முடியோடு, முறுக்கி விட்ட மீசையில், விரிந்த சிரிப்பால் இந்த வயதிலும் வசீகரித்தான் பேரிளம்பெண்ணை.
“அதுல்லீங்க… ஏற்கனவே நம்ம பொழப்பு வாய்க்கும் கைக்குமாயிருக்கு. இதுவும் பொம்பளப்புள்ளயா போச்சுனா,” என இழுக்க,
“என்னைய என்ன கையாலாகதவன்னு நெனச்சியா? அது எனக்குத் தெரியாதா? பெரியபிள்ளைக்கி நகை சேத்த மாதிரி, சின்னபுள்ளைக்கும் நகை சேக்கமுடியும். பையன படிக்கவச்சுட்டாப் போதும். அவன் கைய ஊனி கர்ணம் பாஞ்சுக்குவான். அதுகள நெனச்சுக்கிட்டு வயித்துல இருக்குறத விட்டுறாத.” என கடிந்து கொண்டான், தான் சொன்ன வாக்கு பழிக்கப்போவது தெரியாமல்.
மசக்கைகால மனநிலைக்கே உரிய ஊசலாட்ட மனநிலையில் விசாலாட்சிக்கு மனம் பிதற்றியது. இதுவும் பெண்பிள்ளையாகப் போனால், ஏற்கனவே வயோதிகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களால், இந்தப்பிள்ளை மற்ற பிள்ளைகளுக்கு பாரமாகிவிடக் கூடாதே என மனம் கிடந்து அடித்துக் கொண்டது. என்ன சொல்லியும் முகம் தெளியாமல் இருக்கும் மனைவியைப் பார்த்தவன், ‘’காலத் தொங்கப்போட்டு உக்காறாதேனு எத்தன தடவ சொல்றது. வீங்கியிருக்கு பாரு.” என அதட்டியவன், காலை திண்ணையில் தூக்கி வைத்து நீட்டிவிட்டவன், மெதுவாக அழுத்திவிட்டான்.
எப்பொழுதும் வழக்கமாக அதிகாலையில் சென்று டீக்கடையை திறப்பவன் இரவு தான் வீடு திரும்புவான். ஆனால் இந்தக் குழந்தை உருவானதிலிருந்து மதியம் ஒருதரம் வீடு வந்து செல்கிறான். இது ஏழாவது மாதம். விசாலாட்சிக்கும் முடியவில்லை. கணவன் சொல்லியது போல, முதல் மூன்று பிள்ளைகள் உருவாகிய போது கூட இந்தளவிற்கு அவன் கவனித்துக் கொண்டதில்லை என்பதைவிட கவனித்ததே இல்லை. அப்பொழுது பெரியவர்கள் உடனிருந்தனர். இப்பொழுது எத்தனை வேலையிருந்தாலும் அடிக்கடி வீடு வருகிறான்.
டீக்கடை மட்டுமின்றி, கல்யாணம், காதுகுத்து, சடங்கு போன்ற விஷேசங்களுக்கு தவசிப்பிள்ளையாகவும் செல்வான்.
இதைவிட முக்கியமான ஒன்று, எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும், வாடிவாசலில் முதல் ஆளாக காளையை வரவேற்பது இவனாகத்தானிருக்கும்.
அம்மாவிற்கு முடியாது எனத் தெரிந்து பெண்பிள்ளைகள் வீட்டு வேலையைப் பார்த்துவிட்டு பள்ளி சென்றுவிடுகின்றனர். அதிலெல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. இதுவரை மூவர் மட்டுமே என அக்கா தம்பி என பிணைப்பை உருவாக்கிய பிறகு, நான்காவது ஒன்று என்பதை அவர்கள் பிணைப்பிற்குள் வளர்ந்த பிள்ளைகளால் கொண்டு வரமுடியவில்லை.
நாட்கள் நகர்ந்து செல்ல, ஜல்லிக்கட்டுக்கு சென்றவனை, குடல் சறிய, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வர, எழுமாத வயிற்றுப் பிள்ளையோடு மயங்கி விழுந்தவளையும் மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வந்தது. பெரிய மகளுக்கென சேர்த்து வைத்திருந்த நகைகளையும் கரைத்துவிட்டு, வேல்பாண்டி உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை வங்கிக்கொள்ள, எல்லாம் இந்தப் பிள்ளை வந்த நேரம் தான் என ஊரார் தூற்ற, அதுவே விசாலாவின் மனதிலும் பதிந்து போயிற்று.
இப்பொழுது விசாலாட்சிக்கு நிறை மாதம். வயிற்றுப்பிள்ளையோடு அழுதழுதே துவண்டு விட்டாள். மனமும் உடலும் பலவீனமாகி விட, விவரம் புறிந்த பிள்ளைகள் அம்மாவைத் தாங்கிக்கொண்டன. எனினும் அடுத்து என்ன என யாருக்கும் புரியாத நிலை. கிட்டத்தட்ட அனாதரவான நிலை. விசாலத்திற்கோ புத்தி பேதலிக்காத குறை.
பழனியம்மாள் தான் மகளிடம்,
”உன் தங்கச்சி இப்படி கேக்குறா. என்னம்மா சொல்ற.” என மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.
கேசவமூர்த்தி குடும்பத்திற்குமே, இந்தக் குழந்தையென்றால் சம்மதமே. அவர்கள் வழியில் அவர்களுக்கு தோதாக குழந்தை கிடைக்கவில்லை. விவரம் தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் ஒட்டாது, என யோசித்தவர்கள், வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கு சம்மதம் கூறினர்.
“பிள்ளைகளக் கட்டிக் கொடுக்கற செலவெல்லாம் பாத்துப்பா ம்மா. பையனையும் படிக்க வைப்பாங்க. நம்ம பிள்ளைனா அவளுக்கும் ஆதரவா இருக்கும்.” என பலவாறு எடுத்துச் சொல்ல, எதையும் ஆலோசிக்கும் மனநிலையில், விசாலம் இல்லாத நிலையில் இரண்டு மகள்கள் வாழ்க்கையையும் மனதில் கொண்டு பழனியம்மாவே முடிவெடுத்தார்.
பெரிய மகளின் குடும்ப நிலவரத்தை நினைத்து, சின்ன மகளுக்கு பிள்ளையை தத்துக்கொடுக்க சம்மதம் கூற, முதலில் இது ஆண்பிள்ளை தானா என ஸ்கேன் பண்ணப்பட்டது.
முடிவு அவர்களுக்கு சாதகமாக இருக்க, அடுத்து விசாலத்திற்கும் ராஜ கவனிப்பு செய்யப்பட்டது.
அகிலாண்டம் தான் வயித்துல இருக்கும்போதே அப்பன முழுங்குன குழந்தையென, முகம் சுழிக்க, அதற்கும் அவர்கள் நேரம் காலம் எல்லாம் பார்த்து, குழந்தை பிறப்பிற்கான நேரம் குறிக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு கணிக்கப்படும் சாதகம் அவன் பிறக்கும் முன்னே கணிக்கப்பட, அவன் விதி அப்பொழுதே எழுதப்பட்டது.
குறித்த நேரத்தில் குழந்தை எடுக்கப்பட, விசாலத்திற்கு அதுவரை இருந்த மனநிலையில் மாற்றம். பிள்ளையை கண்ணில் பார்த்தபிறகு, பெற்றவளுக்கு பிறிய மனம் வராமல் போக, பேத்திகளின் வாழ்கையை மனதில் கொண்டு பழனியம்மாள் தான் பலவாறு எடுத்துக் கூறி, ஒரு குடும்பம் நல்லாயிருக்கனும்னா ஒரு பிள்ளையை பழி கொடுக்கலாமென்ற வேதாந்தம் தோன்ற, மனதை கல்லாக்கிக் கொண்டார் விசாலாட்சி.
ஏற்கனவே கணவனையிழந்த நிலையில், உடலும் மனமும் பலவீனமாக இருக்க, அறுவை சிகிச்சையும் செய்திருக்க, அதிக நாட்கள் பெற்றவளிடம் இருக்க வேண்டாமென, ஒரே வாரத்தில் சாஸ்த்திர முறைப்படியும், சட்டப்படியும் குழந்தை தத்து எடுக்கப்பட்டது.
தங்கள் வம்சப் பெயராக ருத்ரமூர்த்தி என்ற பெயர் தான் முதலில் வைக்கப்பெற்றது. ஆனால், குழந்தை தாயின் சூட்டை நாடியதோ என்னவோ, சும்மா நை நை என அழுக, மஞ்சுளாவிற்கும் குழந்தையை கையாளத் தெரியாமல் முழி பிதுங்கியது. குழந்தை ஒரு பக்கம் அழுதால் அவள் ஒரு பக்கம் அழுதாள். வீட்டுப் பெரியவர்கள் தான், அவங்க குலசாமி பெயர் வைத்தால் அழுகாதோ என, ருத்ரபாண்டி என மாற்றி வைத்தனர். மஞ்சுளாவின் கையணைப்பிற்கு பழகியதோ என்னவோ அதன் பின் அழவில்லை.
குட்டி குட்டி கை கால்களை ஆட்டிக் கொண்டு, சரியாகக் கண்கூட முழிக்காத ரோஜாக்குவியலாட்டம் குழந்தை கேசவமூர்த்தியை வசீகரிக்கவே செய்தான். ஆனால் இந்தப் பெயர் மாற்றம் அவருக்கு ஒப்பவில்லை. தன் வம்சம் விளங்கத்தானே தத்து எடுத்தது. பெயரே ஒட்டவிலை என்றால் குழந்தை எப்படி ஒட்டும் என்ற எண்ணத்தோடு, அந்தக் குழந்தை தன் குறையைச் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றியது. பார்க்கும் பொழுதெல்லாம் அந்த எண்ணம் அதிகரித்தது.
கௌரிக்கு நல்ல வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மனோகரனை மணம் முடித்தனர். அக்கா வீட்டிற்கு விஷேசங்களுக்கு குழந்தையோடு போகவர இருந்த மஞ்சுளாவை, அக்காவின் கண்களில் தெரிந்த பிள்ளைக்கான பரிதவிப்பு கலவரப் பாடுத்தியது. பிள்ளையைப் பார்க்கும் பொழுதெல்லாம் விசாலாட்சிக்கு கணவனின் நினைவு வர, மஞ்சுளா வரும் பொழுதெல்லாம் குழந்தையை வாங்கிக் கொள்பவர், கிளம்பும் வரை இடுப்பை விட்டு இறக்க மாட்டார். கிளம்பும் போதும் கண்ணீரோடு கொடுப்பார்.
“அப்படியே அப்பனாட்டம்.” என்ற உறவுகளின் பேச்சு, கேசவமூர்த்தியையும் குருகச் செய்தது. பெற்றவர்களின் அடையாளம் பிள்ளைகளிடம் தேடப்படுவது வழமை தானே. அதுவும் வேல்பாண்டி இறந்த நிலையில் அவனது உறவுகள் அவனின் சாயலை ருத்ரனிடம் தேடினர்.
கணவனின் மனநிலை மஞ்சுளாவிற்கும் புரிந்தது. பெண் மலடி என ஆண் மறுமணம் செய்வது போல் இது எளிதல்ல என்பது தெரிந்தது. குழந்தையோடு அக்கா வீடு வருவதை குறைத்துக் கொண்டார். பெற்றவளிடமிருந்து பிள்ளையை பிரித்துவிட்டோம் என்ற குற்ற உணர்வோ என்னவோ, அதை சரிக்கட்ட அக்கா பிள்ளகளுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொண்டார். ருத்ரன் வாய் திறந்து மழலையில், “ம்மா.” என மிழற்ற, அந்த சந்தோஷத்தில் இன்னும் அக்கா பிள்ளைகளுக்கு மனம் குளிரச் செய்தார்.
பெண்களை கட்டிக் கொடுத்து சீர் செய்வது, வெங்கடேசனின் படிப்பு செலவு, உடல்நிலை சீர்குலைந்த அக்காவின் மருத்துவச் செலவு எதிலும் குறை வைக்கவில்லை.
தனதுஅடையாளம் இல்லாத பிள்ளை மீது கேசவமூர்த்திகு ஒட்டுதலும் வரவில்லை. வெறுப்பும் வரவில்லை. இதுவே அவரைத் தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வைத்தது. விடா முயற்சி விசுவரூப வெற்றி என்பது போல், ருத்ரனை தத்தெடுத்த நான்கு வருடங்கள் கழித்து, தேன்மொழி பிறந்தாள். அதுவும் பெண்குழந்தையாகப் போக, அங்கு ருத்ரனே முக்கியத்துவம் பெற, மஞ்சுளாவின் குடும்பத்தையே பிடிக்காத அகிலாண்டத்திற்கு பெண்ணை இவனுக்கு தான் கொடுத்தாக வேண்டும் என நினைப்பு வர, இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என மனம் பொருமியது.
கார் குலுங்கி நின்றதில், நினைவு களையப்பெற்று நிகழ்வுக்கு வந்தார் மஞ்சுளாதேவி.
மஞ்சுளாவின் முந்தானை அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டே இருக்க, ருத்ரன் யாரையும் பார்க்காமல் இருகிப்போய் அமர்ந்திருந்தான்,
ஒரு குறுகலான சந்து வழியாக கார் போக முடியாதனெ தெரு முக்கிலேயே நிறுத்தப்பட்டது.
நால்வரும் இறங்கி நடந்தனர். சிறு சிறு முட்டுச் சந்துகளுடன் கூடிய குறுகலான தெரு. சற்று தூரம் நடந்து செல்ல, ஒரு வீட்டின் முன் வாசலில் நான்கைந்து பேர் சேரில் அமர்ந்திருந்தனர். இவர்களைப் பார்த்து விட்டு மனோகரன் எழுந்து வந்தார்.
“வாங்க த்தே.” என்றவர், உடன் வந்தவர்களையும் வாங்க என பொதுவில் வரவேற்றவர் ருத்ரனைப் பார்த்து சிரு புன்னகையுடன் தலையசைத்து வரவேற்றான்.
வீட்டின் முன் இரண்டு பக்கமும் பெரிய திண்ணையுடன் கூடிய, பட்டியக்கல் வாசல்படி கொண்ட அந்தக் காலத்து காரைவீடு. ஒருகாலத்தில் நாங்களும் நல்லாத்தான் இருந்தோம் என, ஆங்காங்கே காரை பெயர்ந்து செங்கல் பல்லைக்காட்டியது. வாழ்ந்து கெட்ட வம்சம் என்பது வீட்டைப்பார்த்தாலே தெரிந்தது. அதுவும் பல தலைமுறைகளுக்கு முன்பு போல. வரும்பொழுதே அகிலாண்டம் முந்தானை எடுத்து மூக்கை மூடிக்கொண்டார்.
அகிலாண்டம் கூறிய அவன் தகுதி என்னவென்று உரைத்தது ருத்ரனுக்கு. அகிலாண்டம் வெளித் திண்ணேயிலேயே அமர்ந்து கொள்ள, மனோகரன் முன் செல்ல அவனைப் பின் தொடர்ந்து மூவரும் உள்ளே சென்றனர். வீட்டின் உள்ளே மராமத்து வேலைகள் பார்க்கப்பட்டு காரை பெயர்ந்த சுவற்றில் ஆங்காங்கே ஒட்டுப்போட்டு வைத்திருந்தான் வெங்கடேசன்.
கூடத்தைச் சுற்றி பார்வையை ஓட்ட, சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. அந்தக்காலத்து தானியம் கொட்டி வைக்கும் குளுமை, மரப்பெட்டி, ஆடுக்கல், அம்மிக்கல், உலக்கை என உபயோகமில்லாமல் ஓரமாகாக் கிடந்தன.
சுவற்றில் சட்டம் போட்டு மாட்டப்பட்ட புகை படிந்த சில ஃபோட்டக்கள் தவிர. அதில் கருப்பு வெள்ளையில் ஒரு படமிருக்க, மஞ்சுளாதேவியின் சாயல் கொண்டு அது தான் அம்மா என கண்டு கொண்டான். அழகாயிருப்பதாக எண்ணிக்கொண்டான். அம்மாவுடனிருந்தவரைப் பார்த்துவிட்டு ஒருகணம் அசந்துவிட்டான். தன்னையே பார்ப்பது போலிருந்தது. என்ன, மீசை கொஞ்சம் பெரிதாக வைத்திருந்தார். அடுத்து பிள்ளைகள் மூன்று பேர் கூடிய கலர்ப்படம். அதையடுத்து பெரிய நிலைக்கண்ணாடிக்கு சடை அலங்காரத்தைக் காட்டியவாரு ஒரு படம். கௌரியின் சடங்கு படம் அது.
வெங்கடேசன் தலையெடுத்து வசதி வந்தபிறகு, போக்குவரத்துக்கு இடைஞ்சலான குறுகிய சந்தில் இருக்கும் இந்த வீட்டிற்கு ஏன் தண்டச்செலவு செய்யவெண்டுமென, வண்டியூரில் தனியாக இடம்வாங்கி வீடு கட்டிக்கொண்டு, கடையையும் மாற்றிக்கொண்டு போய்விட்டாலும் அம்மாவை மட்டும் இங்கிருந்து அசைக்க முடியவில்லை அவனால்.
இவர்கள் உள்ளே வர, ருத்ரனை யாரும் எதிர்பாக்கவில்லை என்பதை அங்கிருந்தவர்கள் முகத்தில் மின்னிய ஆச்சர்யமே காட்டிக் கொடுத்தது. விசாலாவின் இறுதி நேரம் நெருங்கிவிட்டது எனத் தெரிய மகன், மகள்களோடு, பேரன், பேத்திகளும், அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடியிருந்தனர்.
கௌரியும், சித்ராவும் ஓடி வந்து தம்பியின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கண் கலங்கினர். ஆண் மகனாகப் போய்விட்டதால் அழக்கூடாது என்ற ஆகம விதிப்படி வெங்கடேசன் கண்கள் சிவக்க தம்பியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவன் தான் தத்துக் கொடுத்த பையன் போல. அந்த நெனப்புலதான் உசுரு அல்லாடுது.” என வந்திருந்த அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ள, ஆர்வத்தில் திரும்பிய அமிர்தவல்லிக்கு கண்கள் நிலைகுத்தியது.
அமிர்தாவும் அங்கு தான் இருந்தாள், சற்றுமுன் தான் தனக்கு இன்னொரு தாய்மாமன் இருப்பதே அவளுக்கும் தெரிய வர, கண்கள் கலங்க தன் சின்ன மாமனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சடைத்தது.
ஒரு அறைக்குள் அக்காமார்கள், தம்பியை அழைத்துச் செல்ல ருத்ரன் அவர்களோடு உள்ளே செல்ல… மஞ்சுளாதேவி தனித்து நின்று விட்டார்.
கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார் விசாலாட்சி. கண்கள் மேலே சொறுக, நெஞ்சுக்கூடு மட்டும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. என்பு தோல் போர்த்திய உடம்பு என்பது போல் இருந்தார். பலமாதங்களாக படுக்கையில் கிடந்தவர். உரித்துப் போட்ட வழைமட்டையாய் வதங்கிக்கிடந்தார்.
தன்னை சுமந்தவளைப் பார்த்தவனுக்கு மனம் கனத்தது. திடீரென படுக்கையில் இருப்பவரைக் காட்டி இதுதான் அம்மா எனக்கூற, சட்டென அந்தச் சூழ்நிலையில் அவனால் ஒட்டமுடியவில்லை. மனம் ஏதோ செய்ய, வேகமாக பின்னால் திரும்பி அம்மாவைத் தேடினான்.
“அம்மா எங்க?” என்றான்.
“இவங்க தான்…” என கட்டிலில் காமிக்க,
“ஷ்ஷ்ஷ்… அவன் சித்தியக் கேக்குறான்.” என சித்ரா கூற, வேகமாக வெளியே வந்தவன் கண்கள் மஞ்சுளாவைத் தேடியது.
தனியாக மரக்கூசத்தில் சாய்ந்து நின்றவரைப்பார்க்க மனம் பிசைந்தது. படுக்கையில் கிடந்தவரைப் பார்க்க பரிதாபம் தான் வந்தது. ஆனால் தனித்து நின்றவரைப் பார்க்க மனம் பரிதவித்தது. ஒருவேளை பெற்ற. பிள்ளைக்கும், வளர்ந்த பிள்ளைக்கும் வேறுபாடு காட்டியிருந்தால் இவர்களைப் பார்த்ததும் அவனுக்கும் ஏக்கம் பிறந்திருக்குமோ என்னவோ. இருபத்தி மூன்று வருடங்களாக தன்னை மனதில் சுமப்பவள் தனித்து நிற்பதைப் பார்த்து மனம் பிசைய, தொண்டையில் முள்ளாய் ஒரு வலி.
பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு பித்தாச்சு
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு
அது முறிஞ்சுபோன வில்லாச்சு
