தெம்மாங்கு பூந்தமிழே 10

10

“உன்னையப் பாத்தா ஸ்டாஃப் மாதிரி தெரியல. ரிசப்ஷனுக்கு வந்த மாதிரியே இருக்கு.”

“அப்ப இது ரிசப்ஷன் இல்லியா?” எனக் கேட்க அவளை முறைத்துப் பார்த்தான். 

ரிசப்ஷன் நடக்கும் இடத்தை கூகுள் நண்பன் கைகாட்ட தனது வண்டியிலேயே வந்து சேர்ந்து விட்டாள் அமிர்தா. பெரிய இடத்து திருமணம் என்பதை மண்டப முகப்பே பறை சாற்றியது. ஆங்காங்கே மணமக்கள் ஜோடியாக நின்ற, விதவிதமான ஆளுயர கட்அவுட்களும், பல்லுப்போன தாத்தா முதல் பல் முளைக்கும் பாப்பா வரை அடங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொண்ட பேனர்களும், வாழ்த்துக்கள் கூறும் நண்பர்கள் குழுக்களின் பேனர்களும் என மண்டபம் முன் வரிசைகட்டி நின்றன. எது மாறினாலும் இது மட்டும் மாறாது போல என எண்ணிக்கொண்டே, வண்டியை பார்க்கிங்கில் விட்டு உள்ளே வந்தாள். 

மண்டப நுழைவாயிலில் இருந்தே அலங்காரம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. தோரணம்,‌ லைட்டிங், மேடைப் பிண்ணனி, பெயர்ப்பலகை அனைத்தும் பிங்க் கலர் தீமில் அமைக்கப்பட்டு இருந்தது.

ப்ளூடூத்தில் தனது குழுவினரிடம் தொடர்பு கொண்டு அலங்கார வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் ருத்ரன். ஒருபுறம் சேர்களுக்கும் சட்டை போட்டு வரிசையாக ஒழுங்கு படுத்திக் கொண்டு இருந்தனர். மேடையின் ஒருபுறம் இசைக்கச்சேரி குழுவினர் தங்களது இசைக்கருவிகளை எல்லாம் சரிபார்த்து சுதி சேர்த்துக் கொண்டிருக்க, வீடியோ கவரேஜ் குரூப் லைட்டிங் சரிபார்த்துக் கொண்டு இருந்தனர். ட்ரோன் கேமராவும் ஆங்காங்கே பறந்து கோணம் பார்த்துக் கொண்டு இருந்தது.

அவனைத் தேடிக்கொண்டு அவன் இருக்கும் இடம் வந்தாள். திரும்பிப் பார்த்தவன் பார்வை அவள் மீதே நிலை குத்தியது.

சுடிதாரில் வரச்சொல்லவும், அடர் பிங்கில், சரிகை வேலைப்பாடு செய்த அனார்க்கலி சுடியில் வந்தவளை கண்கள் எரிக்கப் பார்த்தான். அனார்க்கலி சுடி என்பதால் வளைவு நெளிவுகளையும், மேடு பள்ளங்களையும் அப்பட்டமாக கோடு போட்டுக் காட்டியது‌. ரிசப்ஷன் என்பதால் நாமும் கொஞ்சம் பளிச்சென செல்வோமே என அவள் கிளம்பி வந்தது அவன் கண்களை உறுத்தியது. 

ஆள் பாதி ஆடை பாதி தானே. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பது சுவருக்கும் சித்திரத்திற்கும் பொருந்துதோ இல்லையோ உடல்வாகிற்கும் ஆடைக்கும் வெகுவாகப் பொருந்தும். சிலருக்கு மட்டுமே நாகரீக உடையாக இருந்தாலும் சரி, பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி நன்கு பொருந்தி வரும். 

இதில் நம்நாட்டின் சேலைக்கு மட்டும் விதிவிலக்கு. ஒல்லியோ குண்டோ, குட்டையோ நெட்டையோ, கருப்போ சிவப்போ எப்பேற்பட்ட உடல் வாகோடும் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்றுக் கொள்வது போல கச்சிதமாகப் பொருந்திப் போகும். 

பாரம்பரியத்திற்குப் பாரம்பரியம், கவர்ச்சிக்கு கவர்ச்சி என டூ இன் ஒன் காட்டும், கட்டும் ஆடை எனில்  நம்ம ஊர் சேலை மட்டுமே. ஆமாங்க… முந்தானையில புருஷன  முடிஞ்சுக்கிட்டா, கொசுவத்துல புருஷன சொருகிக்கிட்டானு வேறெந்த உடைக்கும் இப்படி கவர்ச்சிகரமான பேச்சு வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை. (இருந்தா சொல்லுங்க மக்களே! தெரிஞ்சுக்கலாம்!) 

அமிர்தாவின் உடையலங்காரமும் அவள் நிறத்திற்கும் உடல்வாகிற்கும் எடுப்பாகப் பொருந்திப் போக, அதைப் பார்த்தவன் தான் சுள்ளெனக் கடித்தான்.

‘இப்ப இவரு மட்டும் என்னவாம், ஈவென்ட் மேனேஜ் பண்ண வந்த மாதிரியா இருக்காரு. அப்படியே மேடையில நிக்க வச்சா இவரைத்தான் மாப்பிள்ளைனு சொல்லுவாங்க.’ என வாய்விட்டு சொல்ல முடியாமல் உள்ளுக்குள் அவளும் எண்ணெயிலிட்ட  அப்பளமாய் பொறிந்து தள்ளினாள். 

அவன் ஹோட்டலில் இருக்கும் போது இருக்கும் தோற்றத்திற்கும், இங்கு இவனது தோற்றத்திற்கும் ஆறு அல்ல, நூறு வித்யாசங்கள் கூறலாம். 

ஹோட்டல் எனில் பேன்ட்டும், எந்த நாளும் என்னிடம் மாற்றம் இல்லை எனும் வாக்கில் அரைக்கை வெள்ளைச் சட்டை மட்டுமே. விசேஷ நாட்கள் எனில் பச்சைத் தமிழன்டா எனும்படி வேட்டி சட்டை கூட உடுத்தி வருவான்.

ஆனால் இன்று, அவன் நிறத்திற்கு எடுப்பாக அடர் சாம்பல் நிற பேன்ட்டும், டக்இன் செய்த மென்சாம்பல் நிற லினன் முழுக்கை சட்டையும், இடக்கையில் பல ஆயிரங்களை விழுங்கிய வாட்ச், ஜெல் உபயத்தால் அடக்கப்பட்ட கேசம், காலில் ஷு என பக்கா புரொஃபஷனலிஸ்ட்டாக தோற்றம் அளித்தான். 

பொதுவாக சராசரியோ, இல்லை அதற்கும் சற்று குறைவான உயரத்திலோ இருப்பவர்கள், பேன்ட்டும், சட்டையும் ஒரே கலரில், மோனோக்ராமடிக் எனும் வகையில் உடுத்தினால் அவர்களது தோற்றம் உயரமாகக் காண்பிக்கும்.‌ நடிகர் கமல்ஹாசனின் உடையலங்காரம் பெரும்பாலும் இந்த வகையில் தான் இருக்கும்.‌ நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உயரமாகக் காட்ட தொப்புளுக்கு மேல் சட்டையை டக் இன் செய்திருப்பார். இப்ப இருக்குற இளவட்டங்க, பத்தாத பேன்ட்டைப் போட்ட மாதிரி லேசாகக் கனுக்கால் தெரிய போடுவதும் உயரமாகக் காட்டுவதற்கே.

இங்கு ருத்ரபாண்டியனோ சராசரிக்கும் சற்று மேல். அவனது மோனோக்ராமடிக் ஸ்டைல் ட்ரெஸ்ஸிங் இன்னும் அவனை உயரமாகக் காட்டியது‌.

இங்கு வர இவரே தனியே மெனக்கெட்டிருப்பார் போல என எண்ணிக் கொண்டாள். வேலைக்குத் தகுந்த வேஷம் என ஃபார்மல்சில் பக்காவாகக் கிளம்பி வந்திருந்தான். 

கேட்டரிங் அவனே என்பதால் அதற்காக மிகவும் மெனக்கெட்டான். ஒரு திருமணத்தில் எத்தனை சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி சாப்பிடக்கூடிய ஒரே விஷயம் சாப்பாடு மட்டுமே. சாப்பாடு சூப்பர்னு சொல்லிட்டாலே அந்தக் கல்யாணம் சிறப்பான கல்யாணம் தான்‌. மக்கள் சட்டென குறைசொல்லும் விஷயமும் அதுதான். எனவே அதில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டான். திருமண வீட்டார்கள் எதிர்பார்ப்பதும் அதுதான். சாப்பாடு மட்டும் இல்லை என்ற சொல் வந்துவிடக் கூடாது என்பது. 

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் திருமண வீட்டார்கள் கூறிய கணக்கை விட சற்று அதிமாகவே கூட்டத்தை எதிர்பார்த்தான். வார நாட்களைவிட, ஞாயிற்றுக் கிழமை எனில் எதிர்பார்த்ததைவிட இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்பது இதுவரை அவன் அனுபவத்தில் கண்டது. விடுமுறை நாள் என்பதால் அனைவரும் பெரும்பாலும் வரவேற்பில் கலந்து கொள்வதே வழக்கம். ஒருவர் இருவர் என்பவர்கள் கூட குடும்பத்தோடு வருவதுண்டு. அது அப்படியே மறுநாள் காலை திருமணத்தில் குறைந்துவிடும். முக்கியமானவர்கள் மட்டுமே மறுநாள் திருமணத்திலும் கலந்து கொள்வது. எனவே சமன் செய்து கொள்வான். 

இவற்றையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமண வீட்டாரிடம் தெளிவாகப் பேசி பேக்கேஜ் கொட்டேஷன் கொடுத்து விடுவான். ஆரம்ப காலங்களில் தடுமாறியது உண்டு. வரவுக்கும் செலவுக்கும் ஈடாகமால் கையைக் கடித்ததும் உண்டு. எல்லாவற்றையும் அனுபவமாகக் கொண்டு இப்பொழுதெல்லாம் பக்காவாகத் திட்டமிட்டுக் கொள்கிறான். லோவ் பட்ஜெட், மீடியம்,‌ எலைட் என அனைத்து வகையிலும் கற்றுத் தேர்ந்து விட்டான். 

வெல்கம் ட்ரிங் கொடுத்து வரவேற்பதில் இருந்து, மேடை அலங்காரம், பூ, மாலை ஏற்பாடு, ஃபோட்டோ கிராஃபி, மியுசிக் ஈவென்ட், இறுதியாக தாம்பூலப்பை கொடுத்து அனுப்புவது வரை என அனைத்து வகையான தொடர்பும் அவனிடம் உண்டு. ஒரு வாரத்திற்கு முன்பே திருமண வீட்டார் எதிர்பார்ப்பு என்ன என்பதை அனைவருக்கும் தெரிவித்து விடுவான். அதற்கு தகுந்தாற்போல் அனைவரும் தயாராகி விடுவர். 

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இறுதியாக ஒரு தரம் அனைத்தையும் சுற்றி வந்தான். அவனிடம் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் பக்கா வேலைக்காரர்கள். ஏதாவது சிறு குறை என்றாலும் அடுத்த முறை ஆர்டர் தரமாட்டான். தெழில் என வந்து விட்டால் தயவுதாட்சண்யம் பார்க்க மாட்டான் எனத் தெரியும். 

அலங்காரம் செய்யப்பட்ட கொலு பொம்மைகளாக இரு பெண்கள் வரவேற்பிற்கு நிற்க வைக்கப்பட்டனர். 

இவற்றை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றாள் அமிர்தா. 

‘இப்படி சும்மா நிக்கறதுக்கு நம்மலய எதுக்கு வரச் சொல்லணும்.’ என நொடித்துக் கொண்டே.

இவளைத் திரும்பிப் பார்த்து தலையசைத்து அழைக்க அவனிடம் சென்றாள். 

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“நீங்க தான் ஒன்னுமே சொல்லலியே. அதான் சும்மா வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருக்கே.” 

“உன்னய வரச் சொன்னதே அதுக்குத் தான்.” எனக் கூற,‌ முறைத்துப் பார்த்தாள்.

“முதல்ல கண் பார்க்கட்டும். அடுத்து கை செய்யட்டும். வேலைய கவனி. அப்ப தான் புரியும்.” என்றவன் சமையல் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். 

கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்து, உணவு வகைகளை ஹாட் பாக்சிற்கு மாற்றிக் கொண்டு இருந்தனர். சோறு மட்டும் பெரிய தேக்சாவில் கொதித்துக் கொண்டு இருந்தது. ஒருமுறை எல்லாவற்றையும் சரி பார்த்தவன்,

“அண்ணே… சோறு மலந்துருச்சு பாருங்க. வெந்த வாசன வருது. வடுச்சுவிடுங்க. குழையப் போகுது.” எனக் கூற, அங்கே இருந்தவரும் வடிகூடையும், கப்பையும் எடுத்து வந்தார் நீரை வடித்து எடுக்க. கொதிக்கும் சோற்றின் நடுவே மூங்கில் கூடையை அழுத்தி வைத்து கூடையில் சேரும் வடிகஞ்சியை முகர்ந்து ஊற்றி முடித்து, சில கணங்கள் அப்படியே அடுப்புச் சூட்டில் விட்டு வைத்தார். 

பார்த்துக் கொண்டு இருந்தவள், “பூ மலரும் சரி. அதென்ன… சோறு கூடவா மலரும்?” என அவள் கேலியாகக் கேட்க,

“எல்லாத்துக்கும் ஒரு பக்குவம் இருக்கு. அரிசி தான் உலையில கொதிக்கும். அரிசி வெந்தவுடனே கொதிப்பு அடங்கிரும். சோறு பொங்கி மலர்ந்து வரும். அப்ப தான் சோற்று வாசனை வரும். இதுக்கு சோத்த எடுத்துப் பதம் பாக்கணும்னு அவசியம் இல்ல. அனுபவம் இருக்குறவங்களுக்கு வடிக்கும் பக்குவம் வந்துருச்சுனு தன்னால தெரியும்.” எனப் பக்குவம் சொல்லிக் கொடுத்தான்.

“நமக்கெல்லாம் குக்கர் மூனு விசிலடிச்சுக் கூப்புட்டா ஸ்டவ்வ ஆஃப் பண்ணனும்னு மட்டும் தான் தெரியும்.” என்றாள் புன்னகைத்தவாறு.

மனிதனும் அது போல தாங்க. அரைவேக்காடா இருக்குற வரைக்கும் தான் துள்ளல், கொதிப்பு எல்லாம். பக்குவம் அடைஞ்சுட்டா அவனும் உள்ளுக்குள்ளே மலர்ந்து மணம் வீச ஆரம்புச்சுருவான். 

அவனது நடவடிக்கைகளையே அமிர்தா கவனித்துக் கொண்டு இருந்தாள்‌. எப்பொழுதும் மேற்பார்வை நடக்கிறது எனத் தெரிந்தாலே வேலை ஒழுங்காக நடக்கும். இங்கும் அவன் எதுவும் அதிகம் பேசவில்லை.‌ அதைச் செய், இதைச் செய் என அதட்டவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பார்வையாளனாக மட்டுமே நின்று கொண்டான். தேவை எனில் மட்டுமே‌ மாற்றம் செய்யச் சொன்னான்

சற்று நேரத்தில் கூட்டைத் தேடி வரும் தேனீக்களாய் சிறிது சிறிதாக கூட்டம் சேர ஆரம்பித்தது. பார்லர் பெண்களின் கை வண்ணத்தில் வானுலக தேவதையாக  மணப்பெண்ணும், ராஜாவாட்டம் மாப்பிள்ளையும் மேடை ஏறினர். வழக்கமான உறவினர்களின் நலங்கு, சம்பிரதாயங்கள் முடிய அடுத்து ஒவ்வொருவராக மேடை ஏறி பரிசுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க ஆரம்பித்தனர். மியுசிக் குரூப் போடு சேர்ந்து நண்பர்களின்  ஆட்டம் பாட்டம் என விசேஷம் களைகட்டியது.

முன்னபின்ன தெரியாதவங்க விசேஷத்துக்கு தனியாப் போயிட்டு, தேமேனு நிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு போய்ப்பாத்தா தாங்க தெரியும். இங்கே அமிர்தாவும் பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாம வேடிக்கை மட்டுமே பார்த்துத் கொண்டு நிற்க,

அவள் தனியாக நிற்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு தம்பதி அவளிடம் வந்தனர். விசேஷத்திற்கு வந்தவள் என நினைத்துக் கொண்டு அவளைப் பற்றி விசாரித்தனர்.‌ சற்றுத் தள்ளி நகம் கடித்துக் கொண்டு ஒருவன் இவர்களையே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தான்‌. 

இப்பொழுதெல்லாம் எந்த இடம் ஆனாலும் பெண் பிடித்திருந்தால் உடனே விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும் அமிர்தாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக, அவளிடம் வந்து அவளது பெற்றோர் எங்கே என விசாரித்தனர். அவள் எதற்கு என கேள்வி கேட்க, சற்றுத் தள்ளி நின்று நகம் கடித்துக் கொண்டு இருந்தவனை கைகாட்டி அழைத்தனர். அவன் அருகே வர அவனது உடல் மொழியே கூறியது இவர்கள் வந்து விசாரித்ததன் காரணத்தை. வாயெல்லாம் பல்லாக, கண்களில் அசடு வழிய வந்து நின்றான். அவர்கள் வேறு விபரம் கேட்கும் முன்,

“சாரி ஆன்ட்டி… எனக்கு எங்கேஜ்மென்ட் ஆயிருச்சு. அதோ அவர் தான்.” என அவர்கள் குறிப்பறிந்து எட்டத்தில் நின்ற ருத்ரனைக் கை காமிக்க, 

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இவள் மீதும் ஒரு கண் வைத்திருந்தவன், தன்னைக் காட்டி என்ன சொல்கிறாள் என புருவம் சுருக்கி, என்னவென்று தலையை ஆட்டி கேள்வியாகப் பார்க்க, ஒன்றுமில்லை எனும் ஜாடையில் இவளும் சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். 

அவன் பார்வையையும், இவளது தலையாட்டலையும் பார்த்தவர்கள் உண்மை என்று எண்ணிக் கொண்டனர். அருகில் நின்றவனின் முகம் பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருந்தது. சபை நாகரீகம் கருதி முயன்று சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.‌

மணி எட்டைத்தாண்ட, அவளிடம் வந்தவன் அவளைக் கிளம்பச் சொன்னான். அதற்குள் கௌரியும் பலமுறை மகளிற்கு அழைத்து விட்டார். அவளும் கிளம்புவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தாள்.

அவள் பின்னாலே வந்தவன், ப்ளுடூத்தை அணைத்துவிட்டு அவர்கள் என்ன விசாரித்தார்கள் என வினவினான்.  

“கட்டாயம் தெரிஞ்சே ஆகணுமோ?” 

“தெரிஞ்சவங்க மாதிரி சிரிச்சு சிரிச்சுப் பேசினாங்களே! அதான் கேட்டே.” என்றான் பட்டும் படாமலும்.

“அப்பறம்… உங்கள மாதிரியா தெரிஞ்சவங்ககிட்டக் கூட மூஞ்சியில முள்ளக் கட்டின மாதிரி சிடுசிடுன்னு பேசுவாங்க?” எனக் கேட்க, அவன் பதில் கூறாமல் நிற்க,

“என்னைய பொண்ணு விசாரிச்சுட்டுப் போறாங்க. அவங்க பையனுக்கு என்னப் புடிச்சுருக்காம்.” என சிரித்துக் கொண்டே கூற, ஒருமுறை திரும்பி அவனைப் பார்த்தான். நன்றாகவே இருந்தான். குறை சொல்லும்படி இல்லை. 

“நல்லாத்தானே இருக்கான். நான் வேணா யாரு எவருன்னு அவங்களப் பத்தி விசாரிச்சு சொல்லவா?” எனக் கேலி போல் தான் கேட்டான். வந்ததே கோபம். ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணியாக அவதாரம் எடுத்தவள்,

“எப்ப இருந்து இந்த வேலையும் ஆரம்பிச்சீங்க. அதுக்கு என்னைப் பெத்தவங்க இருக்காங்க. வந்த வேலைய மட்டும் பாருங்க. உங்க அக்கறைக்கு ரொம்ப தாங்க்ஸ்.” என சுள்ளென விழுந்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அங்கு கணநேரமும் நிற்காமல் பார்க்கிங் ஏரியாவிற்கு விடுவிடுவென நடையைக் கட்டினாள். 

அப்பொழுதும் அவன் கேட்டது அவனுக்கு அபத்தமாக தெரியவில்லை. முன்தினம், நல்ல சம்பந்தமெல்லாம் இவள் தட்டிக் கழிப்பதாக வெங்கடேசன் கூறியதே மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது. 

அவளது மனம் தான் உள்ளங்கை நெல்லிக்கனியாக அப்பட்டமாகத் தெரிகிறதே. ஆனால் இவனுக்கு தான் ஏதோ ஒரு சஞ்சலம் மனதிற்குள் வண்டாகக் குடைந்து கொண்டே இருக்கிறதே. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கசப்பாய் பெரும் அவஸ்த்தை அவனுக்குள்ளும். மகளின் முகம் மனக்கண் முன் வரும் பொழுதெல்லாம் இவளது முகம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. 

கடல் அலையாய் எத்தனை முறை கரையைத தீண்டினாலும் கரையை மட்டும் தாண்ட முடிவதில்லை. 

சென்றவளையே பார்த்துக் கொண்டே நிற்க, வரிசையில் நின்ற  வண்டியைத் திருப்பி, சாவியைப் பொறுத்தி ஆக்சிலேட்டரை அவள் முறுக்கிய விதமே அவளது கோபத்தை உணர்த்த, அப்படிக் கேட்டிருக்கக் கூடாதோ என காலம் கடந்த ஞானம் உதித்தது அவனுக்கு.

வேகம் கூட்டிய வண்டி, மண்டப நுழைவாயில் விட்டுத் திரும்ப, எதிர்த்து உள்ளே நுழைந்த காரை கவனிக்கத் தவறி இருந்தாள். சட்டென சுதாரித்து பிரேக் போட்டும் வண்டி அவள்‌ கட்டுப்பாட்டில் இன்றி சாய்ந்தது. 

பார்த்துக் கொண்டே இருந்தவன், பதட்டத்தோடு ஓடுவதற்குள்,‌ அங்கிருந்தவர்கள் வண்டியைத் தூக்க உதவி செய்ய, தடுமாறி எழுந்தவள் வண்டியைப் பிடிக்க முயல, பதட்டத்தில் முடியாமல் கைகள் நடுங்குவது தெரிந்தது. அதற்குள் அவளை சமீபத்தவன், வண்டியை அவளிடம் இருந்து வாங்கி ஓரமாகத் தள்ளி நிறுத்தினான். இவள் விழுந்த பரபரப்பில் என்னவென்று கூட்டம் எட்டிப் பார்க்க, காருக்கு வழி ஒதுக்கிக் கொடுத்தவன், அடுத்த சில கணங்களில் நிலமையை இயல்புக்குக் கொண்டு வந்தான். 

அவள் அருகில் சென்று கைபிடித்து ஆராய, அவளோ கையை உதறிக் கொண்டு முரண்டு பண்ண, 

“எங்கேயாவது அடி பட்டுருக்கா?” என படபடத்தான். அவள் பதில் ஏதும் பேசாமல் இறுகிப் போக, மிளகாய்ப் பழமாய் மூக்கின்  நுனி சிவந்து, கீழே விழுந்த பதட்டத்தில் கண்கள் கலங்க மூச்சு வாங்கி நின்ற தோற்றம் அவள் கோபத்தை அவனுக்கு உணர்த்த, 

ஹேன்ட்ஸ் ஃப்ரீயில் தனது குழுவில் இருந்த ஒருவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவளை அருகே இருந்த புல்வெளிக்கு கைபிடித்து இழுத்து வந்தான். அங்கே இருந்த பென்ஞ்சில் அமரச் செய்தான். உள்ளே சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தவன் பாட்டிலைத் திறந்து குடிக்கக் கொடுக்க அவள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள். 

“மொத தண்ணியக் குடி அமிர்தா. படபடப்பு அடங்கும்.” என அதட்ட, பட்டெனத் திரும்பிப் பார்த்தாள். எத்தனை நாள் கழித்து இந்த அழைப்பு. உயிர் வரை தீண்டியது. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ இவளுக்கு வேறு எங்கும் அடி பட்டிருக்கிறதா என தலைமுதல் கால் வரை ஆராய்ந்து கொண்டிருந்தான். அடி ஏதும் பட்டதாகத் தெரியவில்லை. நிம்மதியாய் மூச்சை இழுத்து விட்டான். 

“உங்களால எப்படி அப்படிக் கேக்க முடிஞ்சது?” என குரல் நடுங்கக் கேட்க, அவளை ஏறெடுத்துப் பார்த்தவன் முகத்தில் வினாக்குறிகள்.

“வேறொருத்தரோட எப்படி என்னைய சேத்துவச்சுப் பாக்க மனசு வந்துச்சுனு கேட்டேன். உங்களத் தவிர வேற யார் கூடயும் நான் சந்தோஷமா இருப்பேனானு என்னால நெனச்சுக்கூடப் பாக்க முடியல.” எனக் கேட்டவள் தொண்டை அடைத்தது. கண்ணீர் இப்பவோ அப்பவோ என கரை உடைக்க ஆயத்தம் பார்த்து நின்றது. 

“ஏன்… உன்னை விட்டுட்டு, நான் இன்னொருத்தி கூட சந்தோஷமா வாழல?”

“நீங்க… சந்தோஷமா… வாழ்ந்தீங்க…நான் நம்பணும்? ம்ம்ஹும், இத எவளாவது காதுல பூ வச்சுருப்பா. அவகிட்ட போய் சொல்லுங்க.” என்றவளின் இதழோரம் எள்ளலாய் ஒரு சிரிப்பு இழையோடியது.

“அதுக்கு அடையாளமா ஒரு குழந்தையே இருக்கு.” என்றவன் பதில் எங்கோ பார்த்துக் கொண்டு வந்தது. 

“இது உங்களுக்கே அபத்தமா இல்ல. குழந்தை பொறந்துட்டா சந்தோஷமா வாழ்ந்ததா அர்த்தமா. உங்களையும் ஏமாத்திக்கிட்டு, அமராவையும் ஏமாத்தி இருக்கீங்க.” என வார்த்தையால் சாடினாள்.

“எல்லாருக்கும் நெனச்ச வாழ்க்கை அமையறதில்ல அமிர்தா.” என குரல் சற்று ஓங்கி ஒலிக்க,

“அது எனக்கும் தெரியும். அம்மா கூட கேட்டாங்க. இப்ப அமராவதி உயிரோட இருந்தா என்ன பண்ணியிருப்பேனு. நீங்க சொன்ன மாதிரி இன்னொருத்தரக் கல்யாணம் பண்ணிட்டு என்னால நிம்மதியா வாழ முடியும். ஆனா சந்தோஷமா வாழ்வேனானு தெரியாது. நீங்க கேட்ட மாதிரி எல்லாருமேவா ஆசப்பட்டவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பெரும்பாலான பொம்பளைளுக்கு வெளியவே சொல்லாத, அவங்களுக்கு மட்டுமே ரகசியமான, தலயணைக்காதல் ஒன்னு கண்ணீரோட இருக்கும். என்னோட காதலும் அப்படியே இருந்துட்டுப் போகட்டும்னு என்னால சகஜமா எடுத்துக்க முடியல.” எனச் சொன்னவளின் குரலில் இருந்த வலி ருத்ரனின் இதயத்தைக் கூறு போட்டது. 

“எல்லாருமேவா ஆசப்பட்டவங்கள கல்யாணம் பண்றாங்கனு கேட்டீங்களே? சோத்துக்குப் பக்குவம் சொல்ற உங்க பாஷையிலயே பதில் சொல்லவா?” எனக் கேட்க அவளை கூர்ந்து பார்த்தான். 

“பிடிச்ச வாழ்க்கைங்கறது ருசிக்கு சாப்பிடறது. பசியே இல்லைனாலும் ஆசையா சாப்பிடத் தோணும். பிடிக்காத வாழ்க்கைங்கறது பசிக்கு சாப்பிடறது. வேற வழியில்லாம, சாப்பிட்டாகனுமேன்னு  சாப்பிடறது. இதுல இன்னொரு வகையும் இருக்கு. பசியாவது, ருசியாவது வயிறு நெறஞ்சா போதும்னு சாப்பிடறது. மூனாவது சொன்னதுல பிரச்சினையே இல்ல. வண்டி ஓடிறும். ஆனா முதல்ல சொன்ன ரெண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நான், பசிக்கி வேற வழியில்லாம சாப்பிடறதும், ருசிக்குப் பிடிச்சு சாப்பிடறதும் உங்க கையில தான் இருக்கு. அப்படியே நான் பசிக்கு சாப்பிடறதா இருந்தாலும் உங்க நெனப்பு வராம இருக்காது. அது நான் கட்டுனவனுக்கு செய்ற துரோகம். அதுல உங்களுக்கும் பங்கிருக்கு.‌” 

பெண்ணவள் மணலாய் வாரி இறைத்த வார்த்தைகளில் ஆறடி ஆண்மகன் கல்லாய் சமைந்து நின்றான். அவள் வார்த்தைகளின் கூர்மை ஈட்டியாய் உள்ளிறங்கியது.

“இதுல நீங்க அமராவதியோட வாழ்ந்த வாழ்க்கை இந்த மூனுலயும் சேராது. நீங்க பசிக்கும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ருசிக்கும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. பரிமாறுபவரா மட்டும் தான் இருந்திருப்பீங்க. ஏன்னா…” என நிறுத்தியவள், நின்று கொண்டிருந்தவனை நேருக்கு நேராக நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தாள்.  அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 நின்று கொண்டிருந்தவன் வலக்கரம் மெதுவாதப்பிடித்தவள், அதில் முகம்புதைத்துக் கொண்டாள். ”உங்க பசிக்கும், ருசிக்கும் என்னால மட்டும் தான் பரிமாற முடியும் மாமா.” என்றவள் வார்த்தைகள் தளுதளுக்க, அவளது அழைப்பில் ஒரு கணம் உடல் இறுக, கன்னியின் கரைதாண்டிய கண்ணீர் கன்னம் வழிய, கண்ணீரின் வெப்பச்சூட்டை அவன் கரம் உணர… அவனது கண்களில் இருந்தும் கண்ணீர் கரகரவென வடிய, துடைக்கும் சுரணைகூட இல்லாமல், அவன் விட்ட பெருமூச்சில் மதயானையாய் மார்பு விம்மித் தணிந்தது. தொண்டைக் குழிக்குள் ஏதோ சிக்கிய உணர்வு. கைகளை விலக்கிக் கொள்ளவில்லை அவன். இன்னும் அவளது கை நடுங்குவது தெரிந்தது. உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தவளது கரங்களை ஆறுதலாக அழுத்திக் கொடுத்தான். பெண்ணவளின் அழைப்பில் அவன் மெழுகாய் உருகிப்போனான். தான் வாழ்ந்த வாழ்க்கையை எத்தனை சுலபமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டாள் என உள்ளுக்குள் நொருங்கியும் போனான். 

“பசிக்காக மட்டுமே சாப்பிடும்போது நாளடைவுல பசியும் மறத்துப் போகும் மாமா. உணர்ச்சிகள் செல்லறிச்சுப் போன வாழ்க்கை எப்படிப்பட்ட நரகம்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ங்கறது இல்ல.” மூக்கு விடைக்க, தொண்டை அடைக்க, கீழுதட்டை உள்புறமாக அழுந்தக் கடித்ததில், இவன்‌முன் தன் அழுகையைக் கட்டுப்படுத்த அவள் பிரம்மப் பிரயத்தனப் படுவது பகிரங்கமாகத் தெரிந்தது. 

கடமைக்கென ஒரு வாழ்க்கை தான். ஆனால் அந்தத் கடமையிலும் கைநிறைய ஆணிமுத்தாய் ஒரு புதையல் அள்ளி வந்தானே. தனது வாழ்க்கையின் வெறுமையை நிரப்ப வந்த பூக்குவியல். கையில் தவழ்ந்த ரோஜாக்கொத்து. கைகால் அசைக்கும் மல்லி மொட்டு. கிண்கிணியாய் ஒலிக்கும் மழலைச் சிரிப்பால் அப்பனின் மனக்காயத்திற்கு மருந்திட்டவள். வேம்பாய்க் கசந்த வாழ்வில் கரும்பாய் வந்தவள் அவன் மகள் ஆதினி. அவனுக்கு இனி ஆதியும் அந்தமும் மகள் மட்டுமே என எண்ண வைத்தவள். மகளின் நினைப்பு மனதை நிரப்ப மெல்ல தன்னை மீட்டுக் கொண்டான். இவளின் உறுதி அவனை அசைத்துப் பார்க்க, அதைத் தகர்க்கும் நோக்கோடு, மூச்சை இழுத்து விட்டு, தொண்டையை செறுமிக் கொண்டான். 

“வேண்டாம் அமிர்தா. என்னால உன்ன சந்தோஷமா வச்சுக்க முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு  இல்ல ம்மா. இது ரெண்டு பேருக்குமே நரகமாப் போயிறும். நீ சந்தோஷமா இல்லைனாலும் பரவாயில்ல,  நிம்மதியாவாவது இருக்கணும்னு ஆசப்படுறேன்டி.” என சிறுபிள்ளைக்கு கூறுவது போல் பொறுமையாகக் கூற, அமைதியாக மட்டுமே ஏறிட்டுப் பார்த்தாள்.‌ ஏதோ ஒன்று அவனுக்குள் தன்னை நெருங்கவிடாமல் நெருடுவதாகத் தோன்ற, சட்டென கையை உதறியவள்,  

“நீங்க என்ன வேணாலும் முடிவு பண்ணிக்கோங்க. பந்தியில எடமில்லைனு சொன்னாலும் சரி. இந்தவாட்டி  நான் என் இலைய விட்டுத் தர்றதா இல்ல.” என உறுதியாகக் கூறிவிட்டு, விடுவிடுவென எழுந்து சென்றவள், ஓரமாகத் தள்ளி நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துக் கொண்டு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக சீறிப் பாய்ந்தாள். அவள் வேகம் பார்த்து பதட்டம் அதிகரிக்க, அவள் சாப்பிடவில்லை என்பதும் உரைத்தது.

அவள் விட்டுச் சென்ற இடத்தை விட்டுச்செல்ல இயலாமல் வேரோடிப் போய் நின்றான்.

ஏதோ தேவை என மாப்பிள்ளை வீட்டார் அழைப்பதாக கடமை அவனை அழைக்க, சுயத்திற்கு வந்தவன் உள்ளே செல்ல, எண்ணமெல்லாம் வண்டியில் சென்றவளோடே பின்னே சென்றது.

அவள் வீட்டிற்கு சென்றிருக்கும் நேரத்தை உத்தேசித்து, அவன் மீண்டும் மீண்டும் அழைத்தும் அவள் அழைப்பை ஏற்காமலிருக்க, அடுத்து கௌதமிற்கு அழைத்தான். 

“சொல்லுங்க மாமா!” என அவன் உடனே அழைப்பை ஏற்க,

“வந்துட்டாளா?” என்றான் எடுத்தவுடனே.

“ம்ம்ம்… இப்ப தான் அக்கா வந்துச்சு மாமா. எதுவும் பிரச்சினையா?” என கேட்க, நிம்மதிப் பெருமூச்சு அவனிடத்தில்.

“இல்லடா… இன்னும் அவ சாப்பிடல. நேரமாகுதுன்னு கெளம்பிட்டா.” என சமாளித்தான்.

“நேரா வந்தவுடனே டைனிங் டேபிள்ல தான் உக்காந்திருக்கு மாமா. அம்மா தோசை சுடுறாங்க.” என சிரித்துக் கொண்டே பதில் கூற, இவனால் சிரிக்க முடியவில்லை.

மனதின் வெறுமையை வயிற்றில் இட்டு நிரப்புகிறாள் எனப் புரிய இங்கு இவனுக்கு மனம் கணத்துப் போயிற்று. 

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

உன் வாசலில் எனை கோலம் இடு

இல்லை என்றால் ஒரு சாபம் இடு

பொன்னாரமே…

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து

என்னோடு நீ பாடிவா சிந்து…

அவளின் உறுதி இவனின் உறுதியை அசைத்துப் பார்த்தது. 

நித்தம் நித்தம் ஒரு தேர்வு நடத்தி நம்மைப் பரீட்சிப்பதில் படைத்தவனுக்கு ஏன் இத்தனை ஆனந்தமோ. 

ஆடும் வரை ஆடு என ஆடவிட்டும் பார்க்கிறான்.

நூல்கட்டிய பொம்மையாய் ஆட்டுவித்தும் பார்க்கிறான்.

அவனுக்கு எல்லாமே திருவிளையாடலாம். நமக்கு…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top