1
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்…
என கடைவீதியில் இருந்து பாடல் கசிந்துகொண்டு இருந்தது.
பாடல் வரிகளில் மனம் லயித்தவளாக, கூட்டத்தோடு கலந்து கோவிலுக்குள் வந்தாள் அமிர்தவல்லி.
சித்திரைப் பெண்ணிற்கு பூமிப்பெண் மீது என்னதான் கோபமோ. சூரியனைத் தூண்டிவிட்டு சுட்டெரித்துக் கொண்டிருந்தாள் காலையிலேயே.
சித்திரைத் திருவிழா…
கொண்டை முடி அலங்கரித்து, கொஞ்சும் கிளி கையிலேந்தி, மரகதப்பச்சை மேனியாள் மரகதவல்லி மணமகளாக வீற்றிருக்க, சர்வபூஜித அலங்காரத்தோடு மாலையும் கழுத்துமாக, கனகம்பீரமாக மணமகனாக சுந்தரேஸ்வரர், மீனாளின் சொக்கனாக மேடையில் வீற்றிருக்க, கீழே அமர்ந்து இருந்த பக்த கோடிகளின் கண்களில் எல்லாம் பக்திப் பரவசமாய் ஆனந்த ஆரவாரம்.
இருக்காதா பின்ன…
அம்மையும் அப்பனும் மணமக்களாக வீற்றிருக்க அவரது பிள்ளைகளுக்கு பெற்றவர்களின் மணக்கோலம் காணும் வாய்ப்பு… எத்தனை பேருக்கு கிடைக்கும் இத்தகைய பேர்.
சைவமும் வைணவமும் கைகோர்த்து கலந்தாடும் விழாவாயிற்றே… மதுரையில் சித்திரைத் திருவிழா.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்த அழகம்பெருமாள் ஆற்றில் இறங்குவதும் ஒருங்கே நடந்தேறும் தேர்த்திருவிழா.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் எங்கு திரும்பினும் எட்டுத்திக்கும் ஜனக்கூட்டமே.
ஆற்றில் கள்ளழகர் இறங்குவது வைகை ஆற்று வெள்ளத்திலா அல்லது அலைகடலென ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்திலா எனும் எண்ணம் கொள்ளும் அளவிற்கு மக்கள் அலைகடலென திரளும் பெருவிழா. மக்கள் வெள்ளத்தில் நீந்தி தான் அழகர் ஆற்றைக் கடக்கிறார். எள்ளுப் போட்டால் எள் கீழே விழுகாது. அப்படியொரு கூட்டம்.
வரலாற்று நிகழ்வுகளையே மாற்றியமைத்த விழா இது. வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு தளங்களில் நடந்த மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணமும், ஆற்றில் அழகர் இறங்கும் விழாவும் என… இருவேறு திருவிழாக்களை ஒன்றிணைத்து அக்கம்பக்கம் கிராமத்தாரை ஒன்றுகூட்டிய விழா.
மதுரை வீதிகளுக்கே உரிய தனிச்சிறப்பு… இங்கு மட்டும் தான் சித்திரை, வைகாசி, ஆனி… என வீதிகளுக்கு தமிழ் மாதப் பெயர்கள் வைக்கப்பெற்று, நான்மாடக்கூடலாம் மதுரை மாநகரில், பொதிகைத் தென்றலோடு உலா வருகிறது.
தமிழ் மாதப் பெயர்களில் நம் முன்னோர்களின் வானியல் அறிவும், சாஸ்த்திரமும் நன்கு விளங்கும். ஒவ்வொரு தமிழ் மாதமும் முழு பௌர்ணமி நாளன்று என்ன நட்சத்திரம் நிகழ்கிறதோ அதுவே தமிழ் மாதங்களின் பெயர்களாக இருக்கின்றன.
சித்திரை மாதப் பௌர்ணமி அன்று சித்திரா நட்சத்திரம், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம்… பங்குனி மாதம் பௌர்ணமி அன்று பல்குனிஉத்திராடம் நட்சத்திரமும் என ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று என்ன நட்சத்திரமோ அதுவே அந்தந்த மாதங்களின் தமிழ்ப்பெயர்களாக விளங்குகிறது. எத்தனை யுகங்கள் மாறினாலும் இது மாறாது. தொலைநோக்கி உதவி இல்லாமல் தொலைநோக்குப் பார்வை கொண்டு மட்டுமே கணிக்கப்பெற்றது.
அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளியில் படித்தவர்களுக்கு சித்திரை, வைகாசி, ஆனி… என பாடம் படிப்பிக்கப் படவில்லை. சித்திரைமேஷம், வைகாசிரிஷபம், ஆனிமிதுனம்… என பனிரெண்டு மாதங்களோடு பனிரெண்டு ராசிகளும் இணைத்தே படிப்பிக்கப்பட்டது.
இதில் அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அந்தந்த ராசி எனவும் கணிக்கப்பட்டது. சாதகக் கட்டத்தில் சூரியனின் வீடு, அவர் பிறந்த மாதத்தில் எந்த ராசியோ அதில் தான் வீற்றிருப்பார்.
ஒருவர் பிறந்தது சித்திரை மாதம் எனில் சூரியனார் வீடு மேஷம் ஆகத்தான் இருக்கும். இதைக் கொண்டே ஒருவரது சாதகம் கணிக்கப்படுகிறது.
சூரியனை மையப்புள்ளியாகக் கொண்டதுதான் உலக இயக்கம். ஏரோட்டத்தின் பின்னால் மனிதனின் வாழ்க்கை ஓட்டம் இயங்கிய வரைக்கும் பருவ மழைக்கும், பருவகால மாற்றங்களுக்கும், விண்மீன்களையும், கோள்களையுமே அண்ணாந்து பார்த்து, பருவத்தில் பயிர் செய்தவர்கள் வாழ்க்கை தலை நிமிர்ந்தே இருந்தது.
நிலத்தைப் பக்குவப்படுத்தி பயிர் செய்து விவசாயத்தை அறிமுகப் படுத்தியவர்கள் நம் மருதநில மக்கள்.
இயற்கையோடு இயைந்து இருந்தவரை அவனது வாழ்க்கையும் இயற்கைக்குக் கட்டுப்பட்டே இயங்கியது. என்று மனிதனின் தொடர்பு தொலைபேசி கோபுரத்தோடு என்று ஆனதோ, அன்றே மனிதனுக்கும் இயற்கைக்குமான கன்னி அறுபட்டுப் போனது.
என்ன பெருசா இயற்கை இயற்கைனு கூப்பாடு போடுறீங்க. விஞ்ஞான வளர்ச்சி இல்லாம இன்னைக்கு வாழமுடியுமா… எனக் கேட்டால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். சாத்தியமில்லாத ஒன்றும் கூட. அப்படியென்ன நமக்கும் இயற்கைக்குமான பெரிய தொடர்புனு கேக்குறவங்களுக்கு ஒரு சின்ன உதாரணம்.
வருஷத்துல பனிரெண்டு மாதமும் நம்மள சுத்தி இருக்கிற பிரச்சினைகளால அகமும் புறமும் உழண்டுட்டு இருந்தாலும், அவங்கவங்க பிறந்த மாசத்துல மட்டும் அகமும் முகமும் தனி அழகு பெறும். எப்படியாப்பட்ட முகமும் தனி சோபை காட்டும். இத நம்மளநாமே உள்ளுக்குள்ள உத்துப் பாத்து தெரிஞ்சுக்கலாம்.
வளர்ச்சி என்ற பெயரில் நாம் பெற்றவைகளைவிட இழந்தவைகள் ஏராளம். காலநிலைக்குத் தக்கவாறு பழையன பல மறைக்கப்பட்டன. புதியன பல ஊடுறுவி விட்டன. போலிகள் மலிந்து விட்டதால் உண்மைகள் உறக்கத்துக்குப் போய்விட்டன. எல்லாமே இன்று வியாபார நோக்கோடே பார்க்கப்படுவதால் உண்மையை உள்ளது உள்ளபடி கணித்துச் சொல்லுபவர் யாரும் இன்று இல்லை. இன்று சாதகம் பார்க்கப்படுகிறது. கணிக்கப்படுவதில்லை.
குறித்த மங்கள நேரத்தில் மேளம் முழங்க, அம்மையப்பனுக்கு திருப்பூட்டு நிகழ, கூட்டத்துள் அதை ஒரு ஜோடி கண்கள் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தன, தன் வாழ் நாளில் மாலை சூடும் மணநாளிற்காக. அதற்கு மகேசன் எப்பொழுதோ மனது வைத்தாயிற்று. மணாளன் தான் மனது வைக்க வேண்டும்.
திருக்கல்யாணத்தைப் பார்த்துவிட்டு கூட்டத்திலிருந்து பிரிந்து, அவளோடு கோவிலில் இணைந்து கொண்ட தேன்மொழியோடு வெளிவந்தால் அமிர்தவல்லி.
இருவரும் கோவில் வளாகம் வர, அனைத்து வைக்கப்பெற்ற கைபேசியை இயக்கி தனது கைப்பையில் அமிர்தவல்லி போட்ட அடுத்த சில கணங்களில், அழைப்பு வந்தது. ஃபோனை எடுத்தவள், அழைப்பை ஏற்றுப்பேசாமல், கைபேசியின் திரையையே புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி, அதற்கு மேல் பொறுமையைப் பிடித்து வைக்க முடியாமல், ஒரு முறை அடித்து அடங்கிய கேபேசி, மீண்டும் அழைக்க,
“இப்ப கால் அட்டென்ட் பண்ணப் போறீயா? இல்ல புடுங்கி கூட்டத்துக்குள்ள போடவா?” என அழைப்பை ஏற்காமல் கைபேசியையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தவளை கோவில் வளாகத்தில் நடந்து கொண்டே தேன்மொழி கடுப்பாகக் கேட்க, அவளை முறைத்து விட்டு அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்கம்மா?”
“……..’
“இப்ப தான் திருகல்யாணம் முடிஞ்சுது. கோவிலவிட்டு வெளிய வர்றோம்.”
“……..”
“ம்ம்ம்… தேன்மொழி கூடத்தான் இருக்கா. சரிம்மா… நான் கொஞ்ச நேரங்கழிச்சு கால் பண்றேன்” என அம்மாவிடம் பேசிவிட்டு வைத்தவள்,
“உனக்கு பொறாமப்பா. என்னோட ஆள நான் ஸ்கீரின்ல பாத்து சைட் அடிக்கிறேனு பொறாமை.”
“ஆமா… நீ மட்டும் தான் அலுவுசமா உன்னோட ஆள் பிக்சர ஸ்கிரீன்ல வச்சுருக்க. வேற யாரும் வச்சதே இல்ல பாரு. இதுல உன்னயப் பாத்து பொறாமைல பொங்குறாங்களாம். இதுக்கே இந்த அலப்பறை. இதுல எங்க அண்ணே உன்னய திரும்பி கிரும்பி பாத்துட்டாருனா… என்னய எல்லாம் யாருன்னு கேக்க மாட்ட?”
“ஆமா… நீ யாரு?” என தூக்கத்தில் தலை நழுவிய குழந்தையை சரியாகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டே வேண்டுமென வம்பிழுத்தவளிடம்,
“எல்லாம் என் நேரம்” என அலுத்துக் கொண்டாள் தேன்மொழி.
“எல்லாம் நல்ல நேரம் தான். அங்க பாரு, யாரு வர்றதுனு” என தலையை ஆட்டிக் காண்பிக்க,
ஆண்கள் கூட்டத்திற்குள் இருந்து திருக்கல்யாணம் பார்த்துவிட்டு, மரியாதைக்காக கொடுக்கப்பட்ட மாலையை இடக்கையில் போட்டவாறே விலகி வந்தான் ருத்ரபாண்டியன்.
அவனது அப்பா கேசவமூர்த்தியைக் கொண்டு அங்கிருந்த அறநிலையத்தார்க்கு அவனை நன்கு அடையாளம் தெரியும். எனவே அவரது அப்பாவிற்கான மரியாதையை அவனுக்கு வழங்கினர்.
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவளை முழங்கை கொண்டு இடித்து தரையிறக்கினாள் தேன்மொழி.
இவர்களைத் தாண்டி சென்றவன் கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் இரண்டு காகித டம்ளர்களில் மோர் எடுத்துக்கொண்டு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
பேசிக்கொண்டே கோவில் பிரகாரம் விட்டு வெளி வளாகம் வந்து இருந்தனர் பெண்கள் இருவரும்.
சித்திரை திருவிழாவினைக் காண வந்திருக்கும் பக்த கோடிகளுக்கு ஆர்.பி. கேட்டரிங் அன்ட் ஈவென்ட் மேனேஜ்மென்ட் சார்பில் நீர்ப்பந்தல் அமைத்து மோரும், கூழும், சர்பத் என விநியோகம் செய்து கொண்டிருந்தவன், இவர்களை நோக்கி மோர் எடுத்துக்கொண்டு வர, அவனை கை காண்பித்தாள் அமிர்தவல்லி.
ஆர்.பி. கேட்டரிங் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ். திருமணத்திற்கு பெண்ணும், மாப்பிள்ளையையும் முடிவு செய்து விட்டு இவனை அனுகினால் போதும், மேளதாளத்திலிருந்து, கல்யாணசத்திரம், சமையல், மேடை அலங்காரம், சவுன்ட் சர்வீஸ் என மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் இவன் பார்த்துக் கொள்வான். தேவையெனில் ஹனிமூன் பேக்கேஜ் முதற் கொண்டு ஏற்பாடு செய்து மணமக்களை பேக் செய்து அனுப்பி வைப்பான்.
முதலில் இவன் ஆரம்பித்தது ரெஸ்ட்டாரன்ட் மட்டுமே. கணக்கும், அறிவியலும் இவனுக்கு படிப்பில் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வைக்க, எப்படியோ முக்கித்தக்கி பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டியவன், கல்நெரி படிக்கப்போவதாகக் கூறினான். எதற்கும் பாராமுகம் காட்டும் தந்தை மறுக்காமல் சம்மதித்த அன்று அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதன் முறையாக இவன் விருப்பத்திற்கு தந்தையின் ஒப்புதல் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வானத்தில் பறக்காத குறை. ஆனால் அதன் பின்னால் இருந்த உண்மை தெரிய வந்த பொழுது வாழ்க்கை முதன் முதலாகக் கசந்து போனது அவனுக்கு. அதுவரையுமே தனக்கு படிப்பு வராமல், மக்கு சாம்பிராணியாக இருப்பதால் தான் அவருக்கு நம்மை பிடிக்கவில்லையோ என எண்ணிக் கொண்டு இருந்தான்.
பின்னே… அந்தக்காலத்திலேய மெத்தப் படித்த மேதாவி அவர். அவர் மகனுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்றால் கோபம் வராதா.
படிப்பு தான் தகிடுதத்தம் ருத்ரபாண்டியனுக்கு. ஆனால் கபடி எனக் கட்டம்கட்டி உள்ளே இறங்கி விட்டால் வாடிவாசல் வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை தான். வாடிவாசலில் காளையர்கள் தான் காளையை வட்டமிடுவர். ஆனால் கபடிக்களத்தில் இந்தக் காளை தான் காளையர்களை வட்டமிடும். இந்தக் காளையிடம் அனைவரும் சிக்கித்தான் ஆகவேண்டும் .
அவன் கபடி களத்தில், கால்களை தரையில் அழுத்தமாகப் பதித்து, கண்களை மட்டும் சுழலவிட்டு, கைகளை சாட்டையென வீசி, மூச்சடக்கிப் பாடிச் செல்லும் வேகத்தைப் பார்த்தவர்கள் அப்படியே அப்பனாட்டம் என சிலாகிக்கும் பொழுது பெரிமிதம் பொங்க தந்தையை திரும்பிப் பார்ப்பான். ஆனால் அந்த முகத்தில் அவன் எதிர்பார்த்தது கிடைக்காது. மனம் வெறுமையாக உணர்ந்த தருணங்கள் அவை.
படித்து முடித்து, அனுபவத்திற்காக சிறிது காலம் வேலைக்கு சென்றுவிட்டு ஹோட்டல் தொடங்கியவன், அடுத்து கேட்டரிங் சர்வீஸ் தொடங்கினான். விடிந்த பொழுது அடைவதற்குள் அந்த நாளே பழையதாகிப் போகிறது. அடுத்த விடியலில் புதிதாக ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. இன்றைய அவசரகால ஓட்டத்திற்கு இது காணாது எனத் தோன்றியது. மதுரைப் பக்கத்திற்கு விசேஷங்களுக்கா பஞ்சம். எனவே தான் ஒரு விசேஷத்திற்கு தேவையான பந்தல் முதற்கொண்டு, பாத்திரங்கள், மைக்செட், லைட், பந்திக்கு தேவையான சேர், டேபிள் என அனைத்தும் வாடகைக்குவிட ஆரம்பித்தவன் மேரேஜ் ஆர்கனைசேஷனும் தொடங்கினான்.
படிப்படியாக ஆர்.பி. சர்வீஸ் பிரபலமாகத் தொடங்கியது. இருபத்தியைந்து வயதிற்குள் தன் சொந்தக்காலில் ஸ்திரமாக ஊன்றி நின்றுவிட்டான். அவன் கொண்ட வைராக்கியம் நிற்க வைத்தது. சுய கௌரவம் என்ற கயிறுபிடித்து ஏறிச் சென்ற படிக்கட்டுக்கள் அவை.
இப்பொழுது ருத்ரபாண்டியன் இருபத்தேழு வயது கட்டிளங்காளை. இருப்பதேழு வயதிற்குள் வாழ்க்கையில் அவனது அனுபவம் அளப்பரியது. சந்தோஷம், துக்கம், ஏமாற்றம், அதிர்ச்சி, உதாசீனம், இழப்பு என அத்தனையையும் பார்த்துவிட்டான். சூழ்நிலை அவனது வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்ட தருணங்கள் அவை.
தனது வாழ்க்கையில் நடப்பதற்கு எல்லாம், யார் காரணகர்த்தா என அவனை யோசிக்கவிடாமல் சாட்டை கொண்டு விதி அவனை பம்பரமாய் சுழற்றியடித்த காலங்கள்.
இன்றைய நிலைமைக்கு, அவனது குடும்ப பின்புலத்திற்கு அவனது தனிப்பட்ட வளர்ச்சி சிறு கடுகு தான். ஆனாலும் காரம் அதிகம்.
அந்தக் காலத்திலேயே பாளையக்காரர்களோடு நேரடி வியாபாரத் தொடர்பில் இருந்தவர்கள், இவனது முன்னோர். சமஸ்த்தானங்களே சாய்ந்த பிறகும், அந்தக்காலத்துல சோழவந்தான்லயே யானை கட்டிப் போரடித்த வம்சம் எங்க வம்சம் என இன்றும் அந்த பழம்பெருமை பேசும் குடும்பம். அதற்கு சற்றும் குறைவில்லாமல், இப்பொழுதும் முப்போகம் விளையும் ஆற்றுநீர்ப்பாசனம் கொண்ட பொன்விளையும் பூமி.
அத்தோடு நில்லாமல் கோவில் அறநிலையத்துறையின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது குடும்ப பெருமையைத் தக்கவைத்துக் கொண்டவர் கேசவமூர்த்தி.
கேசவமூர்த்தி, மஞ்சுளாதேவி தம்பதிகளுக்கு ருத்ரபாண்டியன், தேன்மொழி என ஆசைக்கு ஒன்று ஆஸ்த்திக்கு ஒன்று என இரண்டே வாரிசுகள். அதென்னவோ வம்சம் முழுமைக்குமே அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படாமலேயே, வாழைமலடி (ஒரு குழந்தையோடு மட்டும் இருப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த சொல்) என சொல்லுமளவிற்கு ஒரு வாரிசோ, இரண்டு வாரிசுகளோ தான். அதற்கு மேல் வம்சாவிருத்தி நடைபெறவில்லை. அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் அத்தி பூத்தாற் போல் பூக்கும். கேசவமூர்த்திக்கும் ஒரே தங்கை தான்… அகிலாண்டம். அவருக்கும் தங்கைக்கும் இடையிலேயே பத்து வருட இடைவெளி. அகிலாண்டத்திற்கும் இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று வாரிசுகள்.
கேசவமூர்த்தியின் தந்தை காலம் வரைக்கும் தான் விவசாயத்தை எடுத்து நடத்தினார். அவரது தந்தையின் காலத்திற்குப் பிறகு தோப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு, வயல்களை குத்தகைக்கு விட்டுவிட்டார். வருடம் ஆனால் குத்தகைப்பணமே வருமானம் கொட்டிக்கொடுக்கும். இது இல்லாமல் மதுரை கடைவீதியில் கடைகளும் வாடகைக்கு உண்டு. இப்போதைக்கு ருத்ரபாண்டியனின் குடும்பச் சுருக்கம் இது.
இந்த பத்து நாள் திருவிழாவில், நீர்ப்பந்தல் அமைத்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும், ஹோட்டல் ஊழியர்கள் மூலம் தாகசாந்தி அளித்துக் கொண்டு இருந்தான் ருத்ரபாண்டியன். இன்று திருக்கல்யாணம் என்பதால் அவனும் கோவிலுக்கு வந்திருந்தான்.
கூட்டத்துள் இருந்து வெளிவந்த… தேன்மொழியையும், அமிர்தவல்லியையும் பார்த்தவன் இவர்களுக்கும் ஆளுக்கொரு மோர் டம்ளரை எடுத்துக்கொண்டு இவர்களை நோக்கி வந்தான்.
கோவில் என்பதால் மேட்சிங் கட்டிக்கோ ஒட்டிக்கோ வேட்டி சட்டையில் வந்திருந்தவனை… கட்டிக்கொண்டு ஒட்டிக்கொள்ள இப்போதைக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால், இவர்களை நோக்கி வந்தவனையே பார்த்த கண் பூக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தவல்லி.
சித்திரை வெயிலில், பூத்த நெற்றி வியர்வையில் அலைபாயும் முடிக்கற்றை படிந்திருக்க, சந்தனமும் குங்குமமும் கலவையாய் ஒன்றாகிக் கலந்திருந்தது திருநீற்று கீற்றுடன்.
திமிர்த்த மார்போடு ஓங்கு தாங்கான உடல்வாகு. மாநிறத்தையும் சற்று மிஞ்சிய நிறம். கபடியில் கைவீசி எதிரணியை வீழ்த்துவதற்கெனவே, திரண்ட நீண்ட கைகள்.
இவர்களிடம் வந்தவன், இரண்டு டம்ளர்களையும் தேன்மொழி கையில் கொடுத்துவிட்டு, ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றான். அவனையே அமிர்தவல்லி பார்த்துக் கொண்டிருந்தாள்.
முழங்கைக்கு கீழே இறங்கியிருந்த சட்டையின் கைமடிப்பை மேலே இழுத்துவிட்டு, அவன் முன் நெற்றியில் வியர்வையில் படிந்திருந்த முடிக்கற்றைகளை இடக்கையால் ஒதுக்கி மேலேற்றிவிட்டு, குனிந்து வேட்டி முனையில் முகத்தை துடைத்துக் கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிச் செல்வது பின்னால் இருந்து பார்த்தவளுக்கு மனக்கண்ணில் விரிந்தது.
‘இப்ப சண்டியர் மாதிரி வேட்டிய மடிச்சுக் கட்டச்சொல்லி யார் அழுதது’ என, அழுத்த நடை நடந்து செல்பவனது, கபடி விளையாட்டால் இறுகிப் போன, திரண்டு உரமேறிய வாலிப்பான கெண்டைக்கால் தசையின் காலழகில் சொக்கி நின்றவளது மனம் நொடித்துக் கொண்டிருக்க,
“அதான் போயாச்சுல்ல… இன்னும் என்னத்தப் பாக்குற? கீழ இறங்கி வா!” என முழங்கை கொண்டு மீண்டும் இடித்து அவளை நிகழ்விற்கு கொண்டு வந்தாள் தேன்மொழி.
“வரும்போது முன்னழகு பாத்தேன். போகும்போது பின்னழகு பாக்குறேம்ப்பா…” என இழுவையாய் இழுக்க,
“குற்றாலத்துக்குப் போகாம இது தெளியாது. முத்திப் போச்சு” என்றாள்.
“குற்றாலம் போனாலும் தெளியாது. அந்த தேவாங்கு கையில என்னையப் புடுச்சு கொடுத்தாலே தெளிஞ்சிறும்” என்றாள் தோளில் கிடந்த சிணுங்கிய பூஞ்சிட்டை தட்டிக் கொடுத்தவாறே.
“தேவாங்குனு சொல்ற அளவுக்கு தைரியம் வந்தாச்சு. இது அண்ணனுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?”
“இத தேவாங்குக்கு தெரியாம பாத்துக்கனும் தேனு. கடுவம்பூனைய எங்கூட கூட்டு சேக்குறீங்கனு அது கோவிச்சுக்கப்போகுது” என பேச்சு வெளியில் தான் இருவருக்கும் கேலியும் கிண்டலுமாக சென்றதே ஒழிய, உள்ளுக்குள் மண்ணை ஊடுறுவிய வேராய் வெளியே தெரியாத அழுத்தம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
தன் கையில் இருந்த டம்ளர்களில் ஒன்றை, அமிர்தவல்லியிடம் கொடுத்தாள்.
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொத்தமல்லி, இஞ்சி, சீரகம் வாசனையோடு மோர் குளிர்ச்சியாக இருவரது தொண்டையிலும் இறங்க, அப்பொழுதுதான் எவ்வளவு தாகத்தோடு இருந்திருக்கிறோம் என்பதே புரிந்தது. ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு தான் வாய்விட்டு டம்ளரை எடுத்தனர்.
வந்தவன் மீண்டும் வந்த வேலையை கவனிக்க சென்றுவிட… அவனிடம் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அங்கு மோர், கூழ், சர்பத், புளியோதரை, தயிர் சாதம் என விநியோகம் செய்து கொண்டிருக்க, ஒவ்வொன்றும் எந்த அளவு இருப்பு இருக்கு, மேலும் எவ்வளவு வரவைக்க வேண்டும் என பார்த்துக் கொண்டு இருந்தான்.
அடுத்தபடியாக அங்கு வந்திருந்த பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய பாக்கெட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்க, கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து அமிர்தவல்லியும் கைநீட்ட, கவனமாக அவளைத் தவிர மற்ற பெண்களுக்கு எல்லாம் கொடுத்தான். அதெப்படி, அத்தனை கூட்டத்திலும அவளது கை மட்டும் துண்டாக அடையாளம் தெரிந்ததோ?
அவனுக்கு உதவிக் கொண்டு இருந்த அழகர், அவனது செயலை முறைத்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தான். சற்று நேரம் பொறுமையாகப் பார்த்தவன் அதற்கு மேல் பொறுமையை பறக்க விட்டவன்,
“மாமா… அந்தப் பிள்ளையும் கூட்டத்துக்குள்ள எவ்வளவு நேரமா கைய நீட்டுது. கொடுங்களே மாமா” என சிபாரிசுக்கு வந்தவனை, திரும்பி ஒரு பார்வை பார்க்க, அதோடு அவன் கப்சிப் என அடங்கி விட்டான்.
அவன் பார்வை அப்படி. அடுத்து அவனிடம் கேள்வி கேட்பவர்கள் அவன் பார்ப்பதிலேயே அடுத்து எதுவும் கேட்கக் கூடாது. இது யாரும் தன்னிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக அவன் தனக்கு தானே போட்டுக் கொண்ட பாதுகாப்பு வளையம். மேலெழும் உள்ளுணர்வுகளை அடக்க அவன் தனக்குத்தானே இட்டுக்கொண்ட கவசவேலி எனச் சொல்லலாம்.
இன்னும் அவள் கூட்டத்துள் கைநீட்டி எக்கிக் கொண்டிருக்க, அங்கு மோர் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனை அழைத்தவன்,
“இந்தா கோபி, மிச்சத்த நீ கொடுத்துட்டு வாடா” என மீதமிருந்த பாக்கெட்டுகள் அடங்கிய பையை அவனிடம் கொடுத்துவிட்டு நகரப் பார்க்க, பையை வாங்காமல் தனது முதலாளியை தயக்கமாகப் பார்த்தான்.
“என்னடா!” என அதட்ட,
“எதுக்குண்ணே… நான் அந்தப் பிள்ளைக்கு மஞ்சக் கயிரு கொடுக்கப் போக, அது என்னய சுருக்கு கயித்துல தொங்கவிடவா?” எனக் கேட்டு நழுவப் பார்க்க,
“இது நல்லா இல்ல மாமா. புள்ளயக் கொடுப்பாராம். தாலிக்கயிரு மட்டும் கொடுக்க மாட்டாராம். இது எந்த ஊரு நியாயம் மாமா?” என அழகர் கேட்க, அவன் நக்கீரனாக இல்லாமல் போனது அவனைப் பெற்ற, அகிலாண்டம் செய்த கொஞ்சநஞ்ச புண்ணியம்.
இல்லை எனில் நெற்றிக்கண் திறந்த முக்கண்ணனாக ருத்ரபாண்டியன் அவனைப் பார்த்த பார்வையில், அழகர் மட்டும் நக்கீரனாக இருந்திருந்தால் இந்நேரம் பொற்றாமரைக் குளத்தில் தான் அவனைத் தேடியிருக்க வேண்டும். பார்த்த பார்வையில் பஸ்பமாகி இருப்பான்.
ருத்ராபாண்டியன் திரும்பி அமிர்தவல்லியைப் பார்க்க, கையில் இருந்த குழந்தையின் அழுகையில், கூட்டத்தை விட்டு அகன்றவள், கோவில் வளாகத்திலேயே நிழல் பார்த்து அமர்ந்தாள். தேன்மொழியிடம் இருந்த பையை வாங்கியவள், அதிலிருந்த பால் பாட்டிலை எடுத்து குழந்தையைப் பசியமர்த்த ஆரம்பித்தாள்.
இறந்த காலமும், எதிர்காலமும், நிகழ்காலத்தில் சித்திரை வெயிலின் அக்னிநட்சத்திரமாய் தகித்தது பார்த்தவனின் கண்களுக்குள்.

Arambamey kalai kattuthu